கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

5 செப்டம்பர், 2020

புதிய இராஜாங்க அமைச்சும் குறைந்த மாடிகளை கொண்ட வீடுகளும்



இலங்கையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சரவை கடந்த புதன்கிழமை கண்டியில் பதவியேற்றுக்கொண்டது. 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒன்பது அமைச்சரவைகளிலும் தக்கவைக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்கு பங்களிப்பை வழங்கிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு இம்முறை இராஜாங்க அமைச்சோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த காலங்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கு கீழ் நிர்வகிக்கப்பட்ட நிறுவனங்கள் இராஜாங்க அமைச்சிலும் இணைக்கப்பட்டுள்ளன. 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பத்து தடவைகள் அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளது. பதினொராவது அமைச்சரவை நியமனங்கள் கடந்த புதன்கிழமை கண்டியில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவியேற்றுக்கொண்டார்.

1989 – 2020 ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற பத்து அமைச்சரவையிலும் தக்கவைக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு இம்முறை இராஜாங்க அமைச்சாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவராக எஸ.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இ.தொ.கா.வுடன் முரண்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி பிரேமதாஸ தலைமையில் இருமுறை அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. 1993 இல் ஜனாதிபதி விஜேதுங்க தலைமையில் ஒருமுறை அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றும் மலையகத்துக்கான அமைச்சு ஒதுக்கப்படவில்லை. 1994 ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் மூன்று முறை அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2005 ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இரு அமைச்சுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இருமுறை அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்பின்னர் 2019 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முதல் அமைச்சரவை நியமனம் வழங்கப்பட்டது. தற்போது பொதுத்தேர்தலின் பின்னர் புதிய அமைச்சரவைக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படக்கூடிய வகையில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அதிகாரசபை, பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கைப் பொறுப்பு, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம், தோட்டத்துறையின் சுயதொழில் சுழற்சி நிதியம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இராஜாங்க அமைச்சின் பணிகளும் பொறுப்புமாக பின்வரும் விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலின் பேரில் ‘வசதிகள் நிறைந்த கிராமம் மற்றும் சுபீட்சம் மிக்க தோட்டச் சமுதாயம்’ ஒன்றை உருவாக்குவதற்குரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு அமைய தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் எனும் விடயத்துக்குரிய கொள்கைகளை வகுத்தமைத்தலுக்கு உதவுதல், தேசிய வரவு செலவு, அரச முதலீடுகள மற்றும் தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளின் கீழான கருத்திட்டங்களைச் செயற்படுத்துதலும் மற்றும் கீழ்க்காணும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் விடயங்கள் மற்றும் பணிகள் அதற்குரிய கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை மற்றும் கருத்திட்டங்களைச் செயற்படுத்துதல் என்பன அமைந்துள்ளன.

மேலும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் மூலம் பின்வரும் திட்டங்களுக்கு விசேட முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. சமுதாய தலைமைத்துவம் மற்றும் தலைமைத்துவ பங்களிப்பு தலைமை தாங்கும் ‘ஜனமூல மண்டல மற்றும் ஜனமூல மத்தியஸ்த்தான’ தாபித்தல், தோட்ட சமுதாயம் சார்ந்ததாக வீடுகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்காக கருத்திட்டங்களைச் செயற்படுத்தல், தோட்டங்களைச் சார்ந்ததாக குறைந்த மாடிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டங்களை தோட்ட உரிமையாளர்களின் பங்களிப்புடன் அறிமுகப்படுத்துதலும் இவ்வீடமைப்புத் திட்டத்தினுள் முழுமையான சுகாதார நிலையங்கள் முன்பள்ளிகள் சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளையும் தாபித்தல், தோட்ட மக்களின் பிள்ளைகளுக்காக ஆரம்பக்கல்வி மற்றும் சுகாதார வசதிகளை உறுதிப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக இராஜாங்க அமைச்சின் மூலம் குறைந்த மாடிகளைக் கொண்ட வீடுகளை அமைப்பதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமையானது மீண்டும் மலையகத்தில் மாடி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கான சாத்தியத்தை உருவாக்கியிருக்கின்றது. மலையக பெருந்தோட்ட மக்கள் லயன் அறைகளிலிருந்து விடுபடுவதற்காகவே இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் தனிவீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சினால் உருவாக்கப்பட்ட மாடி லயன் வீட்டுத்திட்டம் தோல்வியிலேயே முடிவடைந்தது. லயன் அறைகளில் காணப்படும் அதே குறைபாடுகளையே மாடி வீடுகளும் கொண்டிருந்தன. 

2018 ஆம் ஆண்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாற்று அறிக்கையில், 1270 மாடி லயன் வீடுகள் மலையகப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் 186,298 வீடுகள் தேவைப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2015 ஆம் ஆண்டுக்குப்பின்னர் தனிவீட்டுத்திட்டங்களே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாடி லயன் வீடுகள் அமைக்கும் நடைமுறை இருக்கவில்லை. கடந்த வருடம் மறைந்த ஆறுமுகம் தொண்டமான் அமைச்சை பொறுப்பேற்ற பின்னர் தனிவீடுகளுக்கு கொங்றீட் கூரைகளை இடும் மாதிரி திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மலையக மக்களுக்கு சொந்த நிலத்தில் தனி வீடு என்பதே பொருத்தமாக உணரப்பட்டுள்ளது. மாடி வீடுகளினால் மக்கள் மீண்டும் குறுகிய பரப்புக்குள் அடைக்கப்படும் நிலை உருவாகும். எனவே புதிதாக உருவாக்கப்படப்போவது மாடி வீடுகளா அல்லது தனி வீடுகளா என்பது தொடர்பில் வெளிப்படையான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களின் மூலம் பல்வேறு விடயங்களை நேரடியாக அமைச்சரவை அனுமதியுடன் செயற்படுத்தும் நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது இன்னொரு அமைச்சினூடாகவே அமைச்சரவை அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை தோன்றியிருக்கின்றது. இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வகிக்கும் அமைச்சின் கீழேயே புதிய இராஜாங்க அமைச்சு உள்வாங்கப்படுவதால், பாரிய சிக்கல் நிலை தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. மறைந்த ஆறுமுகம் தொண்டமானின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே தெரிவித்திருக்கும் நிலையிலேயே ஜீவன் தொண்டமானின் வெற்றியும் அமைந்திருக்கின்றது. எனவே பிரதமருடன் இணைந்து செயற்படுவது ஜீவனுக்கு சவாலாக அமையாது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக