கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

கொலையில் முடிந்த கொள்ளை

மதுரி புவனேஸ்வரி 61 வயதுடைய பெண்ணொருவர். அவர் புத்தளம் நீர்பாசனக் காரியாலயத்தில் முகாமையாளரின் செயலாளராக பதவி வகித்த இவர், 55 வயதைக் கடந்தவர் என்றபடியால் சேவையிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார். ஓய்வு பெற்றாலும் தோற்றத்தில் இன்னும் இளமையாகவே தோற்றமளித்தாள். அதனால் ஓய்வுபெற்ற பின்னரும் வீட்டில் இருக்காது புத்தளத்தில் அமைந்துள்ள கைத்தொழில் நிலையமொன்றில் கணக்காய்வாளராக கடமை புரிந்தார்.மதுரியின் பிறந்த இடம் புத்தளமாகும். இவர் ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில் குடும்பப் பிரச்சினையால் தனது கணவனை விட்டு 10 வருடங்களுக்கு முன்னர் சட்டரீதியாக விவாகரத்துப் பெற்று விலகியிருந்தார். நீர்பாசனத் திணைக்களத்தில் வேலை செய்த போது அத்திணைக்களத்திற்கு உரித்தான புத்தளம் நகரத்தில் அமைந்துள்ள பிரத்தியேக வீட்டில் வசித்து வந்த நிலையில், ஓய்வு பெற்ற பின்னர் தனது அக்கா ஒருவருடன் தில்அடிய, ரத்மல்யாய பிரதேசத்தில் வசித்து வந்தார்.
ரத்மல்யாய பிரதேசத்தில் வசிக்கும் எல்லோருடனும் மிகவும் சகஜமாகப் பழகும் மதுரி. ஊர்மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மதுரியின் அக்கா மன்னாரிலுள்ள தனது பிள்ளையைப் பார்க்க அண்மையில் மன்னாருக்குச் சென்றிருந்தார். அதனால் தனியாகவே மதுரி வீட்டில் இருக்க நேர்ந்தது. தனிமை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் அதிகாலையிலேயே எழும்பி தேவையான உணவை சமைத்துக் கொண்டு வேலைக்குச் செல்லும் அதேவேளை மாலை இரவாவதற்கு முன்பு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை விடுமுறை நாளென்பதால் மதுரி வீட்டில் இருந்தார். ஆனாலும் மதுரி வீட்டில் இருந்ததற்கான எந்த அறிகுறியும் பகல் நேரம் வரை அக்கம் பக்கத்தாருக்கு தெரியவரவில்லை. அன்று அயல் வீட்டில் உள்ள கர்ப்பிணித் தாயொருவருக்கு பகல் உணவு சமைத்துக் கொடுக்கும் ஆசையில் தேவையானவற்றை தயார்படுத்திக் கொண்டு வீட்டினுள்ளேயே இருந்துள்ளாள். இந்த வேளையில் வாயில் கதவை யாரோ தட்டும் சத்தம் அவளுக்கு கேட்டது. எனினும் வீட்டில் அவள் தனிமையில் இருந்தமையினால் வாயில் கதவருகே நிற்பது யாரென தெரிந்து கொள்வதற்காக பக்கத்து வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு யாரென வினவினாள். பக்கத்து வீட்டுக்காரர் வந்து பார்க்கும் வேளையில் மேசன் வேலை செய்யும் சிலர் மதுரியின் வாயில்கதவு அருகே நிற்பதைக் கண்டனர். அவர்களிடம் வினவியபோது குடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் தாருங்கள் எனக் கேட்டிருந்தனர். அதற்கிணங்க பக்கத்து வீட்டுக்காரர் மதுரியை அழைத்து அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீரைப் பெற்றுக் கொடுத்திருந்தார். அதற்கடுத்த நாள் (21 ஆம் திகதி) மாலை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இத்தாக்குதல் சம்பவத்தை பொலிஸார் முதன் முதலில் அறிந்து கொண்டனர். உடனடியாக செயற்பட்ட புத்தளம் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பரிசோதகர்கள் அவ்வீட்டை நோக்கிச் சென்றிருந்தனர். வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது வீட்டுக்குள் நிலத்தில் வீழ்ந்து கிடந்த மதுரியின் சடலத்தை கண்டுபிடித்தனர். மேற்கொண்ட விசாரணையில் கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயம் ஒன்று காணப்பட்ட நிலையில் அதிலிருந்து வெளியேறிய இரத்தம் வீடு முழுவதும் பரவிக் காணப்பட்டது.
யாரோ ஒருவரினால் அவரின் கழுத்து வெட்டப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அவளது மார்பகங்கள் வெட்டப்பட்டிருப்பதற்கான அறிகுறியொன்றும் கண்டறியப்பட்டிருந்தது. அது கத்தியொன்றால் கீறப்பட்டிருந்ததும் தெளிவாகத் தெரிந்தது. அதனால் இந்த மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட புத்தளம் வைத்தியசாலை வைத்தியதிகாரி டபிள்யூ.ஏ.எஸ்.ஆர்.விக்கிரமாராச்சி வைத்திய அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.
புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதிவான் காதர் சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு நேரடியாகச் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிய பின்னர் பொலிஸ் அதிகாரிகள் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பாரிய தேடுதல்களை மேற்கொண்டனர் மற்றும் அயலவர்களிடமும் விசாரணையை மேற்கொண்டனர்.
அவ்விசாரணைகளின் போது மதுரியின் வீட்டுக்கு அருகில் பாழடைந்த இடமொன்றிலிருந்து உரிமையாளர்கள் இல்லாத சைக்கிள்கள் இரண்டை பொலிஸார் தேடிக் கண்டுபிடித்திருந்தனர். இதுபற்றி அக்கம்பக்கத்து வீடுகளிலிலுள்ளவர்களை கடுமையாக விசாரணை செய்தும் தகவல்கள் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவ்வாறே சைக்கிள்களின் உரிமையாளர்களையும் கண்டுபிடிக்க முடியமல் போனது. அதுமட்டுமன்றி இந்த இரு சைக்கிள்கள் தொடர்பிலும் நிறைய தகவல்களையும் இங்கு பெற்றுக் கொள்ள முடிந்தது. அதில், அன்று காலையில் இருந்தே மதுரியின் வீட்டைச் சுற்றி மேற்படி இரு சைக்கிள்களிலும் இரு இளைஞர்கள் வட்டமிட்டிருந்ததை பலரும் அவதானித்ததாக பொலிஸாரிடம் முறையிட்டனர். மதுரி எவ்வேளையிலும்
நகைகளை அணிந்திருக்கும் பழக்கத்தை வாடிக்கையாகக் கொண்டாலும் ஏனோ அன்று எந்தவொரு ஆபரணத்தையும் அணிந்திருக்கவில்லையென்று பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர். சிலவேளை அவள் நகைகளை கழற்றி வைத்திருக்கலாம் என பொலிஸார் எண்ணினர். மற்றும் அவள் முச்சக்கர வண்டியொன்றை கொள்வனவு செய்வதற்காக வேண்டி தன்னிடம் இருந்த மோட்டார் சைக்கிளை விற்று அதில் கிடைத்த பணத்தையும் வீட்டிலேயே வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது. பிரதான காரணங்கள் இரண்டு பொலிஸாரின் சந்தேகத்தை மேலும் தூண்டின. ஒன்று உரிமையாளர்கள் இல்லாத சைக்கிள்கள் இரண்டு மற்றையது, எவ்வேளையிலும் ஆபரணங்களை அணிந்திருக்கும் மதுரி அன்று எந்த ஆபரணத்தையும் அணிந்திருக்காமை. அதனால் வெவ்வேறு வழிகளில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்தனர். அவ்வாறே விசாரணைகளையும் மேற்கொண்டனர்.தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு பாலாவி, தில்அடியவில் வசிக்கும் இரு இளைஞர்களை விசாரணையின் பொருட்டு கைது செய்ய நேரிட்டது.
மதுரியின் வீட்டுக்கு அண்மையில் பாழடைந்த இடத்தில் கிடந்த இரு சைக்கிள்களும் தங்களுடையதென அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணை மூலம் மதுரி கொலை செய்யப்பட்டமை தொடர்பான சகல தகவல்களையும் பொலிஸாரால் பெற்றுக் கொள்ளமுடிந்தது. அதற்கமைய மேலும் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர். இத்தகவல்களுக்கமைய கைதாகிய இரு இளைஞர்களும் 19 மற்றும் 21 வயதுக்கிடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் எல்லோரும் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் எனவும் மன்னாரிலிருந்து புத்தளம் பகுதிக்கு இடம்பெயர்ந்த குடும்பங்களின் உறுப்பினர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது. நிரந்தர வருமானம் தேடும் வழிமுறை இல்லாமையால் குறித்த இளைஞர்கள் சின்னச் சின்ன திருட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
இவ்வாறே மதுரியின் வீட்டிலும் திட்டமிட்டு கொள்ளையடிக்கவென தீர்மானமெடுத்தனர். அதற்கிணங்க குறித்த நால்வரும் மேசன் தொழில் செய்பவர்களைப் போல வேடமிட்டு சம்பவம் நடந்த அன்றைய தினம் மதுரியின் வீட்டை சுற்றிவளைத்து நோட்டமிட்டனர். பின் அதனை சாட்டாக வைத்தே வீட்டுக்குள் நுழைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதுவரையிலும் சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் மதுரி. அவ்வேளையில் அவளது கழுத்துப் பகுதியில் கத்தியை வைத்து பயமுறுத்தியது மாத்திரமல்லாமல் நகைகளையும் கொள்ளையடித்திருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவளின் நெஞ்சுப் பகுதியை கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களையும் அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்த சுமார் 80,000 ரூபா பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு சென்றிருந்தனர். குறித்த பெண்ணை கத்தியால் குத்தியிருப்பது அக்குழுவிலுள்ள 19 வயதுடைய இளைஞரொருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி ரத்மல்யாயவில் உள்ள பள்ளிவாசலொன்றின் அருகே காணப்பட்ட கிணற்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. இறந்துபோன பெண் அணிந்திருந்த 2 பவுண் பெறுமதியான மாலையொன்றும் பொலிஸார் குழுவிடமிருந்து மீட்டுள்ளனர். அத்தோடு சில ஆபரணங்களையும் மீட்டுள்ளதோடு அவர்களால் திருடப்பட்ட 80,000 ரூபா பெறுமதியான பணத்தையும் பொலிஸார் மீட்டிருந்தனர். எது எப்படி இருப்பினும் கொலைச் சம்பவத்துடன் கொள்ளையையும் மேற்கொண்டிருந்த குறித்த குழுவை 48 மணித்தியாலங்களுக்குள் கைது செய்வதற்கு திட்டமிட்டிருந்த புத்தளம் பொலிஸாருக்கு யாரோ சிலரால் தகவல் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிக்கப்படுகிறது.
புத்தளம் நிலைய பொலிஸ்மா அதிபர் சம்பிக்க சிறிவர்த்தன, பொலிஸ் அதிகாரி ஜே.ஏ.சந்ரசேன, உப பொலிஸ் அதிகாரி ஜயந்த நாணயக்கார அடங்கிய அதிகாரிகளின் பணிப்பின்பேரில் புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவின் தலைவர், உப பொலிஸ் பரிசோதகர்களான வன்னிநாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் அருண சாந்த, செரயான் புஸ்பநாதன், கொஸ்தாபல்களான தர்மேந்திரன், திலகசிறி மற்றும் ஏக்கநாயக்க ஆகிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக