கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூலை, 2020

“1000 ரூபா கிடைக்குமென்ற நம்பிக்கையில்லை”


  • சந்தா மட்டுமே தொழிற்சங்கங்கள் அறவிட்டுக் கொள்கின்றன.
  • இம்முறை வாக்குகளை செல்லுபடியற்றதாக்குவோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் தொடர்பான கேள்விகள் மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டுவரும் விடயமாக இருக்கின்றது. இந்நிலையில் நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான விடயம் மீண்டும் பேசுபொருளாக இருக்கின்றது. ஐயாயிரம் ரூபாவிலிருந்து மீண்டும் ஆயிரம் ரூபாவுக்குள் மக்களும் அரசியல்வாதிகளும் நுழைந்துவிட்டார்கள். இதற்கு எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். நாட்டில் சில மாதங்களாக நிலவிய ஊரடங்கு நிலைமைகளின் பின்னர் தற்போதைய நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறான மனநிலையில் வாழ்வாதாரத்தையும் தொழிலையும் முன்கொண்டு செல்கின்றார்கள் என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும். தற்போது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக மக்கள் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் அதிகம் சந்தித்து வருகின்றனர். ஆபத்தான லயத்து வாழ்க்கையிலிருந்து விடுபடமுடியாமல் சிக்கித்தவிக்கின்றனர்.

அரசியல்வாதிகளின் குடுமிச்சண்டைக்குள் அபிவிருத்தித் திட்டங்கள் இன்றும் முடங்கிப்போய்க் கிடக்கின்றன. புதிய அரசாங்கத்தின் தோற்றத்தின் பின்னர் எவ்விதமான அபிவிருத்திப்பணிகளும் துரிதப்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. இவற்றில் முக்கியமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதியளிக்கப்பட்ட வகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் மாதங்கள் கடந்து செல்கின்றதே தவிர தீர்வுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. தை மாதம் வழங்குவதாக கூறப்பட்ட 1000 ரூபா மார்ச் மாதத்தினையும் தாண்டி தற்போது மே மாதத்துக்குள் நுழைந்திருக்கின்றது. இடையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மக்களுடைய உயிரை காப்பாற்றுவதே முக்கியம் என்ற கருத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் முன்வைக்கப்பட்டதுடன் 1000 ரூபா நிச்சயமாக பெற்றுக்கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் எப்போது வழங்கி வைக்கப்படுமென இன்றும் தெரியவில்லை.

மறுபுறம் மக்களுடைய உயிரை காப்பாற்றுவது முக்கியம் என்று கூறியிருந்த நிலையில் குறைந்தது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு கூட தவறியிருந்தனர். 5000 ரூபா கொடுப்பனவையும் கட்சி ரீதியாக பெற்றுக்கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பிரதேச மற்றும் கிராம மட்ட அரசியல்வாதிகளை இணைத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளும்படி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கட்சி ரீதியாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமையும் அரசியல் விளம்பரம் தேடப்பட்டமையுமே அதற்கான காரணமாகும். எனவே மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்றிட்டத்திலும் உண்மையான அர்ப்பணிப்பு இன்றிய நிலைமையே காணப்படுகின்றது. தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாவும் இதே விளம்பர நடவடிக்கையாகவே இருக்கின்றது. தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தற்போதைய அடிப்படைச் சம்பளத்தில் 40 வீத அதிகரிப்பை மேற்கொண்டு 700 ரூபாவும் தேயிலை/இறப்பர் விலைக் கொடுப்பனவாக 50 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 750 ரூபா சம்பளத்துடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான 105 ரூபாவினையும் சம்பளத்துடன் சேர்த்தே 855 ரூபா மொத்த சம்பளமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற சம்பள சூத்திரம் மோசடியானது. ஊ.சே.நி மற்றும் ஊ.ந.நி கொடுப்பனவு 105 ரூபா, மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவான  40 ரூபா என்பன எவ்விதத்திலும் நாட்சம்பளத்தில் அடங்குபவன அல்ல. ஊ. சே. நி மற்றும் ஊ.ந.நி என்பது ஒரு நியதிச் சட்டக் கொடுப்பனவு.  இது அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழில் வழங்குநர்கள் வழங்கும் நியதிச் சட்டக் கடப்பாடு. அவ்வாறான கொடுப்பனவு வேறு எந்த தொழிலாளர்களுக்கும் சம்பளம் என்று காட்டப்படுவதில்லை.

இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளக் கோரிக்கை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் இன்றுவரையும் செயல் வடிவம் பெறவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் எதிர்வரும் காலங்களில் பொது தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தொழிலாளர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தொடர்பில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத்தின் எல்லையில் கடமைபுரியும் பரக்கடுவ ஹெமிங்போர்ட் பி.எல். பிரிவு தோட்ட தொழிலாளர்களை சந்தித்து பெற்றுககொண்ட கருத்துக்களில் சிலரின் கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

“தற்போது கொழுந்து விளைச்சல் குறைவாகவே இருக்கின்றது. எங்களுக்கு நாளொன்றுக்கு 700 ரூபாவே சம்பளம் வழங்கப்படுகின்றது. என்னுடைய வீட்டில் மகளுடன் அவர்களுடைய பிள்ளைகள் மூவர் வசித்து வருகின்றனர். இருவர் பல்கலைக்கழகம் செல்வதற்கு தயாராக இருக்கின்றனர். ஒருவர் உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கின்றார். என்னுடைய மகளுக்கு நீரிழிவு நோய் காரணமாக தொழிலின்றி வீட்டிலேயே இருக்கின்றார். மகளின் கணவர் இறந்துவிட்டதால் அவர் என்னுடனேயே இருக்கின்றார் என தன்னடைய கஷ்டங்களை விவரிக்கின்றார் திருமதி தனலெட்சுமி. என்னுடைய கணவரும் வயோதிபம் காரணமாக வீட்டிலேயே இருக்கின்றார். கடந்த மாதம் எனக்கு பத்தாயிரம் ரூபாவே வேதனமாக வழங்கப்பட்டது. அவற்றின் மூலமே எங்களுடைய சகல செலவுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலைமையில் எங்களுக்கு இந்த வேதனம் எவ்வாறு போதுமானதாக இருக்கும். நான் ஒருவரே தொழில் செய்கின்றேன். மாதாந்தம் உணவுத் தேவைக்கே 15000 - 20000 ரூபா முதல் செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. இப்படியே என்னுடைய வாழ்க்கை கழிகின்றது.” 

“நான் இத்தோட்டத்திலேயே தொழில் செய்கின்றேன். எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் கல்வி கற்கின்றனர். என்னுடைய கணவரும் தோட்டத்திலேயே தொழில் செய்கின்றார். இதன்மூலம் மாதாந்தம் 8000 - 9000 ரூபா வரையே வருமானம் பெற்றுக்கொள்கின்றோம். எங்களுக்கு வேறு எந்த உதவியும் இல்லையென அன்பரசி தெரிவிக்கின்றார். தோட்டத்தில் வேலை செய்தால் மட்டுமே எங்களுக்கு வருமானம் வரும். 1000 ரூபா சம்பளம் தருவதாக கூறி இன்னும் தரவில்லை. நாங்கள் 700 ரூபாவுக்கே தொழில் செய்கின்றோம். அதிலேயே பிள்ளைகளின் கல்வி செலவு, மருந்து மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்களும் இவை தொடர்பாக எவ்வித கவனமும் செலுத்தவில்லை. ஜனவரி மாதம் தருவதாக கூறினார்கள் இன்று மே மாதம் ஆகிவிட்டது. இந்த வருமானம் உணவுத் தேவைக்கே போதாது. கடன் வாங்கியே சமாளித்து வருகின்றோம்.”

“நானும் எனது கணவரும் 24 வருடங்களாக இத்தோட்டத்திலேயே கடமை புரிகின்றோம். எவ்வளவு தான் தொழில் புரிந்தாலும் அதன் மூலமான வேதனம் எங்களுக்கு போதாது. பிள்ளைகள் இருவரும் கொழும்பிலேயே தொழில் புரிந்தார்கள். தற்போதைய பிரச்சினை காரணமாக இருமாதங்களாக அவர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர் என திருமதி ஜெயராணி தெரிவித்தார். இவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கப்பெறவில்லை. பிள்ளைகள் தொழிலின்றி வீடுகளுக்கு திரும்பி வந்தாலும் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் அவர்களுக்கு தொழில் தருனர்களால் எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை. தற்போது மீண்டும் தொழிலுக்கு அழைத்திருக்கின்றனர். என்னுடைய மகளுக்கு ஐயாயிரம் கொடுப்பனவு வழங்கப்பட்டது. நாங்கள் தோட்டத்தில் தொழில் புரிவதாக கூறி நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கேகாலை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு அதிகளவுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இரத்தினபுரி மாவட்டத்தில் வசிக்கும் எங்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. தற்போது அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றம் காரணமாக 30 ஆயிரம் வரையில் உணவுத் தேவைக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது. தோட்டத்தில் 10000 - 12000 ரூபா வரையே வருமானம் கிடைக்கின்றது. மார்ச் மாதம் தருவதாக கூறிய 1000 ரூபா இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்குமென்ற நம்பிக்கையும் இல்லை. வாக்குகள் கேட்டு யாராவது வந்தால் வாக்குகள் வழங்குவதில்லை. வாக்குகளுக்கு மட்டுமே எங்களிடம் வருவார்கள் அதன் பின்னர் எங்களை கண்டு கொள்வதில்லை. வாக்குகளை செல்லுபடியற்றதாகவே செய்வோம்.”

“எங்களுக்கு 1000 ரூபா தருவதாக கூறினார்கள் இன்னும் தரவில்லை. எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். எங்களுக்கு அரசாங்கத்தால் வழங்குவதாக கூறப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவில்லையென திருமதி மஞ்சுளா தெரிவித்தார். எங்களுக்கு தற்போதைய வேதனம் போதாது. எங்களுக்கு 1000 ரூபாவை பெற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டில் ஐவர் இருக்கின்றனர். நான் மட்டுமே தொழில் புரிகின்றேன். கணவர் தொழிலின்றி வீட்டிலேயே இருக்கின்றார். மார்ச் மாதம் தருவதாக கூறிய 1000 ரூபா மே மாதம் வரையிலும் கிடைக்கப் பெறவில்லை. தற்போது 25 ஆயிரம் ரூபா வரை மாதாந்தம் செலவாகின்றது. இவ்வளவு க~;டத்திலும் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். மருத்துவமனைக்கு செல்வதானாலும் 1200 ரூபா கொடுத்து வாடகை வாகனத்திலேயே செல்ல வேண்டும். தொழிற் சங்கத்துக்கு மாதாந்தம் 160 ரூபா சந்தா அறவிட்டு கொள்கின்றார்கள் ஆனால் எங்களுக்காக குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை. தற்போதைய இக்கட்டான சூழலிலும் எங்களுக்கு எவ்விதமான நிவாரணங்களும் கிடைக்கப்பெறவில்லை. ஒருநாளைக்கு 22 கிலோ கொழுந்து பறித்தாலே முழுமையான சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியும்.”

போதிய வருமானம் இன்மை, தொழிலுக்கேற்ற ஊதியம் கிடைக்காமை, நிவாரணங்கள் வழங்கப்படாமை போன்ற பல குறைபாடுகளுடனேயே தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் நிலை காணப்படுவதை இவ்வுரையாடலின் மூலம் அறிந்துக்கொள்ள முடிந்தது. 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களின் வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கக்கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இரவு போராட்டம் முன்னடுக்கப்பட்ட அதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணியினரால் தலவாக்கலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையும் எவ்விதமான பயனும் கிடைக்கப்பெறவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணியினரால் கடந்த ஆட்சியில் வழங்குவதாக கூறப்பட்ட 50 ரூபா கொடுப்பனவும் இறுதி வரை வழங்கப்படவில்லை. தற்போது 1000 ரூபா சம்பள உயர்வினை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றனர். இறுதி கூட்டு ஒப்பந்தத்தின் போது முன்று கட்டங்களில் 1000 ரூபா சம்பள உயர்வினை வழங்குவதற்கான யோசனையை முதலாளிமார் சம்மேளனம் மன்வைத்திருந்தபோதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதனை நிராகரித்திருந்ததாக கடந்த காலங்களில் குற்றச்சட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருந்த நிலையில்  தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். வேட்பாளர்களாக போட்டியிட்டிருந்த சிலர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பாக தேர்தல் வாக்குறுதிகளையும் ஊடக அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தமை கவனிக்கத்தக்கதாக அமைந்திருந்தது. இத்தேர்தலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தெரிவு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகவே இருக்கும் என்பது வெளிப்படையாகவே பலருக்கும் தெரிந்திருந்த நிலையிலும் வாக்குறுதிகள் மூலம் மக்களை கவருவதற்கு பலரும் முயற்சித்திருந்தனர். அந்த வகையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தாபய ராஜபக்ஷ தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட்சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படுமென தெரிவித்திருந்தார். தேயிலைக்கான வரிகளை நீக்கி அத்தொகை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. வெற்றிபெற்ற பின்னர் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோட்டத்தொழிலாளர்களுக்கு 1500 ரூபா வழங்கப்படுமெனவும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 1000 ரூபா வழங்கப்படுமெனவும் சுயேற்சை ஜனாதிபதி வேட்பாளர் A.S.P. லியனகே தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1500 ரூபாவாக உயர்த்துவேன் எனவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பெருந்தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்ய வந்த இந்திய வம்சாவளி மக்களான மலையகத் தமிழர்கள் அன்று முதல் இன்று வரையும் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளதுடன் காலம் முழுவதும் போராடியே தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர். தொழிலாளர்களின் சம்பளப் போராட்டங்களை சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ளலாம். 1930 களில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியானது தொழிலாளர்களையும் பாதித்தது. குறைந்தபட்ச வேதனச்சட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட சம்பளத்தொகையை குறைக்க தொழில் தருனர்கள் முற்பட்டபோது ஹட்டனில் 5000 தொழிலாளர்கள் நடேசஐயரின் தலைமையில் ஒன்றுகூடி சம்பள குறைப்பை எதிர்க்கத் தீர்மானித்திருந்தனர். 1933 ஆம் ஆண்டளவில் ஹட்டன் புகையிரத நிலையத்தில் கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. இவ்வாறு பல ஆண்டுகள் கடந்தும் முற்றுபெறாத தொழிலாளர்களின் வேதனப் போராட்டம் தற்போது தொழிற்சங்கங்களின் பிடியில் சிக்கியிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக