கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

1 அக்டோபர், 2020

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் கோடிகளில் சந்தா பணம் பெறும் தொழிற்சங்கங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுடைய 1000 ரூபா சம்பளவுயர்வு கோரிக்கைகள் கடந்த 5 வருடங்களாக இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. ஆனால் தொழிலாளர்களுடைய வேதனங்கள் அதிகரிக்கப்பட்டாலும் அல்லது குறைக்கப்பட்டாலும் அவர்களுடைய மாதாந்த சம்பளத்திலிருந்து அறவிடப்படும், அங்கத்துவம் பெற்றுள்ள தொழிற்சங்கங்களுக்கான சந்தா கட்டணத்தில் (அங்கத்துவ கட்டணம்) எவ்வித தளர்வுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலுக்குச் சென்றாலே வேதனம் வழங்கப்பட்டது. கம்பனிகளாலும் தொழிற்சங்கங்களினாலும் எவ்விதமான நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. அக்காலப்பகுதியில் சந்தா கட்டணங்கள் அறவிடப்படாது என தொழிற்சங்கங்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறைப்படுத்தாமை பாரிய சிக்கலை தோற்றுவித்திருந்தது.

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வருமானம் 700 ரூபாவுக்கும் குறைவாகவே தற்போது காணப்படும் நிலையிலும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொழிற்சங்கங்கள் வருடாந்தம் கோடியில் இலாபங்களை பெறுகின்றன. ஆனால் பெறப்படுகின்ற கோடிகளில் தொழிலாளர்களுக்கு எவ்விதமான பயன்களும் சென்றடைவதில்லை. தொழிலாளர்களிடம் இருந்து மாதாந்தம் அறவிடப்படுகின்ற சந்தா கட்டணங்கள், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்படும் அடிப்படைச் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்காக காணப்படுகின்றது. 6 மாதங்களுக்கு ஒரு முறை தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான அங்கத்துவ ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகின்றது. தொழிலாளர்கள் விரும்புகின்ற ஒரு தொழிற்சங்கத்தில் இணையும்போது சந்தா கட்டணத்தை அறவிடுவதற்கு உடன்பட வேண்டும்.

 
2019 ஆம் ஆண்டு மாற்றம் இணையத்தளம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றிருந்த தகவல்களில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, தொழிலாளர்களுக்கு அவர்களுடைய வேதனத்தில் மூன்றில் ஒரு பங்கினையும், தொழிலாளர் அல்லாதோருக்கு 40 ரூபாவும் தொழிலாளர் தேசிய சங்கம் 25 ரூபாவினையும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அடிப்படைச் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையிலும் மாதாந்தம் சந்தா கட்டணத்தை அறவிடுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் மேற்கூறிய தொழிற்சங்கங்களினால் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 150 ரூபா என்ற அடிப்படையிலேயே மாதாந்த சந்தா கட்டணம் அறவிடப்பட்டிருந்தது. 2019.01.28 ஆம் திகதி இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச்சம்பளம் 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது சந்தா கட்டணத்தை 233 ரூபாவாக அதிகரித்திருந்தது. இது இறுதி சந்தா தொகையினை விட 83 ரூபா அதிகமாகும். ஆனால் தொழிலாளர் தேசிய சங்கம் தொடர்ந்தும் 150 ரூபாவினையே அறவிடுவதாக அறிவித்திருந்தது. இவ்வாறான பின்னணியில் அதிக இலாபத்தினை உழைக்கும் துறையாக தொழிற்சங்கங்கள் மாற்றமடைந்திருக்கின்றன. 

தொழிலாளர்களுடைய பணத்தில் சுகபோகம் அனுபவிப்பவர்களாக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். மக்களுக்கு சேவை செய்ய மக்களிடமே பணம் அறவிட்டுக்கொள்ளும் நபர்கள் இவர்கள் தான். இவ்வாறு தொழிற்சங்கங்கள் மக்களிடமிருந்து அறவிட்டுக்கொள்ளும் சந்தா பணத்துக்கான கணக்கு அறிக்கைகள் அதன் அங்கத்தவர்களாக இருக்கின்ற தொழிலாளர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டதில்லை. அவ்வாறு வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையும் எடுக்கப்படவில்லை. அதனால் சந்தா பணத்துக்கு என்ன நடக்கின்றது என்பது மர்மமாகவே இருக்கின்றது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி தொழில் திணைக்களத்திடம் தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொள்கின்ற சந்தா பணம் (அங்கத்துவ கட்டணம்) தொடர்பில் பெற்றுக்கொண்ட தகவல்கள் பின்வருமாறு அட்டவணைகளில் காணப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விண்ணப்பித்தும் தகவல்கள் வழங்கப்படாமையினால் தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குப்பின்பே தகவல் வழங்குவதற்கான ஆணை கிடைக்கப்பெற்றது. பின்னர் கொரோனா பிரச்சினையின் காரணமாக தகவல் வழங்குவது இன்னும் தாமதப்படுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதமே கிடைக்கப்பெற்றது. 
இருப்பினும் தொழிற்சங்கங்கள் அறவிடுகின்ற சந்தா கட்டணத்தின் மூலம் மேற்கொள்கின்ற செலவுகள் தொடர்பிலான அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. அவ்வறிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்துக்கு வழங்குவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தொழில் திணைக்களம் வழங்கியுள்ள தகவல்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (T.U.1520), தொழிலாளர் தேசிய சங்கம் (T.U.2445), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (T.U.1071) ஆகியன 2015 – 2018 ஆம் ஆண்டு வரையில் பெற்றுக்கொண்ட மொத்த சந்தா பணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணி (T.U.5133) கணக்கு அறிக்கைகள் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்படாமையில் அது தொடர்பில் முன்னணிக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2017ஃ2018 காலப்பகுதியில் 374,738 அங்கத்தவர்களையும் 2015ஃ2016 காலப்பகுதியில் 396,869 அங்கத்தவர்களையும் 2016/2017 காலப்பகுதியில் 383,007 உறுப்பினர்களையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர் தேசிய சங்கம் 2015/2016 காலப்பகுதியில் 15,516 அங்கத்தவர்களையும் 2016/2017 காலப்பகுதியில் 21,280 அங்கத்தவர்களையும் 2017/2018 காலப்பகுதியில் 26,172 அங்கத்தவர்களையும் கொண்டுள்ளதுடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் 2015/2016 காலப்பகுதியில் 155,999 அங்கத்தவர்களையும் 2016/2017 காலப்பகுதியில் 153,221 அங்கத்தவர்களையும் 2017/2018 காலப்பகுதியில் 148,242 அங்கத்தவர்களையும் கொண்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 அதன்படி 2017/2018 காலப்பகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாதமொன்றுக்கு சராசரியாக 55 இலட்சம் ரூபாவினையும் தொழிலாளர் தேசிய சங்கம் சராசரியாக 35 இலட்சம் ரூபாவினையும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சராசரியாக 20 இலட்சம் ரூபாவினையும் சந்தா பணமாக பெற்றுக்கொண்டுள்ளன. இதேவேளை 2015/2016 காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சராசரியாக மாதமொன்றுக்கு 79 இலட்சம் ரூபாவினை சந்தா பணமாக பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சந்தா பணத்தினால் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிலையான வைப்பில் 9 கோடி ரூபா காணப்படுவதுடன் அதற்கு மாதாந்தம் வட்டியாக 15 இலட்சம் ரூபா கிடைக்கப்பெறுவதாகவும் இராஜகிரியவில் 1 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சங்க தலைமைக்காரியாலய கட்டிடம் காணப்படுவதாகவும் அதன் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்திருந்தார். 

 இவ்வாறு ஆண்டுக்கு கோடிகளில் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் தொழிற்சங்கங்கள் அக்கோடிகளில் என்ன அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளன. அரச நிதியிலிருந்து மாத்திரமே மக்களுக்கு அபிவிருத்தித் திட்டங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கடந்த கொரோனா கால நாடு முடக்கத்தின்போது குறைந்தபட்சம் இந்த நிதியிலிருந்து நிவாரணங்கள்கூட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. அந்நேரத்திலும் அவர்கள் தொழிலுக்குச் சென்றே ஊதியத்தைப் பெற்றுக்கொண்டார்கள். பெரும்பாலும் சந்தா பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தொழிற்சங்கங்கள் அவற்றை தங்களது அலுவலக கட்டணம், பணியாளர் கொடுப்பனவு மற்றும் சங்கத்தின் மே தின நிகழ்வுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்ற இதர செலவுகளுக்காக மாத்திரமே பயன்படுத்தி கொள்கின்றனர். 

தொழிற்சங்கங்கள் ஆங்காங்கு அலுவலகங்களை திறப்பதால் தொழிலாளர்களுக்கு எவ்வித பயனும் கிடைப்பதில்லை. அங்கு அரசியல் விடயங்கள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினரொருவர் அலுவலகமொன்றை பராமரிப்பதற்காக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. அந்தவகையில் சராசரியாக ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை பெறும் ஒருவர் அலுவலக கொடுப்பனவாக 60 இலட்சம் ரூபாவினை பெற்றுக்கொள்கின்றார். ஆனால் அவர்களுக்கென தனியாக அலுவலகங்கள் அமைக்கப்படாமல் கட்சி அலுவலகங்களே பயன்படுத்தப்படுகின்றன. அலுவலகத்தின் 04 பணியாட் தொகுதி உறுப்பினர்களின் போக்குவரத்து செலவுகளுக்காக மாதாந்தம் 10,000 ரூபா (ஒவ்வொருவருக்கும் 2500 ரூபா வீதம்) செலுத்தப்படுகின்றது. அதன் மூலம் 6 இலட்சம் ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினரொருவர் பெற்றுக் கொள்கின்றார். ஆனால் இக்கொடுப்பனவுகள் எவையும் உரிய வகையில் பயன்படுத்தப்படாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றனர். 

ஆனால் இக்கொடுப்பனவுகளை தொழிலாளர்களுடைய சந்தா பணத்திலேயே மேற்கொள்வதாக அறிவித்து கணக்கு காட்டிக்கொள்கின்றனர். இவ்வாறு தொழிலாளர்களுடைய உழைப்பு கோடிகளாக தொழிற்சங்கங்களிடம் கொட்டிக் கிடைக்கையில் தொழிலாளிகளோ தெருக்கோடியில் கிடக்கின்றனர். கடந்த காலங்களில் தொழிலாளர்கள் தங்களது 1000 ரூபா போராட்டத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லையாயின் தொழிற்சங்கங்களுக்கு வழங்கும் சந்தா பணத்தை நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் 1000 ரூபா கிடைக்கப் பெறாத நிலையிலும் இன்னும் சந்தாவை செலுத்தியே வருகின்றனர். தொழிற்சங்கங்களுக்கு சந்தா செலுத்தினால் மட்டுமே தொழிலாளர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென்ற எழுதப்படாத தொழிற்சங்கச் சட்டம் மலையகத்தில் இருந்து வருகின்றது. அபிவிருத்திகளும் அவ்வாறே பங்கிடப்படுகின்றது. தோட்டத் தலைவர்களின் கடுமையான அழுத்தங்களினால் விருப்பமின்றி தொழிலாளர்களினால் இந்தச் சட்டம் கடைபிடிக்கப்படுகின்றது. 

புதிதாக தொழிலாளர்களின் சந்தா பணத்தில் அவர்களுக்கு காப்புறுதி திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முயற்சிப்பதாக அறியக் கிடைக்கிறது. அத்துடன் தற்போது இ.தொ.கா. சார்பில் 500 பேர் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் இவர்களுடைய கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய அலுவலகத் தேவைகளுக்கு சந்தா பணம் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இவற்றுக்கு மாற்று வழிகள் இனங்காணப்படுமிடத்து சந்தா பணம் அறவிடப்படுவது நிறுத்தப்படுமென இ.தொ.கா. தலைவர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

 இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிலையான வைப்பிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டியின் மூலம் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கு எதிர்பார்த்ததாகவும் தற்போதைய நிர்வாகப் பிரச்சினைகள் அவற்றுக்கு இடம் கொடுக்கவில்லையெனவும் தெரிவித்திருந்தார். எனவே இவ்வாறான பயனுள்ள திட்டங்களை தொடர்ந்தும் தொழிலாளர் மத்தியில் முன்னெடுப்பது சந்தா கட்டணம் பெறும் தொழிற்சங்கங்களின் கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக