2020 ஆகஸ்ட் 09 ஆம் திகதிய 2187/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியினூடாக பெருந்தோட்ட வீடமைப்பு நம்பிக்கை பொறுப்பு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழுள்ள நிறுவனமாக பெயரிடப்பட்டுள்ள போதிலும், 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பாக பதிவு செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ள பிணையால் வரையறுக்கப்பட்டுள்ள கம்பனியொன்றாவதுடன், இந்த அகவிதியின் 44 ஆம் பந்திக்கமைய நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்படும் பணிப்பாளர்களிடையே ஐவர் அரச அமைச்சர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ தெரிவாகிய பின்னர் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தினால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் பரத் அருள்சாமி பெருந்தோட்ட வீடமைப்பு நம்பிக்கை பொறுப்பின் தலைவராக செயற்பட்டார். ஆனால் தேர்தலின் பின்னர் அவர் பதவி விலத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அப்பதவியில் அமர்த்துவதற்கு தற்போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
தற்போது பெருந்தோட்டப் பகுதிகளில் அமைச்சால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் பெரும்பாலும் பெருந்தோட்ட மனிதவள நம்பிக்கைப் பொறுப்பினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தொடர்ந்தும் அந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகளில் பாரிய குறைபாடுகள் இருப்பதை ஆய்வுகள் சுட்டிகாட்டுகின்றன. பெருந்தோட்ட கம்பனிகளின் ஆதிக்கத்தில் செயற்படும் இந்நிறுவனம் மலையக மக்கள் நன்மையை பெற்றுவிடக்கூடாதென்பதில் தீவிரமாக இருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்ட மனிதவள நம்பிக்கைப் பொறுப்பினூடாக அதிகார தத்துவமற்ற கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பில் 2018 ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டுக்;கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படாத வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்திச் செல்லப்படும் பசுமைப் பொன் வீடமைப்பு வசதித் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் செயற்படுத்தப்பட்டு மேற்பார்வை செய்தல் தொடர்பாக ஒப்பந்தப் பெறுமதியில் நூற்றுக்கு 6 வீதம் செலுத்துவதற்கு வேலைத் திட்ட நிர்மாணப் பணி வழிகாட்டல் கோவை மூலம் உடன்பாடு காணப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 2018 ஆம் ஆண்டின் போது நூற்றுக்கு 6 வீத முகாமைத்துவக் கட்டணம் ரூபா 45,781,306 பெறுமதியான தொகை செலுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு இருந்த போதிலும் வீடுகளின் பெறுமதி தொடர்பாக 2015 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டின் போது அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் போது அல்லது மேற் குறிப்பிட்ட முகாமைத்துவக் கட்டணம் செலுத்துதல் தொடர்பாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு நடவடிக்கை மூலம் உறுதி செய்யப்படவில்லை.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களுக்கு இணங்க 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு அமைச்சு சார்பாக கடன் நிதி சேகரிக்கப்பட்டு அமைச்சுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக இருந்த நிலுவை ரூபா 33.2 மில்லியன் பெறுமதியான தொகையாகும். அதற்கு மேலதிகமாக 2018 ஆம் ஆண்டின் போது ரூபா 4.9 மில்லியன் பெறுமதியான தொகை சேகரிக்கப்பட்டு இருந்த போதிலும் மீளாய்வு ஆண்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் அமைச்சுக்கு செலுத்தப்பட்டிருந்த நிதி ரூபா 7.2 மில்லியன் மட்டுமேயாகும். அதற்கு இணங்க நிதியத்தின் மூலம் அறவிடப்பட்டிருந்த போதிலும் 2018 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு அமைச்சுக்குச் செலுத்தப்படாதுள்ள தொகையின் பெறுமதி ரூபா 31 மில்லியன் ஆகும்.
கடன் அறவீடு செய்தல் நேரடியாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு வழங்கப்பட்டு இருந்ததுடன் அந்த நிதி மீண்டும் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கவில்லை. கடன் அறவீடுகள் நேரடியாக அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என பெருந்தோட்ட முகாமைக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதி தொடர்பாக திட்டவட்டமான தகவல்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டு இருக்கவில்லை என்பதுடன் 2018.08.28 ஆம் திகதிக்கு ரூபா 7,994,450.83 பெறுமதியான நிதித் தொகை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதே போன்று அமைச்சிற்குச் செலுத்தப்பட வேண்டிய முகாமைத்துவக் கட்டணங்களில் ரூபா 17,106,132.36 பெறுமதியான நிதித் தொகை கடன் அறவீடு என்ற அடிப்படையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினால் அறவீடு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் பொது மக்களுக்கான சேவையை நிலைநாட்டல் தொடர்பிலான கணக்காய்வில், மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்தோருக்காக ஐலா தோட்டப் பகுதியில் 47 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2018 ஆம் ஆண்டு ரூபா 47,000,000 ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வீடமைப்புத் திட்டத்திற்காக 2018. 02. 12 ஆம் திகதி பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் ஐலா தோட்ட ஊழியர் கூட்டுறவு சங்கத்துடன் ஒரு வீட்டுக்கு ரூபா 950,000 பெறுமதியான தொகை என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, வீட்டுத்திட்டம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 ஆம் திகதிக்குள் முடிக்கப்பட இருந்தது. ஆனால் கணக்காய்வு செய்யப்பட்ட திகதி ஆகிய 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி ஆகும் போது கட்டுமானத்துக்கான நிலத்தை சீர்படுத்துவது மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டு இருந்தது.
அமைச்சினால் செயல்படுத்தப்பட்ட வீடமைப்புத் திட்டங்களின் ஒப்பந்த மேற்பார்வைக்கு மேலதிகமாக ஒப்பந்தகாரர்களை தேர்ந்தெடுப்பது மற்றும் பணம் செலுத்துதல் போன்றவற்றை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டமை கொள்முதல் வழிகாட்டல்கோவை 8.12.1 (அ) உறுப்புரைகளின் பிரகாரம் மீறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தகாரர்களின் பெயரில் செலுத்த வேண்டிய காசோலைகளை முதலில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பெயரில் பெற்றுக்கொண்ட ஒப்புதலுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் பெருந்தோட்ட மனிதவள நம்பிக்கைப் பொறுப்பினூடாக நிறைவேற்றப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பில் அமைச்சில் நிலவுகின்ற ஒப்பந்த நிர்வாகங்கள் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பினூடாக நிறைவேற்றப்படும் அனைத்து ஒப்பந்த நிர்மாணங்களுக்காக அமைச்சிற்காக தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு கூட்டுறவு சங்கத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டு நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. பெறுகைகள் வழிகாட்டியின் மற்றும் பெறுகைகள் வழிகாட்டியின் 3.9.4 பந்திக்கமைய கூட்டுறவு சங்கத்திற்கு ரூபா 2 மில்லியன் கூட்டுத்தொகையை விட அதிகமான ஒப்பந்தங்கள் வழங்கப்படக்கூடாததுடன், குறிப்பானதொரு காலப்பகுதியினுள் அமைப்பொன்றினால் நிறைவேற்றப்படும் மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை மூன்றைவிட அதிகமாக இருக்கக்கூடாது. எவ்வாறெனினும், பெறுகை வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகளை மிகைத்து அந்தந்த தோட்டச் சங்கங்களுக்குரிய அனைத்து நிர்மாணங்களும் அந்த சங்கங்களுக்கு வழங்குதலும், அந்த சங்கங்களூடாக பெறுகைகள் வழிகாட்டி 3.9.1 இற்கு முரணாக உப குத்தகை வழங்குதலும் அவதானிக்கப்பட்டது. மேலும், தனியார் நிறுவனமொன்றான பெருந்தோட்ட மனிதவள நம்பிக்கை பொறுப்பு அமைச்சிற்காக ஒப்பந்த நிர்மாணங்களுக்காக உடன்படிக்கை கைச்சாத்திடுவதுடன், அவ்வாறு மேற்கொள்வதற்கு பெற்றுக்கொண்ட அங்கீகாரமொன்று கணக்காய்விற்கு முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
கிரீன் கோல்ட் வீடமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலுள்ள 2017 ஆம் ஆண்டினுள் 329 வீட்டு அலகுகளை கொண்ட 18 செயற்றிட்டங்களுக்காக ரூபா 329 மில்லியன் மற்றும் அதற்கான முகாமைத்துவ கட்டணங்களுக்காக ரூபா 19.7 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2017 டிசம்பர் 31 ஆம் திகதியில் ரூபா 173.7 மில்லியன் செலுத்தப்பட்டிருந்ததுடன், ரூபா 155.2 மில்லியன் செலுத்துவதற்கும் (பொறுப்பொன்று) காணப்பட்டது. அதற்காக முகாமைத்துவ கட்டணத்தில் ரூபா 7.5 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. இந்த வீடுகளின் கீழான பௌதீக பரிசோதனையில் 106 வீட்டு அலககளை கொண்ட 6 வீட்டு செயற்றிட்டங்களுக்காக செலவிடப்பட்ட ரூபா 100.5 மில்லியன் நிர்மாணங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் நியமமொன்றில்லாது குறைவான தரத்தினை கொண்டவையாக இருந்ததுடன், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தி நியமமொன்றில்லாது நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
முன்பூர்த்தி ஒப்பந்த முறைமையின் கீழ் பூர்த்தி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட செயற்றிட்டமொன்றாக 50 வீடுகள் ரூபா 50 மில்லியனுக்கு நிர்மாணிப்பதற்கு அமைச்சின் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பிற்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், அந்த செயற்றிட்ட நிர்மாணம், டிரேடன் தோட்டப்புற சங்கத்திற்குரிய தோட்ட கூட்டுறவு சங்கத்திற்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை பொறுப்பினால் வழங்கப்பட்டிருந்தது. அந்த தோட்ட சங்கத்தினால் அரசாங்க பெறுகைகள் நடைமுறைக்கு மீண்டும் உப ஒப்பந்தமாக 2016 டிசம்பர் 09 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட நிர்மாண ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.
பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 8.9.1 பந்திக்கமைய ரூபா 225,000 மிகைத்து எந்தவொரு வேலை ஒப்பந்தத்திற்காகவும் எழுத்துமூல ஒப்பந்த உடன்படிக்கையொன்றுக்கு உட்பட வேண்டிய போதிலும், ஒப்பந்தத்தை கையளிப்பதற்காகவும் இதுவரையிலும் பணிகளை உள்ளடக்குவதற்கு தேவையான அடிப்படை உடன்படிக்கையொன்று அமைச்சு மற்றும் மேற்படி தனியார் கம்பனி ஆகியவற்றுக்கிடையே அல்லது பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் அந்த கம்பனிக்கிடையே இருந்தமைக்கான சான்றுகள் முன்வைக்கப்படவில்லை.
பெறுகைகள் வழிகாட்டி கோவையின் 8.12.1(அ) வழிகாட்டிக்கமைய கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் பணிப்பாக செயற்றிட்டங்களின் பணிகளுக்காக செயற்றிட்டங்கள் ஒப்பந்தங்களுக்கான அனைத்து பணிகளும் மேற்பார்வை செய்யப்படுவதாகவும் மதிப்பீடு செய்யப்படுவதாகவும் உறுதிப்படுத்துவதற்காக பெறுகை நிறுவனம் (அமைச்சு) பொறுப்புக்கூற வேண்டியதுடன், கையேற்பதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள சேவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளின் தரமும் சுயாதீனமாக பரீட்சிக்கப்பட வேண்டும். எவ்வாறெனினும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பினால் நிறைவேற்றப்படும் செயற்றிட்டங்களின் ஒப்பந்தங்களுக்குரிய மதிப்பீடுகளை சான்றுறுதிப்படுத்தும் பணிகள் நீங்கலாக மதியுரை சேவைகளை வழங்குதல், ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்தல், கண்காணிப்பு, பணம் செலுத்துல் போன்றன தொடர்பில் அவ்வாறு இடம்பெறுவதில்லை என்பது தெரிவுப் பரிசோதனைகளுக்கமைய அவதானிக்கப்பட்டது.
எனவே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்ட மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அல்லது அந்நிறுவனம் முழுமையாக அரசாங்கத்தின் நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அல்லது அமைச்சின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அதிகார சபையின் மூலம் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டங்களுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் பெருந்தோட்ட நிர்வாகத்தினைபோல பெருந்தோட்டங்களுக்கான அபிவிருத்தியும் கம்பனிகளின் நிர்வாகத்துக்குச் செல்லும் நிலைமை ஏற்படாலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக