கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

17 ஜூலை, 2019

கொழும்பு குப்பைகளை சுமக்குமா அருவக்காடு?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலமானது
கொழும்பு குப்பைகள் பல்வேறு காலங்களில், பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து ஏற்படுத்திய விபத்துக்குப் பின்னர், கொழும்பு குப்பைகளை கொட்டுவதற்கு புதியதொரு வழிமுறையை கட்டாயம் தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கொழும்பு குப்பைகளை வடமேற்கு மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் அருவாக்காடு பகுதியில் கொட்டுவதற்கான திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இத்திட்டத்திற்கு புத்தளம் மாவட்ட மக்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் வெளிவந்தாலும் திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக செயற்படுகின்றது.

இந்நிலையில் அருவாக்காடு சுகாதார நிலகீழ் நிரப்பும் திட்டம் (Sanitary landfill Project) தொடர்பில் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வினவிய போது, RTI 2019/03/11 கடிதத் தலைப்பின் கீழ் பின்வரும் விடயங்கள் எமக்கு கிடைக்கக் கூடியதாகவிருந்தன. அருவாக்காடு திட்டமானது, நீண்டகால தீர்வினை கொண்ட மேற்கு பிராந்திய திண்மக்கழிவுகளை அகற்றுமொரு செயற்பாடாக புத்தளம் மாவட்ட உள்ளூராட்சி சபைகள், பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு என்பவற்றால் முன்னெடுக்கப்படுகின்றன. சைம் சிட்டி சீமெந்து (லங்கா) லிமிட்டெட்டின் தடை செய்யப்பட்ட சுண்ணாம்புக்கல் அகழும் குவாரி நிலப்பரப்பு குத்தகைக்குப் பெறப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


அருவாக்காடு நிலகீழ் நிரப்புத்திட்டமானது கொழும்பிலிருந்து 170 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அருவாக்காடு திட்டத்தில் குப்பைநிரப்பு செல்கள், பரிமாற்று நிலையம், கசிவு சுத்திகரிப்பு ஆலை, நிர்வாகக் கட்டிடம், முகாமைத்துவக் கட்டிடம், காவலர் மற்றும் எடையிடும் கட்டிடம், விரிவான பயிற்சி அறை போன்ற பல்வேறு கட்டமைப்புகளை கொண்டதொரு திட்டமாகும். கொழும்பு மற்றும் அதன் அண்மைய நகர்ப்புறங்களிலும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மூலம் ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக்தொன் மீள் சுழற்சிக்குட்படுத்த முடியாத குப்பைகளை அகற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நகர எல்லையில் சேகரிக்கப்பட்ட பிரிக்கப்பட்ட குப்பைகளை, குப்பை வண்டிகள் மூலம் களனிய பரிமாற்று நிலையத்துக்கு கொண்டு சென்று கொங்கிரீட் தரையில் கொட்டப்பட்டு பின்னர், பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட வேகன்களில் (பொருட்களை ஏற்றிச்செல்ல வடிவமைக்கப்பட்டது) ரயில் மூலம் அருவாக்காடு பரிமாற்று நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு பின்னர் குப்பை வண்டிகள் மூலம் அருவாக்காடு சுகாதார நிலகீழ் நிரப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இத்திட்டமானது 4 கட்டமைப்புகளைக் கொண்டதாக காணப்படுகின்றது. A - களனி மற்றும் அருவாக்காடு பரிமாற்று நிலைய கட்டுமானம், B - அருவாக்காடு சுகாதார நிலகீழ் நிரப்புகை, C - ரயில் பாதையை நீடித்தல் மற்றும் தொடர்புபடுத்தல், D - ரயில் உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி கொள்முதல் என்பவையாக அவை அமைந்துள்ளன.

அருவாக்காடு சுகாதார நிலகீழ் நிரப்புகை மற்றும் பரிமாற்று நிலையம்

அருவாக்காடு சுகாதார நிலகீழ் நிரப்பும் திட்டம் இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டலை மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை வெளியிட்டிருக்கின்றது. நிலகீழ் நிரப்புகையின் அடிமட்டமானது, நிலத்தடி நீரின் அளவு மட்டத்துக்கு மேல் மூன்று மீற்றர்கள் உயரத்துக்கு காணப்பட வேண்டும். இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ள பகுதியானது உயர் மேட்டுப் பகுதியாகும். மழைக்காலங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், அடித்தளத்தில் அந்நீரை வெளியேற்ற பிரத்தியேகமான குழாய் இணைப்புகள் காணப்படுகின்றன.

களனி பரிமாற்று நிலையம்

கொழும்பு குப்பைகளை பறிமாற்றும் நிலையம் களனியில் அமைக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு நகரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள 20.555 ஏக்கர் பரப்பளவில் இது அமையவுள்ளது. இப்பகுதியானது பிரதான ரயில் பாதையுடனும் கண்டி - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையுடனும் இணைக்கப்படவுள்ளது. மேலும் இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களும் உட்கட்டமைப்புகளும் வெள்ள அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் கொங்கிரீட் சுவர்களை கொண்டு அமைக்கப்படுகின்றது.

இந்த செயற்திட்டத்துக்காக 1,622, 936,211.10 ரூபாவுடன் 90,482,259.16 அ. டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு மிக அதிகமான முதலீட்டில் உருவாகின்ற செயற்திட்டமாக இருந்தாலும் கூட புத்தளம் மாவட்ட மக்கள் இதனை எதிர்த்தே வருகின்றனர். இலங்கையிலுள்ள சகலருக்கும் மீதொட்டமுல்ல குப்பைமேடு ஒரு படிப்பினையாக அமைந்திருக்கும் நிலையில் மீண்டுமொரு குப்பைமேட்டை எந்தவொரு மக்களும் அவ்வளவு இலகுவாக ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

இதனால் சாதாரணமாக குப்பைகளை கொட்டுகின்ற ஒரு நடைமுறையை தவிர்த்து பிரத்தியேகமான 6 தளங்களை உருவாக்கி குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரத்ன அண்மையில் அமைச்சில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் நிகழ்வில் தெரிவித்திருந்தார். அருவாக்காடு நிலப்பகுதியை சுகாதார முறையில் நிறைவு செய்வதற்கான செயற்திட்டமானது, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்றிட்டமாகவே அமையப்பெற்றுள்ளதாகவும், தென்கொரியா, அமெரிக்கா (கலிபோர்னியா), இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் கழிவு முகாமைத்துவத்துக்காக பாரிய நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகப் பேராசிரியர் மஹேஷ் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குப்பைகளை சுகாதார முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முதலாவது பாரிய திட்டமாக அருவாக்காடு திட்டம் அமையப்பெற்றிருக்கின்றது. இங்கு உருவாக்கப்படவிருக்கின்ற ஆறு தளங்களில் முதலாவதாக குப்பைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரை முற்றாக நிலத்தின் கீழிறங்கவிடாமல் தடுப்பதற்கு அதிகவலுவுடைய ஜியோ - கொம்போ தளம் இடப்படுகின்றது. இரண்டாவதாக கொம்போசைட் தளத்துக்கு(Geo Composite) மேலும் வலு சேர்ப்பதற்கு களிமண் லைனர் (Celay Liner) தளம் இடப்படுகின்றது. குப்பைகளிலிருந்து கசியும் நீரை, அதிகளவில் உறிஞ்சும் செயற்பாட்டை மூன்றாவது தளமான பென்டோனைட் மெட் (Bandonait Mat) மேற்கொள்கின்றது. மழைக்காலங்களில் குப்பைகளில் இருந்து கசியும் நீரை நிலத்தில் கசியவிடாமல் முற்றாக தடை செய்யும் பணியை நான்காவது தளமான ஜியோ மெம்ப்ரன் (Geo   Membrane)  மேற்கொள்கின்றது.

ஐந்தாவது தளமான நொன்வொவன் ஜியோடெக்ஸ்டைல் (Nonwevan Geotextile) ஆனது கீழே இடப்பட்ட ஏனைய தளங்களுக்கு மேலும் உறுதியை வழங்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது. ஆறாவதாக வடிகட்டும் வலை போன்ற Filtration Fabric தளத்தில் குப்பைகள் அனைத்தும் முதலில் கொட்டப்படுகின்றன. அதேவேளை இக்குப்பைகளிலிருந்து வாயுக்கள் வெளியேறா வண்ணம் வலை போன்ற அமைப்பும் குப்பைகளின் மேல் இடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இக் குப்பைகளைக் கொண்டு தரமான பசளைகளைத் தயாரிக்க முடியமெனவும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத செயற்றிட்டமாகவும் காணப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையாக கொழும்பு குப்பைகள் எமக்கு வேண்டாம் என்பதாகவே இருக்கின்றன. இலங்கை அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் அதிகம் சேரும் குப்பைகளை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதேவேளை கொழும்பு மாநகரப் பகுதிகள் உட்பட மேல் மாகாணத்தில் குப்பைகளை அதிகமாக வெளியேற்றாமலிருத்தல் மற்றும் குப்பைகளை பிரித்துக் கொடுத்தல் என்பவற்றுக்கு மக்களும் பழக்கப்பட வேண்டும். தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் அருவாக்காடு கழிவு முகாமைத்துவ நிலையத்தின் மூலம் அண்மையிலுள்ள வனப்பகுதி, களப்பு என்பவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு உறுதிமொழி வழங்கியிருக்கிறது. எனவே அபிவிருத்தித் திட்டங்கள் காலத்தின் தேவையாக இருந்தாலும் கூட அவை மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாகவும் அமைந்திருக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக