கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

1 அக்டோபர், 2018

தலவாக்கலை போராட்டம்; கை கொடுக்குமா?

அக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் தொழிலாளர்களின் சம்பளவுயர்வுக்காக இரண்டு வருடங்களுக்கொருமுறை மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் 2016 ஆம் ஆண்டின்   இறுதி ஒப்பந்தமானது காலாவதியாகின்ற நிலைமையில் புதிய ஒப்பந்தத்திற்கான தேவை எழுந்துள்ளது. ஆனாலும் இறுதியாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது தொழிலாளர்களின் உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதுடன், வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்யும் வகையிலான சம்பளவுயர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை. அத்தோடு 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செய்துகொள்ளப்பட வேண்டிய கூட்டு ஒப்பந்தமே பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் 18 மாதங்கள் கடந்த நிலையில், 2016 அக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்டது.

ஆனாலும் தாமதமடைந்த 18 மாதங்களுக்கான நிலுவைச் சம்பளமும் வழங்கப்படவில்லை. அத்தோடு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சம்பளத் தொகையையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். மேலும் கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் உரிமையை மீறுவதுடன், முதலாளிமார் சம்மேளனத்திடம் தொழிலாளர்களின் உழைப்பை அடகுவைத்து  விட்டார்கள். 2003 ஆம் ஆண்டின் அடிப்படை கூட்டு ஒப்பந்தத்தின் 6 ஆம் வாசகமானது தொழிலாளர்களின் சம்பளவுயர்வு தொடர்பாக பேசுவதுடன், அதற்கமைய 2 வருடங்களுக்கொருமுறை  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தெரிவித்த நிலையில், இறுதியாக 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் குறைந்தது இரு வருடங்களுக்கொருமுறை  ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என மாற்றப்பட்டிருப்பதால் , இரண்டு வருடங்களுக்கொருமுறை மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே எதிர்வரும் மாதம் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதன் ஓர் அங்கமாக இன்று ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் நியாயமான கூட்டு ஒப்பந்தத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் 12 அமைப்புகளை உள்ளடக்கிய பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம் , தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளன. இவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு கருதி ஆர்ப்பாட்டங்கள்  முன்னெடுப்பது முதன்முறையல்ல. சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் இன்று இடம்பெறவுள்ள போராட்டம் வரையிலும் போராட்டங்கள் நடந்து வந்தாலும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் போது மட்டும் தொழிலாளர்களின் நலன்களை  கவனத்தில் கொள்ளமாமல் முதலாளிமார் சம்மேளனத்துக்கு இசைவாக செயற்படுவது வழக்கமாகிவிட்டது. கூட்டு ஒப்பந்தத்தை அரசியல் இலாபங்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பயன்படுத்தி வருகின்றதென்ற குற்றச்சாட்டு மிக நீண்டகாலமாக நிலவிவருகின்றது.

அதுபோலவே பேச்சுவார்த்தைகளுக்குச் செல்வதும் வெளிநடப்புச் செய்வதும் பின்பு கொடுக்கும் சம்பளவுயர்வை வாங்கிக்கொள்வதும் வழைங்கமானதாக இருக்கின்றது. அந்நிலைமை எதிர்வரும் ஒப்பந்தத்திலும் இடம்பெற கூடாதென்ற வேட்கையில் பல்வேறு அமைப்புகளும்  அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் இவ்வாறான அழுத்தங்கள் எதிர்வரும் கூட்டு ஒப்பந்தத்தில் தாக்கத்தைச் செலுத்துமா என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவே இருக்கின்றது. அதற்குக் காரணங்களும் இல்லாமலில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு முன்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பாக கொழும்பு  கோட்டை  ரயில் நிலையம் முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் பெரும் கேலிக்கூத்தாகவே நிறைவடைந்திருந்தது.  அதேவேளை அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு ஆர்ப்பாட்டமும் கூட்டு ஒப்பந்த நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கவில்லை.   இந்நிலையில் மீண்டும் தலவாக்கலையில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள ஆர்ப்பாட்டமானது,  எவ்வாறு சாதகமாக அமையுமென்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனம் உட்பட இலங்கையில் இயங்குகின்ற அனைத்து நிறுவனங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்கி வருகின்ற நிலையில் ,  அரசாங்கப் பிரதிநிதிகளினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு விடயத்தை அணுகமுடியாமலிருப்பது  வேடிக்கையானதாகும். தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு , இராஜாங்க அமைச்சு, 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கும் நிலைமையில் இதனை அமைச்சரவை கூட்டத்தின் போதோ , பாராளுமன்ற  கூட்டத்தின் போதோ வெளிப்படுத்தி அரசாங்கத்துக்கு நெருக்கடியினை கொடுப்பதில் இவர்களுக்கு என்ன தடையிருக்கின்றதென்று தெரியவில்லை. கூட்டு ஒப்பந்தப் பங்காளிகளாக ஜனாதிபதி அணியும் பிரதமர் அணியும் இருக்கும் நிலையில், ஏன் முதலாளிமார் சம்மேளனத்தின் பிடிவாதத்தை தகர்த்த முடியவில்லை.

தலைவர்களுக்கு தங்களது பதவிகளும் முக்கியம். அதேவேளை ஒப்பந்தத்தை அரசியல் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். இந்த இரண்டு நலன்களுக்கிடையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள விவகாரம் தவிடுபொடியாகிவிடுகின்றது. தொழிலாளர்களும் கட்சி அரசியலில் சிக்குண்டு கிடப்பதால் தங்களுடைய உரிமைகளை பெற்றுக்கொள்ள சுயமான முயற்சிகளில் இறங்க தயக்கம்  கொண்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களுடைய உரிமை என்பதையும் அவற்றில் உள்ளடகியுள்ள  அம்சங்கள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமென்பதையும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்   பங்காளிகள் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும். அதைவிடுத்து அரசியல் நலன்களுக்காக   தொழிலாளர்களுடைய உழைப்பை பணயம் வைக்க வேண்டாம்.

கூட்டு ஒப்பந்தம் ஒரு ஏமாற்றுவித்தை என்பது சகல தொழிலாளர்களுக்கும் தெரியும். அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்த அவர்களுக்கு எவ்வளவு வருமானம் தேவையென்பதும் தொழிலாளர்களுக்குத் தெரியும். ஆனால் தொழிற்சங்கங்களின்  பிடியில் அவர்களுடைய தொழிலும் நிர்வாகமும் இருப்பதால் அவர்களால் சுயமாக செயற்பட முடியவில்லை. தொழிலாளர்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் சகலரும் உண்மையான வெற்றிக்காக உழைக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதில் அரசியல் சாயம் பூசி விடாதீர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக