கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

5 செப்டம்பர், 2020

26 ஆண்டுகளாக உற்பத்தியை இழந்துள்ள கந்தளாய் சீனி தொழிற்சாலை


கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பல அரசாங்கங்கள் முயற்சித்தும் முடியாத விடயமாக இருக்கின்றது. தொழிற்சாலை இயந்திரங்கள், வாகனங்கள் பழுதடைந்துள்ளமை, உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளமை மற்றும் புதிய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள் என்பன தொழிற்சாலையை இயங்கவிடாமல் தடுத்து வருகின்றன. 21,223 ஏக்கர் அளவான நிலப் பிரதேசத்தில் பரவிக் காணப்படும் கந்தளாய் சீனித்தொழிற்சாலை 1957 இன் 49 ஆம் இலக்க அரசாங்க கைத்தொழில் கூட்டுத்தாபன அதிகாரச் சட்டத்தின் கீழ் 1957 ஆம் ஆண்டின் போது செக்கோஸ்லோவொக்கியா அரசாங்கத்தின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டு 1960 ஆம் ஆண்டு மக்கள் மயப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் தொன் அரைக்கும் இயலளவைக் கொண்ட இத் தொழிற்சாலையில் 160 நாட்களில் 192,000 மெட்ரிக் தொன் கரும்புகள் அரைப்பதனால் 16,320 மெட்ரிக் தொன் சீனிகள் உற்பத்தி செய்வதற்கும் 300 நாட்களின் போது 3.6 மில்லியன் லீற்றர் ஸ்பிரீட்கள் உற்பத்தி செய்யும் இயலளவும் காணப்பட்டது. இத் தொழிற்சாலையின் உரிமை 1993 ஆம் ஆண்டின் போது லங்கா ஏஜன்சீஸ் கம்பனிக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும் அதன் மூலம் எதிர்பார்த்த குறிக்கோள்கள் நிறைவேற்றப்படாமையின் காரணத்தினால் அந்த ஆண்டிலேயே நிறுவனம் அரசாங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தொழிற்சாலையின் இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக மாத்திரம் 230 அளவிலான ஊழியர்களை வைத்துக்கொண்டு நிறுவனம் 1994 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக மூடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் லங்கா ஏஜன்சீஸ் கம்பனியால் தொடுக்கப்பட்ட வழக்கு 2003 ஆம் ஆண்டின் போது அரசாங்கத்திற்குச் சாதகமாக முடிவுறுத்தப்பட்டிருந்ததுடன் அப்போதிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களின் போது தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முதலீட்டாளர்களைப் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தும் பொருத்தமான முதலீட்டாளரை தெரிவு செய்வதற்கு முடியாதிருந்ததன் அடிப்படையில் அம்முயற்சி வெற்றியளித்திருக்கவில்லை. எனினும், 2015 ஆம் ஆண்டின் போது மீண்டும் தொழிற்சாலையை மீளமைப்புச் செய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருந்ததுடன் அதற்காக  Sri Prabhulingashwar Sugar Group Of Companies Industries     நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு அங்கீகாரம் கிடைத்திருந்தது. ஆனால் அதன் பின்னரான செயற்பாடுகள் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு உதவவில்லை. இவ்விடயம் தொடர்பாக தேசிய கணக்காய்வாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பின்வரும் விடயங்கள் வெளிகொணரப்பட்டுள்ளன.

சீனித்தொழிற்சாலைக்குரிய காணிகளின் பயன்பாடு

சீனி ஆலையின் தொடக்க தேவைப்பாட்டிற்காக கரும்பு பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்குத் தேவையான 21,233 ஏக்கர் 02 ரூட் 30 பேச்சஸ் நிலப் பிரதேசம் 1957 திசெம்பர் 03 ஆந் திகதிய 11/2/2 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு அப்போதைய விவசாய மற்றும் காணிகள் அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்டிருந்தது.

வலயம் 01                                                                                 ஹெக். 1,216
வலயம் 02                                                                                 ஹெக். 921
வலயம் 03                                                                                 ஹெக். 153
வலயம் 04                                                                                 ஹெக். 1218
பண்ணை                                                                                  ஹெக். 23
சீனித்தொழிற்சாலையும் வீட்டுத்தொகுதியும்           ஹெக். 164
இளைஞர் படையணி                                                          ஹெக் 07
சரணாலயத்திற்காக                                                            ஹெக். 06
வனம்                                                                                        ஹெக். 2,650
கால்வாய்களும் வீதிகளும்                                              ஹெக். 81
இராணுவப்படை முகாம்                                                   ஹெக். 49
                                                                                                                    8,596

இந்த 21,233 நிலம் பிரதேசத்தில் 500 ஏக்கர் வீதம்  MS Sugar Lanka (Pvt) Ltd   இற்கும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் ஒப்படைக்கப்பட்டிருந்தன.


தொழிற்சாலையின் உரிமையும் மாற்றங்களும்

தொழிற்சாலை தனது உற்பத்தி நடவடிக்கையை 1993 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தி வந்ததுடன் 1993 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் போது கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் நிருவாகத்தின் மற்றும் செயற்பாடுகளில் காணப்பட்ட அதிகளவான செயற்திறனின்மை முறைகேடுகள் போன்ற விடயங்களின் அடிப்படையில் தொழிற்சாலையை மக்கள் மயப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க லங்கா ஏஜன்சீஸ் நிறுவனத்தின் ரஞ்சித் சுமணசேகர என்ற முதலீட்டாளருக்கு பொதுத்திறைசேரியினால் தொழிற்சாலையின் உரிமை 1993 மாhர்ச் மாதம் 04 ஆந் திகதி ஒப்படைக்கப்பட்டிருந்தது. அக் காலத்தில் புதிய நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதுடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் பணிக்கொடை நிதிகள் செலுத்தப்படாமையின் காரணமாக ஏற்பட்ட சச்சரவின் காரணமாக நிறுவனத்தை முறைப்படி பேணுவதற்கு முடியாதிருந்தது. இதற்கிணங்க அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் 1993 செப்டெம்பர் 01 ஆந் திகதியிலிருந்து நிறுவனம் தற்காலிகமாக மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டிருந்தது. அச்சிக்கலான நிலைமையின் அடிப்படையில் 1994 மார்ச் மாதத்தின் போது அரசாங்கத்தின் மூலம் 1,133 எண்ணிக்கையான ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூபா 33,099,502 பணத்தை செலுத்தி அவர்களை சுயமாக சேவையிலிருந்து விலகுவதற்கு இடமளிக்கப்பட்டிருந்தது. அது தொடக்கம் (அதாவது 1994 அரை பகுதியிலிருந்து) எதுவித உற்பத்தி நடவடிக்கைகளும் இல்லாது நிறுவனம் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் 230 ஊழியர்கள் அத்தியாவசிய சேவையின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

இதற்கு மத்தியில் 1997 சனவரி 28 ஆந் திகதி அதிவிசேட வர்த்தமானியின் மூலம் நிறுவனம் முழுமையாக அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு கந்தளாய் சீனிக் கம்பனியின் நிருவாகம் ஒரு தலைவரின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது. மேலும் லங்கா ஏஜன்சீஸ் நிறுவனத்தினால் (முன்னைய கொள்வனவுதாரர்) இழப்பீடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கு இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாக 2003 ஜூலை மாதத்தின் போது முடிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கிணங்க 2003 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்காக முதலீட்டுச் சபையினூடாக சில முதலீட்டாளர்கள் வருகை தந்திருந்தபோதிலும் பொருத்தமான ஒரு முதலீட்டாளரைத் தெரிவு செய்து அதனை முறைப்படியாக ஒப்படைப்பதற்கு முடியாதிருந்தது. எனினும் மீண்டும் 2015 ஆம் ஆண்டின் போது கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீளமைப்புச் செய்வதற்குரிய பிரேரணை காணி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

முதலீட்டாளரினை தெரிவு செய்தல்

முதலீட்டாளர்களுக்கு மத்தியில் தகைமையுள்ள முதலீட்டாளரைத் தெரிவு செய்யும் செயற்பாடு காணி அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் செயற்திட்டத்தை ஒப்படைப்பதற்கு பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவை உப குழுவின் இணக்கப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
  • கைத்தொழில் நிறுவனத்திற்குத் தேவையான இயந்திரங்களை முதலீட்டாளர் வழங்குதல் வேண்டும்.
  • முதலீட்டு நிதி முழுமையாக முதலீட்டாளரினால் வழங்கப்பட வேண்டியதுடன் உள்நாட்டு நிதிகள் ஈடுபடுத்தப்படாதிருத்தல் வேண்டும்.
  • உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் சந்தர்ப்பத்தின் போது அமெரிக்க டொலர் 10 மில்லியன் வங்கிப் பிணை சமர்ப்பித்தல் வேண்டும்.

முதலீட்டுச் சபையினால் குறிப்பிட்ட இரண்டு பிரேரணைகள் சம்பந்தமாக ஒப்பீட்டறிக்கையானது பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவை உப குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் உரிய குழுவினால் 2015 யூன் 16 ஆந் திகதி  Sri Prabhulingashwar Sugar Group of Companies Industries     நிறுவனத்தை தெரிவு செய்யுமாறும் அதற்குரிய அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க 12/2015 ஆம் இலக்க அமைச்சரவை விஞ்ஞானபத்தின் மூலம் அமைச்சரவையின் அங்கீகாரம் வேண்டப்பட்டிருந்ததுடன் அதற்காக 2015 ஜூன் 25 ஆந் திகதி அமப/15/0888/619/003-ஐ ஆம் இலக்க அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கை அரசாங்கத்திற்கு 51% ஆன பங்குரிமையும்  MG Sugar Lanka (Pvt)Ltd     கம்பனிக்கு 49% ஆன பங்குரிமையும் கிடைக்கும் வகையில் முதலீட்டு கம்பனியால் 100 மில்லியன் டொலர் முதலீடு செய்வதற்கும் இச் செயற்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த காணியான 21,233 ஏக்கர் 02 ரூட் 30 பேச்சஸ்களில் 500 ஏக்கர் காணி 30 ஆண்டுகளுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிய கம்பனிக்கு வழங்கும் அடிப்படையில் இம் முதலீடு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
தொழிற்சாலையிலுள்ள இருப்புக்களை விற்பனை செய்தல்

கந்தளாய் தொழிற்சாலைக்குரிய இயந்திர உபகரணங்கள் மற்றும் உடைந்த பொருட்கள் ஆகியவற்றை 6 மாதங்களினுள் விற்று விடுமாறு காணிகள் அமைச்சின் செயலாளருக்கு 2017 மார்ச் 17 ஆந் திகதிய  PMO/01/ASRCCCEM/2017/01     ஆம் இலக்க கடித்தின் மூலம் பிரதமரின் செயலாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. மேலும் திறந்த விலை மனுக்கோரும் கேள்வி நடைமுறையைப் பின்பற்றி கைத்தொழில் நிறுவனத்தின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள உட்டகட்டமைப்பு வசதிகள், இயந்திர உபகரணங்கள் மற்றும் ஏனைய அசையும் சொத்துக்கள் அகற்றப்பட வேண்டியவை என 2017 மார்ச் 20 ஆந் திகதி காணிகள் அமைச்சின் செயலாளருக்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

Merrigama Industries Lanka (Pvt) Ltd     நிறுவனம் தொழில்நுட்ப குழுவினால் சிபார்சு செய்யப்பட்டதுடன் அதற்காக 2017 யூலை 17 ஆந் திகதி அமைச்சரவை கைதவிர்ப்புக் குழு இணக்கப்பாட்டினைத் தெரிவித்திருந்தது. அதற்கிணங்க கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் இரும்பு பொருட்களை கைதவிர்ப்புச் செய்வது தொடர்பான ஒப்பந்தம்  Merrigama Industries Lanka (Pvt) Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளவதற்குரிய 28/2017 ஆம் இலக்க அமைச்சரவை விஞ்ஞாபனம் 2017 ஜூலை 26 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் நிதி மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சரின்  PED/AGR/AAND/CM/520    கடிதத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட சிபார்சினைக் கவனத்திற் கொண்டு 2017 ஆகஸ்ட் மாதம் 16 திகதி அமப/17/1688/738/025/ரீபீஆர் ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் முதலீட்டு கம்பனியால் பங்குதாரர் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனை இலங்கை அரசாங்கத்தினால் மீறப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டு சி;ங்கப்பூரிலுள்ள சர்வதேச இணக்க சபையில் 2017 செப்டெம்பர் 19 ஆம் திகதி ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. முதலீட்டுக் கம்பனியால் சிங்கப்பூரிலுள்ள இணக்கசபையில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு 2019 ஆகஸ்ட் 06 ஆந் திகதி வழங்கப்பட்டிருந்ததுடன் அதில் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கையின் நிபந்தனையை மீறியுள்ளது என தீர்மானிக்கப்பட்டுள்ளதனால் தண்டப்பணங்களைச் செலுத்துதல் அவசியமானது என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.


தொழிற்சாலையின் சொத்துக்களை மதிப்பீடு செய்தல்

கந்தளாய் சீனித்தொழிற்சாலையின் கட்டிடங்கள், இயந்திரங்கள், வாகனங்கள் என்பவற்றின் பெறுமதியானது மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் சீனித் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் மற்றும் காணி அமைச்சின் வேண்டுகோளின் அடிப்படையில் அவ்வப் போது மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன் அதில் முதலாவது மதிப்பீட்டில் காணி, கட்டிடங்கள், இயந்திரங்கள், வாகனங்கள் என்பனவாக 1991 ஆம் ஆண்டின் போது ரூபா 950 மில்லியனுக்கும் இரண்டாவது மதிப்பீட்டில் காணி கட்டடிடங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள என்பனவாக 2015 ஆம் ஆண்டின் போது ரூபா 2732 மில்லியனுக்கும் மூன்றாவது மதிப்பீட்டில் கட்டிடங்கள் உபகரணங்கள் வாகனங்கள் என்பனவாக ரூபா 193 மில்லியனுக்கும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் 2009 ஆம் ஆண்டில் இலகு வாகனங்களும் பார வாகனங்களுமாக ரூபா 42 மில்லியனுக்கும் 2012 ஆம் ஆண்டின் போது பயன்படுத்தக்கூடிய மற்றும் பயன்படுத்த முடியாத வாகனங்களாக ரூபா 25 மில்லியனுக்கும் 2016 ஆம் ஆண்டில் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களாக ரூபா 30 மில்லியனாகவும் வாகனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன. 2017 ஆம் ஆண்டின் போது மதிப்பீட்டுத் திணைக்களத்தால் சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் போது சுற்றுப்புறத்தில் காணப்பட்ட வாகனங்களின் மொத்தப் பெறுமதி ரூபா 13,030,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. கந்தளாய் சீனித்தொழிற்சாலையில் காணப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் ஒரே தடவையில் மதிப்பீடு செய்து கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக தொழிற்சாலையில் காணப்பட்ட சொத்துக்களின் முழுமையான பெறுமதியை இனங்காண்பதற்கு முடியாதிருந்தது.


தொழிற்சாலையின் உற்பத்தி இயலளவு

கந்தளாய் சீனித் தொழிற்சாலை தமது உச்ச இயலளவின் கீழ் ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக்தொன் கரும்பினை அரைக்கும் இயலளவு காணப்பட்டிருந்ததுடன் அரைக்கும் 160 தொன் தவணைக்குள் 192,000 மெட்ரிக் தொன் கரும்பினை அரைப்பதன் மூலம் 16,320 மெட்ரிக்தொன் சீனி (சீனியை பிழிந்தெடுத்தல் 8.5 சதவீதமாக) உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தது. அவ்வாறே வடிசாலையின் மூலம் ஒரு நாளைக்கு 30 மெட்ரிக்தொன் மொலேசஸ் வீதம் வருடாந்தம் 9,000 மெட்ரிக் தொன் (300 நாட்களுக்குள்) உற்பத்தி செய்வதற்கு ஈடுபடுவதன் மூலம் 3.6 மில்லியன் லீற்றர் அளவான பயன்பாட்டு ஸ்பிரிட்டினை உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தது.


ஆளணி முகாமைத்துவம்

2015 ஆம் ஆண்டு வரை இந் நிறுவனத்திற்கு ஒரு தலைவர் அல்லது ஒரு பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டிருக்காததுடன் நிறுவனத்தின் நடவடிக்கைகள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முகாமையாளரினால் மேற்கொள்ளப்பட்டது. எனினும் 2020 ஜனவரி வரை தொழிற்சாலைக்காக ஒரு பொது முகாமையாளர் இல்லாததுடன் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு நிருவாக நடவடிக்கைகளுக்காக 35 ஊழியர்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஊழியர்களுக்காக கடந்த 4 ஆண்டுகளின் போது பின்வருமாறு சம்பளங்களும் படிகளும் செலுத்தப்பட்டன.


அவதானிப்புகளில் இனங்காணப்பட்டுள்ள முறைகேடுகள்

25 ஆண்டுகளுக்கு அண்மித்த காலமாக எதுவித உற்பத்திச் செயற்பாடுகளுக்கும் பங்களிப்புச் செய்யப்படாது மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனித்தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து அதன் மூலம் உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மீளமைப்புச் செய்தல் நிகழ்ச்சித்திட்டம் 2020 ஜனவரி 31 ஆம் திகதி வரை வெற்றியளித்திருக்காததுடன் முதலீட்டாளரால் அமெரிக்க டொலர் 100 மில்லியன் முதலீடு செய்து 5 ஆண்டுகளுக்கு இச் செயற்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டியிருந்தும் அவ்வாறான எதுவித முதலீடும் இடம்பெற்றிருக்காததுடன் தொழிற்சாலைக்குச் சொந்தமான அனைத்து இயந்திரங்களையும் உள்ளடக்கிய கட்டிடங்களின் உரிமையும் இலங்கை அரசாங்கத்தினால் இழக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

கந்தளாய் சீனித்தொழிற்சாலையை மீளமைப்புச் செய்வதற்காக ஒரு முதலீட்டாளரைத் தெரிவு செய்யும் போது திறந்த கேள்வி நடைமுறை பின்பற்றப்பட்டிருக்காததுடன் காணி அமைச்சு மற்றும் முதலீட்டுச் சபைக்கு நேரடியாகக் கிடைத்த இரண்டு விண்ணப்பப்பத்திரங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு முதலீட்டு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போது முதலீட்டிற்காக பிரேரணைகளைக் கோருதல் சம்பந்தமாக போதியளவு வெளிப்படைத்தன்மை இல்லை என்பது அவதானிக்கப்பட்டது. மேலும் இந் நடைமுறை சம்பந்தமாக தொடர்புபட்டது எனக் கருதப்படுகின்ற எதுவித ஆவணமும் தம்மிடம் இல்லை என காணி அமைச்சினால் கணக்காய்விற்குத் தெரிவிக்கப்பட்டது.

2016 ஜூலை 01 ஆந் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழங்கப்பட்ட விடுவிப்புக்களைப் புறக்கணித்து நிதி அமைச்சின் முன்னாள் சட்ட ஆலோசகரினால் பங்குதாரர் உடன்படிக்கை தயாரிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தால் 2016 ஆகஸ்ட் 01 ஆந் திகதி வழங்கப்பட்ட விடுவிப்பு, தொழில்நுட்ப மற்றும் வணிக விடயங்கள் தொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்படாது 2016 ஆகஸ்ட 04 ஆம் திகதி ஒரு விடுவிப்பினைச் சமர்ப்பித்து இந்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான சட்டரீதியான இடையூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது அவதானிக்கப்பட்டது.

2016.08.01 ஆம் திகதிய சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட அவதானிப்புக்களை உள்ளடக்கிய கடிதத்திற்கான பதில் கடிதமாக நிதி அமைச்சரின் முன்னாள் சட்ட ஆலோசகரினால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தும் அதன் பதில் கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக திறைசேரிச் செயலாளர் அல்லது ஏனைய உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. அவ்வாறே இறுதி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட சந்தர்ப்பத்தின் போது மேற்கூறிய 2016.08.01 ஆந் திகதிய சட்டமா அதிபரின் அவதானிப்பு திறைசேரி செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்பதுவும் அவதானிக்கப்பட்டது.

சிங்கப்பூர் சர்வதேச இணக்க சபையில் முதலீட்டாளரினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மேலே குறிப்பிட்டவாறு அரசாங்கத்திற்கு பாதகமான தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதனை புறக்கணிக்க முடியாததுடன் இந்த உடன்படிக்கையில் முதலீட்டாளர் சம்பந்தப்பட்ட பிரிவு வரைவு செய்யப்பட்டது நிதி அமைச்சினால் என்பது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் 2018 மார்ச் மாதம் அரசாங்கத்தின் பிரதான சாட்சியாளராக காணி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஐ.எக்.கே.மஹானாம பெயரிடப்பட்டதுடன் அவரினால் அந்த வழக்கத்திற்கான சாட்சி ஆவணங்களிலும் கையொப்பமிட்டு அந்த சாட்சி ஆவணத்தை இணக்கசபை வழக்கிற்கு கோவை செய்தலும் இடம்பெற்றிருந்தது. நிலைமை அவ்வாறு காணப்பட்டிருந்தும் 2018 மே மாதம் மேலே பெயர் குறிப்பிட்ட முதலீட்டாளரிடமிருந்து லஞ்சம் பெற்றுக்கொள்ளல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதுடன் இணக்கசபை வழக்கு விசாரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்காக அரசாங்கத்தின் சாட்சியாளராக அவரை அழைத்து வருதல் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது என்பதுவும் அவதானிக்கப்பட்டது. நிதி அமைச்சும் சட்டமா அதிபர் திணைக்களமும் இணக்கசபையைச் சந்தித்து மேற்கொண்ட விளக்கமளித்தலானது மதிப்பீடு செய்து வேண்டிக்கொண்ட அமெரிக்க டொலர் 100 மில்லியன் இழப்பீட்டினை வழங்குதல் இணக்கசபையினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இலங்கை அரசாங்கமும் முதலீட்டாளரும் பங்குதாரர் உடன்படிக்கையை மேற்கொண்டிருந்ததுடன் அதில் திறைசேரி செயலாளரினால் உடன்படிக்கையின் பிரிவுகள் தொடர்பாக போதியளவில் ஆய்வு செய்யாது உடன்படிக்கையில் கையொப்பமிட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

நிதி அமைச்சின் முன்னாள் சட்ட ஆலோசகரால் கையொப்பமிடப்பட்ட பங்குதாரர் உடன்படிக்கையினை ஒப்பிடுகையில் இலங்கை அரசாங்கத்திற்கு பாதகமாகவும் முதலீட்டாளருக்குச் சாதகமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் சிங்கப்பூர் சர்வதேச இணக்கசபையினல் இழப்பீடாக சிங்கப்பூர் டொலர் 894,516.83 பணமும் அமெரிக்க டொலர் 211,913.93 பணமும் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்த வேண்டியதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதனால் அதற்கு மேலதிகமாக செயற்திட்ட கிரயம் 15% ஆல் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டது.

மேலும் சர்வதேச இணக்கசபையினால் வழங்கப்பட்ட இணக்க சபைத் தீர்ப்பினை நீதிமன்ற தீர்ப்பினைப் போல சவால்களுக்கு உட்படுத்த முடியாததனால் இந்த இணக்கசபைத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டினைச் சமர்ப்பிப்பதற்கு சட்ட ரீதியான வாய்ப்பு இல்லாததுடன் தற்பொழுது வரை முற்பணமாக சிங்கப்பூர் டொலர் 64,704 உரிய பணம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

எதுவித உற்பத்தியும் இடம்பெறாது இத் தொழிற்சாலையில் சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்காக 2015 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை சம்பளமும் படிகளுமாக ரூபா 40.392 மில்லியன் பணம் செலுத்தப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

பௌதீகப் பரிசோதனையின் போது தொழிற்சாலைக்கும் வடிசாலைக்கும் சொந்தமான கட்டிடங்களும் இயந்திரங்களும் 25 ஆண்டுகளை அண்மித்தகாலம் பயன்படுத்தப்படாது இருந்ததன் காரணமாக துருப்பிடித்துக் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது. மேலும் வடிசாலையின் விலை கூடிய சொத்துக்கள் கள்வர்களால் களவாடப்பட்டிருந்தமை தொழிற்சாலையில் உள்ளடங்கியிருந்த பாதுகாப்பு அரண் உள்ளிட்ட கட்டிடங்கள் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

தொழிற்சாலையில் சூடாகின்ற நீரை குளிராக்குவதற்கு நிர்மாணிக்கப்பட்ட பெரிய நீர் தாங்கி தொகுதியும் நீர் வடிகட்டி (றுயவநச கடைவநச) முறைமையும் காணக்கூடியதாக இருந்ததுடன் அந்த நீர்த்தாங்கியும் நீர் வடிகட்டி  (Water filter)     முறைமையிலும் ஆய்வுத் திகதியளவில் மழைநீர் ஒன்று சேர்ந்து நுளம்பு பெருகும் இடமாக மாறியிருந்தமை ஆய்வில் அவதானிக்கப்பட்டது.

தொழிற்சாலையின் சுற்றுப்புறத்தில் காணப்பட்ட வாகனங்கள் முறையான பாதுகாப்பும் கூடாரமும் இன்றி 25 ஆண்டுகளுக்கு அண்மித்த காலமாக துருப்பிடித்து இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் கேள்வி நடைமுறைக்காக வாகனங்களின் செசி இலக்கம் வெட்டப்பட்டிருந்த போதிலும் இயந்திரங்களை உள்ளடக்கி வாகனங்களின் உரிமை முதலீட்டாளருக்கு உரியதாவதன் அடிப்படையில் கேள்வி நடைமுறை இரத்துச் செய்யப்பட்டது. செசி இலக்கம் நீக்கப்பட்டதன் காரணமாக வாகனங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் முடியாதிருந்தது என்பது அவதானிக்கப்பட்டது.

தொழிற்சாலைக்குச் சொந்தமான காணியின் பரப்பளவு 8596 ஹெக்டயர் (21233 ஏக்கர்) அளவில் இருந்ததுடன் ஒட்டுமொத்த காணி பரப்பளவில் 164 ஹெக்டயர்களில் சீனித் தொழிற்சாலையும் உத்தியோகபூர்வ இல்லத் தொகுதியும் அமைந்துள்ளன. சீனித்தொழிற்சாலை செயற்படும் நிலையில் இருந்த காலத்தில் 4800 ஹெக்டயர் அளவானவை கரும்பு பயிர்ச்செய்கைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தும் தற்பொழுது வரை எதுவித நிலப் பகுதியிலும் கரும்பு பயிர்ச்செய்கை இடம்பெறாததுடன் அத்துமீறிய விவசாயிகளால் நெல் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைக்காக இக் காணி பலவந்தமாக கைமாற்றப்பட்டுள்ளது எனவும் ஏனைய காணிப் பகுதிகளில் எதுவித பயிர்ச்செய்கை நடவடிக்கையும் இல்லாததுடன் மாடுகளும் ஆடுகளும் சுதந்திரமாக விடப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டது.

சீனித்தொழிற்சாலைக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களில் 96 அத்துமீறிய குடியிருப்பாளர்கள் இருக்கின்றமை அவதானிக்கப்பட்டது. நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியத்தை பௌதீக ரீதியாகப் பரீட்சித்தபோது புதிதாக கொள்வனவு செய்து களஞ்சியத்திற்கு கிடைத்திருந்த தற்பொழுது வரை பயன்படுத்தப்படாத இயந்திர உதிரிப்பாகங்களை உள்ளடக்கிய பெறுமதியான இருப்புக்கள் களஞ்சியத்தில் உள்ளன என்பதுவும் முறையாகப் பராமரிக்கப்படாததனால் அந்த இருப்புக்கள் நாளாந்தம் அழிவடைந்து காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது. இக் களஞ்சியங்களிலுள்ள இருப்புக்களில் சில இராணுவ முகாம்கள் மற்றும் பௌத்த கோவில் நடவடிக்கைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகள், கட்டடங்கள், இயந்திரங்கள் வாகனங்கள் என்பவற்றை உள்ளடக்கிய சொத்துக்கள் மதிப்பீட்டுத் திணைக்களத்தால் 1991, 2009, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளின் போது அவ்வப் போது மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன. அந்த மதிப்பீட்டு அறிக்கைகளின் பிரகாரம் தொழிற்சாலைக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களும் ஒரே தடவையில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்காததுடன் நிறுவன தேவைப்பாட்டின் பிரகாரம் அடிக்கடி சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக தொழிற்சாலைகளுக்குச் சொந்தமாகக் காணப்பட்ட அனைத்து சொத்துக்களினதும் மொத்த பெறுமதி தொடர்பாக நிரந்தர உறுதிப்படுத்தலைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது ஒன்றுக்கொன்று ஒப்பீடு செய்வதற்கு முடியாதிருந்தது.


முடிவுரை

25 ஆண்டு காலமாக முடங்கி காணப்பட்ட கந்தளாய் சீனி தொழிற்சாலையினை இயங்க வைப்பதற்கு 2015 ஆம் ஆண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், அத் தீர்மானத்தை இறுதிவரை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாதிருந்தது. தொழிற்சாலையின் முதலீட்டாளர் குளறுபடி, அமைச்சரவை பத்திரத்தின் முரண்பாடு, இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் பழுதடைந்தமை, உபகரணங்கள் திருடப்பட்டமை, காணிகள், குடியிருப்புகள் வெளியாரினால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டமை போன்ற காரணங்கள் இவற்றில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. இறுதியில் தொழிற்சாலையில் காணப்பட்ட சொத்துக்களின் உரிமை, அரசாங்கத்திடமிருந்து 894,516.63 சிங்கப்பூர் டொலர் மற்றும் 211,913.93 அமெரிக்க டொலர் இழப்பீடு செலுத்தப்பட்டமை, செயற்றிட்ட செலவு 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமையுமே கடந்த 5 வருடக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களாக இருக்கின்றன. இலங்கையில் தற்போதைய தேசிய சீனி உற்பத்தி 9 வீதத்துக்கும் குறைவடைந்திருக்கின்றது. கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியானது கரும்பு உற்பத்திக்கு சாதகமான காலநிலையினை கொண்டுள்ள பகுதியாகும். எனவே நாட்டின் உற்பத்தி துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்கக்கூடிய வளங்களை முடக்கி வைத்திருக்கும் நடவடிக்கையாகவே கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் முடக்கத்தை பார்க்கவேண்டியுள்ளது. எனவே புதிய அரசாங்கம் சரியான முதலீட்டாளர்களை இனங்கண்டு தொழிற்சாலையை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக