கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

17 ஜூலை, 2019

அவதியுறும் ஆசிரியர் உதவியாளர்கள்

மலையக பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு என்றால் அது ஆசிரியர் தொழில் மட்டுமே என அரசியல்வாதிகளால் முத்திரை குத்தப்பட்டுவிட்டது. பெரும்பாலும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு ஆசிரியர் நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெருந்தோட்டங்களுக்கு தபால் விநியோகம் செய்ய தபால்காரர்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் தொழில் என்பது புனிதமானதும், சமூகத்துக்கு சேவை செய்யக்கூடியதொரு துறையாக இருந்தாலும் கூட ஏனைய துறைகளிலும் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகள் பயணிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காதது பெரும் குறையே. 2013/12/16 ஆம்  திகதிய Wum/13/1636/530/059 ஆம் இலக்கம் கொண்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி தமிழ்மொழி மூலம் தோட்டப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடயங்களுக்காக ஆசிரியர் உதவியாளர்களை நியமனம் செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் 08/08/2014 ஆம் திகதிய 1875 இலக்கமிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 19/05/2015 ஆம் ஆண்டு உயர்தரம் சித்தியடைந்த பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 7 கட்டங்களாக வழங்கி வைக்கப்பட்டது. இதில் இறுதிக்கட்டமாக 92 பேருக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி நடைபெற்று முடிந்தது.



இவ்வாறு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனமானது, நிபந்தனைகளின் அடிப்படையில், வெறும் 6000 ரூபா மாதாந்த ஊதியத்துக்கு நியமிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டனர். 10 வருடங்களில் நியமனப் பாடசாலையில் கடமையாற்றுதல், ஐந்து வருடங்களுக்கிடையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் ஒன்றினை பெறுதல் அல்லது அரசினர் ஆசிரியர் கலாசாலைகளில் பயிற்சியினை நிறைவு செய்தல் என்பன நிபந்தனைகளாக காணப்பட்டன. இதன்படி ஆசிரியர் உதவியாளர்களில் முதலாவது தொகுதியினர் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு முழுவதுமுள்ள கல்வியியற் கல்லூரிகளில் 2 வருட பயிற்சிகளுக்காக உள்வாங்கப்பட்டு பயிற்சிகளை நிறைவு செய்து கடந்த மார்ச் மாதமளவில் பெறுபேறுகளும் வெளியாகிய நிலையில் இன்னும் அவர்கள் ஆசிரியர் சேவையின் 3 (1) க்கு உள்வாங்குவதாக கூறிய உறுதிமொழியினால் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.

முதலாம் தொகுதி மாணவர்கள் பயிற்சிகளுக்காக கல்லூரிகளுக்காக உள்வாங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வெறும் 6000 ரூபா ஊதியத்தைப் பெற்று உணவு, தங்குமிடம் என்பவற்றுக்காக மாத்திரம் 8000 - 10000 ரூபா வரையிலான தொகையினை செலவு செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்களின் பின்னர் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் ஆசிரியர் உதவியாளர்களுக்கான சம்பளம் 4000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 10000 ரூபா வழங்கப்பட்டது. ஆனாலும் அவை எந்தவிதத்திலும் போதுமானதாக இருக்கவில்லை. கல்லூரி பயிற்சிகளிலும் பணச் செலவை எதிர்கொண்ட அவர்கள் ஆசிரியர் பயிற்சியின் போது மாதமொன்றுக்கு 5000 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை செலவு செய்துள்ளனர்.

இறுதியாக கல்லூரிப் பயிற்சியினை நிறைவு செய்து வெளியேறும் போது நூல் வெளியீட்டுக்கு பணம் செலுத்தாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படமாட்டாதென அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட அவர்கள் 2 வருட பயிற்சியினை முடித்து வலயக் கல்விப் பணிமனைகளுக்கு அறிவித்தல் வழங்கிய பின்னரும் கூட இன்று வரையும் அதற்காக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் இரண்டாம் தொகுதி ஆசிரிய உதவியாளர்கள் கல்லூரி பயிற்சிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆசிரியர் உதவியாளர்கள் என்ற நாமத்தின் கீழ் நியமனத்தைப் பெற்றிருந்தாலும் பாடசாலைகளில் ஆசிரியருக்குரிய நேர அட்டவணை, பாட ஒதுக்கீடு உட்பட சகல பணிகளும் இவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சேவையிலுள்ள ஆசிரியரின் குறைந்த பட்ச மாதச் சம்பளம் 27000 ரூபா என்பதுடன் 7800 ரூபா வாழ்க்கைச் செலவுப் படியும் வழங்கப்படுகிறது. அவ்வாறான நிலையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் தரத்துக்குள் உள்வாங்காமல் வெறுமனே 10000 ரூபா கொடுப்பனவில் வைத்திருப்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றது.

ஆசிரியர் உதவியாளர் நியமனத்துக்காக 18 - 35 வயதுக்கிடைப்பட்ட உயர்தரம் சித்தியடைந்த பெருந்தோட்ட இளைஞர், யுவதிகள் விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், அதுவரை காலமும் பல உயர் தொழில்களில் உயர் சம்பளத்தில் தொழில் புரிந்தவர்கள் அனைவரும் அரசாங்க வேலைவாய்ப்பென எண்ணி, ஆசிரியர் உதவியாளர்களின் நியமனத்துக்கு உள்வாங்கப்பட்டு இன்று வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதற்கே வழியற்றவர்களாக இருந்து வருகின்றனர். இந்த நியமனத்தினை பெற்ற பெரும்பாலானோர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் என்பதுடன், குடும்பத்தை கொண்டு நடத்த வேண்டிய பொறுப்பு வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். எனவே 10000 ரூபாவில் எவ்வாறு குடும்பத்தை கொண்டு நடத்த முடியுமென்பதை முன்னாள் இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணனும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் தெரிந்திருக்கவில்லையா?

கிழங்கு வியாபாரிகளுக்கு சார்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றத் தெரிந்திருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு ஆசிரியர் உதவியாளர்களின் நிலைமை தொடர்பாக அரசாங்கத்துக்கு தெரிவித்து தீர்க்கமான முடிவினை பெற்றுக்கொடுக்கத் தெரியவில்லை. 1875 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் 2.2 ஆம் பந்தியில், ஆட்சேர்க்கப்படும் ஆசிரிய உதவியாளர்கள் தமது முதல் நியமனத் திகதியிலிருந்து 5 வருடங்களினுள் தாம் நியமனம் பெறும் பாடத்துடன் தொடர்புறும் வண்ணம் கல்வி அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்படும் பல்கலைக்கழகமொன்றில் / உயர் கல்வி நிறுவனமொன்றில் குறித்த பாடத்திற்கான பட்டமொன்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுடன் அவ் ஆசிரியர் பயிற்சி அல்லது பட்டம் செல்லுபடியாகும் திகதி முதல் அவர் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பின் தரம் 1 இற்கு உள்ளீர்க்கப்பட்டுச் சேவையில் உறுதிப்படுத்தப்படுவர்.

இவ்வாறு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும் பயிற்சிகளை நிறைவு செய்துள்ள முதல் தொகுதி ஆசிரியர் உதவியாளர்களின் கோப்புகள் வலய கல்விப்பணிமனைகளில் கிடப்பிலேயே கிடக்கின்றன. இவர்களை ஆசிரியர் சேவைகளுக்கு உள்வாங்கும் வரை மாகாண கல்வி அமைச்சு ஊக்கத் தொகையினை வழங்குவதற்கு சரி முயற்சிக்கலாம். ஊவா மாகாண கல்வியமைச்சராக வடிவேல் சுரேஸ் இருந்த போது ஆசிரிய உதவியாளர்களுக்கான 6000 ரூபாவிலிருந்து மேலதிகமாக 10000 ரூபாவுடன் 16000 ரூபா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

எனினும் ஏனைய பெருந்தோட்ட மாகாணங்கள் எவ்வித தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை. ஊவா மாகாண கல்வியமைச்சு மாறிய பின் 16000 ரூபா நிறுத்தப்பட்டு 5 மாதங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை மீண்டும் கழித்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டது. இதுவே ஆசிரிய உதவியாளர்களின் நிலைமையாக இருக்கின்றது. 2007 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்த பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்கள் நேரடியாக ஆசிரியர் சேவையின் தரம் 3 (2) க்கு உள்வாங்கப்பட்டனர். அவர்கள் எவ்விதமான அலைக்கழிப்புகளுக்கும் உள்ளாகவில்லை. ஆனால் ஆசிரியர் உதவியாளர் நியமனத்தின் போது, அரசியல் தலைவர்களும் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளும் சிந்தித்து செயல்பட்டிருக்கவில்லை.

தற்போதைய இராஜாங்க கல்வி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனால், பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவை தரம் 3 (1) க்கு உள்வாங்குவதற்கான அறிவுறுத்தல்களை கல்வியமைச்சின் செயலாளரின் ஊடாக மத்திய, மேல், ஊவா, சப்ரகமுவ மாகாண கல்வியமைச்சின் செயலாளர்களுக்கும் மாகாண கல்விப்பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே வெகுவிரைவில் இப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படுமென எதிர்பார்ப்புக்களுடன் ஆசிரியர் உதவியாளர்கள் காத்திருக்கின்றனர். தற்போது ஆசிரியர் உதவியாளர்கள் பெற்றுக் கொள்கின்ற 10000 ரூபா வருமானத்துக்கும் மேலதிகமாக செலவினை சந்தித்து வருகின்றனர். அதேவேளை ஒரு சில கல்வி வலயங்களில் கடமையாற்றுபவர்களுக்கு இத்தொகை இன்னும் கிடைக்கப் பெறவில்லையென்பதுடன் குறித்த கால அளவுகளை பின்பற்றியும் வழங்கப்படுவதில்லை.

தற்போது ஆசிரியர் உதவியாளர் நியமனங்கள் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் தமது கல்விச் செலவுகளுக்கு தமது குடும்பத்தையே நம்பியிருக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இதனால் பல குடும்பங்கள் மீண்டும் மீண்டும் கடனாளிகளாகவே மாற வேண்டிய சூழல் காணப்படுகின்றது. ஆசிரியர் உதவியாளர்களில் பலர் திருமணமானர்வகளாக இருப்பதோடு, இவர்களின் பிள்ளைகளும் பாடசாலை செல்பவர்களாக இருக்கின்றனர். எனவே ஒரு குடும்பத்தின் கல்விச் செலவே வருமானத்தை மிஞ்சும் நிலையில் இருக்கையில் எவ்வாறு ஏனைய உணவு, மருத்துவ செலவீனங்களை கவனிக்க முடியும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளவுயர்வு தொடர்பில் அரசியல் தலைவர்கள் எவ்வாறு பாரபட்சமாக நடந்து கொண்டார்களோ, அதுபோலவே அவர்களின் பிள்ளைகளான ஆசிரியர் உதவியாளர்கள் வருமானத்திலும் நடந்து கொண்டுள்ளனர். மத்திய, ஊவா மாகாணங்களில் தமிழ் கல்வியமைச்சின் இருப்புக்கு குரல் எழுப்பும் தலைவர்கள் ஏன் மாகாண கல்வியமைச்சின் கீழ் கடமையாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியவில்லை. எல்லாம் அரசியல் மயமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக