கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

11 ஆகஸ்ட், 2020

மலையக மக்களிடம் தோற்றுப்போன கட்சிகளின் பிரசார வியூகங்கள்

  • படுதோல்வியைச் சந்தித்த ஐ.தே.க.
  • அதிகரிக்கும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
  • தொலைபேசியை முந்திய மொட்டு

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கட்சிகள் தங்களுடைய வெற்றிக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளன. நாடளாவிய ரீதியில் பொதுஜன பெரமுன முன்னிலை பெற்றுள்ள நிலையில் சஜித் தலைமையில் உருவான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்கட்சி அந்தஸ்த்தை பெற்றுள்ளது. இதேவேளை இலங்கையின் பழைமையான கட்சியாகவும் கடந்த முறை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்த ஐ.தே.க. இம்முறை படுதோல்வியை சந்தித்துள்ளது. மலையக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்திருந்தது. ஆனால் இம்முறை ஐ.தே.க.வின் பிளவு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தோற்றம் என்பன மொட்டின் வெற்றி வாய்ப்பினை உறுதி செய்திருக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சிகள் மலையக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே பொதுத் தேர்தலிலும் கொண்டு சென்றிருந்தன. மக்கள் இம்முறை சுயமாக சிந்தித்து வாக்களித்திருக்கின்றார்கள் என்றாலும் அதிகம் குழம்பிப் போய் வாக்களித்திருக்கின்றார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. அத்துடன் பல வாக்குகள் வாக்காளர்களால் பன்படுத்தப்படாமலும் இருக்கின்றன. இதனால் மலையக மக்கள் அதிகம் வசிக்கின்ற மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பதுளை மாவட்டத்தில் 38,621, கண்டி மாவட்டத்தில் 57,091, நுவரெலியா மாவட்டத்தில் 42,048 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 



இ.தொ.கா.வின் பின்னடைவு

நுவரெலியா மாவட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு கோட்டையாகவே ஆரம்ப காலங்களில் திகழ்ந்தது. 1989 – 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் அதிகமாக இரண்டுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தக்கவைத்திருந்தாலும் 2015 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இரு உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்கே அதிக பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எந்தவொரு தமிழ் வேட்பாளரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்காத நிலையில் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு ஐ.தே.க.வினால் தேசிய பட்டியல் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டது. 1994 பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக முத்துசிவலிங்கம், சுப்பையா சதாசிவம், ஆறுமுகம் தொண்டமானும் வெற்றி பெற்றிருந்தனர். 2000 இல் இ.தொ.க. சார்பாக ஆறுமுகம் தொண்டமான், முத்து சிவலிங்கம், ஜெகதீஸ்வரன் ஆகியோரும் தெரிவாகியதுடன் 2001 இல் இ.தொ.கா. சார்பாக ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கமும் 2004 இல் இ.தொ.கா.வில் ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், ஜெகதீஸ்வரன் ஆகியோரும் 2010 இல் இ.தொ.கா. சார்பில் ஆறுமுகம் தொண்டமான், வேலுசாமி இராதாகிருஷ்னண், பெருமாள் இராஜதுரை ஆகியோரும் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டணி மூலம் ஆறுமுகன் தொண்டமானும் முத்துசிவலிங்கமும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இறுதியாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகபட்ச விருப்பு வாக்குகளை பெற்று இ.தொ.கா. சார்பாக ஜீவன் தொண்டமான் (109,155) தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் மருதபாண்டி ராமேஸ்வரன் (57,902) உள்ளடங்களாக இரண்டு ஆசனங்களையே பெற்றுக் கொண்டுள்ளது. இம்முறை இ.தொ.கா. சார்பாக ஐந்து தமிழ் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது. ஜீவன் தொண்டமானை தெரிவு செய்திருந்த 109,155 பேரில் பலர் ஏனைய இ.தொ.கா. வேட்பாளர்களையும் தெரிவு செய்திருந்தாலே குறைந்தது மூன்று ஆசனங்களை பெற்றுக்கொண்டிருக்க முடியும் அல்லது மருதபாண்டி ராமேஸ்வரனை தெரிவு செய்த 57,902 பேரில் இன்னொரு இ.தொ.கா. உறுப்பினரை தெரிவு செய்திருந்தாலே நான்கு தமிழ் ஆசனங்களை பெற்றுக்கொண்டிருக்க முடியும். ஆனால் மொட்டு கட்சியின் மூலம் 7 தமிழ் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு தமிழர் வாக்குகள் திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது. அதேவேளை பதுளை மாவட்டத்தில் களமிறங்கிய செந்தில் தொண்டமானுக்கும் கண்டி மாவட்டத்தில் களமிறங்கிய பரத் அருள்சாமிக்கும் தோல்வியே கிடைத்திருக்கின்றது.


தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி

2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியானது, ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த பாராளுமன்றத்தில் கொண்டிருந்தது. இதில் கொழும்பு, கண்டி, பதுளை மாவட்டங்களில் தலா ஒரு உறுப்பினரையும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்த பழனி திகாம்பரம் இம்முறை இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதேவேளை இம்முறைத் தேர்தலிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் கொழும்பு, கண்டி, பதுளை மாவட்டங்களில் தலா ஒரு உறுப்பினரையும் நுவரெலியா மாவட்டத்தில் மூன்று உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் போனஸ் ஆசனம் ஒன்றினையும் வெற்றி கொண்டுள்ளது. ஆனாலும் கடந்த ஐ.தே.க. அரசாங்கத்தின் பங்காளிகளாகவிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்கட்சி வரிசையை அலங்கரிக்கவுள்ளனர். அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக களமிறக்கப்பட்ட தமிழ் வேட்பாளரும் தோல்வியையே சந்தித்திருக்கின்றார்.


சுயேற்சைக் குழுக்களின் ஆதிக்கம்

இலங்கையின் தேசிய அரசியலை நிர்ணயித்த கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி என்பன இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கின்றன. நுவரெலியா மாவட்டத்தில் எட்டு ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 275 பேர் போட்டியிட்டிருந்தனர். அத்துடன் 2015 இல் 14 கட்சிகளும் 09 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் அளிக்கப்பட்ட 465,025 வாக்குகளில் 30,727 வாக்குகளை சுயேற்சை குழுக்கள் பெற்றுக்கொண்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமாக 1123 வாக்குகளையே சுயேற்சைக் குழுக்கள் பெற்றிருந்தன. இம்முறை நுவரெலியா தேர்தலில் அதிகபட்சமாக அனுஷா சந்திரசேகரன் தலைமையில் கோடரி சின்னத்தில் களமிறங்கிய சுயேற்சைக்குழு ஒன்று 17,107 வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி என்பவற்றை பின்தள்ளி மூன்றாம் இடத்தினை தக்கவைத்துள்ளது.


ஐ.தே.க.வுக்கு படுதோல்வி

2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் நுவரெலியா மாவட்டத்தில் பெரு வெற்றி பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதேவேளை ஐ.தே.க.விலிருந்து பிரிந்து சென்ற ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருக்கின்றது. 2015 இல் நுவரெலியா மாவட்டத்தில் 228,920 வாக்குகளைப் பெற்றிருந்த ஐ.தே.க. 2020 இல் 12,974 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கின்றது. 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணி நான்கு ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தது. 1994 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க. - இ.தொ.கா. கூட்டணி ஐந்து ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தது. 2001 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி - இ.தொ.கா. கூட்டணி 5 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தது. 2004 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி - இ.தொ.கா. கூட்டணி 4 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தது.

2010 ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.ம.சு.கூ. - இ.தொ.கா. கூட்டணி 5 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில் ஐ.தே.மு. 2 ஆசனங்களை பெற்றிருந்தது. 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில் ஐ.ம.சு.கூ. 3 ஆசனங்களையே பெற்றிருந்தது. இதன்படி, அதிக தடவைகள் ஐ.தே.க. மற்றும் ஐ.தே.க. தலைமையிலான ஐ.தே.முன்னணியே நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் இம்முறை கட்சி பிளவுகளால் ஐ.தே.க. சார்பாக நாடளாவிய ரீதியில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் தோல்வியையே சந்தித்துள்ளனர். 2015 இல்  ஐ.தே.கட்சி பதுளை மாவட்டத்தில் 258,844 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் 2020 இல் 9,163 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கின்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற புத்திரசிகாமணி மற்றும் ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் தோல்வியை சந்தித்துள்ளனர். 

எனவே மீண்டும் நாட்டின் மொத்த நிர்வாகமும் ராஜபக்ஷாக்களின் கைகளுக்குச் சென்றுள்ளது. 2005 – 2014 டிசம்பர் வரையான காலப்பகுதியில் நாட்டின் நிர்வாகம் அவர்களின் கைகளிலேயே இருந்திருந்தது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் ஐ.தே.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு வழங்கியமையினால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் இம்முறை அவ்வாறு வாக்களிக்காமைக்கான காரணம் அச்சமா? என்ற கேள்வியும் இருக்கின்றது. ஆனால் இவர்களின் எதிர்பார்ப்பு எப்போதுமே அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேலுயர்த்தும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே ஆகும். கடந்த காலங்களில் இவர்களுடைய தேவைகள் ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிறைவேற்றப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. புதிய அரசாங்கத்தில் அவர்களின் நிலைமை தொடர்பாக எவ்வாறு கவனம் செலுத்தப்படும் என்பதையும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பதையும் எதிர்வரும் ஐந்து வருடகாலப்பகுதியே தீர்மானிக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக