இலங்கையின் முக்கிய பொருளாதார சக்தியாக சுற்றுலாத்துறை விளங்கி வந்த நிலையில், நாட்டில் அண்மையக் காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் இத்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கைத் தீவானது பல்வேறு இயற்கை அம்சங்களைக் கொண்டதொரு
நாடாக இருப்பதால், அரசாங்கம் சுற்றுலாத்துறையினை ஊக்குவித்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரித்து வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் ஒரு உபாயத்தினை கையாண்டு வந்தது. அந்த உபாயங்கள் ஓரளவுக்கு வெற்றிகளையும் கண்டிருந்தன.
ஆனால், கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மிகப்பெரும் பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தன. இத்தாக்குதலில் 44 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் 37 பேர் காயமடைந்திருந்தனர். இந்நிலைமையானது வெளிநாட்டவர்களுக்கு இலங்கை பாதுகாப்பற்ற ஒரு நாடு என்ற நிலைமையினை தோற்றுவித்தது. இதனால் பல உலக நாடுகள் தங்களுடைய
நாட்டுப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையினையும் விடுத்திருந்தன.
இதேபோலவே 2014 ஆம் ஆண்டு அளுத்கம மற்றும் 2018 ஆம் ஆண்டு திகன வன்முறைகளும் சுற்றுலாத்துறைக்கு பாரிய சவால்களை ஏற்படுத்தியிருந்தன. இதேவேளை 2018 அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்ப சூழ்நிலைகளினால் இலங்கைக்கான வெளிநாட்டவரின் வருகையானது டிசம்பர் மாதம் 3.3 வீதத்தாலும் ஜனவரி மாதம் (2019) 2.2 வீதத்தாலும் வீழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்தன. இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்பாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சில புள்ளி விபரங்களை பெற முடிந்தது.
வருகையும் வருமானமும்
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி (RTI) 1970 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு 46,247 பேர் சுற்றுலாப்பயணிகளாக வருகை
தந்திருந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு 4 இலட்சமாகவும் 2010 ஆம் ஆண்டு 654,476 ஆக காணப்பட்டதுடன், 2018 ஆம் ஆண்டு 23 இலட்சத்துக்கும் அதிகமானோர் சுற்றுலாப் பயணிகளாக வருகை தரும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் 5 வீத பங்கினை சுற்றுலாத்துறை வழங்கி வருகின்றது. அத்தோடு பாரியளவிலான அந்நிய செலவாணியை பெற்றுக் கொள்ளும் மூன்றாவது நாடாகவும் இலங்கை இருக்கின்றது.
2018 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் அண்ணளவாக 11 நாட்களை இலங்கையில் கழிப்பதுடன் ஒரு நாளைக்கு 174 அ. டொலர்களை செலவளித்திருக்கின்றனர். இதன் மூலம் இலங்கை கடந்த வருடம் 4.4 பில்லியன் அ. டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளது. இது 2017 ஆம் ஆண்டை விடவும் 11.6 வீதம் அதிகமாகும். 2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இது 10.3 வீத அதிகரிப்பாகும். 2017 ஜனவரி - ஏப்ரல் வரை விமான நிலையம் மூடப்பட்டிருந்தமைக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதாக இருந்தது. 2018 நவம்பரில் இங்கிலாந்து கிரிக்கட் அணியினர் இலங்கைக்கு போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்தமையினால் பயணிகளின் வருகையும் அதிகரித்திருந்தது.
2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தமானது சமாதானத்தில் பிளவை ஏற்படுத்தியதாலும், முறையான விளம்பரப்படுத்தல்கள் இன்மையாலும் 2017 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை 3.2 வீதம் வீழ்ச்சி கண்டிருந்தது. புதிய விளம்பரப்படுத்தல்களின் விளைவானது 2019 ஆம் ஆண்டே தொடங்கியது. இலங்கையானது அதிகம் செல்லும் நாடுகளின் பட்டியலில் உலகத்தர சஞ்சிகைகள், வலைபூக்கள் என்பனவற்றினால் இணைக்கப்பட்டிருந்தன.
தற்போதைய நிலை
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தரவிருந்த சுற்றுலாப் பயணிகள் பலர் பின்வாங்கத் தொடங்கியுள்ளனர். பல சுற்றுலா மையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. நிரம்பி வழிகின்ற பிரபல ஹோட்டல்களில் கூட ஒரு சிலரே தங்கியிருக்கும் நிலை தோன்றியிருக்கின்றது. கடந்த வருட மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 60 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்தம் 1700 பேர் சுற்றுலாப் பயணிகளாக வருகைத் தருகின்றனர். இதனால், சுற்றுலாத்துறையின் மூலமான வருமானத்தில் 1.5 பில்லியன் அ. டொலர் குறைவடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் மிகப் பிரதானமான சுற்றுலா மையங்களில் நுவரெலியாவும் ஒன்றாகும். சமீபத்தய நெருக்கடிகளின் காரணமாக ஹோட்டல்கள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பன ஸ்தம்பித்துள்ள நிலையில் அதனை நம்பி தொழில் செய்த பலர் தமது வாழ்வாதாரங்களை இழக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலான வெளிநாட்டவர்கள் தங்களது முற்பதிவினை இரத்துச் செய்திருக்கின்றனர்.
வழமையாக ஹிக்கடுவ பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தரும் சூழல் காணப்படுகின்ற நிலையில் தற்போது அங்கு காணப்படும் 27 ஹோட்டல்களில் ஒரு சில ஹோட்டல்களே திறந்துள்ளன. 6 கிலோ மீற்றர் நீளத்தில் பல சிற்றுண்டிச் சாலைகள் காணப்படும் நிலையில் ஒரு சிலவே திறந்துள்ளன. ஏப்ரல் 21 ஆம் திகதி ஹிக்கடுவ ஹோட்டலில் 50 அறைகளிலும் ஆட்கள் இருந்த நிலையில் தற்போது சில அறைகளிலேயே தங்கியுள்ளனரென ஹோட்டல் அதிகாரிகளில் ஒருவரான சஞ்சீவனி யோகராஜா தெரிவித்திருக்கின்றார். குண்டுத் தாக்குதலின் விளைவாக ஹோட்டலுக்கு 5.5 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஊழியர்களில் அரைவாசிப் பேரை வீடுகளுக்கு அனுப்பும் நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாத்துறையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தொழில்வாய்ப்புகள் கிடைக்கப் பெற்ற நிலையில், அதன் மூலம் வருமானம் பெற்ற பலர் இன்று வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறையின் மூலம் 169,003 க்கும் அதிகமானோர் நேரடி தொழில் வாய்ப்பை பெற்றிருந்ததுடன், 219,484 க்கும் அதிகமானோர் மறைமுகமான தொழில் வாய்ப்பை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஹோட்டல்கள் தமது கட்டணங்களை அரைவாசியாக குறைக்கும் நிலை தோன்றியுள்ளன. நீர்கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் ஜுலை 15 வரையில் 50 வீத கட்டணக் கழிவுக்கான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழமையாக இங்கு இரண்டு படுக்கையறைகளை கொண்ட அறையொன்று 35,600 ரூபாவுக்கு வழங்கப்படும் நிலையில் தற்போது 17,800 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாப் பகுதிகளில் பல ஹோட்டல்கள் வெறுமையாகக் காணப்படும் நிலையில் அங்கு மரக்கறிகளை விநியோகம் செய்துவந்த விவசாயிகள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். நீர்கொழும்பிலுள்ள ஹோட்டல்களில் வழமையான கடலுணவு தயாரிப்புகள் இடம்பெறாமையினால் கடலுணவுகளை விநியோகம் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருமிடமாகக் காணப்படும் உலக முடிவு, எல்ல நீர்வீழ்ச்சி மற்றும் ஹக்கல பூங்கா போன்றவற்றில் ஒரு சில சுற்றுலாப் பயணிகளே தற்போது வருகை தருகின்றனர். ஏப்ரல் 21 திகதி குண்டுவெடிப்புக்களின் பின்னர் உலக முடிவுக்கு சராசரியாக வாரமொன்றுக்கு 200 வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 20 வாகனங்களே வருகை தருகின்றன. அடுத்த மாதமளவில் நுவரெலியாவுக்கு ரம்ழான் பண்டிகையினை முன்னிட்டு அதிகமான சவூதி அரேபியர்கள் வருகை தரும் வழக்கம் காணப்பட்ட நிலையில் தற்போது அவற்றிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் திட்டங்கள்
குண்டு வெடிப்பின் எதிரொலியாக நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைகள் உச்சளவில் இருக்கின்றன. தற்போது நாட்டின் சுற்றுலாத்துறையினை கட்டியெழுப்புவதற்கு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு ஈடுபட்டு வருகின்றது. இலங்கையில் சுற்றுலா மேற்கொள்வதை சர்வதேச ரீதியில் ஊக்குவிக்கும் வகையில் ஊடகங்கள், விளம்பரம் மற்றும் பிரசார நிறுவனங்கள் மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளும் வகையில் 100 கோடி ரூபா செலவில் விசேட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகவும் விசேட காப்புறுதித் திட்டமொன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்காக ஆரம்பத்தில் 100 மில்லியன் டொலர் நிதியினைக் கொண்ட சுற்றலா காப்புறுதி நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த சுற்றுலா காப்புறுதித் திட்டம் அரச காப்புறுதி நிறுவனமாகிய இலங்கை காப்புறுதி திட்டத்தினால்
நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகவும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் ஏனைய இழப்புகளுக்காக காப்புறுதி நிவாரணத்தை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதால் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.
எனவே இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான, நம்பத் தகுந்த இடமாக இலங்கையை மாற்றுவதற்கான தேவை தற்போது மேலெழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்புப் படையினர் செயற்பட்டு வருகின்றனர். சுற்றுலா அபிவிருத்திக்காக அமைச்சின் மூலம் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு அமைச்சரவை அனுமதிக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களை பாதுகாத்து சுற்றுலாத்துறையினை ஊக்குவிப்பதன் மூலம் அதனை நம்பி தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் இலங்கையரையும் வாழ வைக்க முடியும். எனவே உடனடித் தேவையான பாதுகாப்புடனான அபிவிருத்தியை முன்னெடுத்து சுற்றுலாத்துறை புத்துயிர் பெற வழியேற்படுத்தப்பட வேண்டும்.
தற்போது சுற்றுலாப் பயணிகளின் அவசர உதவிக்காக 1912 மற்றும் வெளிநாட்டு பிரஜைகளின் குடும்பங்களின் அவசர உதவிக்காக +94 11 2322485 ஆகிய 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கமும் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக