கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

மலையக அபிவிருத்தி அதிகார சபை

மலையக மக்களுக்கான எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களும் இதுநாள் வரையில் ஏதோவொரு அமைச்சின் மூலமே முன்னெடுக்கப்படும் நிலை காணப்பட்டது. ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களுடன் இணைந்து செல்கின்ற மலையக கட்சிகளுக்கு வழங்கப்படும் ஏதோவொரு அமைச்சின் மூலமாகவே சகல வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இவ்வாறு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தனியானதொரு அதிகாரசபை இது நாள் வரையும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. மலையக பகுதிகளில் காணப்படும் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள், சமூக பொருளாதார பிரச்சினைகள், இப்பிரச்சினைகளை கையாளுவதற்கான நிரந்தர அமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையின் படி ’மலைநாட்டு புதிய கிராமங்களுக்கான அதிகார சபை’ என்றதொரு அரச சபையை உருவாக்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் மலையக மக்களுக்காக பணியாற்றக் கூடிய அரச அதிகாரமுடைய நிறுவனம் ஒன்று இருக்கவில்லை. ட்ரஸ்ட் எனப்படுகின்ற பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் முற்றுமுழுதாகவே பெருந்தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இதனால் வீடமைப்புத் திட்டத்துக்கு காணிகளை ஒதுக்கிக் கொள்வதில் கூட நாம் பெருந்தோட்ட கம்பனிகளின் தயவிலேயே தங்கியிருக்கும் ஒரு நிலை காணப்பட்டு வந்திருக்கின்றன. ட்ரஸ்ட் நிறுவனம் கூட பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் இயங்குகின்ற ஒரு தனியார் நிறுவனமாகும். அதற்கு தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை மாத்திரமே பெருந்தோட்ட அமைச்சு கொண்டிருக்கின்றது. அதன் முழுமையான அதிகாரம் பெருந்தோட்ட கம்பனிகளின் பணிப்பாளர் சபையிடமே இருக்கிறது. எனவே அமைச்சினுடைய தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நிலை தோன்றுவதுடன் ட்ரஸ்ட் நிறுவனத்திடம் தங்கியிருக்கும் நிலையே காணப்பட்டது.
அத்துடன் அமைச்சின் கீழ் செயற்படும் மற்றொரு நிறுவனமாக சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் அமைச்சராகவிருந்த ஆறுமுகன் தொண்டமானினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகக் காணப்பட்டது. இதன் மூலம் தொழிற்பயிற்சி நிலையங்கள், நவசக்தி, பிரஜாசக்தி செயற்றிட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும் கட்சி அலுவலகமாகவும் பயன்படுத்தப்படுவதாக சர்ச்சைகள் மேலெழுந்ததுடன் நிதிமோசடிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி நிதி மோசடிப் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சுக்கு கீழாகவருகின்ற இரு நிறுவனங்களும் முழுமையாக அமைச்சின் கட்டுப்பாட்டில் இல்லாததுடன் அரச திணைக்களங்களாகவோ, அதிகார சபைகளாகவோ இருக்கவும் இல்லை.
இதனாலேயே மலையகத்துக்கான தனியானதொரு அபிவிருத்தி சபை உருவாக்கப்பட வேண்டும். என்ற கோரிக்கை மிக நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை தங்குதடையின்றி முன்னெடுப்பதற்கு அரச அதிகாரங்களை கொண்ட அதிகாரசபைக்கான தேவைப்பாடு காணப்படுகின்றது. அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் நிரந்தரமாக ஒரேகட்சி ஆட்சிக்கு வருவதில்லை என்பதுடன் ஒரே அமைச்சுப் பதவியும் மலையகத்திற்காக வழங்கப்படுவதில்லை. இதனால் தொடர்ந்து திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை வரும். இதனால் திட்டங்கள் தொடர்ந்தும் இழுபறியில் செல்லாமல் திட்டமிட்டபடி செல்ல வேண்டுமாயின் அதிகார சபையொன்று அவசியமாகின்றது.
இலங்கையில் மகாவலி அபிவிருத்தி திட்டத்துடன் தொடர்புடைய விடயங்களுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அமைக்கப்பட்டது போல, வட கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்த மீள் குடியேற்ற அதிகார சபை உருவாக்கப்பட்டது. அதேபோல தேசிய வீடமைப்புத் திட்டத்துக்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையும். காலி மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களை விசேடமாக அபிவிருத்தி செய்வதற்காக தெற்கு அபிவிருத்தி அதிகார சபையும் பெருந்தோட்ட மாவட்டங்களை விசேடமாக அபிவிருத்தி செய்வதற்காக தெற்கு அபிவிருத்தி அதிகார சபையும் பெருந்தோட்ட பகுதிகளை அண்டிய கிராமங்களையும் பெருந்தோட்ட பகுதி கிராமிய குடியேற்றங்களை உருவாக்கும் நோக்கில் ஜனவாசா கமிசன், நட்சா போன்றவை உருவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவகையிலே பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகார சபையின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பெருந்தோட்ட பகுதிகளில் வசித்துவரும் மக்கள் சுகாதாரம், குடிநீர், வீடமைப்பு போன்ற சகல தேவைகளுக்கும் தோட்ட நிர்வாகத்தையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. கல்வியும் மின்சாரமும் மாத்திரமே அவர்களுக்கு நேரடியாக அரச நிறுவனங்களிலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதேபோல தோட்டப்புறங்களில் ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமாயின் தோட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. இதனால் அபிவிருத்திகள் புறக்கணிக்கப்படும் சூழல் காணப்படுகின்றது. இதனால் மலையகத்துக்கு தனியானதொரு அதிகாரசபை உருவாக்கப்பட வேண்டுமென்பதில் சகலரிடமும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் அ.லோறன்ஸின் கருத்துப்படி, மலையக மக்களிடம் அடையாளம் காணப்பட்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக கொள்கைவகுப்பதற்கும் அக்கொள்கை அடிப்படையில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒரு நிறுவனத்தின் தேவைப்பாடு அவசியமாகின்றது. குறிப்பாக மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினை, காணியுரிமை, சமூக பொருளாதார, கல்வி, கலாசார பிரச்சினைகள், வீதி, குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சினைகள் காலங்காலமாக தீர்க்கப்படாமல் தொடர்வதற்கு அனுமதிக்காமல், அதனை தீர்ப்பதற்கு ஒரு நிறுவன மையமான செயற்பாடு அவசியமாகின்றது. இந்த அடிப்படை பிரச்சினைகளை தொடர்ச்சியாக ஒரு கால அட்டவனையில் 5 ஆண்டு அல்லது 10 ஆண்டு திட்டம் மூலம் தீர்த்து வைக்கலாம். இதனை நிறுவனமயப்படுத்தி அதனை திட்டமிட்டு செயற்படுத்த பெருந்தோட்ட சமூக சமூக அபிவிருத்தி அதிகார சபை (Plantation on Committee Development Authority) உருவாக்கப்படுமென தெரிவித்திருந்தார்.
அத்தோடு பல அரசியல் சமூக அமைப்புக்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் யாவும் ஒரே நேரத்தில் சமாந்திரமாக முன்வைப்பதில் நடைமுறை பிரச்சினைகள் உள்ளன. எனவே அடிப்படை பிரச்சினைகளில் ஒவ்வொரு பிரச்சினையை காலத்துக்குக் காலம் பிரதானப்படுத்தி அதனை தீர்க்கும் வகையில் யுக்திகள் வகுக்கப்பட வேண்டும். அவ்விதமான அடிப்படை பிரச்சினைகளையும், பிரதான பிரச்சினைகளையும் நிறுவன ரீதியில் தீர்ப்பதற்கு மலையக பெருந்தோட்ட அதிகார சபை போன்ற நாடாளுமன்றத்தில் சட்ட அந்தஸ்து பெற்ற ஒரு நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு புறம்பாக அமைச்சுக்கள் அமைப்பது அரசு மறுகின்ற போது இல்லாமல் போய்விடுமென்றும் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் அ.லோறன்ஸ் தனது கட்டுரைப் பதிவொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்
எனவே பொதுவாகவே மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஒன்றை அமைப்பது தொடர்பான கோரிக்கைகளுக்கு மலையக அதிகார சபை ஒன்று அமைக்கப்படும் போது தீர்வுகள் கிடைக்கப்பெறலாம். இவை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சட்ட வரைபுகளுக்காக அனுப்பப்பட்டுள்ள குறித்த யோசனை பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டு சட்ட ரீதியான அதிகாரசபையாக விரைவில் அமைக்கப்படலாம். இலங்கையில் தற்போது வாழ்கின்ற 15 இலட்சம் பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை நிலையினை, வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு இவ்வாறானதொரு அதிகாரசபை தேவைப்படுகிறது.
அண்ணளவாக 1 மில்லியன் மக்கள் தோட்டங்களிலும் பெருந் தோட்டங்களிலும் வாழ்விடங்களை கொண்டுள்ளனர். இவர்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1.5 மில்லியன் மக்கள் தொடர்புபட்டுள்ளனர். தோட்டப்புறங்களிலுள்ள 40 வீதமானோர் வேலையற்றவர்களாக இருக்கின்றனர். பெருந்தோட்டங்களில் தேயிலையும் இறப்பரும் காணப்படும். சூழலில் 2015 ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட 20 வீதத்தின் மூலம் 1366 மில்லியன் டொலர்கள் வருமானமாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தேசிய வருமானத்தில் அதிக பங்கு வகிக்கும் மலையக மக்களின் அபிவிருத்திக்கு தனியானதொரு அபிவிருத்தி சபையானது அவசியமாகின்றது.
1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனமானது, இலங்கை அரசாங்கம், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் மற்றும் தொழிற்சங்கங்கள் என பலரின் பிடியில் இருப்பதால் சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்துவதில் பின்தங்கி நிற்கின்றது. எனவே மலையக மக்களின் அபிவிருத்தியினை கருத்தில் கொண்டும் உடனடியாக மலையக மக்களுக்கான அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட வேண்டும்.
......................................................................................................................
மலையக அதிகார சபை உருவாக்கப்படுமாயின் அபிவிருத்திகளை நேரடியாக மலையகத் தலைமைகள் கையாளக்கூடிய ஒரு சூழல் உருவாகும். தாங்களே தீர்மானங்களை மேற்கொண்டு அபிவிருத்திகளை செயற்படுத்தலாம். மலையகமானது தேசிய அரசியலிலிருந்து 50 வருடங்கள் பின்தங்கிய நிலையிலிருக்கிறது. இந்த இடைவெளியை நிரப்ப விசேட வேலைத்திட்டங்கள் அவசியமாகும். அந்த விசேட திட்டங்களை உருவாக்க மலையக அதிகாரசபை உதவும். உலகிலேயே மிக நீண்டகாலமாக சொந்த வீடு, காணி இல்லாமல் இருப்பவர்கள் மலையக மக்களே. இந்த அதிகார சபையின் உருவாக்கத்தினால் சொந்த வீடு, காணி பெறும் வாய்ப்பு இருப்பதால் தங்களுடைய இருப்பை பலப்படுத்தக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
உயர்தர மாணவர்களுக்கான விஞ்ஞான கல்வித் திட்டம், ஆசிரியர்கள் பற்றாக்குறை நிவர்த்தி மற்றும் மலையகத்தவர்களுக்கான தனிப்பல்கலைக்கழகம் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. சிங்களவர், முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர் ஆகியோருக்கு தனிப்பல்கலைக்கழகம் இருக்கும் நிலையில் மலையகத்தவர்களும் பெற்று கொள்வதற்கான அழுத்தத்தை கொடுக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். இவ்வதிகார சபைக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்படும் என்று தெரியவில்லை. ஆனால் நேரடியாக வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டால் சிறப்பாகும். எனவே புதிய அதிகாரசபையின் கட்டமைப்பு, நிர்வாகம், அதிகாரம் என்பவை வெளிப்படும் போது இதன் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
சி.அ.யோதிலிங்கம்
அரசியல் ஆய்வாளர்
............................................................................................

மலையக மக்களின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஒரு அதிகாரசபை தேவையென்பதற்கான குரல் 10 வருடங்களுக்கு முன்னே கொடுக்கப்பட்டது. அபிவிருத்திகளில் மலையக மக்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. மலையகம் என்பது தோட்டத்துறை மாத்திரமல்ல. தோட்டப் பகுதிகளை அண்டி காணப்படுகின்ற சிறு சிறு கிராமங்களையும் உள்ளடக்கியதாகும். தோட்டத்துறையானது. எதிர்காலத்தில் அதிகம் அபிவிருத்தி காணவேண்டிய தேவை உள்ளது. அதற்கான வாய்ப்பை அதிகாரசபை உருவாக்கும். உதாரணமாக கண்டி பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக உருவாக்கப்பட்ட கண்டிய விவசாய ஆணைக்குழு பின்னர் ஒரு அதிகார சபையாக மாற்றப்பட்டமை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
எந்த அரசாங்கம் வந்தாலும் கொள்கைகள் மாறினாலும் அதிகார சபைகள் மாற்றம் பெறாது. அதன் அதிகாரம் நிலையானதாக இருக்கும். அமைச்சு என்பது ஒரு பகுதி வேலைத்திட்டத்தை மட்டுமே முன்னெடுக்கும் அதிகாரசபை மூலம் ஏனைய அமைச்சுக்களும் திட்டங்களை முன்னெடுக்கலாம். இவ்வாறான அதிகார சபை உருவாக்கம் தொடர்பில் ஒரு தசாப்த காலத்துக்கு முன்பாக குரல் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அச்சபை உருவாக்கம் மலையக மக்களின் அபிவிருத்திகளில் திருப்பு முனையாக அமையுமென்பதுடன் அத்தியாவசியமானதொன்றாகவும் இருக்கும்.
பி.முத்துலிங்கம்
சமூக செயற்பாட்டாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக