புதிய அரசாங்கம் உருவானதன் பின்னர் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட தனிவீட்டுத்திட்டம் தொடருமா அல்லது மாடி வீட்டுத்திட்டம் அமுலுக்கு வருமா என்ற விவாதங்களும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. ஆனால் புதிய வீட்டுத்திட்டத்தில் கொங்றீட் கூரைகள் இடப்படும் சாத்தியம் மேலோங்கியிருக்கின்றது. அதேவேளை கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தனிவீட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆதரவு குரல்கள் முன்வைக்கப்பட்டாலும் விமர்சனங்களும் இருக்கவே செய்திருந்தன. அந்தவகையில் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அப்போதைய மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்திருக்கின்றன. 2018 ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய 52 நாள் ஆட்சியின்போது பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக எஸ்.அருள்சாமி நியமிக்கப்பட்டிருந்தார். அவரின் தலைமையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் தனிவீட்டுத் திட்டத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவை தொடர்பான மேலதிக விபரங்கள் எவையும் பின்னர் வெளிவரவில்லை.
வீட்டுத்திட்டங்களை சீக்கிரம் நிறைவு செய்ய வேண்டுமென்பதே ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் கொள்கையாக இருக்கின்றதே தவிர, அதன் தரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படாததுடன் மேற்பார்வைகளும் செய்யப்படுவதில்லை. இதனால் மலையகத்தில் உருவாக்கப்பட்ட தனிவீட்டுத் திட்டங்களில் தரமான வீட்டுத் திட்டம் எது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழத் தொடங்கியுள்ளது. அதன்படி தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கணக்காய்வு அறிக்கையில் தனிவீட்டுத்திட்டங்களில் இடம்பெற்றுள்ள முறைக்கேடுகள், குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்ட கொட்டியாக்கலை வீடமைப்புத் திட்டம் மற்றும் பசும்பொன் வீட்டுத்திட்டத்தில் நிலவிய குறைபாடுகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் சகல தனிவீட்டுத் திட்டங்களையும் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளதுடன் வீட்டுத்திட்டங்களில் மோசடிகள் இடம்பெறாமலும் தடுக்க வேண்டியுள்ளது.
கொட்டியாக்கலை வீட்டுத்திட்டம்
கொட்டியாக்கலை வீட்டுத்திட்டத்தில் 184 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கும்போது ஒப்பந்ததாரரின் தகைமைகள் பரிசோதிக்கப்படாததுடன் நான்காவது குறைந்தபட்ச விலையினை மதிப்பிடாமல், ஐந்தாவது மிகக் குறைந்த ஏலதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி ஒப்பந்ததாரருடன் கைnழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் ஆரம்ப திகதி, இறுதி திகதிகள் மற்றும் மாதாந்த கட்டணம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இவ்விடயம் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தினரினால் தெரிவிக்கப்பட்ட கருத்தில், கொட்டியாக்கலை வீட்டுத்திட்டத்தில் 184 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ஈஸ்ட் லங்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் 14 ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. குறைந்தபட்ச விலையை முன்வைத்த முதலாவதும் இரண்டாவதும் நிறுவனங்களின் ஊடாக கடந்தகால கட்டுமானங்கள் தொடர்பான தகவல்களை வழங்க முடியாமல் போனமையால் இரண்டாம் விலையை நிர்ணயித்த நிறுவனத்துக்கு 150 வீடுகள் வழங்கப்பட்டதால் இவ்வீட்டுத் திட்டத்தை வழங்க முடியவில்லை. மூன்றாவது குறைந்தபட்ச விலையாகிய இந்த ஒப்பந்ததாரி முன்வைத்த விலைக்கு அவர்கள் தெரிவித்த விலையை விட ரூபா 21,000 குறைவாக வீடொன்றை நிறுவுவதற்கு ஏற்றுக்கொண்டமையால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்தம் வழங்கப்பட்ட சிறிது காலத்திலேயே 2016 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதியன்று Nடீசுழு இன் நிலச்சரிவு மற்றும் இடர் மேலாண்மை பிரிவிலிருந்து இந்த அறிக்கை பெறப்பட்டது. அந்தத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் பரிந்துரைகளுக்கு அமைவாக திட்டமிடல்களை செய்யத் தவறியமையால், பூர்த்தி செய்யப்பட்ட 42 வீடுகள் பயனாளிகளால் பெறப்பட்டு இருந்தன. இவ்விடயம் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தினரினால் தெரிவிக்கப்பட்ட கருத்தில், இந்த கட்டுமானப்பணியை பொறுப்பெடுத்த ஒப்பந்ததாரி பிரயாணம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகமாகையாலும் கடினமான இடமாக இருந்ததன் காரணத்தாலும் கட்டுமாணப்பணியை தாமதப்படுத்தினார். இருப்பினும் வீடு கட்டி முடிக்க ஒப்பந்த காலத்தை நீடிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
184 வீடுகளில் 42 வீடுகள் மாத்திரமே நிறைவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள கட்டுமானப்பணிகள் ஒப்பந்ததாரரால் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கொட்டியாகலை தோட்டத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்திருக்கின்றார். அத்திட்டத்துக்கு செலுத்தப்படக்கூடிய அதிகபட்சத் தொகை ரூபா 26,830,910 ஆனால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியாகும் போது ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்பட்ட தொகை ரூபா 31,964,677 அதன்படி ரூபா 5,133,766 தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு 184 வீடுகள் திட்டமிடப்பட்ட போதும் சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக 42 வீடுகளே முடிக்கப்பட வேண்டியிருந்தது. ஏற்பட்ட அதிக செலவு காரணமாக ஒப்பந்தகாரர் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து பல சந்தர்ப்பங்களில் அவருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் இக்தாத் நிறுவனத்துக்குப் பணிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மேற்கொண்ட கூடுதல் பணிகளுக்கு பற்றுச்சீட்டுக்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
அத்தோடு 42 வீடுகளில் பயனாளிகளால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக 2018.09.10 ஆம் திகதி இன்னுமொரு நிறுவனமாகிய பெரண்டினா நிறுவனத்துடன் 2018.11.15 திகதிக்கு முன்னர் வேலைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் கொள்கை நடைமுறைகள் எதுவும் இன்றி ரூபா 7 மில்லியன் ஒப்பந்தம் ஒன்றுக்கு இணங்கி ரூபா 1.36 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட விதிகளை மீறும் மேற்படி செலவுகளும் மேற்கூறிய தொகைக்கு மேலதிகமாக அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியிருந்தன.
பசும்பொன் வீடமைப்புத்திட்டம்
பசும்பொன் வீட்டுத்திட்டத்தின் கீழ் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளின் பௌதீக பரிசோதனைகளின் போது, இந்த வீடுகள் கொள்முதல் வழிகாட்டல்களுக்கு முரணானவை மற்றும் மோசமான நிலையில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீடுகளில் கொங்றீட் இடப்படுவதற்கு முன்னர் சரியாக நிலம் சமப்படுத்தப்படவில்லை என்பதையும் கொங்றீட் கலவைக்கு மண் கலக்கப்பட்டு மிக இலகுவாக உடையும் வகையில் பலவீனமான சீமெந்து மணல் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளமையை காணமுடிந்ததுடன் வீட்டின் கொங்றீட் தளத்துக்கான மதிப்பீடு 3 அங்குலங்கள் இருக்க வேண்டுமென்றாலும் அது 1.5, 2 மற்றும் 2.5 அங்குலம் தடிப்பமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டிருந்தது.
2018.04.27 ஆம் திகதியன்று திட்டத்தின் கணக்காய்வுகளின் படி, ஓபல்கல தோட்டத்தின் எலகல பிரிவில் ரூபா 19 மில்லியன் மதிப்பில் 20 வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தில் 14 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது. வீடுகள் நிலச்சரிவு அபாயத்தில் இருந்ததோடு, கொங்றீட் தூண்கள் கறைபடிந்து சேதமடைந்திருந்தன.
தோட்ட வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் கவனத்துக்கு….
புதிய வீட்டுத்திட்டங்கள் எவ்வளவு மேம்பட்ட வகையில் அமைக்கப்பட்டாலும் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட தனிவீடுகளில் காணப்படும் குறைபாடுகளுக்கும் அமைச்சே பொறுப்பாகும். 200 வருடங்கள் பழைமையை கொண்ட லயன்களில் பல இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருக்ககூடிய வகையில் இருக்கின்றது. ஆனால் மக்களை லயன் அறைகளிலிருந்து வெளியேற்றி புதிய வாழ்விடங்களுக்கு அனுப்புவதாக கூறி மீண்டும் மிகவும் ஆபத்தான தனி வீடுகளுக்குள் தள்ளிவிடுவதில் நியாயமில்லை. மலையக மக்கள் தரமான தனிவீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள். அதனை பெற்றுக்கொடுக்க வேண்டியது உங்களது கடமையாகும்.
அத்துடன் வீடமைப்புத் திட்டங்களை பெற்றுக்கொள்ளும் போது நோய்களால் பீடிக்கப்பட்டு வீட்டு உரிமை இன்றி வாழுகின்ற விசேட தேவையுடைய மக்களுக்கு இந்த வீடுகள் கிடைக்கப் பெறுவதில்லையென்றும் அவர்களை இனங்காண்பதற்கும் சரியான வழிமுறையொன்று இல்லையென்றும் மக்கள் அபிப்ராயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்திருக்கும் நிலையில், அவை தொடர்பாக ஆய்வு செய்வதற்கும் தகவல்களை சேகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடந்த காலங்களில் போன்று வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்களுக்கு முன்னுரிமையளித்து வீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும். கட்சி அங்கத்துவத்துக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் வீட்டுத்திட்டங்களிலும் அமைச்சின் ஏனைய அபிவிருத்தி திட்டங்களிலும் இடைத்தரகர்களின் செயற்பாடுகளைத் முற்றாகத் தவிர்த்து பயனாளிகள் நேரடியாக நன்மை பெறும் வகையில் அமைய வேண்டும். இதன்மூலம் தனிவீட்டுத் திட்டத்தில் நிலவும் மோசடிகளை குறைத்துக்கொள்ள முடியும். ஆனால் முற்றாக அவற்றைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக