கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூலை, 2020

உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள்


  • உத்தியோகபூர்வ வாசஸ்த்தலம் இல்லாத 09 அமைச்சர்கள்
  • உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை கையளித்திருக்காத 28 அரசியல்வாதிகள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை கையளிப்பதற்கு பணிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் அதனை துஷ்பிரயோகத்துக்குட்படுத்துவது இலங்கை அரசியலில் வழமையானதொரு விடயமாகவே பார்க்கப்படுகின்றது. தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் அதில் அங்கத்துவம் பெற்றிருந்த சகலரும் தமது உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னராக ஒப்படைக்கும்படி ஏற்கனவே கேட்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்றபின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்போது அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிவகித்த பலர் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களையும் வாசஸ்தலங்களையும் ஒப்படைக்காது மக்களுடைய வரிப்பணத்தையும் அதிகாரத்தையும் து~;பிரயோகம் செய்திருந்தமையை பலரும் மறந்துவிட்டிருக்கக்கூடும். இவர்களில் அதிகமானோரையே நாம் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்போகின்றோம் என்பதே உண்மை.

இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் இதுவரை மீள கையளிக்கப்படவில்லையென அரச நிர்வாக அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தற்போது பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதவியைவிட்டு விலகிய அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர், உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை கையளிக்காதவர்கள் தொடர்பிலான விபரங்களை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள், உள்;ராட்சிகள் அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி (Pub/Ad/RTI/1251) பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்நிலையில் கடந்த ஐ.தே.க. அரசாங்கத்தில் அங்கம் வகித்த 28 அமைச்சர்கள் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்த்தலங்களை கையளிக்கவில்லையென்பதுடன் எட்டு பேர் மாத்திரமே உத்தியோகபூர்வ வாசஸ்த்தலங்களை கையளித்துள்ளனர். ஆனால் அரச வாகனங்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பான அமைச்சில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சில் இருந்த முன்னாள் அமைச்சர் மற்றும் அவரின் பணியாட்தொகுதியினருக்கு வழங்கப்பட்டிருந்த சகல வாகனங்களும் அமைச்சுக்கு மீள கையளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை உரிய தினத்தில் கையளிக்காமையினால் கடந்த நவம்பர் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவான ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்ட 30 பேருக்கும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் 09 பேருக்கும் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலங்கள் கிடைக்கப்பெறுவதில் கடந்த காலங்களில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகித்த வாசுதேவ நாணயக்கார, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, எஸ்.பி.திஸாநாயக்க, ஜோன் செனவிரட்ன, மகிந்த சமரசிங்க, சீ.பீ.ரத்னாயக்க, லக்~;மன் யாப்பா அபேவர்த்தன, சுசந்த புஞ்சிநிலமே, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, பிரியங்கர ஜயரத்ன, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, திலங்க சுமதிபால, மொஹான் ஜெயவர்தன டி சில்வா, ரொஷன் ரணசிங்க, ஜானக வக்கும்புர, விதுர விக்ரமநாயக்க, கனஹ ஹேரத், திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, விமலவீர திஸாநாயக்க, ஜயந்த சமரவீர, தாரக்க பாலசூரிய, நிமல் லான்சா, காஞ்சன விஜேசேகர, இந்திக்க அநுருத்த ஆகியோருக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.


அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஆறுமுகம் தொண்டமான், தினேஷ்   குணவர்த்தன, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவங்ச, எச்.எம்.சந்ரசேன, ரமேஷ்   பத்திரன, பிரசன்ன ரணசிங்க ஆகியோருக்கும் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 22/2006 இற்கிணங்க வாசஸ்தலங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படுவதோடு இதுவரை இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளளப்பட்டு வருவதாகவும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள், உள்;ராட்சிகள் அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசஸ்தலங்களுக்குரித்தான நீர் கட்டணப் பட்டியல் மற்றும் மின்சாரக் கட்டணப் பட்டியல் என்பவற்றை அங்கு தங்கியிருப்பவர்களே செலுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யத் தவறினால் இவற்றின் மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 22/2006 இற்கிணங்க 2019.12.21 ஆம் திகதியிலிருந்து சாதாரண வீட்டு வாடகைக்கு மேலதிகமாக வீட்டு வாடகையில் 25 வீதம் தண்டப்பணம் அறவிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 22/2006 இல் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அரசாங்க நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட அரசாங்க விடுதிகளுக்கான வாடகை வசூலிப்பு தொடர்பாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

எந்தவொரு அமைச்சர்/ பிரதி அமைச்சர் ஆகியோருக்குரிய பதவியானது மாற்றப்படமிடத்து முன்னைய அமைச்சில் பதவி வகித்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் மேலும் வசித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், அந்த அமைச்சின் செயலாளர், புதிய அமைச்சின் செயலாளருக்கு அத்தகைய அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரிடமிருந்து பெற்று அத்தகைய உரிய வாடகை விபரங்களை அறிவித்தல் வேண்டும்.

அமைச்சர்/ பிரதி அமைச்சர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு மேலதிகமாக சுமித் தொடர்மாடி அல்லது அரசாங்க விடுதிகளில் தொடர்ந்து குடியிருக்கும் விடயத்தில், இந்த அமைச்சுக்கு இரண்டாவது வீட்டின் உடைமையானது திருப்பி ஒப்படைக்கும்வரை இரண்டாவது வீட்டு வாடகையாக உரிய அமைச்சர்/ பிரதி அமைச்சர் அல்லது பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளத்தின் 25 வீதத்திற்கு சமமான தொகை ஒன்றை அறவிடுவதற்கு அரசாங்க நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பதவி வகிப்பதை நிறுத்திய ஆனால் தொடர்ந்தும் அமைச்சரவை உறுப்பினராக இருக்கின்ற எந்தவொரு அமைச்சரும், பிரதி அமைச்சரும் உள்ளவிடத்து, அவர் விடயத்தில் ஒதுக்கப்பட்ட விடுதிகளை அரசாங்க நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கத் தேவையில்லை. இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து வாடகை, தண்டனைப் பணமாக முறையே சம்பளத்தின் 12 ½ வீதம், மாதாந்த வாடகையின் 25 வீதம் ஆகிய தொகைகளை அறவிடுவதற்கும், அரசாங்க வருமானத்துக்கு அத்தகைய தொகைகளை வரவினத்தில் பதிவு செய்த பின்பு அரசாங்க நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு அறிவிப்பதற்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

அமைச்சர்/ பிரதி அமைச்சராகப் பதவியை துறந்ததிலிருந்து மூன்று மாதங்கள் கடந்த பின்பு குடியிருப்பாளரால் எந்த விடுதியின் உடைமையும் கையளிக்கப்படாதவிடத்து, அரசாங்க நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு நீதிமன்றத்திடமிருந்து ஒரு கட்டளையைப் பெற்று குடியிருப்பாளரை அகற்றுவதற்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயங்களின் அடிப்படையிலேயே உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்/ பிரதி அமைச்சர்களுக்கு தண்டப்பணம் அறவிடும் முறைமையை முன்னெடுப்பதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. எவ்வாறெனினும் மக்களுடைய வரிப்பணத்தில் சுகபோகங்களை அனுபவிக்கும் அரசியல்வாதிகள் அவற்றை பதவியில் இருந்து நீங்கிய பின்பும் சட்டவிரோதமாக அனுபவிக்க நினைப்பதும் அதிகாரங்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதும் இலங்கை அரசியலில் வழமையானதொன்றாகவே மாறிவிட்டது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளினால் பொருளாதார ரீதியாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் அரசியல்வாதிகள் சொகுசு வாழ்க்கையை அதிகாரத்தில் இல்லாதபோதும் அனுபவித்து வருகின்றனர். பல அரசியல் தலைவர்கள் மக்களை சுரண்டுவதற்கே முயற்சித்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு சட்டரீதியாக உறுதியான பொறிமுறையை அரசாங்கம் கொண்டிருக்காமையும் மிகப்பெரும் குறைபாடாகும். அத்துடன் இவ்விவகாரம் ஒவ்வொரு அரசாங்கமும் மாறும்போதும் ஏற்படுகின்ற வழமையான செயற்பாடுமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக