கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

101 வருடங்கள் பழைமையான ஆலயம்

நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நகரமானது பிரதான நகரங்களில் ஒன்றாக இருக்கின்றது.  கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 1205 மீற்றர் உயரத்தில் இந்நகரம் அமைந்திருப்பதோடு, நுவரெலியாவிலிருந்து தெற்குப் பக்கமாக அமையப்பெற்றுள்ளது.  மஸ்கெலியா நகரை கினிகத்தேனையிலிருந்து நோட்டன் பிரிட்ஜ் வழியாகவும், ஹட்டனிலிருந்து நோர்வூட் வழியாகவும் வந்தடையலாம்.  இவ்வாறு அமையப்பெற்றுள்ள மஸ்கெலியாவுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது மவுசாக்கலை நீர்த்தேக்கம்.  இலங்கையில் அமைந்துள்ள பெரிய நீர்த் தேக்கங்களில் ஒன்றாக 93,000 ஹெக்டேயர் பரப்பளவில் மவுசாக்கலை நீர்த்தேக்கம் அமையப்பெற்றுள்ளது.



50 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்நீர்த் தேக்கமானது இன்றளவிலும் பிரபலமாக இருப்பதற்கு இன்னுமொரு விடயமும் செல்வாக்குச் செலுத்துகின்றது.  நீர் தேக்கத்தில் மறைந்திருக்கும் பழைய மஸ்கெலியாவின் சுவடுகள் ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் வெளித் தெரிவதாகும்.  இச்சுவடுகளில் முக்கியமாக 101 வருடங்கள் பழைமையான ஸ்ரீ சண்முகநாதர் சுவாமி ஆலயம் காணப்படுகின்றது.  1912 ஆம் ஆண்டு கட்டுமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1917 ஆம் ஆண்டு பிங்கல வருடம் வைகாசி மாதம் 26 ஆம் திகதி மகா கும்பாபிஷேகத்தை கண்டது.

1968 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் மவுசாக்கலை நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதால் பழைய மஸ்கெலிய நகரமானது புதியதொரு இடத்துக்கு நகர வேண்டிய தேவை ஏற்பட்டது.  நீர்த்தேக்கத்தில் பழைய மஸ்கெலிய நகரம் மூழ்கினாலும் ஒவ்வொரு வருடமும் இங்கு பழைய நகரத்தின் எஞ்சியுள்ள சுப்பிரமணியர் ஆலயம், பள்ளிவாசல், விகாரை, பிள்ளையார் ஆலயம் என்பவற்றைக் காணக்கூடியதாகவிருக்கும்.  அந்தவகையில் 101 வருடம் பழைமையான ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தின் வரலாறுச் சுவாரஸ்யமானதாகவும் தொண்மை வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது.

14.04.1869 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்குச் சொந்தமாகவிருந்த பிறவுன்லோ காணியை ஜோன் கிரேப் என்ற பிரபு வாங்கி ஆங்கிலேய கம்பனிகளின் நிர்வாகத்துக்கு கொடுத்திருந்த நிலையில் கிரேப் துரை தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்த இத்தோட்டம் நாளடைவில் கிராப்பு தோட்டமாக மாற்றம் பெற்றது.  இந்நிலையில் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களின் பாரம்பரியங்களை பாதுகாக்கும் முயற்சியில் அமரர்  மணியார் தேவராய செட்டியப்பன் பிள்ளை தலைமையில் பெரிய கங்காணிமார் ஒன்று சேர்ந்து 1912 ஆம் ஆண்டு பழைய மஸ்கெலிய நகரில் கிராப்பு தோட்டம் கடையை அண்மித்த பகுதியில் கோயில் கட்டும் பணியை முன்னெடுக்க வேண்டுமென்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்காக மஸ்கெலியாவை அண்மித்த பகுதியில் வாழ்ந்த மக்களிடமிருந்தும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.  கிராப்பு தோட்டத்தில் துரையாக இருந்த ஹீட் என்பவரிடம் நிலத்திற்கான அனுமதி பெறப்பட்டு இரண்டு சதம் வாடகையாகவும் பேசப்பட்டது.  ஆனால் கட்டுமானப் பணிகள் மந்தகதியிலேயே நடைபெற்ற வேளை 1913 ஆம் ஆண்டு சுகவீனமுற்ற ஹீட் துரை 1915 ஆம் ஆண்டு காலமாகியிருந்தார்.  பின்னர் சின்ன கங்குவத்தையில் துரையாகவிருந்த ஈ.ஆர்.கேவ் பிறவுன் கிராப்பு தோட்டத்துக்கு துரையாக வந்து ஆலய நிர்மாணப்பணிகள் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு உதவியிருந்தார்.

இந்நிலையில் கோயிலை கட்டியெழுப்புவதற்காக இந்தியாவின் துறையூரில் ஒக்கரை கிராமத்திலிருந்து ஸ்தபதி, சிற்பாச்சாரியர்கள், தச்சன்மார்கள் போன்றோர் வரவழைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் ஆலய கட்டுமானப்பணிகளுக்கு தேவையான கற்கள் கோயிலுக்கு அருகிலிருந்து உடைத்தெடுக்கப்பட்டு பொலியப்பட்டு யானைகளின் மூலமாக இழுத்துவரப்பட்டு ஆலயத்தின் திருப்பணிகள் முடிக்கப்பட்டன.  இந்நிலையிலேயே 1917 ஆம் ஆண்டு பிங்கல வருடம் ஐப்பசி மாதம் 26 ஆம் திகதி மகாகும்பாபிஷேக நிகழ்வுகள் இடம்பெற்றன.  அத்துடன் சிவனொலிபாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்கள் தங்கி செல்லவென ஆலயத்துக்கு அருகாமையில் இரண்டு அம்பலங்களும் பின்பக்கத்தில் அறையும் மண்டபத்துக்கும் ஆலயத்துக்கும் இடையில் கொட்டகையொன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கு மத்தியில் எழுந்தருளிய இவ்வாலயத்தில் நிகழும் திருவிழாக்காலங்களில் எம் பெருமான் பவனி வருவதற்காக தென்னிந்தியாவைச் சேர்ந்த தஞ்சாவூர் சிற்பிகளான பெரியசாமி அவரது தந்தையார் மற்றும் சிற்பாச்சாரியர்கள் வரவழைக்கப்பட்டு சித்திரதேர் உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.  அதேவேளை ஆலயத்துக்கு வருகைதரும் அடியார்களின் நன்மை கருதியும் தேர் தரித்து நிற்கவும் 1937 ஆம் ஆண்டு ஆலயத்துக்கு முன்புறம் கொங்றீட் தூண்கள் இடப்பட்டு 23 அடி உயரத்தில் கொட்டகையொன்றும் நிர்மாணிக்கப்பட்டது.  மின்சாரம் இல்லாத நிலையில் 1940 ஆம் ஆண்டு அரசாங்கம் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

இந்நிலையிலேயே 1968 ஆம் ஆண்டு அரசாங்கம் மவுசாக்கலை
நீர்த்தேக்கத்தை அமைப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படு த்தியிந்ததுடன்,
 நீரில் மூழ்கவிருந்த ஆலயத்துக்காகவும், நிலத்துக்காகவும் நட்டஈட்டை அரசாங்கம் வழங்கியிருந்தது.  இதன்படி புதிய நகரத்தில் ஆலயம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு 18.03.1969 ஆம் ஆண்டு பழைய ஸ்ரீ சண்முகநாதர் சுவாமி ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் புதிய நகருக்கு கொண்டுவரப்பட்டு 20.03.1969 இல் பாலஸ்தானம் செய்து வைக்கப்பட்டது.  அதேவேளை மவுசாக்கலை நீர்த்தேக்கத்துக்கும் நீர் நிரப்பப்பட்டது.

புதிய நகரத்தில் அமைக்கப்பட்ட ஆலயமானது 05.05.1977 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்தைக் கண்டது.  ஆனாலும் தற்போதும் நீர் வற்றும் போது பழைய ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் மூலவறையில் எழுந்தருளியிருக்கும் முருகனை தரிசிக்கக்கூடியதாகவிருப்பது, சிறப்பம்சமாகும்.  பழைய கோயிலின் கோபுரமானது இன்றும் கம்பீரமாகவே காட்சியளிக்கின்றது.  ஆலயத்தின் பெரும்பாலான பகுதிகள் கருங்கல்லினால் ஆனமையினால் அவை சிதைவடையாது அழகாக காட்சியளிப்பதுடன், கருங்கல்லில் பல சிற்ப வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடியும்

அத்துடன் இவ்வாலயத்துக்கு செல்லும் வழியில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டுள்ள கருங்கல்லினால் ஆன அரைவட்ட வடிவ பாலமானது இன்னுமொரு சிறப்பம்சமாகும்.  எனினும் நீர்வற்றிய காலப்பகுதியில் இங்கு செல்லுவோர் ஆலயத்தின் சுவர்களில் தங்களது பெயர்களையும் முதலெழுத்துக்களையும் எழுதிச் செல்வது கவலையான விடயமாகவிருக்கின்றது.  மஸ்கெலியாப் பகுதியில் அமைந்திருக்கும் புராதன சின்னங்களில் ஒன்றாக இவற்றை நாம் கொண்டிருக்கும் போது அவற்றில் சிதைவுகளை ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.  வருடங்கள் பல கடந்தாலும் என்றும் மக்களின் மனங்களை குளிரச் செய்யும் ஆலயமாகவே இது அமையப் பெற்றுள்ளது.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக