இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக நிலவிய யுத்தம் நிறைவுக்கு வந்திருந்தாலும் ’போதைப் பொருளுக்கெதிரான யுத்தம்’ முற்றுபொறமால் நீடித்து கொண்டிருக்கின்றது. போதைப் பொருட்களின் மூலம் கிடைக்கின்ற அதிகரித்த லாபமும் இலங்கையில் அதற்கிருக்கின்ற கிராக்கியும் பெரும்பாலானோர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாலும் போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாமல் செய்வதற்கு இவை தடையாக அமைந்திருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குள் போதைப் பொருட்களை கொண்டுவரும் சட்டவிரோத வழிவகைகளை போதைப் பொருள் வியாபாரிகள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதற்கு இலங்கையர்களும் உறுதுணையாக இருக்கின்றனர்.
இலங்கையில் சமீபகாலமாக தலைதூக்கியுள்ள பாதாளக்குழுக்களின் பிரதான வியாபாரமாக போதைப் பொருள் மாறியிருக்கின்றது. இந்நிலையை மாற்றியமைக்க வேண்டும். இலங்கையில் இயங்குகின்ற இவ்வாறான சட்டவிரோத குழுக்களின் பின்னணியில் அரசியல் மற்றும் பணம் பலம் வாய்ந்தவர்கள் பலரும் இணைந்திருப்பது பலரும் அறிந்த விடயமாகும். இதனால் அவர்களை நோக்கி சட்ட நடவடிக்கையெடுப்பதென்பதும் இயலாத காரியமாக இருக்கின்றது. எனவே பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மற்றும் கைதுகள், தேடுதலின் மூலமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 2845 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் பெப்ரவரி மாதம் 1237 பேரும் மார்ச் மாதம் 1608 பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். மார்ச் மாதம் கைது செய்யப்பட்டவர்களில் 3.7 வீதமானோர் பாடசாலை கல்வியை பெற்றுக் கொண்டதில்லை. 40.4 வீதமானோர் சாதாரணதரக் கல்வியை பெற்றவர்களாகவும் மூன்று பேர் உயர்தரம், பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்ப கல்வியினை கற்றவர்களாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனவே போதைப்பொருள் பாவனையை படித்தவர் முதல் பாமரர்வரை மேற்கொள்கின்றனர் என்பது தெளிவாகின்றது.
இதனால் சகல சமூகத்தவர்களும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. நாட்டில் 38 வீதமான பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளை பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலை நீடிக்குமானால் எதிர்கால சமுதாயம் போதைப் பொருளுக்கு அடிமையான சமூகமாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. இவ்வாறான நிலைமைக்கு பிரதான காரணம் போதைப் பொருட்களை இலகுவாக யாரும், எங்கும் பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலையே காரணமாகும். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுவதற்கு பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளிலேயே போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் பிரதான காரணமாகவிருக்கின்றது.
குருநாகல் மாவட்டத்தில் 15-19 வயது வரையிலான 60 வீதமான பாடசாலை மாணவர்கள் மது, சிகரட், கஞ்சா, போதைமாத்திரை, போதைகலந்த டொபி என்பவற்றை பயன்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தமது வயதுக்கு மீறியவர்களுடன் நட்பினை ஏற்படுத்திக் கொள்ளுதல், போதைப் பொருள் பாவனையாளர் மற்றும் விற்பனையாளர் என்போருடன் தொடர்பிலிருத்தல், போதைப் பொருட்களை கொள்வனவு செய்யுமளவுக்கு பணத்தினை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பிருத்தல், சக மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனையை தூண்டுதல் போன்ற காரணிகள் பாடசாலை மாணவர்கள் அதிகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதற்கான வாய்ப்பாக அமைகின்றன.
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கைதுகளில் கஞ்சா குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட 11500பேர் 29 வயதுக்குட்பட்டவர்களாகவும் ஹெரோயின் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 2920 பேரும் 29 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருப்பதோடு தற்போது ஹெரோயின் பாவிப்போரின் மொத்த தொகையினரில் 15 வீதமானோர் 19-25 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனவே இளம் சந்ததிகளை இலக்குவைத்து அதிகமாக போதைப்பொருட்களை விற்பனை செய்வதால் எதிர்கால இளைஞர் சமுதாயம் போதைக்கு அடிமையான சமூகமாக மாறிவிடுமோ என்ற அச்ச சூழல் உருவாகியுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக பெருமளவானோர், போதைப் பொருளுக்கு அடிமையாவதற்கு சகநண்பர்களின் தூண்டுதலும் அழுத்தமுமே பிரதான காரணமாக இருக்கின்றது. 50 வீதமானோர் இன்பத்துக்காகவும் பொழுது போக்குக்காகவும் போதைப் பொருளை பயன்படுத்துவதோடு 39 வீதமானோர் ஆர்வத்தின் காரணமாக முதல் தடவையாக போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். 11 வீதமானோர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை காரணம்காட்டி போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர். எனவே மேற்கூரிய காரணங்களை தவிர்க்கும் போது எம்மால் போதையிலிருந்து விலகுவதற்கான சுதந்திரமான வழிகிடைக்கின்றது. ஆனால் இதை பலரும் அலட்சியம் செய்வதே போதைக்கு அடிமையாகும் நிலையை தூண்டுகிறது.
அண்மைய பதிவுகளின் படி போதைப்பொருட்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 8யுவதிகள் மற்றும் 53 இளைஞர்கள் வியாங்கொடையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். தங்களது நண்பர் ஒருவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதைப் பொருள் பாவித்ததாக அந்த இளைஞர், யுவதிகள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். இது சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானதொரு சமிக்ஞையை காட்டி நிற்கின்றது. மனதுக்கு உற்சாகம் தரக்கூடியவை மற்றும் வலி நிவாரணிகள் எனும் போர்வையில் உலகில் இதுவரை 740 வகைப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 14-15 வகையானவை தற்போது இலங்கையின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலை தொடருமானால் ஏனைய மாத்திரைகளும் நாட்டுக்குள் வரக்கூடிய அபாயம் உண்டு. எனவே இதற்கான சட்டம் மற்றும் விதிமுறைகளில் இறுக்கத்தை ஏற்படுத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கையெடுக்க வேண்டும். இவை நாட்டுக்குள் பொதுவாக மாத்திரைகள் என்ற பெயரில் பாவனையில் இருந்தாலும் அவை பல்வேறு நிறம் மற்றும் வடிவங்களில் கிடைக்கின்றன. இவை குளிசை, மாத்திரை, தூள்கள், ஐஸ் போன்ற வெவ்வேறு வகையில் கிடைக்கும் அபாயகரமான ஔடதங்களாக இருக்கின்றன.
எனவே இவ்வாறான நுட்பமான உற்பத்திகளையும் விற்பனையையும் முதலில் தடுக்க வேண்டும். இவை மனித வாழ்வுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடியதாகும். இலங்கைக்கு போதைப் பொருட்கள் பல்வேறு மார்க்கங்களினூடாக உள்நுழைகின்றன. இவற்றை தடைசெய்வதே இலங்கைக்கு பாரிய சவாலானதொரு விடயமாக இருக்கின்றது. வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நுழையும் எந்தவொரு பொருளுக்கும் பாரிய கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் போதைப் பொருட்கள் இலகுவாக உள்நுழைவது பாரிய சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. இடைத்தரகர்களாக செயற்படும் சில இலங்கையர்களின் சட்டவிரோத செயற்பாடுகளே இவற்றுக்கு பிரதான காரணமாக இருக்கின்றன.
20 வயதுக்குட்பட்ட பெண்களின் கர்ப்பம் இளவயது கர்ப்பமாக கருதப்படுகின்ற நிலையில் இவ்வாறான கர்ப்பத்திற்கு மது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் பாவனை காரணமாக இருப்பதாக உறுதியான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. போதைப் பொருள் பாவனை பாலியல் செயற்பாடுகளை தூண்டுவதே இதற்கு பிரதான காரணமாகும். அதேவேளை இலங்கையில் யானைத் தாக்குதலில் உயிரிழப்பவர்களில் 70 சதவீதத்தினர் குடிபோதையில் சென்று பலியாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதென வனஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் சுமித் பிலம்பிட்டிய தெரிவித்துள்ளார். யானை- மனித மோதலின் காரணமாக வருடாந்தம் சராசரியாக 70 மனிதர்களும், 250 யானைகளும் பலியாகின்றன. இதில் உயிரிழக்கும் பெரும்பாலானோர் அதாவது 70 வீதமானோர் குடிபோதையில் இரவு நேரங்களில் யானைகள் உலாவும் இடங்களுக்குச் செல்லும் போதே தாக்குதலுக்கு இலக்காவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மேலும் போதைவஸ்துக்களை ஊசி மூலம் ஏற்றிக் கொள்ளும் போது எயிட்ஸ் நோய் தொற்றும் அபாயம் உள்ளது இதன்போது ஊசிகள் மற்றும் போதைவஸ்து உட்கொள்ளும் அதேகருவிகளை பலரும் பயன்படுத்துவதும் இதற்கான காரணமாகும். இவ்வாறு மனிதவாழ்வில் பல்வேறு தாக்கங்களை செலுத்துவதாக போதைப் பொருட்கள் இருப்பதால் அவற்றை நாம் கட்டாயமாக தவிர்க்க வேண்டும். போதைப் பொருள் பாவனையிலிருந்து விடுபட விரும்புவர்கள் அரச மற்றும் அரசசார்பற்ற புனர் வாழ்வு நிலையங்களில் சிகிச்சை பெறமுடியும். அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் இயங்குகின்ற செத்செவன- தலங்கம (தொ.பே : 0112788090), மித்செவன- காலி(தொ.பே: 0912224443), மெத்செவன -கண்டி (தொ.பே: 0812315504), நவடிகந்த-ஊராபொல (தொ.பே: 0332226984) என்பவற்றில் சிகிச்சைகளை பெறலாம்.
அரசசார்பற்ற நிறுவனங்களின் கீழ் இயங்குகின்ற மிதுரு மிதுரு செவன- பெல்மதுளை ( தொ.பே: 0452274363), நிவஹான- ஹோமாகம ( தொ.பே: 0112830460), அபேக்ஷ- பொரலஸ்கமுவ (தொ.பே: 0742306450), சம்மஜீவ புத்தா ஆச்சிரமய-மினுவாங்கொட ( தொ.பே: 0112299085), சிகிலச - நாவலமுல்ல, நிதாச -குருவிட்ட ( தொ.பே: 0452274363), நிசன்சல - கம்பஹா ( தொ. பே: 00332230275), நிதாச2 - இரத்தினபுரி, ஷாந்தி நிகேதனய- பிலியந்தல போன்ற புனர்வாழ்வு நிலையங்களிலும் சிகிச்சைகளை பெற்று போதைப் பொருள் பழக்கங்களிலிருந்து விடுபட முடியும். இந்நிலையங்களில் உளவள சிகிச்கை, சுகாதாரமான வாழ்வு முறைக்கான கல்வி, ஊக்கமுண்டாக்குதல், ஆற்றல் அபிவிருத்தி போன்ற சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு போதைப் பொருள் தொடர்பான முறைப்பாடுகளை 1984 எனும் இலக்கத்தினூடாக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாடடுச் சபைக்கும் 0114554561 எனும் இலக்கத்தினூடாக ஜனாதிபதியின் போதைப் பொருளுக்கெதிரான செயலணிக்கும் அழைத்து தெரிவிக்கலாம். இலங்கையை போதைபொருளற்ற நாடாக மாற்ற வேண்டிய கடமை அனைத்து இலங்கையருக்கும் உண்டு. இதற்காக அரிப்பணிப்பான செயற்பாடுகளை சகலரும் மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக