கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

1 அக்டோபர், 2018

தற்கொலையை தவிர்ப்போம்

இலங்கையில் மட்டுமல்லாது உலகளவிலும் கூட தற்கொலை மிகப்பெரும் சமூகப் பிரச்சினையாக மாறிவருகின்றது. மனவலுவிழக்கும் நபர்களுக்கு முறையான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் கிடைக்கப்பெறாமையே இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு பிரதான காரணமாகவிருக்கின்றது. வயது, பால் பாகுபாடின்றி அனைவரின் வாழ்வியலையும் சீர் குலைக்கும் அம்சமாக தற்கொலை இருக்கின்றது. குறிப்பாக உலகளவில் இளம் வயதினரே அதிகளவில் தற்கொலையினை அதிகம் மேற்கொள்பவர்களாக இருக்கின்றனர். இலங்கை பொலிஸ் வருடாந்த அறிக்கையில் 2017 ஆம் ஆண்டு 3263 தற்கொலைச் சம்பவங்கள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தொகை 2016 ஆம் ஆண்டினை விடவும் 238 சம்பவங்களால் அதிகரித்துள்ளது.

பொலிஸ் தரவுகளின் படி, 70 வருடங்களுக்கு மேலாக 20 - 30 வயதுக்குட்பட்ட வயதினரே தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் உயர்ந்தளவில் இருக்கின்றனர். பாலின அடிப்படையில் 46.6 வீதமான ஆண்களும் 12.8 வீதமான பெண்களும் தற்கொலை செய்து கொள்பவர்களாக இருக்கின்றனர். இதனால் தற்கொலையானது இலங்கையில் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக மாறிவிட்டது. 1995 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 10 வருடங்களில் இலங்கையின் தற்கொலை வீதமானது 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. ஆனாலும் இத்தொகை மிக அதிகமாக இருக்கின்றது. இவற்றைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


கொழும்பு நகர மரண விசாரணைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தற்கொலைக்கான காரணங்களில் மூன்றில் ஒரு சம்பவம் மனைவி அல்லது திருமண விரோதத்தினால் ஏற்படுவதாகவும், 8 வீதமான தற்கொலைகள் பெற்றோருடனான விவாதத்தினாலும், 7 வீதமானவை பணப் பிரச்சினையாலும், 7 வீதமானவை நோயினாலும், 7 வீதமானவை மது பாவனையினாலும், 6 வீதமானவை உளவியல் நோயினாலும் 5 வீதமானவை காதல் தோல்வியினால் ஏற்படுவதுடன் வேலைவாய்ப்பின்மை, போதைக்கு அடிமையாதல் என்பவற்றினாலும் தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டில் 17 - 25 வயதுக்குட்பட்ட 482 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது மொத்தத் தற்கொலை சம்பவங்களில் 14 வீதமாகும்.

இதேவேளை முதியோரும் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். 2008- 2017 வரையான 10 வருடங்களில் 61 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வோரின் தொகை பதிவாகியிருக்கின்றன. இக்காலப்பகுதியில் 7156 அல்லது ஐந்தில் ஒரு முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். (ஆண்கள் 6070 அல்லது 84.8  வீதம், பெண்கள் 1086 அல்லது 15.2 வீதம்). இதற்குப் பிரதான காரணங்களாக தொற்றா நோய்கள் மற்றும் உடல் அங்கவீனம் (2494), கணவன் மற்றும் குடும்ப வன்முறை (558), பொருளாதாரப் பிரச்சினை, வறுமை மற்றும் கடன் (305), போதைக்கு அடிமை (255), பிள்ளைகளால் துன்புறுத்தப்படுதல் (187) மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் இறந்த துக்கம் (123) என்பன இருக்கின்றன. சிறந்த ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் இருந்தால் மேற்கூறிய வகையிலான தற்கொலைகளை குறைக்க முடியும்.

தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருப்பவர்களில் 50 -70 வீதத்தினர் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் அதற்கான அறிகுறிகளை வெளியிடும் சாத்தியம் இருக்கின்றது. தற்கொலை பற்றி அதிகமாக கலந்துரையாடல், மருந்துகள் உட்பட உயிர் பறிக்கும் உபாயங்களைத் தேடுதல், தற்கொலை மற்றும் மரணம் பற்றி அதீத அக்கறையுடன் கவிதை, கட்டுரை எழுதுதல், எதிர்காலம் பற்றி நம்பிக்கை இல்லாதிருத்தல், சுயவெறுப்புணர்வு, நண்பர்கள் , குடும்பம் மற்றும் சமூகத்திலிருந்து பெரிதும் விலகியிருத்தல், மதுபாவனை போன்ற அறிகுறிகளை அதிகம் வெளிப்படுத்தும் நிலை இருக்கின்றது. இதனால் தற்கொலை செய்து கொள்பவர்களின் மனநிலை தொடர்பாக அறியும் தன்மையை சகலரும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதே அவர்களுக்கு சிறந்த ஆற்றுப்படுத்தல்களை வழங்க முடியும். ஆனால் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களை மேலும் மேலும் சொல்லால் தாக்குவுதால் இவற்றை தவிர்த்து விட முடியாது.

தற்கொலை செய்து கொள்பவர்களில் 44 வீதமான சம்பவங்கள் நஞ்சருந்துவதால் ஏற்பட்ட மரணமாக இருக்கின்றன. 70 வீதமானவை பூச்சுக்கொல்லியினாலும், 34 வீதமான சம்பவங்கள் எரியூட்டுவதாலும், 11 வீதமானவை பொதுவான சம்பவங்கள் தூக்கில் தொங்குல், 7 வீதமானவை ரயில் முன் பாய்வதாலும், 3 வீதமானவை நீரில் மூழ்குவதாலும் ஏற்படுகின்றன. இலங்கையைப் பொறுத்தளவில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தற்கொலைகள் அதிகரித்திருப்பதை வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 இல் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 124 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2010 இல் 137 பேரும், 2011 இல் 141 பேரும், 2012 இல் 153 பேரும், 2013 இல் 158 பேரும், 2015 இல் 139 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 40 -55 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகமாகும். இதில் அதிகமானோர் தனியாக வாழமுடியாத சமூகப் பிரச்சினை காரணமாகவும், யுத்தத்தில் கணவர் மற்றும் உறவினர்களை இழந்தமையும், யுத்தங்களில் அனைத்தும் அழிந்து போனமை, எதிர்பார்ப்புகள் நிறைவேறாமை என்பனவே அதிக தற்கொலையில் தாக்கம் செலுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2017 ஆம் ஆண்டு பொலிஸ் தரவுகளின் படி பின்வரும் காரணங்கள் தற்கொலைக்குத் தூண்டுதலாக அமைந்திருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினைகள், வறுமை, கடன், தொழில் பிரச்சினை, முதியோருடனான பிரச்சினை, கணவன், குடும்பத்தால் துன்புறுத்தப்படல், காதல் தோல்வி, பாலியல் தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகம், போதைக்கு அடிமை, பெற்றோர் , உறவினர் மரணம், சொத்து இழப்பு, பரீட்சை சித்தியடையாமை, பிள்ளைகளை முறையற்ற வகையில் தண்டித்தல், பாலியல் இயலாமை, உளவியல் பிரச்சினை, தொற்றா நோய்கள் , அங்கவீனம் போன்ற பல்வேறு காரணங்கள் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. எனவே இற்றைக் கட்டுப்படுத்துவதே தற்கொலைகளைக் குறைக்க வாய்ப்பாக அமையும்.
தற்கொலைக்கு தூண்டும் காரணிகளை முறையான ஆலோசனைகளின் மூலம் வெற்றிகொள்ளக் கூடிய சூழல் இருந்தும் ஒரு சில மணிநேர விரக்தியே பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. எனவே உளவியல் ரீதியான ஆற்றுப் படுத்தல்களை பாதிக்கப்பட்டோர் பெற்றுக் கொள்வது கட்டாயத் தேவையாகும். தற்கொலை செய்து கொள்ளும் மனப்போக்கை மாற்றுவதற்கு இளைஞர்களை மையப்படுத்தி சுகாதார அமைச்சின் உளவள ஆற்றல் சேவைகளை நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் சுகாதார அமைச்சு நிறுவியுள்ளது. ‘யொவுன்பியச’ என்ற பெயரில் தற்போது 25 ஆலோசனை நிலையங்கள் இவ்வாறு செயற்பட்டு வருகின்றன. இங்கு இளைஞர்களின் கவலைகளை எவ்வாறு கையாள்வது, திறன்களை புத்துணர்ச்சியுடன் கட்டியெழுப்ப வழிசெய்வதோடு, சரியாக சிந்திப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது தேசிய உளசுகாதார நிறுவனம் மற்றும் சில சமூக சேவை நிறுவனங்கள் என்பன தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. ஆனால் இன்னும் அதிகமான உளவியலாளர்கள் வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். ஊடகங்களும் தற்கொலை தொடர்பான எண்ணங்களை கைவிடும்படியான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்கள் என்பன இன்று பலரையும் தன் ஆக்கிரமிப்புக்ள் வைத்திருக்கும் நிலையில் அதன் மூலம் உளவள ஆலோசனை நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தலாம்.
பாடசாலைகளில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோரும் பிள்ளைகளின் கல்வித்தரத்தை கடுமையாக விமர்சிப்பதை விடுத்து அவர்களை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இது இருவரின் உறவுகளையும் வலுப்படுத்தும். தற்கொலை என்பது நிச்சயமாக ஒரு தனிமனிதனுடைய சொந்த விருப்பமாக மட்டும் இருக்க முடியாது. அது சமூகத்தின் தூண்டுதல். அதனைத் தவிர்ப்பதும் தடுப்பதுமே இத்தகைய அவலங்களை இல்லாமல் செய்வதற்கான வழியாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக