கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

18 ஜூன், 2018

பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்தை சீர்குலைக்கும் க்ளைபோசட்

இலங்கைத் தேயிலையானது சர்வதேச ரீதியில் சிறந்ததொரு இடத்தினை தக்கவைத்திருக்கின்றது. அண்மையில் இடம்பெற்ற தேயிலையில் மேற்கொள்ளப்படும் கலப்படங்கள் தொடர்பான விவகாரங்களினால் இலங்கைத் தேயிலையின் தரம் சர்வதேச ரீதியில் பாதிக்கப்படும் என்ற அச்ச நிலை காணப்பட்டிருந்த வேளை, இலங்கை அரசாங்கமானது மீண்டும் க்ளைபோசட் களைகொல்லிக்கான அனுமதியை வழங்கியிருப்பதோடு அவை 32 கொள்கலன்கள் அளவில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் துறைமுகத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். எனவே மீண்டும் நாட்டுக்குள் க்ளைபோசட் களைகொல்லியை கொண்டுவருவதில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கின்றது.


இலங்கையில் அண்மைக்காலமாக பெருந்தோட்ட பயிர்களில் ஏற்பட்டுள்ள உற்பத்தி வீழ்ச்சியின் காரணமாக பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு இசைந்து கொடுத்து அரசாங்கம் தடையை தளர்த்தும் முடிவினை அறிவித்தது. ஆனால் இதனால் மறுபுறம் பாதிக்கப்படப் போகின்ற மனித உயிர்கள் தொடர்பாக அலட்சியமான போக்கினையே இம்முடிவுகள் எடுத்து காட்டுகின்றன. ஏற்கனவே க்ளைபோசட் இரசாயன மருந்திற்கான தடையை நீக்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு அரசாங்கம் அனுமதிவழங்கக் கூடாதென ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியரான சன்ன ஜெயசுமான கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பெருந்தோட்ட மக்களின் எழுச்சி தொடர்பாக பேசுகின்ற மலையகத் தலைமைகள், சுகாதார பாதிப்புகளை எதிர்நோக்கப் போகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் எதிர்கால நிலைமை தொடர்பாக வாய்திறக்காதவர்களாகவே இருக்கின்றன. க்ளைபோசட் பாவனையானது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சுகாதாரத்தில் உடனடி தாக்கத்தினை செலுத்தாவிட்டாலும் காலம் கடந்த நோய்த்தாக்கத்திற்கு ஆளாக்கும் என்பது உண்மை. 2014 ஆம் ஆண்டு க்ளைபோசட் என்ற இரசாயனபதார்த்தம் கலந்துள்ள களைநாசினிகளை உடனடியாக தடைசெய்யுமாறு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். ஆனால் மீண்டும் புதிய அரசாங்கத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக பொறுப் பேற்ற நவீன் திசாநாயக்க மீண்டும் க்ளைபோசட் பாவனையை அமுல்படுத்துவதற்கு தடையை நீக்கவும்
நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

க்ளைபோசட் பாவனையால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பெருந்தோட்ட மக்களை மாத்திரமல்லாது. பெரும்பாலான இலங்கையர்களை தாக்குவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பற்ற முறையில் இந்த களைகொல்லியை விசுறுபவர்கள் முதல் வெறுங்கையால் கொழுந்தை பறிப்பவர்களும் பாதிப்படைவதோடு அவை நீரில் கலப்பதால் மொத்த சமூகமுமே பாதிப்படையப் போகின்றது. இலங்கைக்கான நீர்மூல ஆதாரங்கள் மலையகத்திலிருந்தே ஆரம்பமாகின்றன. மகாவலி கங்கையான திருகோணமலை வரையும் களனி கங்கை மேற்கு பக்கம் வரையும் பரந்து காணப்படும் சூழலில் மலையக பெருந்தோட்டங்களில் க்ளைபோசட் பயன்படுத்துவதால் அது நீரோடு கலந்து இலங்கையின் பல பாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சாதகமான தன்மையை கொண்டுள்ளது. எனவே இவ்வாறான சூழலில் க்ளைபோசட் எனும் உயிர்கொல்லியின் பாவனையினை தடுப்பது சகலருடைய கடமையுமாகின்றது. 2015ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) வெளியிட்ட அறிக்கையில் க்ளைபோசட் களை கொல்லியில் ’மனித புற்றுநோய்க்கான’ சாத்தியமான காரணிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்ளைபோசட் பாவனையால் டி. என். ஏ மற்றும் மனித உயிரணுக்களிலுள்ள நிறமூர்த்தங்கள் பாதிப்படைவதோடு பாலூட்டிகளின் மரபணு, ஹோர்மோன் மற்றும் என்சைம் என்பனவும் பாதிக்கப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இக்களை கொல்லியினால் சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வழியேற்பட்டுள்ளது. அல்சைமர், ஆடிசம், பிறவி குறைபாடு, பல்வேறு வகையான புற்று நோய்கள், கோலிடிஸ், இதய நோய்கள், குடல் அழற்சி நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், பார்கின்சன் நோய் என்பனவும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்தை சவாலுக்கு உட்படுத்தும் விடயமாகவே க்ளைபோசட் பாவனை இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. இக்களை கொல்லியின் பாவனைக்கு ’ உற்பத்தி குறைவு’ என்று காரணம் கூறப்பட்டாலும் பெருந்தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாமல், காணிகள் தனியாருக்கு விற்கப்பட்டும், மாற்று பயிர்கள் பயிரிடப்பட்டும் வருவதாலும் வழமையான உற்பத்தியை விடவும் உற்பத்தி குறைவு ஏற்பட்டு வருகின்றது. இவற்றை விடுத்து களைகொல்லியால் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்பது தொழிலாளர்களுக்கு அடிக்கப்படும் சாவு மணியாகவே இருக்கின்றது.

பெருந்தோட்ட துறையில் பெருந்தோட்டப்பயிர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களிலேயே பயிரிடப்பட்டிருக்கின்றன. ஆனால் மனித உழைப்பில் காணப்படும் பற்றாக்குறை காரணமாக இயற்கையான முறையில் களைகளை அகற்றுவது சாத்தியமற்றதாக காணப்படுவதுடன் அதிக செலவீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பெருந்தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் க்ளைபோசட் களை கொல்லிகளை பாவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மனித உழைப்பினால் களைகளை அகற்றும் வசதியிருந்தும் இலாப நோக்கம் கருதி இம்முயற்சிகளை கைவிட்டுள்ளன. சில பயிர்கள் க்ளைபோசட்டினால் பாதிக்கப்படாத வகையில் மரபணுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றமையும் பயன்பாட்டுக்கு காரணமாக விருக்கின்றது.

க்ளைபோசட் இரசாயன மருத்துக்கு களைகொல்லிச் செயற்பாடு உள்ளது என்பது மொன்சாண்டோ கம்பனியில் வேலைபார்த்த ஜோன் பிரான்ஸ் என்பவரால் 1970 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இது முதலில் மொன்சாண்டோ கம்பனியினால் ரவுண்ட்அப் எனும் பெயரில் விற்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் 130 நாடுகள் இதனை பயன்படுத்த ஆரம்பித்ததுடன் இலங்கையிலும் இதன்பயன்பாடு அதிகரித்திருந்தது. எனினும் 2015 இல் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனத்தின் அறிக்கையினை ஏற்றுக்கொண்டிருந்த 25
நாடுகள் க்ளைபோசட் களைகொல்லிப் பாவனையை தடைசெய்திருந்தன. அந்நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

2015இல் ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, 1969ஆம் ஆண்டு இலக்கம் 01 இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் பயன்பாடு சட்டத்தின் கீழ் க்ளைபோசட் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் 2018இல் அத்தடை நீக்கப்பட்டு மீண்டும் க்ளைபோசட் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனித உடலுக்குள் அன்றாடம் க்ளைபோசட் உட்புகுத்தப்படுவதால் மனிதனின் அன்றாட செயற்பாடுகளில் மாறுதல்கள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதாக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1970 இலிருந்து 3 தசாப்தங்களுக்குப் பின்னர் உலகின் ஒவ்வொரு இடத்திலிருந்தும் க்ளைபோசட்டுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதுவரை மொன்சாண்டோ நிறுவனத்தின் தலைவருக்கு 150,000 யூரோ நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலிலுள்ள மொன்சாண்டோ நிறுவனத்துக்கெதிராக நீதிமன்றத்தால் 250,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இலாபத்தை மட்டுமே இலக்காக கொண்டதாகும். அதனாலேயே உலகின் பல நாடுகளாலும் தடைசெய்யப்பட்டுள்ள க்ளைபோசட், இன்னும் அமெரிக்காவில் தடைசெய்யப்படவில்லை. க்ளைபோசட் பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றது. அமெரிக்காவில் மாத்திரம் 750 க்கும் மேற்பட்ட க்ளைபோசட் உற்பத்திகள் விற்பனையில் இருக்கின்றன.

இந்நிலையில் இலங்கையின் வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சிறுநீரக நோயாளர்களின் அதிகரிப்புக்கு மத்திய மலைநாட்டிலிருந்து உற்பத்தியாகி பெருக்கெடுத்து வரும் மகாவலி ஆற்றில் கலக்கப்பட்டுள்ள ’கட்மியம்’ என்ற இரசாயன பதார்த்தமே பிரதான காரணமென இங்கிலாந்தின் இம்பிரியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞான் விரிவுரையாளரும் ஆய்வாளருமான பேராசிரியர் கமன் கம்மன்பில தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனமும் இலங்கை பல்கலைக்கழக வைத்திய பிரிவும் இணைந்து மேற்கொண்ட கணிப்பீடுகளிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு மகாவலி ஆற்றிலிருந்தே நீர் பெற்றுக் கொள்ளப்படுகின்ற நிலையில் அவற்றில் கட்மியம் கலந்துள்ளதால் விவசாய நடவடிக்கைகளின் போது அவை நிலத்துடனும் கலக்கின்றது. இதனால் இங்கு விளைகின்ற அரிசி, மரக்கறிகளிலும் கட்மியம் கலப்பதற்கான வாய்புகள் காணப்படுகின்றன. இலங்கையில் தற்போது நான்கு லட்சமளவில் சிறுநீரக் நோயாளர்கள் காணப்படுகின்ற நிலையில். இந்நிலைமை நீடிக்குமாயின் இன்னும் 15 வருடங்களில் 10 இலட்சம் மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கந்தப்பளை, பண்டாரவளை, ராகலை போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மரக்கறி மற்றும் மலர் செடிகளின் வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் இரசாயன உரவகைகளில் கட்மியம் அதிகம் அடங்கியுள்ளதால் அவை நீருடன் கலக்கும் போது, அந்நீரை பயன்படுத்தும் சகலரும் பாதிப்படையும் நிலை காணப்படுகின்றது. க்ளைபோசட் பாவனை இந்நிலைமையை இன்னும் துரிதப்படுத்தும் நிலை காணப்படுகின்நது. பெருந்தோட்டங்களில் தேயிலை, இலைகளில் தொழில் புரியும் தொழிலாளர்கள் காலாகாலமாக தொழில் பாதுகாப்பின்றியே தொழில் புரிந்து வருகின்றனர்.

வெற்றுக்கைகளால் கொழுந்துகளை கிள்ளி அவர்களுடைய விரல்களே வெடித்துப் போய் கிடக்கின்றன. இந்நிலையில் க்ளைபோசட் பாவனையால் அது மிக இலகுவாக தொழிலாளர்களுடைய உடலினுள் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதோடு நீருடனும் கலக்கும் சாத்தியம் இருக்கின்றது. பெருந்தோட்டங்களில் இரசாயனங்களை பாதுகாப்பான முறையில் கலந்து விசுறுவதற்கேற்ற நீர்த்தாங்கிகள் காணப்படுவதில்லை. அவை மக்களால் அதிகம் உபயோகப்படுத்தப்படுகின்ற ஆறுகள், ஓடைகள் என்பவற்றிலேயே அச்செயற்பாடுகள்  மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் நேரடியாகவே இரசாயனங்கள் நீரில் கலக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் இவை ஏற்படுத்தப்போகும் நீண்டகால பாதிப்புக்கள் தொடர்பாக தொழிலாளர்களுக்கோ தோட்டங்களில் வாழும் ஏனையோருக்கோ எவ்விதமான விழிப்புணர்வுகளும் இல்லை. இதனால் பாதிப்புக்கள் பல மடங்கு அதிகரிப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. இலங்கையில் தற்போது அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் மாத்திரமே க்ளைபோசட் இறக்குமதிக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன. மக்களுடைய நலன்கள் தொடர்பிலேயே அரசாங்கம் செயற்பட வேண்டும். மாறாக பெருந்தோட்ட கம்பனிகளின் பணத்துக்காக அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது கண்டிக்கத்தக்கது.

க்ளைபோசட் தடைகாரணமாக 2016 இல் தேயிலை, இறப்பர் துறைக்கு 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதுடன் 2017 இல் அது 20 பில்லியன் வரை அதிகரித்ததாக இலங்கை பெருந்தோட்ட சங்கத்தின் தலைவர் சுனில் பொஹோலியத்த தெரிவித்திருக்கிறார். ஆனால் மொரவக்க- நில்மினி தோட்டம் அகின்ஷா தனியார் தேயிலை பயிர்செய்கை தோட்டத்தில் க்ளைபோசட் உட்பட எந்தவொரு இரசாயனங்களும் பயன்படுத்தப்படாமல் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு விருகின்றது. 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தோட்டமானது, 120 ஹெக்டேயர் பரப்பளவில் பரந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலையானது, ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சானம், பழச்சாறு, உக்கிய இலை, சீனி போன்றவற்றை பயன்படுத்தி சேதனபசளை தயாரிக்கப்படுகின்றது. எனவே களைநாசினிகளை பயன்படுத்தினால் மாத்திரமே தேயிலை உற்பத்தியை அதிகரிக்க முடியுமென்பது பொய்யான விடயமாகும். தேயிலையானது இயற்கையான புத்துணர்வு தரும் பானமாக இருந்த நிலையில் தற்போது அது வியாபார பொருளாக மாறியதன் விளைவாகவே இரசாயனங்கள் கலப்பது அறிமுகமானது. எனவே க்ளைபோசட் களைக் கொல்லியின் தன்மை உணர்ந்து அவற்றை நிரந்தரமாக தடைசெய்ய அனைவரும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

க்ளைபோசட் பாவனையின் போது அவை கண்கள் அல்லது சுவாசத்தின் மூலம் மனித உடலை சென்றடைகின்றது. இக்களை கொல்லியை பாவித்தபின் கைகளை கழுவாமல் உண்பதால் அல்லது சுவாசிப்பதால் அவை எம்முள் விழுங்கப்படுகிறது. எனவே இரசாயனம் தெளித்து ஈரமான தாவரங்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோலவே க்ளைபோசட் தெளித்தபின்  ஆவியாகும் போது அவற்றை சுவாசிப்பதும் மனித உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக