கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

1 அக்டோபர், 2018

ஆடம்பர இறுதி ஊர்வலம்

அண்மையில் மாலைப் பொழுதொன்றில் செவனகல, ஹத்பொஹொட்டுவ கிராமத்துக்கு மேல் தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான விமானமொன்று வட்டமிட்டது. இக் கிராம மக்களுக்கு மூன்று வேளை உணவு இல்லாவிடினும் அணிய சரியான ஆடையின்றி இருந்தாலும் அடிக்கடி விமானத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றிருந்தது. இதற்குக் காரணம் கடந்த சில நாட்களாகவே அக்கிராமத்துக்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் வடிகால் திறப்பு விழா, பாதை திறப்பு விழா மற்றும் நிவாரணத் தொகை, பொருட்கள் வழங்கவென விமானங்களிலேயே வருகை தருவதாகும். அவ்வாறே கடந்த 3 ஆம் திகதி செவனகல வானத்தில் விமானமொன்று வட்டமடித்துக் கொண்டிருந்ததை கிராம மக்கள் அவதானித்தனர். அந்த ஏழை மக்களது எண்ணமானது தங்களுக்கு நிவாரணம் வழங்கவோ அல்லது புதிதாக கொங்கிறீட் இடப்பட்ட பாதை திறப்பதற்கோ அரசியல்வாதிகள் வருவதாகவே காணப்பட்டது. திடீரென்று விமானத்திலிருந்து மலர்கள் கொட்டத் தொடங்கின. கிராம மக்கள் ஏதாவது விசேட விழாவொன்று இடம்பெறப் போவதாக நினைத்து வெளியில் வந்து எட்டிப் பார்த்தனர்.

ஆனால் அந்த மலர்கள் விமானத்திலிருந்து தூவப்பட்டது, இலங்கையில் பாதாளக் குழுக்களின் பிதாமகனாக அடையாளம் காணப்பட்ட மாகந்துர மதுஷை இவ்வுலகுக்கு கொண்டு வந்த அவனின் தந்தையின் இறுதிச் சடங்குக்கே என்பதை அதன் பின்னர் கிராம மக்கள் உணர்ந்து கொண்டனர். கொலை செய்தல், கொள்ளையடித்தல், கப்பம் பெறல் போன்ற இன்னோரன்ன குற்றங்களையும் பாரியளவிலான கஞ்சா, ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வரும் பாதாளக் குழுத் தலைவனான மாகந்துர மதுஷின் தந்தை கடந்த 29 ஆம் திகதி இயற்கை எய்தினார். சமரசிங்க ஆரச்சிலாகே லக்ஷ்மன் என்ற 62 வயதுடையவர் திடீர் விபத்தொன்றினாலேயே உயிரிழந்தார். களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன மோதலில் கடுங்காயங்களுக்குள்ளான லக்ஷ்மன் நாகொட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு வாரகாலம் சிகிச்சை பெற்று வந்தார். தனது மகன் நாட்டுக்கு செய்து கொண்டிருக்கும் துரோகத்தை எண்ணி இந்த ஒருவார காலத்தை அவர் கடத்தியிருக்கக்கூடும் என்று கருது முடியும். தனது மகன் செய்த குற்றங்களுக்காகத் தான் பாதிக்கப்பட்டதாகவே அவர் எண்ணிக் கொண்டார். மதுஷ் செய்தவைகளுக்கான பிரதிபலனே தான் இந்நிலைமைக்கு ஆளாகக் காரணம் என்று எண்ணியவாறு இறையடி சேர்ந்துவிட்டார்.
லக்ஷ்மனின் பெரிய வீடு கம்புறுபிட்டியவில் அமைந்திருந்தாலும் சில காலமாகவே அவர் அங்கு வசிக்கவில்லை. இவரின் முதல் திருமணத்தில் 3 குழந்தைகள். இதுவரை நாட்டையே பயப்பீதிக்கு ஆளாக்கியிருக்கும் மாகந்துர மதுஷே இவரின் மூத்த மகன், தம்பியொன்றும், தங்கையொன்றும் மதுஷ்úக்கு இருப்பினும் தம்பி கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் குடும்பத்தின் முறையற்ற நடத்தையால் உயிரிழந்துவிட்டார். மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் லக்ஷ்மனின் மனைவி இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டார். மூன்று பிள்ளைகளும் தனித்து விடப்பட்ட நிலையில்,
லக்ஷ்மன் இன்னுமொரு திருமணம் செய்து கொண்டார். அதுவரை பிள்ளைகள் மூவர் பாட்டியின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வந்தனர். மதுஷ் தனது பாட்டியினதும் மாமியினதும் பாராமரிப்பிலேயே வாழ்ந்து வந்தான். பிற்காலத்தில் பாதாள உலகை வெற்றி கொண்ட மதுஷ் ‘கம்புறுபிட்டிய மதுஷ்’ என அழைக்கப்பட்டான். மதுஷின் பிறந்த இடம் கம்புறுபிட்டிய என்பதாலேயே அவனுக்கு அப்பெயர் ஏற்பட்டது. மாகந்துர யுவதியொருவரையே மதுஷ் திருமணம் செய்து கொண்டான். தனது பிறந்த இடத்தை விட்டுவிட்டு மாகந்துர பிரதேசத்தில் வசித்து வந்த நிலையிலேயே ‘மாகந்துர மதுஷ்’ என அழைக்கப்பட்டான்.

தனது இளம் வயதிலிருந்தே நாட்டுக்கு தான் அடையாளம் பெறும் பொருட்டு ஏதாவதொன்றை செய்ய வேண்டும் என்ற முயற்சி மதுஷிடம் காணப்பட்டது. தொழில்நுட்ப அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரான டெனீ ஹித்தெட்டியவே மாகாந்துர மதுஷ்வின் முதல் இலக்காகக் கருதப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் ஆரம்பமான மதுஷின் வீரதீர செயற்பாடுகள் நாடு பூராகவும் பரவ வெகு நாட்கள் செல்லவில்லை என்றே கூற வேண்டும். காரணமேயின்றி கொலைகள் பல புரிந்து வந்து மாகந்துர மதுஷ், தெற்கு ஹெரோயின் விற்பனையிலும் தலையிடத் தொடங்கினான். தனது மகனின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெற்றியைப் பார்த்து லக்ஷ்மன் அதீத சந்தோஷத்துக்கு ஆளானார். மதுஷûக்கு எதிராக மேலெழுந்த பாதாளக் குழுக்களினால் லக்ஷ்மனின் உயிருக்கும் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. மதுஷ் என்ற தைரியமான இளைஞனுக்கு பொலிஸார் மூலம் குற்றவிசாரணைப் பிரிவுத் திணைக்களம் மூலமும் விசேட அதிரடிப்படை மூலமும் எந்நேரமும் தொந்தரவும் இடையூறும் ஏற்படத் தொடங்கியது. இனிமேலும் தாய்நாட்டிற்கு தன்னால் சேவை செய்ய தான் உயிருடன் இருக்க வேண்டும் என நினைத்த மதுஷ், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றான். முஸ்லிம் ஒருவரைப் போல வேடமிட்டு டுபாய்க்கு தப்பிச் சென்ற மதுஷ், எதிர்காலத்தை நினைத்தே இவ்வாறு சென்றிருந்தான்.
இதன் பின்னர் தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுகபோகங்களை தனது இளைய சமூகமும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் மதுஷ் செயற்பாடுகளை முன்னெடுத்தான். இளைஞர்களின் தேவை கருதி தொன் கணக்கில் ஹெரோயினை நாட்டுக்கு இறக்குமதி செய்தான். நாட்டின் நலனைக் கருத்திற் கொண்ட மதுஷ். நாட்டுக்குத் தேவையில்லாத ஒரு சிலரை கொலை செய்ய டுபாயிலிருந்து திட்டம் தீட்டிக் கொடுத்தான். மாளிகாவத்தை தலைவனாகக் காணப்பட்ட கஞ்சிபான இம்ரான் மதுஷின் குழுவுடன் இணைந்து கொண்டு நாட்டுக்கு சேவை செய்யத் தொடங்கினான். கொழும்பு நகர் பூராவும் ஹெரோயின் மற்றும் இதர போதைப் பொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் பொறுப்பை இம்ரானே ஏற்றிருந்தான். இதற்கு விரோதமாகச் செயற்படுபவர்களை திட்டமிட்டு இம்ரான் இல்லாதொழித்து வந்தான். இவர்களின் இந்தச் செயலை எதிர்த்து கேட்க பொலிஸாரும் திராணியற்றவர்களாகவே காணப்பட்டனர். தனது சமூக சேவையை எதிர்த்து நிற்பவர்களை பலர் முன்னால் போட்டுத் தள்ளும் அளவுக்கு சக்தி வாயந்தவனாக காணப்பட்ட மதுஷûக்கு நாட்டில் கௌரவமான ஒரு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. மதுஷின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை வாயைத் திறந்து கொண்டு பார்ப்பதே பொலிஸாரின் வேலையாகக் காணப்பட்டது. நாட்டின் எதிர்காலம் கருதி, நாட்டுக்கு தேவையில்லாதவர்கள் என நினைத்து ரணால சமயங் உள்ளிட்ட 7 பேரை களுத்துறை சிறை பஸ்ஸில் வைத்து சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு மாகந்துர மதுஷ்வே தலைமை தாங்கினான்.

பிலியந்தலையில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் சில அதிகாரிகளை சுட்டு, படுகாயங்களுக்குள்ளாக்கியது மட்டுமன்றி பாதையில் சென்று கொண்டிருந்த அப்பாவிப் பிள்ளையை கொன்றது என இவர்களுக்கு விரோதமாகச் செயற்படும் அனைவரையும் ஈவிரக்கமின்றி மதுஷின் குழுவினர் சுட்டுத் தள்ளினர். இவ்வாறான பிள்ளையொன்றை பூமிக்கு கொண்டுவந்த மாகந்துர மதுஷின் தந்தை கௌரவிக்கப்பட வேண்டிய ஒருவரே. எந்த சந்தர்ப்பத்திலும் தான் தான் தலைவனாக இருக்க வேண்டும் என்ற மமதை எப்போதுமே மதுஷûக்கு உண்டு. பாதாளக் குழு பிதாமகனாக நாட்டுக்கு சேவை செய்ய வேண்டிய எண்ணம் எப்போதுமே அவனிடம் காணப்பட்டது. தனது தந்தையின் மரணச் செய்தி அவனது காதுகளுக்கு இனிப்பாக இருந்திருக்கும். காரணம் தனது தந்தையின் இறுதிச் சடங்கை முழு நாடும் மெச்சுமளவுக்கு தன்னால் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையேயாகும். இதன் காரணமாகவோ என்னவோ தந்தையின் இறுதிச் சடங்கை பாரியளவில் செலவு செய்து செய்ய திட்டமிட்டிருந்தான்.
நாகொட வைத்தியசாலையில் உயிரிழந்த லக்ஷ்மனின் உடல் கம்புறுபிட்டியவுக்கு கொண்டு செல்லப்படவில்லை. லக்ஷ்மனின் இளைய சகோதரன் அதாவது மதுஷின் சித்தப்பா வசித்து வந்தது செவனகல ஹத்பொஹாட்டுவ பிரதேசத்திலாகும். தந்தையின் இறுதிச் சடங்கை ஹத்பொஹாட்டுவ பிரதேசத்தில் நடத்த மதுஷே தீர்மானமெடுத்தான். அதற்குத் தேவையான சகல பணத்தையும் மதுஷே பெற்றுக் கொடுத்தான். நாகொடையிலிருந்து செவனகல வீட்டுக்கு லக்ஷ்மனின் உடலானது வாகனத்தில் பெரஹரா போல கொண்டு செல்லப்பட்டது. பல இலட்சம் ரூபா பெறுமதியான சவப்பெட்டியில் லக்ஷ்மனின் உடல் வைக்கப்பட்டு பொது மக்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கம்புறுபிட்டிய, தெவுந்தர, மாகந்துர மற்றும் தெற்கு மக்கள் அனைவரும் லக்ஷ்மனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வந்திருந்தனர். அப்படி வந்தவர்களுக்குத் தேவையான உணவு வகைகள், மதுபான வகைகள் மற்றும் சிகரெட் போன்றவற்றை பெற்றுக் கொடுக்க மதுஷின் உறவினர்கள் முடிவு செய்தனர். இவை எல்லாமும் மதுஷின் கட்டளைக்கிணங்கவே இடம்பெற்றன. டுபாயில் இருக்கும் மதுஷ் தந்தையின் இறுதிக் கிரியைகளை சமூக வலைத்தளங்களூடாக கண்டுகளித்தான்.

பாதாளக் குழு உறுப்பினர்களின் உறவினர்கள் யாரும் இறக்கும் பட்சத்தில் அவர்களின் இறுதிச் சடங்கை திருவிழா போல் செய்வதென்பது பாதாளக் குழுவுக்கு கிடைக்கப்பெறும் பெருமையாகக் கருதப்படுகிறது. அதற்கிணங்க இறுதி ஊர்வலத்தில் குதிரைச் சவாரி, இறுதிச் சடங்கில் குதிரைகள் செல்லல், ஹெலிகொப்டரிலிருந்து மலர் தூவல் ஆகியன இடம்பெறும். தனது தந்தையின் இறுதிச் சடங்கை அமோகமாக இடம்பெறச் செய்வதை விடவும் மதுஷûக்கு வேண்டியிருந்தது தனது சக்தியையும் பலத்தையும் நாட்டுக்கு காட்டுவதேயாகும். அதனாலேயே விமானத்திலிருந்து மலர் தூவப்பட்டிருக்கலாம். இவ்வாறான செயலுக்கு பொலிஸாரின் அனுமதி பெறப்பட வேண்டும். இதை தடுக்கும் சக்தியும் பொலிஸாருக்கு இருக்கவில்லை.

லக்ஷ்மனின் இறுதி ஊர்வலத்திற்கு பூக்கள் விசிறுவதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட விமானம் தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமானதாகும். கொட்டாவ தினேஷ் என்ற மதுஷின் நெருங்கிய நண்பனொருவன் தனியார் வங்கியொன்றினூடாக மூன்று சந்தர்ப்பங்களில் சுமார் 4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டு ஹெலிகொப்டரொன்றை வாடகைக்குப் பெற்றிருந்தான். பாதாளக் குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள் , வியாபாரிகள் மற்றும் உறவினர்களின் முன்னிலையில் லக்ஷ்மனின் இறுதிப் பயணம் ராஜப் பயணமாக கொண்டு செல்லப்பட்டது. இவை எவற்றுக்கும் பொலிஸாரின் தடை இருக்கவில்லை என்றே கூறவேண்டும். நிகழ்கால பொலிஸார் மாகந்துர மதுஷிடமிருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றே தெரிகிறது.

பொலிஸ் திணைக்களம் அண்மையில் தனது 152 ஆவது நினைவு தினத்தை மிகவும் விமர்சையாகக் கொண்டாடியது. நாட்டில் இடம்பெறும் குற்றங்களில் 32% ஐ குறைத்துள்ளதாக வீர வசனம் பேசியிருந்தனர். ஆனால் டுபாயிலிருந்து கொண்டு நம் நாட்டு பாதாளக் குழுக்களை இயக்கிக் கொண்டிருக்கும் மாகந்துர மதுஷை கைது செய்வதற்கோ அல்லது அவன் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பதற்கோ பொலிஸார் முன்வருவதில்லை. இவர்களையும் குறை சொல்ல முடியாது. காரணம் இன்று அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்புகளை விட ஏராளமான வேலைகளை பொலிஸார் செய்து கொண்டு வருகின்றனர். அதாவது இசை நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், பிரபலமான பெரஹராக்களில் நடனமாடுவோருக்கு பின்னால் செல்லல், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பளித்தல் போன்ற இன்னோரன்ன வேலைகளை செய்வதன் மூலம் ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பற்றி எண்ண மறந்து விடுகின்றனர். குறைந்தபட்சம் கசிப்பு விற்பனை செய்வோரைக் கூட தேடிப் பிடிக்க பொலிஸாருக்கு நேரமில்லாமல் போகிறது. இதனால் மாகந்துர மதுஷ் போன்ற பாதாளக் குழு பிரபலங்கள் சுதந்திரமாக தங்களது சேவைகளை செய்து கொண்டு செல்ல வசதியாக அமைந்திருக்கிறது.

பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மதுஷை கைது செய்வதற்காக வேண்டி முறையான திட்டமிடல்களை மேற்கொண்டால் மதுஷ் போன்ற பாதாளக் குழுவினர் இவ்வாறு செயற்படத் தயங்குவர். அவனது குற்றச் செயல்கள் முடக்கப்பட்டிருக்கும் . அவன் மேற்கொண்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் தடங்கல் ஏற்படுத்தப்பட்டிருக்கும். பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் நீதியாக செயற்பட முனைவதன் பின்னால் ஏதாவதொரு சிக்கல் கண்டிப்பாக இருக்கக்கூடும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு இவ்வாறான முறையில் செயற்படுபவர்களின் தலையை சட்டரீதியாக செயற்படும் அதிகாரிகள் என்றால் முதலில் நீதிமன்ற வாசலில் கொண்டுவந்து போட வேண்டும். ஆனால் நமது நாடானது வித்தியாசமானது. நம் நாட்டு மனித உரிமை ஆணைக்குழு முதல் பொதுமக்கள் பக்கம் அல்ல. மாறாக குற்றம் புரிபவர்களின் பக்கமே சாய்கின்றன. சாதாரண மனிதனான மாகந்துர மதுஷின் கைகளால் பல நூறு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தலைவன் இன்றி எத்தனை குடும்பங்கள் நிர்க்கதி நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன தெரியுமா? எண்ணிலடங்காதவை.
தந்தையை இழந்தால் எந்தளவுக்கு ஒரு பிள்ளை பாதிக்கப்படுமோ அந்தளவுக்கு தனது தந்தையை இழந்த மதுஷ் துன்பப்படுவானா? விடை கேள்விக்குறியாகவே இருக்கும். இவனைப் போன்றவர்கள் இருக்கும் வரை நம் நாட்டு நிலைமையும் அவ்வாறே காணப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக