கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

5 செப்டம்பர், 2020

பெருந்தோட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு நோர்வூட் விளையாட்டு மைதானம் பங்களிப்பு செலுத்துகின்றதா?

மலையக விளையாட்டுத்துறையில் அண்மைக்காலமாக பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களுடைய திறமைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. மலையகத்தில் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் பாடசாலை மட்டத்துடனேயே தங்களுடைய திறமைகளை வரையறுத்துக் கொள்கின்றார்கள். அதற்குமேல் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது பெற்றோருக்கு இயலாத காரியமாகவிருக்கின்றது. அதேபோலவே பெருந்தோட்டங்களில் இருக்கும் எத்தனையோ பாடசாலைகளும் தோட்டபுறங்களும் மைதானங்கள் இல்லாமலும் விளையாட்டு உபகரணங்கள் இல்லாமலும் இருப்பதையும் அவதானிகக் முடிகின்றது. தோட்டபுறங்களுக்கு செல்லும் அரசியல்வாதிகள் பந்து, விக்கெட், துடுப்புமட்டை வழங்குவார்கள். ஆனால் அவற்றை பயன்படுத்துவதற்கேற்ற வசதியுடனான மைதானங்கள் இருக்கின்றதா என்பதை அறிந்துகொள்ள மாட்டார்கள்.

இவ்வாறான நிலைமை மலையகத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் காணப்படுகின்ற நிலையில் வழங்கப்பட்டுள்ள வளங்களும் மூடிவைக்கப்பட்டு வீணடிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் நோர்வூட் பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு கட்டிடத்தொகுதி வெறுமனே கட்சி அலுவல்களை மேற்கொள்ளும் இடமாகவே இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்திய பிரதமர் நரேந்திரமோடி வருகை தந்தபோதும், மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்த பொருட்களை பொலிஸார் கைப்பற்றியபோதும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளின் போதும் மைதானத்தில் அதிகளவான பார்வையாளர்களையும் தொண்டர்களையும் காணமுடியும். பின் அம்மைதான கட்டிடத் தொகுதி மூடப்பட்டு பாதுகாக்கப்படுவதே வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது. 

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் விளையாட்டு மைதானம் செயற்பட்ட காலப்பகுதியில், அங்குள்ள உடற்பயிற்சிகூடம் திருத்தியமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பிருந்த அமைச்சின் கீழான நிர்வாகத்தில் உடற்பயிற்சி கூடத்திலுள்ள உபகரணங்கள் சேதமடைந்திருந்ததுடன் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 1998 ஆம் ஆண்டுக்கு முன்னர் இம்மைதானம் புனரமைக்கப்படுவதற்கு முன்பாக எல்லோரும் விளையாடக்கூடிய நிலை காணப்பட்டது. ஆனால் 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மைதானத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதுடன் பொது மக்களுக்கான அனுமதியும் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டது. ஆனால் கட்சி கூட்டங்களுக்கு விதிவிலக்களிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நோர்வூட் விளையாட்டு கட்டிடத்தொகுதியில் உதைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் மற்றும் உடற்பயிற்சி கூடம் என்பன அமையப்பெற்றுள்ளதாகவும் இக்கட்டிடத்தொகுதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி, பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி, யோகா பயிற்சி மற்றும் இளைஞர் முகாம் என்பன இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த மைதான கட்டிடத்தொகுதியின் பயன்பாடுகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிடம் தகவல்(MCEEID/RTI/2020/17) கோரியபோதே மேற்படி விடயங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அத்துடன் இவ்விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இடம்பெறுகின்ற அரசியல் நிகழ்வுகளுக்கும் ஏனைய விளையாட்டு நிகழ்வுகளுக்கும் எவ்விதமான கட்டணமும் அறவிடப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனாலேயே அங்கு அதிகமான அரசியல் நிகழ்வுகள் நடைபெறுகின்றனவோ தெரியவில்லை. 

இவ்விளையாட்டு கட்டிடத்தொகுதியில் இந்திய பிரதமரின் வருகை, இலங்கை ஜனாதிபதி வருகை, அமைச்சின் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியமை மற்றும் அமைச்சின் பயனாளிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கியமை என்பனவே இங்கு இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகளாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வுகளுக்காக கட்டணங்கள் எவையும் அறவிடப்பட்டிருக்கவில்லை. இங்கு நான்கு ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் இருவர் நிரந்தர ஊழியர்களாகவும் இருவர் தற்காலிக ஊழியர்களாகவும் காணப்படுகின்றனர். நிரந்தர ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளமும் தற்காலிக ஊழியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றது. இவற்றை விடவும் இக்கட்டிடத் தொகுதியினை பராமரிப்பதற்காக வருடாந்தம் இருபது இலட்சம் ரூபா உத்தேசித்த மதிப்பு செலவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

25 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டுத் தொகுதியின் பராமரிப்புக்கு வருடாந்தம் இருபது இலட்சம் வரையும் செலவு செய்யப்படுகின்றது. அவ்வாறு மில்லியன் ரூபாக்களில் உருவான கட்டிடத் தொகுதி சாதாரண மக்களின் பாவனைக்கு வராமல் இருப்பது பாரிய குறைப்பாடாகும். மேலும் மழைக்காலங்களில் மைதானத்தில் நீர் நிரம்பும் நிலையும் காணப்படுகின்றது. அவ்வாறெனின் எவ்வித ஆய்வுகளும் திட்டமிடல்களும் இன்றி மைதானம் கட்டப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. இம்மைதான கட்டிடத் தொகுதி அமைந்துள்ள பகுதியானது ஏற்கனவே திறந்த மைதானமாக காணப்பட்டதுடன் சகலரும் பாவனைக்குட்படுத்தும் வகையிலும் காணப்பட்டது. தற்போது அவ்வாறானதொரு நிலைமை இல்லை. குறைந்தது கோட்டமட்டத்திலான விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். 

விளையாட்டுத் தொகுதி மற்றும் உள்ளக அரங்கின் மூலமாக மேசை பந்து, பூப்பந்து, வலைப்பந்;து, கரப்பந்து மற்றும் வெளியரங்கு மூலமாக கிரிக்கட் ஆகிய விளையாட்டுக்களுக்கான பயிற்சி கூடங்கள் காணப்படுவதுடன் உடற்பயிற்சி கூடமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல வளங்கள் காணப்பட்டும் இதுவரையும் இங்குள்ள வளங்களை பயன்படுத்தி உருவான ஒரு விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனையை அமைச்சால் அடையாளப்படுத்த முடியுமா? இங்குள்ள வளங்களின் மூலம் திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு அமைச்சு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கின்றதா? ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வளவாளர்களை பெற்று பயிற்சி வழங்கும் நிலையில், நோர்வூட் விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கும் இலங்கை அல்லது வெளிநாட்டு பயிற்சியாளர்களை உள்வாங்கி மலையக சந்ததியின் விளையாட்டுத் திறமையை வெளிகொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவை தொடர்பாக எவ்வித கவனமும் இன்றுவரையும் செலுத்தப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எந்த அமைச்சர்களும் கவனம் செலுத்தவில்லை.

அண்மைக்காலங்களாக மலையத்தில் பல இளைஞர், யுவதிகள் தேசிய, சர்வதேச மட்டங்களில் வென்று சாதனைப் படைத்திருக்கின்றார்கள். ஏற்கனவே தேசிய மட்டத்தில் சாதித்து பயிற்சியாளராவதற்கான வாய்ப்புகள் இன்றிய நிலையில் பல மலையகத்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களை உள்ளடக்கி அமைச்சின் மூலம் பெருந்தோட்ட விளையாட்டு அபிவிருத்திக் குழுவை உருவாக்கி வாய்ப்பளிக்கலாம். புதிய விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இது தொடர்பான கோரிக்கையினை முன்வைப்பது எம் அனைவரினதும் கடமை. எதிர்காலத்தில் மலையகத்தில் விளையாட்டுத்துறையினை முன்னோக்கி கொண்டு செல்ல வளங்களை முறையாக பயன்படுத்துவதுடன் புதிய திட்டங்களையும் உருவாக்க வேண்டும். தற்போது இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள ஜீவன் தொண்டமான் இவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

மேற்படி விளையாட்டுத் தொகுதி 2005 ஆண்டில், சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் 2011ஆம் அண்டில் ரூ. 25 மில்லியன் செலவிடப்பட்டு இந்த விளையாட்டு தொகுதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. 2016 ஆண்டில் இருந்து இவ் விளையாட்டு தொகுதி அமைச்சின் நேரடி நிர்வாகத்தின் கீழ் தொழிற்படுகின்றது. 2016 ஆம் ஆண்டிலிருந்து அமைச்சின் கண்காணிப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் சில அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அருகில் உள்ள பாடசாலைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக இவ்விளையாட்டுத் தொகுதியைப் பயன்படுத்தி வருவதாகவும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக