கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், YouTube videos

13 ஆகஸ்ட், 2018

கலைகள் எம்முடைய வரலாற்றை பாதுகாக்கின்றன

மலையகத்தில் கூத்துக்கலைகள் அருகிவரவில்லை.  வளர்ந்துவருகிறது.  எங்களுடைய கலைப்பண்பாட்டுக்கு இந்திய தொலைக்காட்சியூடாக மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்துள்ள ஆசிரியரும் கூத்த்துக் கலைஞருமான வேலாயுதம் இராமர், கலைதுறையினரை ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.  ஞாயிறு மலையகப்பார்வைக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.  அவருடனான நேர்காணல் வருமாறு;



1. மலையகத்தில் கூத்துக்கலைகள் அருகி வருகின்றமை உண்மையா?

மலையகத்தில் கூத்துக்கலைகள் அருகிவரவில்லை. வளர்ந்து வருகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற இடங்களைவிட தற்போது புதிய புதிய இடங்களில் கூத்துக்கலைகள் அரங்கேற்றப்படுகின்றன. இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் இதனை அக்கறைகொண்டு படிக்கின்றார்கள். கலைகள் மீது ஆர்வம் கொண்ட பெரும்பாலான ஆசிரியர்கள் பாடசாலைகளில் நடக்கின்ற விழாக்களிலே கூத்துக்கலைகளை மேடையேற்றுகின்ற நிகழ்வினை முகப்புத்தகங்களின் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இதனை ஒப்பிட்டு பார்க்கின்ற போது இன்றைய காலகட்டத்தில் கூத்துக்கலை அருகவில்லை. ஆனால் பார்வையாளர்களின் நிலையும் நடிகர்களுடைய நிலையும் ஆரம்ப காலத்தில் இருந்ததைவிட தற்போது அவர்களுடைய மனநிலையில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் பக்தி பூர்வமாக இருந்த கலையில் சற்று மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மலையகத்தில் கூத்துக்கலைகள் அருகிவிடும் அல்லது அழிந்துவிடும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

2. கூத்துக்கலை தொடர்பான ஆய்வுகள் மலையகத்தில் எவ்வாறுள்ளது?

இதுவரைக்கும் மலையகம் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. கூத்துக்கலை பற்றி ஐந்தாறு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அர்ச்சுணன் தபசு, காமன் கூத்து, என்பன ஆய்வாக வந்திருக்கிறது. அதிலே பொன். பிரபாகரன் என்பவருடைய புத்தகம் மிக முக்கியமானது. நாவலப்பிட்டி அ. லெட்சுமணன் உதய சூரியன் பத்திரிகையில் ’காமன் கூத்து கலையறிவோம்’ எனும் தொடரை எழுதியதோடு பேராதனை பல்கலையைச் சேர்ந்த ஜோதிமலர் ரவீந்திரன் காமன் கூத்து ஆய்வு நூலையும் அம்பிகை வேல்முருகு அர்ச்சுணன் தபசு ஆய்வு நூலையும் காரை சுந்தரம்பிள்ளை காமன் கூத்து நூலையும் வெளியிட்டுள்ளனர். தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் மலையகத்தைச் சார்ந்த நாடகமும் அரங்கியலும் படித்த மாணவர்கள் அதிகமாக அப்பாடத்தினை உள்வாங்கியிருக்கின்ற காரணத்தினால் அவர்கள் மலையகக் கூத்து பற்றிய சில ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கான சில தகவல்களை நாங்கள் வழங்கியிருக்கின்றோம்.
அந்தடிப்படையில் அவை இன்னும் முழுமையான புத்தகமாக வெளிவரவில்லை. அப்படிவருகின்றபோது இந்த கூத்துக்கலை பற்றியான
ஆய்வுகள் அதிகமாக வெளிவரும். பொதுவாக நான் மலையகத்தில் நடைபெற்ற கூத்துக் கலை பற்றியும் தப்பிசை பற்றியும் தனியாக கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன்.

3. கூத்துக்கலையில் இளைஞர்களின் பங்குபற்றல் எந்தளவிலுள்ளது?

அதிகமாக இளைஞர்கள் தொழிலுக்காக நகர்புறங்களை நோக்கி வந்திருந்தாலும் கூட ஊரில் நிரந்தரமாகவிருக்கின்ற இளைஞர்கள், சிறுவர்கள் கூத்துக் கலையில் நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றனர். உதாரணமாக கடந்த சித்திரை வருடப்பிறப்பின் போது சாமிமலை, ஓல்டன் தோட்டத்தில் அர்ச்சுணன் தபசு நாடகம் நடைபெற்றது. அந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக நான் கலந்து கொண்டேன். அங்குள்ள இளைஞர் கழகத்தின் தலைவர் உதயசேகர், 43புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்திருந்தார்.

4,5 வயது சிறுவர்கள் கூட நாடகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்தமை பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. இதனை நாம் முன்னுதாரணமாக கருதுகின்ற போது அடுத்த தலைமுறை இக்கலையினை இலகுவாக கொண்டு செல்வார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தமில்லை. ஆனால், கலைக்கான களம் அமைப்பதிலேயே இன்று இளைஞர்கள் அதிக சவால்களை எதிர்
நோக்குகின்றார்கள். அந்த கூத்துக்கலை நடத்துவதற்கான இடம், ஒப்பனை, ஆபரணங்கள் என்பவற்றை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றமையினால் அதனை தாங்களே உருவாக்கும் போது அதில் கலை பண்பாடு சில மாற்றத்துக்கு உள்ளாவதை அவதானிக்க முடிகின்றது. எனவே இளைஞர்கள் பங்குபற்றவில்லை என்று நாங்கள் சொல்வதை தவிர, சம்பளப்பிரச்சினை, தொழில்வாண்மை, தொழில் முயற்சி என்பவற்றுக்காக இளைஞர் வெளியிடங்களுக்குச் செல்வதாலேயே அவர்களின் பங்குபற்றல் குறைந்திருக்கிறது. சில வேளைகளில் வெளியிடங்களில் வேலை செய்தாலும் கூத்துக்கலை இடம்பெறுகின்றது என்று அறிந்தவுடன் வந்து பயிற்சிபெற்று பங்குபற்றும் இளைஞர்களும் இருக்கவே செய்கின்றனர்.

4. மலையகக் கூத்துக் கலைகளை ஆய்வு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அல்லது உதவிகள் ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றனவா?

இதுவரையில் மலையகத்தில் கூத்துக்கலையை ஊக்குவிப்பதற்கோ, அல்லது கூத்துக் கலைஞர்களை கௌரவிப்பதற்கோ, அதன் பண்பாட்டை பேணிக் கொள்வதற்கோ இதுவரையும் எந்தவொரு தளமும் அமைக்கப்படவில்லை. பொதுவாக அந்தந்த பிரதேசங்களில் இருக்கின்ற பாரம்பரியமான முறையிலேயே கலைஞர்கள் அந்தக் கலைகளை ஒரு சம்பிரதாய பூர்வமாக அரங்கேற்ற வேண்டுமென்ற நிலையில் மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே கலைகளை அரங்கேற்றுகின்றனர். உண்மையிலேயே மலையக அரசியலிலும் சரி இன்னும் ஒரு விடயம் உணரப்படவில்லை. இந்த கலைப்பண்பாடுகள்தான், எங்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்கின்ற முக்கிய ஆவணங்கள். நாங்கள் பல்வேறு தேவைகளுக்காக செய்கின்ற முதலீடுகளைவிட, கலைப்பணிக்கு செய்வது மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

எனவே அரசியல் வாதிகள், நலன் விரும்பிகள், செல்வந்தர்கள் கலைத்துறையினையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்து, கலைஞர்களுக்கான ஊக்குவிப்புகளை வழங்கி ஊக்கப்படுத்துவார்களானால் அது சிறப்பானதாக இருக்கும். ஒவ்வொரு பிரதேசத்திலும் கலாசாரத்துக்கு பொறுப்பான ஒரு உத்தியோகத்தர் காணப்படுகின்றார். அவர் கலைப்பண்பாட்டை பாதுகாக்ககூடியவரா, ஆவணப்படுத்தக் கூடியவரா என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும்.

5. மலையகக் கூத்துக்கலைகள் தொடர்பில் நீங்கள் முன்வைத்த ஆய்வுகள் தொடர்பான சர்வதேச பார்வை எவ்வாறுள்ளது?

இன்று உலகமே வியந்து பார்க்கக்கூடிய அற்புதங்கள் நாட்டுப்புற கலைகளுக்கு உண்டு. பல நாடுகளின் சுதந்திர போராட்டமும் விடுதலையும் நாட்டுப்புற கலைகளிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. உதாரணமாக ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகள் தங்களது சுதந்திர போராட்டங்களை நாட்டுப்புற இலக்கிய மரபிலிருந்து தான் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு நாட்டில் நாட்டுப்புற கலையே தேசிய கீதமாக இருக்கின்றது. எனவே இன்றைய காலகட்டத்தில் நாட்டுப்புறக் கலை, மானிடவியல் பற்றிய ஆராய்ச்சிக்கும் பண்பாட்டினுடைய ஆராய்ச்சிக்கும் அடித்தளமாக இருக்கின்றமையால மேற்கு நாடுகளில் நாட்டுப்புற கலைகளுக்கு தனியான மதிப்புண்டு. எங்களுடைய கலைகள் எம்முடைய வரலாற்றை எப்படிப் பாதுகாக்கின்றன, அதன் வீரியம் என்பவற்றை அறிந்து பலர் அதற்கு ஒத்துழைப்பை நல்குவதற்கு முன்வந்திருக்கின்றார்கள். கடந்த வருடம் பிரான்ஸில் நடந்த உலக நாடக அரங்கிலே காமன் கூத்தை மேடை ஏற்றுவதற்கான சந்தர்ப்பம் எங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பிரான்ஸிய தூதரகம் எங்களுடைய விசாவை மறுத்ததன் காரணமாக அந்த விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இன்று உலகம் எங்களுடைய கலையை பார்ப்தற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலிருந்து பல கலைஞர்கள் இங்கு வருவதற்கு ஆயத்தமாகியிருக்கின்றார்கள். இந்த
சந்தர்ப்பத்தில் நாம் சிறந்த கலை பண்பாட்டு விழாவினை நடத்துவோமாகவிருந்தால், இந்தியாவில் உள்ள நாட்டுபுறக் கலைஞர்கள் அதனைப் பார்த்து நுணுக்கங்களை கற்க ஆயத்தமாக இருக்கிறார்கள். தொடர்ந்தும் எங்களுடன் தொடர்பிலும் இருக்கிறார்கள்.

6. மலையகக் கலைகள் என அடையாளப்படுத்தப்படுபவை எவை?

மலையகக் கலைகள் எவையென்பது இன்னும் திட்டமிட்ட வகையில் வரையறுக்கப்படவில்லை. பொதுவாக மலையக கலைகள் என்றுசொல்லும் போது கூத்துக்கள், தப்பு, உருமி, உடுக்கு, கோலாட்டம், பொம்மலாட்டம், வாளாட்டம் போன்ற கலைமரபுகள் மிகநீண்ட காலமாக மக்களிடத்தில் பாவனையில் இருக்கிறது. 1973 ஆம் ஆண்டுக்கு பிறகு பெருந்தொகையான மக்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தார்கள். அதனால் சில அற்புதமான கலைஞர்களும் இந்த நாட்டைவிட்டு வெளியேறி போனார்கள். அதனால் சில கலைகள் நல்லதங்காள், கெங்கை மாரியம்மன், மதுரை வீரன், பாண்டவர் வனவாசம், அன்னக்கொடி, நல்லதங்காள் போன்ற கூத்துக்கள் தற்போது மலையகத்தில் அரங்கேற்றப்படுவது குறைவு. மலையக கூத்துக்களாக அடையாளம் காணப்பட்டிருப்பது, பொன்னர் சங்கர், அர்ச்சுணன் தபசு , காமன்கூத்து இந்த கலைகள் பல்கலையில், கல்லூரியில் பொதுவான பாடநெறியாகவோ உருவாக்கப்படவில்லை. எங்களுக்கான கலைக்கல்லூரிகள் உருவாகும் போதே இவை சாத்தியமாகும்.

7. இன்றைய இளைஞர்களுக்கு கூற விரும்புவது..

மலையகம் என்பது நுவரெலியா மாவட்டம் மட்டுமல்ல. எங்கெங்கெல்லாம் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்கின்றார்களோ அவர்களுக்கான ஓர் இண அடையாளம். எனவே இந்த இன அடையாளத்துக்கு எந்தெந்த வகையில் சவால்கள் வந்திருக்கின்றன. என்பதை கடந்த கால வரலாறு தெளிவாக எடுத்து காட்டுகிறது. எங்களுடைய தோட்டங்கள் பறிபோயிருக்கிறது. எங்களுடைய கலை பண்பாட்டுக்கு இந்திய தொலைக்காட்சியூடாக மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே இவற்றையெல்லாம் இளைஞர்கள் கவனத்தில் கொண்டு எங்களுடைய இருப்பையும் வாழ்வியலையும் இந்நாட்டின் தேசிய கலாசாரத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் தனித்துவமாக கொண்டுவர வேண்டுமாயின் கலைப்பண்பாட்டில் ஆர்வமும் முனைப்பும் கொண்டிருக்க வேண்டுமென்பது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக