கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 ஆகஸ்ட், 2018

மலையக மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டம்

மலையக மக்களுக்கான வீட்டுத் தேவைகள் பன்னெடுங்காலமாக இருந்துவரும் நிலையில் 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்கள் தனி வீடுகளைப் பெற்று வீட்டுரிமையினை பெறும் நிலை தோன்றியுள்ளது. இதன் ஒரு அங்கமாக இந்திய அரசாங்கத்தின் நிதி யொருக்கீட்டில் பூண்டுலோயா. டன்சினன் தோட்டத்தில் 404 வீட்டுத் தொகுதிகளை உள்ளடக்கிய ’மகாத்மா காந்திபுரம்’ மக்களின் பாவனைக்காக அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது. மலையக மக்களுக்கு 165,000 வீடுகள் தேவைப்படும் நிலையில், இந்திய அரசினால் 14,000 வீடுகளுக்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


2020ஆம் ஆண்டுக்குள் 50,000வீடுகள் கட்டி முடிப்பதை இலக்காகக் கொண்டு செயற்பட்டாலும், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் 100நாள் செயற்திட்டத்துக்கு அமைவாக இரத்திரனபுரி மாவட்டத்தில் 30 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 47வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 12 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 40 வீடுகளும், ஹட்டன் பிரதேசத்தில் 62 வீடுகளும், நுவரெலியா பிரதேசத்தில் 147 வீடுகளுமாக மொத்தம் 338வீடுகள் (தகவல்:கீகூஐ) கட்டப்பட்டிருந்தன. தற்போதைய நிலையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினூடாக 7058 வீடுகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மூலமாக 25,000 வீடுகளுக்கான நிதியொதுக்கீடுகளும், இந்திய அரசாங்கத்தினால் 14,000 வீடுகளுக்கான நிதியொதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 7பேர்ச்சஸ் காணியின் காணி உரித்தோடு 12 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. 2012ஆம் ஆண்டு இந்திய வீடமைப்புத் திட்டம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் 4 வருடங்களாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாதிருந்த நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனி வீடுத் திட்டத்துக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வீடுகளுக்கும், காணிகளுக்கும் அசல் உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் இவ்வீடுகளை பெரிதாக்கவும், வியாபார நிலையங்களை உருவாக்கவும், தொழில் ஒன்று பெற்றுக் கொள்ளும் இடமாகவும் மாற்றும் நிலை பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளமையானது, மலையக மக்களின் தனிவீட்டுத் திட்டத்தின் கனவுக்கு உந்து சக்தியாக அமைந்திருப்பதுடன் எதிர்காலத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரம் விருந்தியடையவும் அதிகளவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு மலையக பயனாளிகளுக்கு வீடுகளைக் கட்டுவதற்கு காணியில்லாத நிலைமை நிலவியது. இதுவே இந்திய வீடமைப்புத் திட்டம் தாமதமடைவதற்குக் காரணமாகவிருந்தது. இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கு அப்போதிருந்த கால்நடைகள், இளைஞர் வலுவூட்டல்கள் அமைச்சு முயற்சி எடுத்திருந்தது. ஆனால் திட்டம் செயற்படுத்தப்படவில்லை. தோட்டக் கம்பனிகளுடன் பேசி காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இந்த வீடமைப்புத்திட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தமைக்கு பயனாளிகளுக்கு காணியுரிமை இல்லாமையே பிரதான காரணமாக இருந்திருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய வீடமைப்புத்திட்டத்தின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் 404 வீடுகளும், எல்பொடயில் 100, பொகவத்தலாவயில் 150, டயகமவில் 150, பதுளை நாராங்கலை, டெஜர்வத்தை ஆகிய இடங்களிலுமாக மொத்தம் 1134 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்திய அரசின் தனிவீட்டுக்கு ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. நிலத்தினை தயார்படுத்த தோட்ட நிர்வாகம் 30,000ரூபா மாத்திரமே வழங்குகின்றமையால் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சால் 120,000ரூபா வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது முன்னெடுக்கப்படும் வீடுகளுக்கு வழங்கப்படும் காணி உறுதிப்பத்திரமானது காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்படும் ஒன்றாகும். பெருந்தோட்டங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள காணிகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, நிதி அமைச்சு ஊடாக காணிச் சீர்திருத் ஆணைக்குழுவிற்கு பெற்று பெருந்தோட்ட மக்களுக்கு 7பேர்ச் காணிக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது. மண் சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சு, பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் மற்றும் குறித்த தோட்டக் கம்பனியுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியும் குறித்த காணிகளுக்கு பெறப்படுகின்றன. இதனால் பெருந்தோட்ட மக்கள் சொந்த நிலத்தில் தரமான வீடுகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சகல மலையக மக்களும் அனுபவிக்கும் நிலை வெகு விரைவில் ஏற்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் மூன்று இலட்சத்துக்கும் குறைவானவர்களே தோட்டத்தொழில் துறையில் இயங்கி வருகின்றார்கள். கிராமப்புறங்களில் 95.04 வீதமானோர தனிவீடுகளில் வசிப்பதுடன், தோட்டப்புற மக்களில் 33.04 வீதமானோர் மட்டுமே தனிவீடுகளில் வசிக்கின்றனரென புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெருந்தோட்ட கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற 432 தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களுக்கு தனிவீடுகளை அமைக்கும் நிலை இருக்கின்றது. தற்போது லயக் காம்பிராக்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற 60 வீதமானோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத்திட்டமானது அரிய வாய்ப்பாகக் காணப்படுகின்றது. இதனை எமது தலைமைகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்திய அரசின் 14,000 வீட்டுத்திட்டத்தை விரைவாக நிர்மாணித்து பயனாளிகளுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அவை இந்திய அரசுக்கு திருப்பதிகரமாக இருக்குமாயின் மேலும் பல வீட்டுத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகளை எம்மால் உரிமையோடு கோர முடியும். இந்திய அரசின் வீடுகளானது 505சதுர அடிபரப்பு கொண்ட 2அறைகள், வரவேற்பறை, குளியலறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் அமையப்பெற்றுள்ளது. பூண்டுலோயா டன்சினன் தோட்ட வீட்டுத்திட்டத்துக்காக இந்திய அரசாங்கத்தின் 383.5 மில்லியன் நிதியொதுக்கீடு பெறப்பட்டுள்ளதுடன், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினூடாக 89.5 மில்லியன் செலவின் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும், உலகவங்கித் திட்டத்தில் நகரத்திட்டமிடல் அமைச்சினால் குடிநீர்வசதிகளும் இவ்வீட்டுத்திட்டத்துக்காகப் பெறப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது இந்திய அரசாங்கத்தினால் முதற்கட்டமாக 4000வீடுகளும் மேலதிகமாக 10,000வீடுகளும் பெற்றுத் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் டன்சினன் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட 404 வீடுகளில் 156 வீடுகளே முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் 248வீடுகள் இன்னும் முழுமைப்பெறவில்லையென்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளமையையும் கவனத்தில்  கொள்ள வேண்டும்.

மேலும், மலையக மக்களுக்கு தனிவீட்டுத்திட்டம் அமைத்துக் கொடுத்தாலும் பயனாளிகள் தனிவீடுகளையும் பெற்றுக் கொண்டு இன்னும் லயன் வீடுகளிலேயே வசிக்கும் நிலை காணப்படுகின்றது. இது லயன் வீடுகளை தனிவீடுகளாக மாற்றியமைக்கும் இலக்குக்க தடையாக அமைந்துள்ளது. எனவே பயனாளிகள் வெளியேறிய லயன்களில் சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆடு, கோழி, மாடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்றவற்றுக்கு இந்த லயன் அறைகளைப் பயன்படுத்த முடியும். அல்லது இவற்றை இடித்தழித்து அவ்விடத்தில் புதிய திட்டங்களை
நடைமுறைப்படுத்த வேண்டும்.

எனவே மலையக மக்கள் தனிவீட்டுத்திட்டத்துக்காக இரு நூற்றாண்டுகள் காத்திருந்த நிலையில் தற்போது அவற்றில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஆனால் பயனாளிகள் லயன் அறைகளை மாற்று வழிகளுக்கு பயன்படுத்தாவிட்டால் லயன்களற்ற மலையகத்தை உருவாக்குவது
சிரமமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக