கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

5 செப்டம்பர், 2020

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்

தேர்தல் நிறைவடைந்து புதிய ஆட்சி மலர்ந்துள்ள நிலையில் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ முன்வைத்த வாக்குறுதிகளை தற்போது கட்டங்கட்டமாக நிறைவேற்றி வருகின்றார். ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் எவையும் இன்னும் அமைச்சுத் திட்டங்களுக்குள் உள்வாங்கப்படவில்லை. குறிப்பாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரமுள்ள பதவியொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அவற்றைப் பயன்படுத்தி வேலைத்திட்டங்களை வகுக்கவும் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றவும் முயற்சிக்க வேண்டும். 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பெருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை சிலவேளை மறந்திருக்கக்கூடும் என்பதற்காக அதனை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம். 

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக ரூபா 1000 இனை கூடிய விரைவில் உறுதி செய்து பெற்றுக்கொடுத்தல்.

தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகின்றவாறு நியாயமான வகையில் அவர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குதல்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் தோட்ட தொழில்துறையை பாதுகாக்க மீள்நடுகை செயற்றிட்டத்தை துரிதப்படுத்தல்.

கைவிடப்பட்ட தேயிலை காணிகளை விவசாயப் பயிர்செய்கைகளுக்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 

தோட்டப்புற மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க மேலதிக வாழ்வாதார செயற்றிட்டங்களை முன்னெடுத்தல்.

இவை பெருந்தோட்டக் கைத்தொழிலுடன் தொடர்புடைய வாக்குறுதிகளாக இருக்கும் நிலையி;ல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இவை அதிக முக்;கியத்துவமுடையன. அவற்றை எவ்வாறு செயற்படுத்துவது என்பதே மிகப்பெரிய சவால். தனியார் வசமுள்ள பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் செயற்படும் தோட்டங்களில் தொழிலாளர்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானினால் கூட பேச்சுவார்த்தைகளில் வெற்றிபெற முடியாத சூழலை பெருந்தோட்ட முதலாளிகள் ஏற்படுத்தியிருந்தனர். எனவே அவற்றை கருத்தில் கொண்;டு செயற்படுவது அவசியம். 

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளக் கோரிக்கை 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் அக்கோரிக்கை முழுமை பெறவில்லை. ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதலாளிமார் சம்மேளனத்துடன் 1000 ரூபா தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றும் உடன்பாடுகள் எட்டப்படவில்லை. தொடர்ந்தும் பொதுத் தேர்தலில் இவ்விடயம் தொடர்பான வாக்குறுதிகள் மீண்டும் வழங்கப்பட்டன. அத்துடன் 1000 ரூபாவுடன் மட்டுப்படாமல் அதற்கும் மேலே சென்று தீர்வு பெற்றத்தருவதாக பலரும் பேசியிருந்தார்கள். ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்புக்கேற்ற நியாயமான கொடுப்பனவையே பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வருகின்றனர். 1000 ரூபா பெற்றுக் கொடுப்பது மாத்திரமே தீர்வு இல்லை. அதனோடு வேலை நாட்களையும் உறுதிப்படுத்த வேண்டும். ஊதியம் அதிகரிக்கப்பட்டு வேலைநாட்கள் குறைக்கப்பட்டால் அதில் எவ்வித நன்மையும் இருக்கப்போவதில்லை.

தொழிலாளர்களை சிறுதோட்ட முதலாளிகளாக மாற்றும் வாக்குறுதியும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து ஒலிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தோட்ட நிர்வாகங்கள் அவுட்குரோவர் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆர்வம்காட்டி வருகின்றன. குறிப்பிட்ட நிலப்பரப்பை பகிர்ந்தளித்து அதில் தொழிலாளர்களை கடமைக்கு அமர்த்தி இலாபத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் செயற்படுகின்றன. காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் அதன் உரிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது என்பது முக்கியமாகும். இதன் மூலம் தொழிலாளர்களுடைய உரித்து கேள்விக்குரியாகின்றது. அதன்மூலம் பராமரிப்பு செலவுகளை கம்பனிகள் இல்லாமலாக்கி இலாபம் பெற முயற்சிக்கின்றனர். உரித்துடன் கூடிய சிறுதோட்ட உரிமையாளர்களாக காணப்படுவார்களாயின் அரசாங்கத்தின் நிவாரணங்களையும் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்களாகின்றனர். 

தற்போது பெருந்தோட்டங்களில் விளைச்சலை கொடுக்கின்ற தேயிலைகள் மிகவும் பழைமையானவையாகும். அவை தற்போது காலாவதியாகும் நிலையிலேயே இருக்கின்றன. முறையான பராமரிப்புகள் மற்றும் உரப்பாவனை இன்மை போன்றவற்றால் தேயிலைகள் அழிவடைந்து வருகின்றன. ஆனால் அவற்றுக்கேற்ற வகையில் மீள்நடுகைகள் ஆரம்பிக்கப்படவில்லை. முன்னர் தேயிலை கன்றுகளை உருவாக்குவதற்காக ஒவ்வொரு தோட்டங்களிலும் நாற்றுமோடைகள் பராமரிக்கப்பட்டன தற்போது அவ்வாறான செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படுவதில்லை. தற்போது பெருந்தோட்டங்களை குத்தகைக்குப் பெற்றுள்ள கம்பனிகள் குத்தகை நிறைவடையும் போது தேயிலை இல்லாத தேசமாக மாற்றிவிடும் நிலையே இருக்கின்றது. இவை தொடர்பாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கவனம் செலுத்துவதில்லை.

கைவிடப்பட்ட தேயிலை காணிகளை விவசாயம் மேற்கொள்வதற்கு பகிர்ந்தளிப்பது சிறப்பு எனினும், தேயிலைகளை மீள்நடுவதை எங்கு மேற்கொள்வது. தேயிலைகளை மீள்நடுவதற்கு புதிய காணிகளை தேடவேண்டிய நிலை ஏற்படுமே. கொரோனா கால முடக்க நிலையின்போது கைவிடப்பட்ட காணிகளில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தபோதும் பெருந்தோட்டக் காணிகளில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்பொது கைவிடப்பட்ட காணிகள் குடியிருப்புகளில் இருந்து மிகவும் தூரத்தில் அமைந்துள்ளதுடன் காட்டுவிலங்குகளின் நடமாட்டமும் காணப்படுகின்றது. அவ்வாறெனின் அவ்வாறான பகுதிகளில் எப்படி பாதுகாப்பான விவசாயத்தை மேற்கொள்ள முடியும். அதற்கு அமைச்சுக்கு சொந்தமான காணிகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகளை குத்தகை அல்லது ஒப்பந்த அடிப்படையில் பகிர்ந்தளிப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கும். 

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் தோட்ட உட்கட்மைப்பு மற்றும் கால்நடை வள அமைச்சினால் பெருந்தோட்டங்களில் சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் சுயதொழில் கடன்கள் என்பன வழங்கப்பட்டன. சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் நவசக்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் கோழி, ஆடு மற்றும் மாடு வளர்ப்பு என்பவற்றுக்கான வளங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. 2014 இல் நவசக்தி சுயதொழில்கடன் மூலம் 349 பயனாளிகளுக்கு 16 மில்லியன் ரூபா வரை பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இத்திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. வீடுத்திட்டங்களைத் தவிர மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றும் வகையிலான வேறு எந்தத் திட்டங்களும் ஆரம்பிக்கப்படவில்லை.

எனவே தேர்தல்கால வாக்குறுதிகள் எவையும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் மாத்திரம் இருக்காது செயல்படுத்துதலும் அவசியமாகும். ஏற்கனவே கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல அவ்வாறே காகிதங்களிலேயே இருக்கின்றன. தேர்தலை இலக்காக கொண்டு மாத்திரம் மக்களின் அபிவிருத்திகளை நோக்காது, தங்குதடையில்லாத முன்னேற்றம் தொடர்பிலேயே சிந்திக்க வேண்டும். எனவே புதிய அரசாங்கத்தில் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்லது, அதற்கு மேற்பட்ட அபிவிருத்திகள் கிடைப்பதற்கு வழியேற்பட வேண்டும். 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக