கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

பிளாஸ்ரிக் கடல்

எதிர்கால சந்ததிகளுக்கு பாதுகாப்பான பூமியை நாம் விட்டு வைத்துவிட்டு போகப் போகின்றோமா? என்பதில் தற்போது அதிகம் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. எமது சுற்றுச் சூழலை கழிவுகளால் நிரப்பும் நாம், இதைப் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும். எமது அன்றாடப் பாவனையிலிருந்து பிளாஸ்ரிக்கை எம்மால் தவிர்க்க முடியாதுள்ளது. ஆனால் அந்த பிளாஸ்ரிக் மூலமே எமக்கும் சூழலுக்கும் நாம் ஆபத்தை ஏற்படுத்துகின்றோம் என்பதே உண்மை. பல்வேறுபட்ட ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. குப்பைகளைக் குறைப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் அடுத்த 10 வருடங்களில் பெருங்கடலிலுள்ள பிளாஸ்ரிக்கின் அளவு 3 மடங்காக அதிகரிக்குமென பிரிட்டன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு ஆய்வுக் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இது கடலுக்கான ஆபத்து மாத்திரமல்ல, அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள அபாயமாகும். புள்ளிவிபரமொன்றில் மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 5 ஆவது இடத்தில் இலங்கையே இருப்பதாக கடல்வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வருடாந்தம் 1.59 மெற்றிக்தொன் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் வீசுவதே கடற்கரை மாசடைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் 1975 ஆம் ஆண்டைவிடவும் இலங்கையில் பிளாஸ்ரிக் பயன்பாடு தற்போது 62.5 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் பிளாஸ்ரிக் பாவனையை தவிர்க்க முடியாமைக்கு அதன் உற்பத்தியும் காரணமாகவிருக்கின்றது. இலகுவில் எம்மால் காவிச் செல்வதற்கு பிளாஸ்ரிக் பொருட்கள் உகந்தவையாக எம்மால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை பொருட்களை பொதியிடுவதற்கும் குடிநீர் மற்றும் பானங்களை அடைப்பதற்கும் பிளாஸ்ரிக் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. எனவே இவற்றுக்கான மாற்று வழிகள் கண்டுபிடிக்கப்படும் போதே பாவனையையும் குறைக்க முடியும். பிளாஸ்ரிக் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்ரிக் துகள்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனவே பிளாஸ்ரிக் பாவனையானது ஒவ்வொரு நொடியும் மனிதனுக்கும் சுற்றுச் சூழலுக்கும் மிகவும் ஆபத்தானதாகவே இருக்கின்றது. மனிதனால் இதுவரைக்கும் 8.3 பில்லியன் தொன் பிளாஸ்ரிக் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். கடந்த 65 ஆண்டுகளுக்குள்ளேயே இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பிளாஸ்ரிக் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒரு பில்லியன் யானைகளின் எடைக்கு நிகரானதாகுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பொதியிடுவது போன்ற குறுகிய காலத் தேவைக்காக பிளாஸ்ரிக் பயன்படுத்தப்பட்டு நீக்கப்படுவது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதில் 70 வீதமான உற்பத்திகள் கிராமப்புறங்கள், கடல்கள் மற்றும் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலைமை தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டாகும்போது சுமார் 12 பில்லியன் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் எமது சுற்றுச் சூழலில் தேங்கிவிடுமெனவும் உற்பத்தியாகும் பிளாஸ்ரிக் பொருட்களில் 10 வீதத்திற்கும் குறைவானவையே மீள்சுழற்சிக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே உற்பத்தி செய்யப்படுகின்ற அளவுக்கு பிளாஸ்ரிக் பொருட்கள் மீள்சுழற்சி செய்யப்படாமை மிகப்பெரும் குறையாகவே இருக்கின்றது. இலங்கையிலும் அண்மைக் காலங்களில் குப்பைகளை அகற்றுவதில் ஏற்பட்ட நெருக்கடிகளினால் குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதேவேளை அவ்வாறு சேகரிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால் அத்திட்டத்தின் மூலம் நாட்டில் சேகரிக்கப்படும் சகல பிளாஸ்ரிக் பொருட்களுமே மீள்சுழற்சி செய்யப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சேகரிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கழிவுகளைத் தவிர ஏனையவை மண்ணுக்குள்ளும் கடலுக்கும் கொண்டுபோய் சேர்க்கப்படுகின்றன. பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனை தேவையற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டமை மற்றும் பயன்படுத்தப்பட்டமை, முறையற்ற ரீதியில் அகற்றியமை உள்ளிட்ட காரணங்களினால் சுற்றுச் சூழலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கடல்வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடற்கரையில் இருக்கின்ற கழிவுகளில் 10 வீதமானவை பிரதேசத்தில் இருந்தே அகற்றப்படுவதாகவும் ஏனைய 90 சதவீதமானவை நாட்டின் உள்பாகங்களில் இருந்து கங்கைகள், நீரோடைகள் மற்றும் ஆறுகளிலிருந்தும் கடலுக்குள் அடித்து வரப்படுவதுடன், தாய்லாந்து, இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் கடல்களில் ஏற்படுகின்ற நீரோட்டங்கள் மூலமாக இவ்வாறான கழிவுகள் தொலைதூரத்திலிருந்து இலங்கைக் கடற்கரைகளுக்கு இழுத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக எம்மால் கடலில் தடுப்புச் சுவர்களை எழுப்ப முடியாது. மாறாக தேங்குகின்ற பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றுவதே சிறந்த வழியாக இருக்கின்றது.
கடலில் பிளாஸ்ரிக் சேர்வதினால் கடலை நம்பி வாழும் உயிரினங்கள் மோசமாக பாதிப்படைகின்றன. சில திமிங்கிலங்கள் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பிளாஸ்ரிக் துண்டுகளை விழுங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து மில்லி மீற்றரை விட குறைவான நீளத்தை கொண்டிருக்கும் சிறிய பிளாஸ்ரிக் துண்டுகள் கடலுக்கும் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும். நுண்ணிய பிளாஸ்ரிக்குகளை உட்கொள்ளும் போது கடல் உயிரினங்களின் செரிமான மண்டலம் பாதிக்கப்படுமெனவும் ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும் திறன் குறைந்துவிடுமெனவும் அமெரிக்க கடல்பெரு மிருகங்கள் அமைப்பின் ஆராய்ச்சியாளர் எலிஸ்டா ஜெர்மானோவ் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய பிளாஸ்ரிக் மாசுபாட்டை ஏற்படுத்தும் நாடான இந்தோனேஷியா 2025 இல் கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் கலப்பதை 75 சதவீதம் குறைப்பதாக தெரிவித்துள்ளது. அதிகரித்துவரும் பிளாஸ்ரிக் கழிவுகளால் கடல் வாழ்வு சீர்படுத்த முடியாத அளவுக்கு சேதத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் நம் வசதிக்காக பிளாஸ்ரிக்கை கண்டுபிடித்த பத்தாண்டுகளிலேயே அதன் மூலம் கடலின் சுற்றுச்சூழலை நாம் அழிக்கத் தொடங்கிவிட்டோமென ஐ.நா. சபையின் பெருங்கடல்களுக்கான பிரிவின் தலைவர் லிசா ஸ்வென்சன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்ரிக் செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இதுவொரு பெற்றோலியம் வகையைச் சார்ந்தது. பிளாஸ்ரிக் பைகள் மக்குவதற்கு 100-1000 ஆண்டுகளும் பஞ்சுக் கழிவுகள் 1-5 மாதங்களும் காகிதம் 2-5 மாதங்களும் காலுறைகள் 1-5 ஆண்டுகளும் தோல் காலணி 25-40 ஆண்டுகளும் நாப்கின்கள் 500-800 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும், பிளாஸ்ரிக் பொருட்கள் மிகக் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டு உடனே கழிவாக வீசி எறியப்படுகிறது என்பதும் பிளாஸ்ரிக்கை முழுமையாக பயன்படுத்துவதில்லை என்பதும் முக்கியமாகும். எனவே முழுமையாக பயன்படுத்தாத பொருளே அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது. இவை மிக நீண்டகாலம் பயன்படுத்தக் கூடியதல்ல. பிளாஸ்ரிக் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை பருகியவுடன் போத்தலை வீசிவிடுகிறோம். இவை உடனடி கழிவுகளாகவே இருக்கின்றன. இதற்கு மாற்றுவழி என்ன?
பிளாஸ்ரிக் உற்பத்தியையும் பாவனையையும் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி முறையை அதிகரித்தல் என்பனவே இப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வாகும். பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் அங்கு பிடிக்கப்படும் மீன்களில் மூன்றில் ஒரு மீனின் வயிற்றில் பிளாஸ்ரிக் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 186 கடற் பறவையினங்கள் பிளாஸ்ரிக் உண்பதால் அழியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் 2050 இல் 99 வீத கடற்பறவைகள் பிளாஸ்ரிக் சாப்பிட்டிருக்கும், கடலில் மீன்களின் எண்ணிக்கையை விட பிளாஸ்ரிக் குப்பைகள்தான் அதிகமிருக்கும். வருடத்திற்கு 10 இலட்சத்திற்கும் அதிகமான கடல் உயிரினங்கள் பிளாஸ்ரிக்கினால் உயிரிழக்கின்றன. கடலில் சேரும் பிளாஸ்ரிக் குப்பைகளில் 80 வீதம் நிலத்திலிருந்தும் 20 வீதம் கடலில் பயணிக்கும் கப்பல்களால் வருகின்றது.
எனவே புள்ளிவிபரங்களை காட்சிப்படுத்துவதால் மாத்திரம் இப்பிரச்சினைக்கு தீர்வினை எட்டமுடியாது. ஆய்வுகளை விடவும் அவற்றை அமுல்படுத்துவதில் அதிகமாக கவனம் கொள்தல் வேண்டும். உலகில் ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு நடுவே இருக்கும் வடபசுபிக் கடலில் அதிக குப்பைகள் கொட்டப்படுகின்றன. கடலில் கொட்டப்படும் பிளாஸ்ரிக் பொருட்கள் கிட்டத்தட்ட நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரங்களைவிட 500 மடங்கு அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1200 கோடி கிலோவிற்கு மேலான குப்பைகள் கடலில் கொட்டப்படுகின்றன.
எனவே நிலம் மற்றும் கடல் என்பவற்றை பிளாஸ்ரிக் எனும் நரகத்திடமிருந்து காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. நிலமும் கடலும் தூய்மையானதாக இருந்தால் மாத்திரமே அதில் வசிக்கும் உயிர்களும் ஆரோக்கியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கடலில் இருக்கின்ற உயிரினங்களுக்கு பிளாஸ்ரிக்கால் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவை பாதுகாப்புக்காக அதிகம் போராட வேண்டிய தேவை இருக்கிறது. கடல் உணவை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கும் அவை ஆபத்தான ஒரு வளமாகவே மாறிவருகின்றன.
எனவே அரசாங்கமும் நிறுவனங்களும் கழிவுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதோடு, அவை கடலுக்குச் செல்வதையும் தடுக்க வேண்டும். பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும். சுற்றாடலை பாதுகாப்பதற்கான அறிவு, மனப்பான்மை மற்றும் திறமை ஆகியவை மேம்படும் போதே சுற்றுச் சூழலையும் கடல் வளத்தையும் எம்மால் சிறந்த முறையில் பாதுகாக்க முடியும்.
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக