இலங்கையில் யானை – மனிதன் மோதலுக்கு தீர்வு காண்பதில் இன்னும் முழுமையான வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. காலத்துக்கேற்ற வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கமும் தோல்வி கண்டுள்ளது. இலங்கையில் கடந்த 5 வருடங்களில் யானை – மனித மோதலை குறைப்பதற்கான நிதி ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் ஒப்பீட்டளவில் யானை – மனித மோதலால் ஏற்படுகின்ற மரணங்கள் எண்ணிக்கை மற்றும் சொத்து இழப்புக்கள் குறைவடைந்துள்ளமை தொடர்பில் அவதானிக்க முடியவில்லையென கணக்காய்வாளர் நாயகத்தின், இலங்கையில் யானை மற்றும் மனிதர்களுக்கிடையேயான மோதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையானது, மனிதர்கள் அத்துமீறுகின்றார்களா அல்லது யானைகள் அத்துமீறுகின்றனவா அல்லது அரசாங்கத்தின் திட்டங்கள் போதுமானதாக அமையவில்லையா என்ற கேள்விகளை தோற்றுவிக்கின்றது. எனவே யானை – மனித மோதலினால் ஏற்படுகின்ற இழப்புக்கள், அவற்றைத் தடுப்பதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு எவ்வாறாக அமைந்திருக்கின்றது? போன்ற விடயங்களை ஆராய்வது அவசியமாகும்.
இலங்கையில் வருடாந்தம் 250 யானைகளும் 50 மனிதர்களும் மோதல்களால் கொல்லப்படுகின்றன. அத்தோடு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுவதோடு, பயிர் நிலங்களுக்கு சேதம் விளைவிக்கப்படுவதால் பொருளாதார ரீதியிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 2011 ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட காட்டு யானை தொகை மதிப்பீட்டிற்கிணங்க காட்டு யானைகளின் அடர்த்தியானது 5,879 ஆக அறியப்பட்டுள்ளதோடு, அதில் 55.9 சதவீதம் முதிர்ந்த விலங்குகளாகவும் 25.3 சதவீதம் இளைய பருவ விலங்குகளாகவும் 12.4 சதவீதம் குட்டிகளாகவும், 6.4 சதவீதம் குழந்தைப் பருவத்திலுள்ள சிறிய விலங்குகளாகவும் அறியப்பட்டிருந்தது. இலங்கையில் 1951 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, 1000 – 1500 வரையான யானைகளும் 1978 இல் 6000 வரையான யானைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கையில் காட்ட யானைகளின் பரம்பலை வரைபு 1 இல் காணலாம்.
கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம் 2014 – 2018 வரையான காலப்பகுதியில் 1128 யாணைகள் மரணித்துள்ளன. இவற்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளதலினால் 251, மின் தாக்கத்தினால் 117, வெடிகளுக்கு இலக்கானதால் 249, நஞ்சு உடலுக்குள் சென்றமையால் 28, புகையிரத விபத்துக்களினால் 57, வேறு அபாயங்களினால் 89, இனங்காணப்படாத காரணங்களினால் 235, இயற்கை காரணங்களினால் 133, வேறு காரணங்களினால் 125 போன்ற காரணங்கள் உள்ளடங்குகின்றன. அதனால் 2014 – 2017 வரையான காலப்பகுதியில் காட்டு யானைகளில் 60 வீதமானவை மனித நடவடிக்கைகளால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்வேறு காரணங்களினால் ஏற்பட்ட யானைகளின் மரணங்கள் தொடர்பான விபரங்களை வரைபு 2 இல் காணலாம். இவ்வாறு தொடர்ச்சியாக யானை மற்றும் மனித மரணங்கள் நிகழ்ந்து வந்தாலும் அவற்றினை நிவர்த்திப்பதற்கு அல்லது குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 2013 – 2017 வரையான 05 வருட தரவுகளின் படி மனித யானை மோதல்களைக் குறைப்பதற்கு வருடாந்தம் செலவிடப்படும் நிதி ஏற்பாடு முறையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதும் அதற்கு ஒப்பீட்டளவில் யானை மரணம் மற்றும் மனித - யானை மோதல் காரணமாக ஏற்படும் மரண எண்ணிக்கை மற்றும் சொத்து அழிவுகள் போன்றவை குறைந்து செல்வதை அவதானிக்க முடிந்திருக்கவில்லை. அதற்கமைய 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டு வரையிலும் யானை இறப்பு எண்ணிக்கை மற்றும் மனித இறப்பு எண்ணிக்கை முறையே 11.6 சதவீதம் மற்றும் 17.0 சதவீதம் வரையிலும் அதிகரித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யானை – மனித மோதலுக்கான காரணங்கள்
மனிதர்களால் முன்னெடுக்கப்படுகின்ற முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் (அரச மற்றும் தனியார்), சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற காடழிப்புகளின் காரணமாக நில அமைப்பில் ஏற்படுகின்ற மாறுதல்கள், பயன்படுத்தக்கூடிய வளமான வாழ்விடங்கள் இல்லாமல் போதல் அல்லது குறைவடைதல், காட்டு யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுதல் மற்றும் யானைகளின் நடை பாதைகளை தடை செய்தல் போன்ற காரணங்களினால் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் நிலை ஏற்படுவதோடு, அதனால் யானை – மனித மோதல் வெகுவாக அதிகரித்துள்ளது. இவ்வாறு கிராமத்துக்குள் நுழைகின்ற காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற மோதலின் காரணமாக இரு பகுதியினருக்கும் சேதங்கள் ஏற்படவது அதிகரித்திருக்கின்றது. அவற்றின் காரணமாகவே மனித மரணம், காட்டு யானை மரணம், உடல் ரீதியான சேதம் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் என்பன பாரிய விளைவுகளாக இருக்கின்றன. 2013 – 2017 வரையான காலப்பகுதியில் யானைகளின் மரணம் 1177 ஆகவும் மனித இறப்புக்கள் 375 ஆகவும் உடல் ரீதியான சேதங்கள் 357 ஆகவும் ஆதனங்களுக்கான சேதங்கள் 6458 ஆகவும் பதிவாகியுள்ளன. 2018 இல் 319 யானைகள் மற்றும் 96 மனித மரணங்களும் 2019 இல் 405 யானைகள் மற்றும் 96 மனித மரணங்களும் பதிவாகியுள்ளன.
இலங்கையில் யானை - மனித மோதல் பிரதானமாக எட்டு மாகாணங்களில் 58 பிரதேச செயலகப் பிரிவுகளில் பரந்து காணப்படுகின்றது. இவற்றுள் அதிக மோதல் காணப்படும் பிரதேசமாக வெள்ளவாய, லுணுகம்வெஹர, அம்பாறை, உருணை, போரதீவுப்பற்று, கோரளைப்பற்று தெற்கு, மகியங்கணை, தெஹிஅத்தகன்டிய, வில்கமுவ, திம்புலாகல, வெலகந்த, தெகிராவை, பளுகஸ்வெவ, கல்கமுவை, கொட்டவெஹெர மற்றும் தில்வெரட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளன. யானை – மனித மோதல்களில் மனித மரணங்கள் நிகழும் பகுதிகளாக 112 பிரதேச செயலகப் பிரிவுகளும் யானை மரணங்கள் நிகழும் பகுதிகளாக 131 பிரதேச செயலகப் பிரிவுகளும் பதிவாகியுள்ளன. அட்டவணை 1இல் மாகாண ரீதியில் 200 – 2019 காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள யானை – மனித மோதல் சம்பவங்களை காணலாம்.
கடந்த நான்கு ஆண்டுகளுள் பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் கிழக்கு வலயங்களில் மனித மரணம் 185 ஆகவும், காட்டு யானை மரணம் 538 ஆகவும் இடம்பெற்றுள்ளது. அதனால் இடம்பெற்றுள்ள மொத்த மனித மரணங்களில் 60 சதவீதமும் முழு காட்டு யானை மரணங்களில் 55 சதவீதமும் இந்த மூன்று வலயங்களில் இடம்பெற்றுள்ளதோடு அந்த மூன்று பிரதேசங்களுக்கும் முழு மின்சார வேலி அமைப்பில் 46மூ மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
கிராமவாசிகளுக்குச் சொந்தமான கால்நடைகள் வனத்திற்குள் பிரவேசிப்பதும், காட்டு யானைகளினால் உணவாக உட்கொள்ளப்படாத ஆக்கிரமிக்கும் தாவரங்கள் அடர்த்தியாக விரைவாகப் பெருகுவதனால் புல் வகைகளின் பெருக்கம் தாமதமடைகின்றது. இதனால் உணவைத் தேடி யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிப்பது இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அநேக வனப்பூங்காவிற்குள் விசேடமாக உடவளவை மற்றும் லுணுகம்வெகரை வனப்பூங்காக்களில் வன்டானா (கொம்பிஞ்ஞ) பொடிசிங்ஹமரங் போன்ற தாவரங்களை அதிகளவில் பரப்புவதோடு பெருகியுள்ளமையும் அவதானிக்கப்பட்டது.
வனத்தினுள் உணவுத் தட்டுப்பாடு காரணமாக தற்போது நாட்டினுள் குப்பைகளைக் கொட்டும் 54 இடங்களில் காட்டு யானைகள் 300 இற்கும் அதிகமான அளவில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளதோடு காட்டு யானைகள் குப்பைகளை உணவாக உட்கொள்வதன் காரணமாக பல்வேறு நோய்களுக்குள்ளாகி மரணமடைவதோடு மரண பரிசோதனையில் யானைகளின் வயிற்றினுள் உக்காத பொலித்தீன் பை, ஷொப்பின் பை, பிளாஸ்டிக் போத்தல் போன்ற பல்வேறு பொருட்கள் காணப்படுவதாக கால்நடை மருத்துவர்களின் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
யானை – மனித மோதலை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
யானைகளைக் பேணும் தேசிய முக்கியத்துவத்தை அறிந்து காட்டு யானைகளைப் பேணுவதற்காக அமைச்சரவையினால் “இலங்கையில் காட்டு யானைகளைப் பேணுதல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கை” எனும் தலைப்பில் கொள்கை கோவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக திணைக்களத்திற்கு 2006 செப்டெம்பர் 20 ஆந் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய காட்டு யானைகளைப் பேணல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையினுள் பின்வரும் 06 கொள்கைகள் அடங்கியுள்ளன.
யானைகள் வாழும் இடங்களை பேணும் பூமி வலயமாக அறியப்பட்ட வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்திற்குரிய காப்பகம் போன்று யானைகளை பேணும் மகாவலிக்குரிய பிரதேசங்களையும் கண்டறிந்து யானைகளை பேணும் பிரதேசங்களை அமைக்கவும் பிரேரணை செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வகையினுள் ஐந்து யானைகளைப் பேணும் பிரதேசங்கள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அறியப்பட்டு யானைகள் பேணும் பிரதேசமாக பெயரிடப்பட்டிருந்தது.
யானைகள் வாழும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி காப்பகத்திற்கு மேலதிகமாக காடுகளாக தனியார் நிலங்களையும் உள்ளடக்குவதாக முகாமைத்துவப்படுத்திய பாதுகாப்பகம் அமைக்க இதன் மூலம் பிரேரிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய தற்போது இலங்கையில் முகாமைப்படுத்தப்பட்ட யானைகள் பாதுகாப்பமாக மத்தள யானைகள் முகாமைத்துவ காப்பகம் மட்டுமே அறியப்பட்டுள்ளதாக, இது முன்னோடி செயற்றிட்டமாக தென் மாகாணத்தில் செயற்படுத்த பிரேரிக்கப்பட்டுள்ளது.
பயிர்கள் மற்றும் சொத்துக்களை யானைகளிடமிருந்து பாதுகாத்து செல்வதற்காக முற்பாதுகாப்பு நடவடிக்கைகளாக சிறிய விவசாய பண்ணைகளுக்கு “அபாய அறிவிப்பு முறைமை” உருவாக்கல் அதிக பயனுள்ளதாக அறியப்பட்டுள்ளது அதற்கேற்ப இதற்கு முன்னோடி செயற்திட்டமாக 2009 ஆம் ஆண்டு ரிட்டிகல பிரதேசத்தில் “அபாய அறிவிப்பு”முறைமை தாபிக்கப்பட்டுள்ளது.
மனித - யானை மோதல் அதிகளவில் நடைபெறுவதாக அறியப்பட்டுள்ள பிரதேசங்களில் சிறந்த பயிற்சிகளில் மனிதர்களை ஈடுபடுத்தி யானைகளைக் கட்டுப்படுத்தும் கூரை அமைத்து அதன் மூலம் யானைகளை விரட்டல், வலயத்தினுள் யானைகளின் புலம்பெயர்வு தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் மற்றும் “ஜன சஹன உதான” வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குழு அங்கத்தவர்களைப் பயிற்றுவித்தல் போன்ற பிரதான காரணிகளை நிறைவேற்றுவது நோக்கமாகவுள்ளது. அதற்கமைய 2008 ஆம் ஆண்டின் கல்கமுவ, நிக்கவரட்டிய, கருவலகஸ்வெவ, பிம்புரத்தாவ, ஹப்பந்தோட்டை, மட்டக்களப்பு, கந்தளாய் போன்ற பிரதேசங்களில் ஏழு யானைகள் கட்டுப்பாட்டு கூறுகளை ஆரம்பிப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காட்டு யானைகள் பெருமளவில் நடமாடும் சில கஷ்டப் பிரதேசங்களில் தன்மையான மனித வாழ்விடங்கள் அமைந்துள்ளபோது அங்கு வாழ்வோருக்கு பாதுகாப்பான பிரதேசங்களில் இடங்களை வழங்கலும், மாற்று வாழ்க்கை வழிகளை வழங்கலும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய புத்தளம், புத்திதகன்டும, லுணுகம்வெகரை, வெடஹரியாகந்த பிரதேசங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் மக்களை வெளியேற்றி வேறு பிரதேசங்களில் குடியமர்த்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் முயற்சி செய்துள்ளது.
நாட்டில் யானைகள் தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்டங்களை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தி யானைகளைப் பேணும் பிரதேசங்களை அனுமதியின்றி கையகப்படுத்தல், யானைகளுக்குக் காயம் ஏற்படுத்தல் மற்றும் கொல்லுதல் தொடர்பான குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தண்டனைகளை பெற்றுக் கொடுத்தல்.
மனித - யானை மோதல்களைக் குறைப்பதற்கான உபாய வழிமுறைகளாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கடந்த காலங்களில் மின்சார வேலி அமைத்தல், யானை வெடி பகிர்ந்தளித்தல், யானை வழித்தடங்களிலுள்ள தடைகளை அகற்றல் மற்று வாழ்நிலங்களுக்கிடையிலுள்ள தொடர்புகளை அதிகரித்தல், மக்களை தெளிவுறுத்தல் மற்றும் மக்கள் பங்களிப்புப் பெற்றுக் கொள்ளல் போன்ற உபாய முறைகளை அறிந்திருந்த போதிலும் மின்சார வேலி அமைத்தல் மற்றும் யானை வெடி பகிர்ந்தளித்தல் போன்ற காரணிகளில் கூடிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
யானை – மனித மோதலை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளிலுள்ள குறைபாடுகள்
மனித - யானை மோதலுக்குப் பரிகாரமாக காட்டு யானைகளால் பேணுவதற்கான அமைச்சரவையினால் இலங்கையில் காட்டு யானைகளைப் பேணல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு திணைக்களத்திற்கு 2006 செப்டம்பர் 20 ஆந் திகதி அனுமதி வழங்கப்பட்டு கொள்கைக் கூற்று வெளியிடப்பட்டதெனினும், அதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கீழ் காணும் கொள்கைகள் உள்ளடங்களாக ஏனைய கொள்கைகளுக்கு வழிவகைகள் செய்யப்பட்டிருக்கவில்லை.
முகாமைத்துவ யானைகள் பாதுகாப்பகம் (ஆநுசு) அமைத்தலின் கீழ் முன்னோடி செயற்திட்டமாக மத்தள முகாமைத்துவ யானைகள் பாதுகாப்பகம் 2011 ஆண்டிலிருந்து பெயரிட முயற்சி செய்யப்பட்ட போதும், 2019 ஜூலை மாதம் வரையிலும் முகாமைத்துவ யானைகள் பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
வாழ்நில முகாமைத்துவத்தின் கீழ் பாதுகாப்பதிலுள்ள தேக்கு, டர்பன்டைன் மற்றும் லன்டானா போன்றவற்றை அகற்றி யானைகளுக்குத் தேவையான வாழ்நிலத்தை பெருக்கியுள்ள போதும், இந்த டர்பன்டைன் மற்றும் தேக்கை வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேறியிருக்கவில்லை.
பயிர்களையும் சொத்துக்களையும் யானைகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முன் பாதுகாப்பு வழிவகைகளாக சிறிய விவசாயப் பண்ணைகளுக்கு “முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒழுங்கு முறைமை” உண்டாக்குதல் அதிக பயனுள்ளதாக அறியப்பட்ட போதிலும், இதை மக்களிடம் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காமை அவதானிக்கப்பட்டது.
மனித - யானை மோதல்கள் அதிகளவில் உள்ளதாக அறியப்பட்டுள்ள பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் கட்டுப்பாட்டுக் கூறுகளில் ஆரம்பத்தில் தேவையான அளவு உத்தியோகத்தர்களை நியமித்து ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் நிலவும் போதியளவு ஊழியர்கள் இல்லாமை சிக்கல் மற்றும் யானைகள் கட்டுப்பாட்டுக் கூறுகளில் இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றப்பட்டிருந்தமையால் யானை கட்டுப்பாட்டுக் கூறுகளின் நடவடிக்கை வினைத்திறனற்ற வகையில் இருந்தது.
காட்டு யானைகள் பாரியளவில் நடமாடும் கஷ்ட பிரதேசங்களில் கருத்திற் கொள்ளக் கூடியளவு குடும்பங்களை அகற்றும் தீர்மானம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை மற்றும் அரசியல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமையினால் சகல குடும்பங்களையும் அகற்றுவதற்கு முடியாது போனமையால் இந்நடவடிக்கையை வெற்றிகரமாக முடியாதிருந்தது.
மனித - யானை மோதல்கள் இடம்பெறும் பிரதேசங்களில் “கஜ மிதுரோ” எனும் பெயரில் அமைக்கப்பட்ட கிராமியக் குழுக்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து ஒழுங்கமைக்கப்படாமையால் இன்று வரையிலும் அக்குழு செயலிழந்து காணப்படுகின்றது.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் மனித - யானை மோதலிலுள்ள சிக்கல்கள் தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டங்கள் பாடசாலை மற்றும் பொதுக் குழுக்கள் ஊடாக நடைமுறைப்படுத்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பல்வேறு அறிவூட்டல் வேலைத்திட்டங்களின் நடாத்தப்பட்டாலும், அவை சரியான ஒழுங்கமைப்பில் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டதாகக் காண முடியாதிருந்ததோடு, சிறந்த கல்வி வேலைத்திட்டங்களின் பாடசாலைப் பாட விதானத்தூடாக நடாத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
யானைகள் தொடர்பாக நாட்டில் அமுலிலுள்ள சட்டங்களை காரணமாக நடைமுறைப்படுத்தி யானைகள் பேணும் பிரதேசத்தை அனுமதியின்றி கையகப்படுத்தல் மற்றும் யானைகளை கொல்லுதல் தொடர்பான குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தல் மிகவும் மந்தமான முறையில் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் யானைகளைப் பேணுவது தொடர்பில் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை நிறைவேற்றாமை மற்றும் குறித்த நிபந்தனைகளை மீறுதல் இடம்பெற்றுள்ள சந்தர்ப்பங்களில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நிபந்தனைகளைப் பூரணப்படுத்த போதியளவு முயற்சி செய்திருக்கவில்லை.
மத்தள முகாமைத்துவ யானைப் பாதுகாப்பகத்தினுள் பாரியளவில் மண் அகழும் வேலைத்திட்டத்திற்காக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி வளப் பாதுகாப்பு உத்தியோகத்தரால் அதற்கு அனுமதியளித்திருந்தும் கடிதமொன்று வழங்கப்பட்டு இடமளிக்கப்பட்டிருந்தது.
உபாய வழிவகையாக பாதிப்புக்குள்ளான குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு காப்புறுதி முறைமையொன்றை அறிமுகப்படுத்தல், அரச மற்றும் தனியார் உதவியுடன் நட்டஈடு மற்றும் தனியார் காப்புறுதி நிறுவனத்தின் துணையுடன் நட்டஈட்டுக் காப்புறுதி முறைமையொன்றை உருவாக்கும் சந்தர்ப்பங்களை கண்டறிவது மட்டுமன்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளில் ஏனைய வழிமுறைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பொருத்தமான வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
காட்டு யானைத் தடைகளாக உயிர்ப்புள்ள வேலிகளை அமைப்பதிலுள்ள சவால்களையும் எல்லைகளையும் கண்டறிந்து அவற்றைக் குறைத்துக் கொண்டு உயிர்ப்புள்ள வேலிகளை நிர்மாணித்தலை முன்னேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
உயிர்ப்புள்ள வேலிகளாக பிணை வேலி, சனல் வேலி போன்றவற்றை நாடு முழுவதும் பயிரிட முடியாதெனினும், பயிரிடப்படக்கூடிய பிரதேசங்களில் உயிர்ப்பான வேலிகளை வளர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
மனித யானை மோதல்களைக் குறைப்பதற்குத் தேவையான சிக்கல்களைத் தீர்க்கும் பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்தலின் அவசியம் அறியப்பட்டிருந்த போதும், அக்குழுக்களைத் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
காட்டு யானைகளுக்கு சுதந்திரமாக இடம்பெயருவதற்கு இடமளிப்பதற்காக 2019 செப்டம்பர் வரையிலும் யானைப் பிரதேசங்கள் 03 மட்டுமே வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததோடு 2015 மே மாதம் இடம்பெற்ற காட்டு யானை - மனித மோதல் முகாமைத்துவத்திற்கான வேலைத்திட்ட பிரேரணையூடாக மேலும் 16 வேலைத்திட்டங்கள் அறியப்பட்டு இதுவரையிலும் 07 யானைப் பிரதேசங்களில் கணக்காய்வு நடாத்தப்பட்ட போதிலும், இதுவரையிலும் ஒரு காட்டு யானை பிரதேசத்தையேனும் அறிவிக்க தவறியுள்ளது.
சுற்றாடல் ஆராய்ச்சி மற்றும் சரியான அனுமதியின்றி காட்டு யானை நுழைவுப் பாதையைத் தடை செய்து மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற குடியிருப்புக்கள், பயிர் நிலங்களை அமைத்தல், ஹோட்டல் மற்றும் வீதிகளை அமைப்பதனால் காட்டு யானைகள் கிராமத்தினுள் நுழைவது இடம்பெற்றுள்ளதுடன் அவ்வாறான நிர்மாணங்களை மேற்கொள்ள முன் அவற்றைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தவறியுள்ளது.
இனங்காணப்பட்ட காட்டு யானைகளின் நடமாட்ட நுழைவுகள் 16 இல் சுமார் 348 கி.மீ. அளவான 12 நுழைவுகளின் நிலம் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு மற்றும் இலங்கை மஹாவலி அபிவிருத்தி அதகார சபையிடமும் காணப்பட்டமையால், அந்த காணி வனசீவராசிகள் திணைக்களத்திடம் இல்லாதிருந்தமையால் காட்டு யானைகள் நடமாடும் பாதைகள் வர்த்தமானிகளின் மூலம் வெளியிடல் தாமதமடைந்திருந்தது.
முடிவுரை
யானை – மனித மோதலை குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், அவை முறையாக அமுல்படுத்தப்படாமை மற்றும் மேற்பார்வை செய்யப்படாமை காரணமாக அவற்றில் பாரிய குறைபாடுகள் நிலவின. இதனால் யானை – மனித மோதலின் இழப்புக்களை குறைப்பது இன்று வரையும் முடியால் உள்ளது. அதனால் யானைகளும் மனிதர்களும் தொடர்ச்சியாக மரணித்து வருகின்றனர். எனவே மனிதன் மற்றும் யானைகளை காப்பாற்றவும் சொத்துக்களை பாதுகாக்கவும் உடனடியாக தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
https://www.virakesari.lk/article/88869
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக