கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூலை, 2020

மலையகத்தில் கொரோனா பரப்பியுள்ள குற்றச்செயல்கள்

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பொதுமக்கள் அதிகமான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. ஆனால் மக்கள் எதிர்நோக்குகின்ற சிரமங்களுக்கு அமைவாக அரசாங்கம் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் கொண்டிருக்கின்ற தாமதம் மற்றும் பாரபட்சம் காரணமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. அதேவேளை வழங்கப்பட்ட நிவாரணங்களை கொண்டு குடிமகன்கள் சிலர் மேற்கொண்ட செயற்பாடுகளும் நாடுமுழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கம் குடிமக்களுக்கு வழங்கிய 5000 ரூபா நிவாரண கொடுப்பனவுகளை பெரும்பாலான குடிமகன்கள் மதுவுக்கு பயன்படுத்தியதே அச்சர்ச்சைக்கு காரணமாகும். இதையடுத்து நாடுமுழுவதும் திறக்கப்பட்ட மதுபானசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

பொதுவாகவே மலையகப்பகுதியில் காணப்படும் பெரும்பாலான பிரதேசங்களில் மதுபான விற்பனை அதிகமாக காணப்படுவதை புள்ளிவிபரங்கள் எடுத்து காட்டுகின்றன. இதனால் மலையக மக்களில் பெரும்பாலானோர் மதுவுக்கு அடிமையானவர்கள் என்ற மனோபாவம் பலரிடம் காணப்படுகின்றது. ஆனால் குடிமகன்கள் காணப்படும் குடும்பங்கள் பெரும்பாலும் பெருந்தோட்டத்துறையினையே நம்பியிருக்கின்றன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் பெருந்தோட்டத்துறை தொடர்ந்தும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி வீழ்ச்சியின் காரணமாக மக்கள் வருமானம் இன்றிய நிலையில் வாடும் நிலையே காணப்படுகின்றது. காலம்தோறும் நாட்டின் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்வதற்கு கடுமையான உழைப்பை வெளிப்படுத்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் பொருளாதார ரீதியிலும் அடிப்படை வசதிகளின் அடிப்படையிலும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவிலும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இக்கொடுப்பனவினை வழங்குவதற்காக அரசாங்க அதிகாரிகளை தவிரவும் கட்சித் தொண்டர்களும் பயன்படுத்தப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்சி ரீதியாகவே பெயர்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஏப்ரல் மாதத்துக்கான கொடுப்பனவுகள் முடிவுபெற்ற நிலையில் தற்போது மே மாதத்துக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இக்கொடுப்பனவுகளை கடந்த மாதம் பெற்றுக்கொண்டவர்களே மீண்டும் இம்மாதமும் பெற்றுக்கொண்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்களை கிராம உத்தியோகத்தருக்கான அலுவலகத்தில் வைத்து பரிசீலனை செய்யாது நோர்வூட் பிரதேச செயலகத்தில் வைத்து பரீசீலனை செய்தமைக்கு எதிராக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் நோர்வூட் பிரதேச சபை தலைவர் ஆகியோருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட செயலாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவி;கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் பதிவாகும் நிலையில் 5000 ரூபா கொடுப்பனவில் எவ்வாறு வெளிப்படைத்தன்மை பேணப்படுமென நம்பமுடியும்.

5000 ரூபா கொடுப்பனவைச் செலுத்துதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள PTF/03/2020 ஆம் இலக்க 2020.03.31 ஆந் திகதிய சுற்றிக்கை மற்றும் PTF/03/2020(iv) ஆம் இலக்க 2020.04.20 ஆந் திகதிய சுற்றறிக்கை மற்றும் அதற்கு இடைநேர்விளைவான சுற்றறிக்கைகள் மூலம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தொழில்களுக்காக வெளிநாடு சென்றுள்ள நபர்கள் உள்ள குடும்பங்கள், ஆடைத்துறை உட்பட பல்வேறுபட்ட தனியார் துறைகளில் பணியாற்றும் நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தோட்டத்துறையில் தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் உள்ள குடும்பங்கள் ஆகியோருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவுகள் மூலம் மலையக மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படுகின்றதா அல்லது வழங்கப்படும் கொடுப்பனவுகள் சரியான முறையில் செலவு செய்யப்படுகின்றதா என்பது தொடர்பாகவும் ஆராய்வது அவசியமாகும்.

இவ்வாறான சூழ்நிலையிலும் மலையகத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை வழமைபோன்றே காணப்படுகின்றமையை அறியமுடிகின்றது. அண்மையில் கொட்டகலை நகரத்திலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்று உடைக்கப்பட்டு பெரும்பாலான மதுபான உற்பத்திகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேபோலொரு சம்பவம் டிக்கோயாவை அண்மித்த பகுதியிலும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்படுகின்ற மதுபான உற்பத்திகளின் காரணமாக மலையக மக்கள் அனைவரும் மதுபானத்துக்கு அடிமையானவர்கள் என்ற நிலைக்கு அனைவரும் வந்துவிட முடியாது. திட்டமிட்ட நிலையிலேயே மதுபானசாலைகள் கொள்ளையடிக்கப்பட்டு அதிகமான விலைக்கு விற்கும் ஒரு வியாபாரம் மலையகப்பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறு சட்டவிரோதமான முறையில் விற்கப்படும் மதுபான போத்தலொன்று 5000 ரூபா வரையிலும் விலைக்குப்போகின்றது. அதனையும் விலைகொடுத்து வாங்கும் அளவுக்கு ஒருசிலர் செயற்படுவது வேதனையானது. இவ்வாறு கொடுக்கும் விலைக்கெல்லாம் வாங்கும் நபர்கள் இருப்பதாலேயே சட்டவிரோத விற்பனையாளர்களின் பெருக்கமானது அதிகரித்துள்ளதுடன் மக்களை அடிமைப்படுத்தி பணம் உழைக்கும் கூட்டமும் அதிகரித்துள்ளது.

மக்களின் சுகாதார நலன்களை கவனத்தில் கொண்டே நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் சமூகத்தில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. பொலிஸாரின் பாதுகாப்பானது வீதிகளுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சமூகத்தில் நடக்கும் குற்றச்செயல்கள் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது உழைக்கும் மக்களை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இவ்வாறு சட்டவிரோத மதுபான விற்பனை மட்டுமல்லாது, சட்டவிரோதமான மதுபான உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதில் கசிப்பு உற்பத்தி முக்கியமானதாக காணப்படுகின்றது. நாடு முழுவதுமுள்ள மதுபானசாலைகள் திறந்திருக்கும் காலப்பகுதியிலேயே இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகமாக காணப்பட்ட நிலையில் தற்போதைய காலப்பகுதியில் இவ்வுற்பத்தி மேலும் அதிகரித்திருக்கின்றது.

தற்போது அதிகமாக மேற்கொள்ளப்படும் கசிப்பு உற்பத்தியானது, ஒரு பைக்கற்று 130 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. இதனால் அன்றாடம் கூலித்தொழிலை மேற்கொள்ளும் நபர்கள் தமது வருமானத்தில் பெரும்பாலானதை இதற்காக செலவழிக்கும் நிலை உருவாகியிருக்கின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் அதிகம் இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. ஒருவேளை உணவினை பெற்றுக்கொள்வதையும் பெரிதாக யோசிக்காத பலர் எப்பாடுபட்டாவது கசிப்பு அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலானோருக்கு இதுவே பொழுதுபோக்காகவுள்ளது. எவ்வாறு இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதென்பது பலருக்கும் தெரியாத விடயமாக இருக்கின்றது.

அத்தோடு மட்டுமல்லாது மேற்கூறியவற்றைவிடவும் பாரதூரமான வகையில் சூதாட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்னரான காலப்பகுதியில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வந்த சூதாட்ட நடவடிக்கைகள் தற்போது அன்றாட தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத் தொழில் மூலம் ஒரு நாளைக்கு ஒருவர் ஐம்பதாயிரம் வரை உழைக்கும் நிலைக்கு வழியேற்பட்டுள்ளது. மறுபுறம் பலர் ஐம்பதினாயிரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான பணம் எவ்வாறு பெறப்படுகின்றது. அப்பணத்துக்குப் பின்னர் எத்தனை குடும்பங்களின் வறுமை காணப்படுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

இச்சூதாட்டத்துக்காக எத்தனை பெண்களின் குடும்பத்தில் வன்முறைகள் பதிவாகியிருக்கும் என்பதையும் தற்போது நிலவுகின்ற கட்டுப்பாட்டு நிலைமையிலும் இவ்வளவு பணத்தை எப்படி பெற்றுக்கொள்ள முடிகின்றது என்பதையும் ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது. தற்போது அரசாங்கம் மக்களுக்காக வழங்கிவரும் ஐயாயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவானது ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும் பெரும்பாலானோருக்கு இக்கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறவில்லையென்ற குற்றச்சாட்டினையடுத்து மீண்டும் மே மாதம் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்கொடுப்பனவுகளும் முழுமையாக மக்களுக்கு சென்றடையுமா என்பதில் சந்தேகங்கள் நிலவுகின்ற அதேவேளை அக்கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளும் குடிமகன்கள் குடும்பத்தின் அத்தியாவசிய தேவையினை நிறைவு செய்வார்களா இல்லை சட்டவிரோத மதுபானம் அல்லது சூதாட்டத்துக்கு பயன்படுத்துவார்களா என்பது தெரியவில்லை.

நாட்டிலுள்ள மதுபானசாலைகளை மூடிவிட்டதால் மதுபாவனை குறைந்து விட்டது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத காரணமாகவே இருக்கின்றது. அதேவேளை பணம் இல்லாத நிலையிலும் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை கொள்வனவு செய்யவும், உற்பத்தி செய்யவும் தூண்டுவது யார் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. தற்போது நாட்டில் நிலவும் ஊரடங்கு சட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கே பெரும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் மதுபான விற்பனை , உற்பத்தி மற்றும் சூதாட்டம் என்பவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டத்தினை வகுக்க வேண்டும். இல்லாவிடின் பெருந்தோட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக