கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூலை, 2020

கொரோனாவுக்குப் பின்னர் மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார இடர் காரணமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.  தற்போது ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் விதிக்கப்பட்ட தடைகள் தற்போது கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு வந்தாலும் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை  ஸ்திரப்படுத்தி கொள்வதற்கு இன்னும் பல மாதங்கள் தேவைப்படலாம். இந்நிலைமை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலிலும் பாரிய தாக்கத்தை  செலுத்தியிருக்கின்றது. கடந்த வருடம் நாட்டடில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த சகல அபிவிருத்திகளும் தடைபடும் நிலைக்குத்  தள்ளப்பட்டன. அதற்கு நிலையற்ற அரசாங்கத்தின் உருவாக்கமும் காரணமாகும். அதற்கு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் நோய்த்தொற்று ஆகியவை  மலையகத்தின் தேவைகளை இன்னும் அதிகரித்திருப்பதுடன் அவை நிறைவேற்றப்படுவதற்கான வாயில்களையும் அடைத்துள்ளது. இந்நிலைமையில் மலையக மக்களுக்கு  பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. பொருளாதார ரீதியிலும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் முடங்கியுள்ள மலையகமானது, பல காலங்களாக வாழ்வாதாரத்தை கொண்டு  நடத்துவதற்கு போராடும் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் கொண்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்ட மக்கள் தங்களுடைய தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை அவர்களுடைய  வருமானத்தை முழுமையாக ஈட்டி கொள்வதற்கு போதுமானதாக இல்லை. மாதாந்தம் அவர்களுக்கு 18 நாட்களுக்கு வேலை வழங்கப்படாலும் முழுமையான சம்பளத்தை  பெற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது தேயிலை உற்பத்தி அதிகரித்திருக்கும் காலப்பகுதியில் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லாத  நிலைமையில் தேயிலைதூளினை உற்பத்தி செய்வதில் மந்த நிலையே காணப்படுகின்றது. போதுமான அளவில் தேயிலை கொழுந்து உற்பத்தி காணப்பட்டாலும்  தொழிற்சாலைகள் இயங்காத நிலைமையின் காரணமாக தொழிலாளர்கள் முழுமையாக தேயிலை பறிப்பதானது குறைவடைந்திருக்கின்றது. தேயிலையை பறிப்பதற்கு  தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததுடன், அவர்கள் முழுமையான சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. இதனால்  பெருந்தோட்டத்தொழிலாளர்கள் மாதாந்தம் 8000 ரூபா வரையிலேயே வேதனத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. தற்போது பெருந்தோட்டத்  தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துடன் மட்டுமல்லாது, தங்களுடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் கொண்டுசெல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என ஆரம்பிக்கப்பட்ட 1000 ரூபா சம்பளவுயர்வு விவகாரம் இன்றுவரையும் முற்று பெறாமல் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. மார்ச் மாதம் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டும் பின்னர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல், மே என தொடர்ந்து கொண்டே செல்கின்றது. தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 700 ரூபா அடிப்படைச் சம்பளமாகவும் வருகைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவும் மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கிராம் பச்சைத் தேயிலைக்கு 40 ரூபாவும் இறப்பர் பால் கிலோ ஒன்றுக்கு 45 ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலதிகமாக தொழிலாளர்களுடைய ஊ.சே.நி. மற்றும் ஊ.ந.நி. ஆகியவையும் தொழிலாளர்களின் சம்பளத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் தொழிலாளர்களின் வேலைநாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாலும் பறிக்கப்படும் கொழுந்தில் தோட்ட நிர்வாகத்தின் பிடிப்புக்கள் அதிகமாக இருப்பதாலும் தொழிலாளர்களினால் முழுமையான வேதனத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளவுயர்வு பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும் இன்றுவரை அவை சாத்தியமாகவில்லை. தற்போதை நோய்த்தொற்றை காரணம்காட்டி அரசியல்வாதிகளும் இவ்விடயத்திலிருந்து தப்பித்து வருகின்றனர்.
இவற்றுக்கு மேலதிகமாக அரசாங்கத்தின் மூலமாக வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவும் முழுமையாக மக்களுக்கு சென்றடையாத நிலையில், அரசாங்கமும் அதனை  முறையாக செயற்படுத்துவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைக்கு மாற்றாக புதிய தொழிலை  மேற்கொள்வதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் வளங்களும் குறைவாகவே காணப்படுகின்றன.  தற்போது வீட்டுத்தோட்டங்களை முன்னெடுப்பதற்கும் சுயதொழிலை ஊக்குவிப்பதற்கும் மக்களை பழக்கப்படுத்திக்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தல்களை  வழங்கியிருந்தாலும் அதனை செயற்படுத்துவதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முயற்சிப்பதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றனவா? என்றால் அதற்கான வாய்ப்புகள் மிகவும்  குறைவே. தற்போது கொழும்பிலிருந்து வேலைவாய்ப்புகள் இன்றிய நிலையில் பெருந்தோட்டங்களுக்கு திரும்பியுள்ள பல இளைஞர்கள் தங்களிடம் கைவசமுள்ள நிலங்களை  பயன்படுத்தி வீட்டுத்தோட்ட பயிர்செய்கையை முன்னெடுப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். ஆனால் இன்னும் லயன் அறைகளில் வாழும் மக்கள் வாழ்வதற்கே போதியளவு  இடமில்லாமல்      கஷ்டப்படும் நிலையில் அவர்களால் எவ்வாறு வீட்டுத்தோட்டப் பயிர்செய்கையை முன்னெடுக்க முடியும். தற்போது பெருந்தோட்டப் பகுதிகளில் உணவு பொருட்களுக்கு அதிகளவு விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பல பொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் நிலவுகின்றன. நுகர்வோர் அதிகார சபை இவை தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியிருக்கின்றன.

புதிதாக அமைத்துக்கொடுக்கப்படும் இந்திய  வீட்டுத்திட்டத்திலும் வழங்கப்படும் வீடுகள் ஏழு பேர்ச் காணியில் அமைத்துக்கொடுப்பதாக கூறப்பட்டாலும் அமைக்கப்படும் வீடுகளுக்கான முற்றங்களே இல்லாத நிலைமை  காணப்படுகின்றது. அவர்களுக்கான வீட்டு எல்லைகளும் வரையறுத்து வழங்கப்படவில்லை. எனவே புதிதாக அமைக்கப்படும் வீடுகள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்  தங்களுடைய தேவையை ஓரளவுக்காவது பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய வகையில் காணிகளின் பரப்பு அதிகரிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

லயன் அறைகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு புதிய வீட்டுத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படும் அவசியம் தற்போதைய சூழலில் உணரப்பட்டுள்ளது. தற்போது  கொழும்பிலிருந்து சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ள சொந்தங்களுடன் சுமுகமான உறவினை முன்னெடுத்து வாழ்வதற்கு தேவையான இடவசதி கூட இல்லாத நிலையிலேயே  அவர்கள் இருக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று சவாலை எதிர்கொள்வதற்கு சமூக இடைவெளியினை பேணுவதற்கு ஏற்ற வகையில் வாழ்வதற்கு போதிய இடம்  இல்லாத நிலையில் வீடுகளுக்கு முன்பாக கூடாரங்களை அமைத்து தங்கவேண்டிய நிர்பந்தத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் டிக்கோயா, வனராஜா  மாணிக்கவத்தை தோட்டத்திலுள்ள 20 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் சேதமடைந்ததுடன் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்தன. இவ்வாறு  ஆபத்தான நிலையினையே பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்டிருக்கின்றனர். இவற்றிலிருந்து அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள். கடந்த ஆட்சியில் மலைநாட்டு புதிய  கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம் மற்றும் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும்  வீட்டுத்திட்டம் போன்றவற்றுடன் ஏனைய சகல அபிவிருத்திகளும் முற்றாக தடைபட்டுள்ளன. தற்போது பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு  இப்பொறுப்புக்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் கடந்த ஜனவரி மாதம் முதல் புதிய அமைச்சால் எவ்விதமான அபிவிருத்திகளுக்கும் நடவடிக்கை  மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இன்னும் புதிய வீட்டுத்திட்டங்களுக்கு உள்வாங்கப்படாமல் இருக்கும் சூழலில் மலையக  மக்கள் அனைவரும் லயன் வாழ்க்கையிலிருந்து எப்போது விடைபெறுவார்கள் என்பது கேள்விக்குரியான விடயமாக இருக்கின்றது.

தற்போது பெருந்தோட்டப்பகுதிகளில் காணப்படும் கைவிடப்பட்ட நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளித்து அவற்றில் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ளக்கூடிய வகையிலான பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் தோட்ட நிர்வாகங்கள் அதனை அனுமதிப்பதாக தெரியவில்லை. தற்போது பெருந்தோட்டங்களில் புதிய தேயிலை கன்றுகள் நாட்டப்படுவதில்லை. அதனால் மாற்றுப்பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. அன்னாசி, மிளகு, ஆனைக்கொய்யா என்பன அவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அனவே கைவிடப்பட்டுள்ள நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் அவர்களின் மூலம் மாற்றுப்பயிர்கள் உருவாவதற்கு வழிவகுக்கும். இவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் வருமானம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஈடுசெய்வதற்கு ஓரளவுக்கு துணைபுரியலாம். தேயிலையை மாத்திரம் நம்பியிருந்த பல குடும்பங்கள் இந்த இக்கட்டான நிலைமைகளில் எவ்வாறு பாதிப்பினை எதிர்கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் அதனால் மக்கள் மாற்று வருமான மூலங்கள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தற்போது பொருளாதார ரீதியில் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள மலையக மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதனை சிந்திக்காத அரசியல் தலைமைகள் மக்களை குழப்பும்  செயற்பாட்டுக்குள் இறங்கியுள்ளனர். காலங்காலமாக மலையக மக்களை குழப்பி அரசியலை முன்னெடுக்கும் தந்திரம் கற்றவர்களாகவே மலையக அரசியல் தலைவர்கள்  இருக்கின்றார்கள். மக்களை ஊக்கப்படுத்த வேண்டிய சூழலிலும் பொது தேர்தலுக்காக தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு பல அரசியல் தலைவர்களும்  முயற்சித்து வருகின்றார்கள். மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கோ வாழ்வாதாரங்களை இழந்துள்ளவர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்காத அவர்கள்,  கொழும்பில் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள நபர்களை இலக்கு வைத்து சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.  தற்போது கொழும்பிலிருந்து 7000 பேர் நுவரெலியா மாவட்டத்துக்குள் நுழைந்துள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ள கருத்தே தற்போது பாரிய  சர்ச்சையை தோற்றவித்துள்ளது. இவ்விடயத்தை கையாள்வதிலேயே மலையகத் தலைவர்கள் தோற்றுப்போயுள்ளனர். இவ்விடயத்தின் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில்  மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்களை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அண்மைய காலங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இவை  தொடர்பான சரியான ஆதாரங்கள் இருப்பதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போதைய சுகாதார நெருக்கடியினை எதிர் கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எவ்விதமான நிவாரணங்களும் வழங்கப்படாததுடன், அதற்கான முயற்சிகளை அரசியல் தலைமைகள் மேற்கொள்ளவில்லை. சமூகநல விரும்பிகளுக்கு இருக்கும் அக்கறைகூட இவர்களுக்கு இருப்பதில்லை. எனவே மக்கள் சவால்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு முதலில் சரியான தலைமைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான காலம் தற்போது நெருங்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக