கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

22 ஆகஸ்ட், 2018

நேவி சம்பத் கைது

நேவி சம்பத் என்கின்ற ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். கொழும்பு லோட்டஸ் வீதியில் சி.ஐ.டி. யினர் நேவி சம்பத்தை கைது செய்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது. கைது செய்யப்பட்ட ’நேவி சம்பத்’ கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சன என். சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்த நிலையில் 48 மணித்தியாலங்கள் சி.ஐ.டி தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார்.


11இளைஞர்கள் கடத்தல் மற்றும் காணாமல் போன வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றமானது ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் இவருக்கு திறந்த பிடிவிறாந்து பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நேவி சம்பத் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து பெறப்பட்ட போலி தேசிய அடையாள அட்டையில் பொல்வத்தகே கல்லாகே அசோக என்ற பெயரில் பாதுகாப்பு அலுவலராக கடமை புரிவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக தொம்பே எஸ்டேட்டில் தொழில் புரிந்திருந்தார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குற்றப்பிரிவின் உயரதிகாரி இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வாவினால் இக்கைது மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட ’நேவி சம்பத்’ கடந்த புதன் கிழமை கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாந் ஹெட்டியாராச்சி கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் பதவி வகித்து வந்தவர். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணத்துக்காக 11 இளைஞர்களை கடத்தி படுகொலை சம்பவத்துடன் தேடப்பட்டு வந்தார். இவ்வழக்கு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு கடற்படை வீரர்களை கைது செய்திருந்தனர். இதில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கமாண்டோ டி.கே.பி தசநாயக்க உள்ளிட்டோரும் உள்ளடங்குவர். கடற்படை தளபதியாகவிருந்த அட்மிரல் வசந்த கரன்னாகொட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் மேற்கொண்ட எழுத்துமூல முறைப்பாட்டுக்கு அமைய குற்றப்புலனாய்வு பிரிவினர் 11 இளைஞர்களின் கடத்தல் சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

கடந்த புதன்கிழமை நேவி சம்பத்தை கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நேவி சம்பத் 2014 ஏப்ரல் 14 ஆம் திகதி போலி கடவுச் சீட்டின் மூலம் மலேசியா சென்றிருந்ததுடன் மீண்டும் மார்ச் 2018இல் இலங்கைக்கு திரும்பியிருந்தார். சந்தேக நபர் எல்லா
நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வைத்திருந்ததுடன் தொழில் தகைமையில் தொம்பே எஸ்டேட்டில் பாதுகாப்பு அலுவலர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் கடற்படை வங்கி கணக்கிலிருந்து சந்தேகநபருக்கு 500,000ரூபா பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லையென்றும் இன்னும் சிலர் இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் அந்நபர்களின் உண்மையான பெயரை அடையாளம் காண முடியுமெனவும் இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்டோர்

பணத்திற்காக 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கடற்படையினர் தொடர்புபட்டுள்ளமை ஏற்கனவே தெளிவாகியுள்ள நிலையில் கடத்தப்பட்டவர்கள் கடற்படையின் தொலைபேசிகள் ஊடாக தமது உறவினர்களுக்கு பேசியமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே. பி. தசநாயக்கவை காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் சந்தித்து பேசியமையும் தெரியவந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தப்பட்டோர் வருமாறு; கஸ்தூரியாராச்சிலாகே ஜோன் ரிட் என்கின்ற ஜோன், ரஜிவ் நாகநாதன் என்கின்ற மல்லி, பிரதீப் விஷ்வநாதன், தில்லகேஷ்வரன் ராமலிங்கம், மொஹமட் சஜித், ஜமாம்தீன் டிலான், அமலன் லியோன், ரோஷன் லியோன், அன்டோனி கஸ்தூரியாராச்சி, தியாகராஜா ஜெகன் மற்றும் மொஹமெட் அலி அன்வர் என்கின்ற ஹாஜியார் போன்ற 11 இளைஞர்கள் பணத்துக்காக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தனர். (அமலன் லியோனின் தந்தை ஸ்டான்லி லியோன் ஏற்கனவே 2008இல் கடத்தப்பட்டிருந்தார் அல்லது காணாமல் போயிருந்தார். இவர் கொழும்புக்கு இவரின் மகன் மற்றும் வெளிநாட்டவர் மைக் ஓகனுடன் ஐக்கிய இராச்சியத்துக்கான விசா விண்ணப்பத்துக்காக வந்திருந்தார். இவர்கள் கொட்டஹேன ராமநாதன் அடுக்கு மாடியில் தங்கியிருந்த நிலையில் ஆகஸ்ட் 25, 2008இல் அமலன் மற்றும் ஸ்டான்லி ஆகியோர் அடையாளம் காணப்பட முடியாத ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டிருந்தனர்.)

கடத்தல் சம்பவம்

இவ்வருடம் ஜனவரி 23ஆம் திகதி ஓய்வு பெற்ற கடற்படைச் சிப்பாய் துஷார மென்டிஸ், 2008ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஜனவரி 24, ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இவர் கட்டுநாயக்கவில் அலி அன்வரின் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர். இதனை அலி அன்வர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு தெரிவித்திருந்தார். மென்டிஸ், கடற்படை விசேட குற்றப்புலனாய்வு குழுவுடன் இணைந்து எட்டு இளைஞர்களை துப்பாக்கி முனையில் கடத்தி கொழும்பு கோட்டை சைத்தியா வீதியிலுள்ள கடற்படை முகாமிலிருந்து திருகோணமலையிலுள்ள சமுத்திர விஞ்ஞான பீட வளாகத்துக்கு கொண்டு சென்றிருந்தனர். மென்டிஸ் உடல்களை அகற்றுவதற்கு விசேட புலனாய்வு குழுவுக்கு உதவியிருந்தார். இவர் 2008-2009 காலப்பகுதியில் பராக்கிரம கடற்படை முகாமில் லெப்டினன்ட் கொமாண்டர் சுமித் ரணசிங்கவின் கீழ் பணியாற்றியிருந்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணையில், 2008 அக்டோபர் 17இல் புலனாய்வு குழுவினால் திறந்த பிடியாணை மற்றும் தெஹிவளை பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் ரஜிவ் நாகநாதன், பிரதீப் விஷ்வநாதன், திலகேஷ்வரன் ராமலிங்கம், மொஹொமட் ஜிலன் மற்றும் மொஹொமட் சாஜித் என்போர் உள்ளடங்குவர். இந்த ஐந்து இளைஞர்களும் கறுப்பு இன்டிகோ காரில் (KC 5565) கொண்டு செல்லப்பட்டதுடன் ’பிட்டு பம்புவ’ சிறையில் லெப்டினன்ட் கொமண்டர் ஹெட்டியாராச்சியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதேவேளை 31 டிசம்பர் 2008 - மார்ச் 2009 இறுதிவரையான காலப்பகுதியில் ஒரு இளைஞர் கடத்தப்பட்டிருந்தார். ரஜிவ் நாகநாதன் என்ற அவ் இளைஞன் தனது பெற்றோரான கோவிந்தசாமி நாகநாதன் மற்றும் சரோஜினி நாகநாதன் ஆகியோருக்கு தொடர்பை மேற்கொண்டிருந்தார். கடற்படை சிப்பாய்கள் மூலம் கடத்தப்பட்ட இளைஞர்களிடமிருந்து தொலைபேசிகளைப் பெற்று அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பை மேற்கொண்டிருந்தனர்.
அலி அன்வர் விசேட கடற்படை குழுவுக்கு உளவு தெரிவிப்பவராக இருந்ததுடன் 2009ஆம் ஆண்டில் அவர் காணாமல் போயிருந்தார். அதே வேளை ரஜிவ் நாகநாதன் தனது பெற்றோரிடம் அலி அன்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த ஐவரும் பின்னர் மென்டிஸ் மற்றும் ரணசிங்கவால் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இன்டிகோ கார், தம்மிதகே தர்மதாச மற்றும் அலுத்கெதர உபுல் பண்டார ஆகியோரால் கிரிவுல்லவில் மீட்கப்பட்டது. இவர்கள் சாட்சியங்களைக் கொடுத்துள்ளனர். இவர்களின் தங்குமிடம் கிரிவுல்லவிலேயே அமைந்துள்ளது. கடத்தப்பட்ட இளைஞர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக பல்வேறு சிப்பாய்கள் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். சி.ஐ.டி தகவல்களின் படி இன்டிகோ கார் பின்னர் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் திசாநாயக்கவால் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

சம்பத் முனசிங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தியாகராஜா ஜெகனின் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். ஜெகன் கொழும்பு - 13 இலுள்ள ஜூவலரியொன்றில் தொழில் செய்து வந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு காணாமல் போயிருந்தார். இலங்கை கடற்படை சிக்னல் படை, அலுத்கெதர உபுல் பண்டார மற்றும் லக்ஷ்மன் உதயகுமார போன்றோரிடமிருந்து கடத்தல் தொடர்பாக மிகவும் பயனுள்ள தகவல்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெறக்கூடியதாகவிருந்தது. இவர்கள் சம்பத் முனசிங்ககவின் கீழ் கடமையாற்றியவர்களாவர்.

ரஜிவின் தொலைபேசி அழைப்பு

பொலிஸ் தகவல்களில், செப்டெம்பர் 17, 2008 கடத்தல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஜிவ் நாகநாதனின் தாயாரான சரோஜினி நாகநாதன் தனது டயரியில் கடத்தப்பட்ட தன்னுடைய மகனிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட ரகசியமான தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்துள்ளார். இதில் முதலாவதாக திசாநாயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜிவ் நாகநாதன் பிட்டுபம்புவ என்று அறியப்பட்ட சைத்திய வீதிக்கு கடத்தப்பட்ட போது வெறொரு தொலைபேசி மூலம் தனது தாயாருக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவர் சிறைபிடிக்கப்பட்டிருப்பதை தாயார் அறிந்து கொண்டுள்ளர்.

பின்னர் இந்த குறிப்புகள் குற்ற புலனாய்வுத் திணைக்கள விசாரணையில்
நீதிமன்ற சாட்சியாக கையளிக்கப்பட்டது. இதில் தனது மகன் கமாண்டர் திசானாயக்கேவால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். மிரட்டல் மோசடி மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட கடற்படை அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கும் திசாநாயக்கவுக்கும் தொடர்பிருப்பதாக சி.ஐ.டி. விசாரணைகளில் தெரியவந்தது. ரஜிவ் தன் தாயாருக்கு மேற்கொண்ட துரித அழைப்புகள் காரணமாக பெறுமதியான தகவல்கள் கிடைக்க காரணமாக அமைந்திருந்ததுடன் அதுவே தற்போது இவ்விசாரணையை முன்னெடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

அதேவேளை, ரஜிவை விடுதலை செய்வதற்கு 10மில்லியன் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. ரஜிவ் குடும்பத்தின் பொருளாதார பின்னணியை அறிந்து கொண்டு இந்த கப்பம் கோரப்பட்டுள்ளது. இத்தகலை அன்வர் அலி என்கின்ற ஹாஜியார், முனசிங்கவுக்கு வழங்கியிருந்தார். அப்போது ஹாஜியார் புலனாய்வு சேவையில் இருந்தார். அவருடைய வாசஸ்தலம் தெஹிவளையில் அமைந்திருந்தது. இத்தொகையை கொடுப்பதற்கு ரஜிவின் குடும்பத்தினர் தயாராகவிருந்தனர். அதன் மூலம் அவருடைய மகனை திரும்பப் பெறுவதே நோக்கமாகவிருந்தது. தற்போது ரஜிவின் தாயாரும் தந்தையும் குடும்பத்துடன் வசிப்பதுடன், ரஜிவுடன் கடத்தப்பட்ட  திலகேஸ்வரனின் தாயார் இவ்வருட ஆரம்பத்தில் உயிரிழந்துவிட்டார்.

புகைப்பட சாட்சியத்தில் லெப்டினன்ட் கொமாண்டர் சுமித் ரணசிங்க, இருப்பதை உறுதிப்படுத்துவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய திசாநாயக்க மற்றும் அவரின் கீழ் பணியாற்றிய சில சிப்பாய்கள் திருகோணமலையில் பணியாற்றியுள்ளனர். இதில் திசாநாயக்கவின் கீழ் இரு புலனாய்வு அதிகாரிகள் பணியாற்றியுள்ளதாக கடத்தப்பட்ட இளைஞர்கள் இறுதியாக தெரிவித்துள்ளனர்.

ரவிராஜ் படுகொலை

பாராளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கின் சந்தேக
நபராக, நேவி சம்பத் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா தெரிவித்துள்ளார், 2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் தெரண தொலைக்காட்சியில் நேரடி நேர்காணலில் பங்கு பற்றிய நிலையில் வீடு திரும்பி மீண்டும் வெளியேறும் போது வீட்டுக்கருகில் காலை 8.45 மணியளவில் கொழும்பு நாரஹேன்பிட்டிய மனிங்டவுனில் வைத்து சுடப்பட்டார். பின்னர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இதில் ரவிராஜின் மெய்பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மர்மம் துலங்காத வகையில் படுகொலை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் காணாமல் போனமை தொடர்பிலான வழக்கின் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள நேவி சம்பத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல மர்மங்கள் வெளிவருமா என்ற ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. கடற்படையினரால் 11 இளைஞர்களும் கடத்தப்பட்டமை உறுதியாக தெளிவாகியுள்ள நிலைமையிலும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் திட்டமிடப்பட்ட முறையில் தப்பிச்செல்ல வழிவகை
செய்யப்பட்டமை முக்கிய திருப்பமாக இருக்கும் நிலையில் எதிர்வரும் காலங்களில் அதற்குத் தீர்வு கிடைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக