வித்தியாசமான குணாம்சங்களைக் கொண்ட மிதுரு மிதுரோ என்ற நடன நிலையமொன்றில் எமக்கொரு இளைஞர் அறிமுகமானார். அவர் ஒரு பாடகர் எமது நாட்டில் பிரபல பாடகரொருவரால் நடத்திச் செல்லப்படுகின்ற இசைக் குழுவொன்றில் பாடகராக கடமையாற்றுகின்றார். இருப்பினும் தற்போது அவர் மதுப் பிரியர் மதுபோதையால் வாழ்க்கையை தொலைத்த கதையை அவர் விபரிக்கின்றார். அவர் உண்மையை வெளிப்படையாகக் கூறக்கூடியவர். எனது ஊர் பிலியந்தலை நான் பிலியந்தலை பாடசாலையொன்றில் எனது சிறுவயது கல்வியைக் கற்றேன். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பின்னர் கொழும்பில் பிரசித்தமான பாடசாலையில் சேர்ந்து கல்வி கற்றேன். எனக்குச் சகோதரர் மட்டுமே இருக்கின்றார். தந்தை கொரியாவில் வேலை பார்க்கிறார். தாய் வீட்டிலேயே இருக்கிறார். அவருக்கு தொழில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காரணம் தந்தை கொரியாவில் நல்ல பிரபலமான கம்பனியொன்றில் உயர் பதவியொன்றை வகிக்கிறார். ஆதலால் எங்களுக்கு வாழ்க்கையை அழகாகக் கொண்டு செல்ல முடிந்தது.
சிறு வயதிலிருந்தே நான் நன்றாகக் கல்வி கற்பேன். புலமைப் பரிசில் பரீட்சையிலும் கூட சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொண்டேன். இருப்பினும் கொழும்பு பாடசாலையில் சேர்ந்த ஒரு வருடத்துக்குப் பிறகு கெட்ட நடத்தைகளுக்கு ஆளாகத் தொடங்கினேன். சக நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட், போதைத் தூள் பயன்படுத்த ஆரம்பித்தேன். பணம் இருந்தால் பாடசாலைக்குள்ளேயே வேண்டிய போதைப் பொருளை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி இருந்தது. காவலுக்கு நிற்பவரிடம் சொன்னால் உடனே கொண்டுவந்து தருவார். கொழும்பிலுள்ள சேரிப்புற மாணவர்களது பைகளில் மாத்திரை, கஞ்சா என்பன தவறாமல் இருக்கும். அவர்கள் எனக்கும் தரும்போது நானும் வேண்டாமென்று சொல்லாது ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டேன். கஞ்சா, போதை மாத்திரை, சாராயம் குடித்தேன். இருப்பினும் அவற்றுக்கு அடிமையாகவில்லை. எவ்வகை தவறு செய்தாலும் கல்வியில் நாட்டத்தை குறைக்கவில்லை. சாதாரண தரத்தில் சித்தியடைந்து நல்ல பெறுபேற்றைப் பெற்றுக் கொண்டேன். வணிகப் பிரிவில் உயர் தரத்தை தெரிவு செய்து கல்வி கற்றேன். இருப்பினும் உயர் தரத்தில் சித்தியடைய முடியவில்லை. அதுவரையிலும் நான் முழுமையாக போதைக்கு அடிமையாகி இருந்தேன்.
அதனாலேயே உயர் தரத்தில் சித்தியடைய முடியாமல் போனது. வீட்டில் மேலதிக வகுப்புக்காகச் செல்வதாகக் கூறிச் சென்றாலும் மாதத்தில் ஒரு நாள் கூடச் செல்லவில்லை. சக நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா, சிகரெட், சாராயம் நன்றாக அருந்தினேன். படிப்பதில் கெட்டிக் காரன் என்றபடியால் எவ்வளவு கேட்டாலும் அம்மா எனக்குப் பணம் தருவார். அப்பாவும் எங்களருகில் இல்லை என்ற படியால் மேலதிக சுதந்திரத்துக்கும் குறைவில்லாமல் போனது. அந்த சுதந்திரத்தோடு அம்மா தந்த காசு எல்லாவற்றையும் சந்தேஷத்துக்காகவே செலவழித்தேன். பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் எனது சந்தோஷத்துக்கு குறைவில்லை.
இரண்டாம் தரமாக பரீட்சை எழுதவில்லை. இரண்டு கணினி பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தேன். அதுவும் திருப்தியாக முடியவில்லை. அதன்பிறகு இசைத்துறையில் எனக்கு ஆர்வம் மேலிட்டது. சிறு வயதிலிருந்தே இசைத்துறையானது எனது உடம்பில் ஒட்டியிருந்தது. பாடசாலையிலும் நல்லவொரு பாடகன் நான். பாடசாலை நண்பர்கள் ஒன்று சேர்ந்த எந்தவொரு விழாவிலும் எனக்கு அழைப்பு உண்டு. அது எனது குரலில் பாடல் கேட்பதற்காகவே. இருப்பினும் அத்துறையில் வேலையொன்றை தேடிக் கொண்ட பின்பே நான் மேற்படி விழாக்களுக்குச் சென்று பாடுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.
பாடல் எழுதினேன், இசை வழங்கினேன், ராப் இசை பாடல் பாடினேன், சிங்கள ராப் இசை பாடல் நானே எழுதி இசையமைத்து பாடினேன். சிங்கள ராப் இசை பாடல் பாடுவது ஆங்கில ராப் இசை பாடல் பாடுவதிலும் கடினமானவொன்று. ஆனால் எனக்கு அவை கஷ்டமானதாக தென்படவில்லை. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனக்கு உறுதுணையாக நின்ற நண்பன் போதைப் பொருளே. சங்கீதத்தினாலேயே நான் போதைப் பொருளுக்கு அடிமையாகினேன் என்றே தற்போது நினைக்கத் தோன்றுகிறது.
முதலாவதாக நான் அடிமையானது சிகரெட்டுக்கே. அதன் பிறகு கஞ்சாவுக்கு பாடல் எழுத, இசை போட கஞ்சா எனக்கு ஔடத பானமானது. அதனால் தொடர்ந்து கஞ்சா பாவனையில் ஈடுபட்டேன். கஞ்சாவுக்கு உடம்பு இசைவாக்கம் அடைவது அவ்வளவு போதாததால் திருப்தியில்லா தன்மை காணப்பட்டது. அதனால் என் மனம் வேறொன்றை நாடிச் செல்ல எத்தனித்தது. பின் தேனோடு கஞ்சா கலந்து அருந்தத் தொடங்கினேன். கொஞ்ச நாள் செல்லச் செல்ல அதுவும் போதாமல் காணப்பட்டது. அப்பொழுதும் கூட எங்கள் குழுவில் ஹெரோயின் பாவிப்பவர்கள் இருந்தனர். போதைத் தூள் அருந்த எனக்கு பயமாக இருந்தது. ஒரு நாள் நாங்கள் எல்லோரும் சேர்ந்திருக்கும் வேளை போதைத் தூளை நுகர எனக்கும் தோன்றியது. அதைப் பயன்படுத்தியதாக கருதி கொஞ்சம் தூளை பாவனைக்கு எடுத்துக் கொண்டேன். அப்போது நான், நாட்டின் பிரசித்தி பெற்ற பாடகரொருவரிடம் வேலை செய்தேன். எனக்கு கை நிறைய சம்பளம் கிடைத்தது. நாங்களும் அதற்கேற்ப வேலை செய்கின்றோம். நாங்கள் பாடிய பாட்டு நன்றாக பிரபலமானது. நான் எழுதி ராப் செய்த பாட்டும் நன்றாகவே பிரபலமானது. அந்தப் பாட்டை எழுதியது, பாடியது எல்லாமே நல்ல போதையில் இருக்கும் போதே.சாராயம், கஞ்சாவில் தொடங்கி ஹெரோயின், கொக்கெய்ன், அயிஸ், அப்பிள் போதை மாத்திரை என சமூகத்தில் பாவனையிலுள்ள அனைத்து விதமான போதைப் பொருளையும் அருந்தினேன். ராப் இசை பாடல் பயிற்சி எடுக்கும் போதெல்லாம் கொக்கெய்ன் இன்றி முடியாமல் போனது.
எனது வாழ்க்கை 6 வருடங்களாகவே போதைக்கு அடிமையாகிப் போனது. நிதானமின்றி செயல்பட்டேன் வீட்டுக்குச் சென்றாலும் எனது அறையிலேயே முடங்கிக் கிடப்பேன். வீட்டில் அம்மா, தம்பியுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. அம்மாவின் அன்பு அரவணைப்பு எனக்கு கிடைக்காமலேயே போனது. சந்தோஷமாக இருப்பதற்கான ஒரேவழி போதைப் பொருளே என்றே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். வாழும் உலகத்தை முற்றாக மறந்து வேறொரு உலகத்திலேயே நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். பணம், யுவதிகள், போதை என்றே எனது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. போதைப் பொருள் பாவனையற்றவர்களிடம் நான் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. பெண்ணொருவரிடம் நான் பழகினாலும் அவளும் போதைக்கு அடிமையானவளாகவே இருப்பாள்.
எனது தோற்றத்துக்கும் பிரபலத்துக்கும் நிறைய பெண்கள் என்னோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். சில பெண்கள் எனது பாடலைக் கேட்டு என்னோடு தொடர்பைப் பேணுவர். கண்ணுக்கு அழகாகவும் மனதுக்கு பிடித்ததாலும் எங்களோடு இருந்த பெண்களும் என்மீது அளப்பரிய அன்பை வைத்திருந்தனர்.
ஆனாலும், நெருங்கிப் பழகிய போது போதைக்கு அடிமையான பெண்ணொருவருடனேயே. என்னோடு நெருங்கிப் பழக வேண்டுமென்பதற்காகவே சில பெண்கள் விருப்பமின்றி மதுவுக்கு அடிமையாகத் தொடங்கினர். திருமணம் முடித்ததைப் போன்று வேறாக அறையொன்றை வாடகைக்கு பெற்று பெண்களோடு உல்லாசமாக இருந்தேன். நாங்கள் ஜோடி ஜோடியாக சேர்ந்து போதை உட்கொள்வதோடு, எங்களோடிருக்கும் யுவதிகளைகளையும் மாற்றிக் கொள்வோம். என்ன செய்கின்றோம் என்று எங்களுக்கே தெரியாது. இலங்கையில் இருந்தாலும் அமெரிக்கா வாழ்க்கை முறைப்படியே வாழ்ந்தோம். ஆங்கிலப் பாடல்களைக் கேட்டு அவர்கள் செய்வதையே நானும் செய்தேன். போதைப் பொருளை பாவித்துவிட்டு பெண்கள் சூழ நிறைய பணத்துடன் வாழவே நானும் ஆசைப்பட்டேன். இரவு நேரத்தில் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வேன். சில வேளைகளில் கடற்கரையோர ஹோட்டல் விழாக்களுக்குச் செல்வேன். சந்தோஷமாக பொழுதைக் கழித்தேன். இரவு களியாட்ட நிகழ்வுகளின் போது நாக்குக்கு அடியால் வைத்திருக்கும் முத்தர எனும் போதைப் பொருளை வைத்துக் கொள்வேன். சில நேரத்துக்கு இதை வைத்துக் கொண்டால் என்ன செய்கின்றோம் என்றே தெரியாமல் போய்விடும். சிலவேளை மிருகத்தைப் போல கூட நடந்து கொள்ளத் தோன்றும். சிலர் தண்ணீரில் நீச்சலடிப்பதாக எண்ணி மண்ணில் நீச்சலடிப்பார்கள். அந்தளவுக்கு போதை தரக்கூடியதொன்று தான் இந்த முத்தர என்னும் போதைவஸ்து. இதைப் பாவித்தால் தொடர்ந்து 10-12 மணித்தியாலங்கள் நடனமாடி உல்லாசமாக இருக்க முடியும். எந்தவித கஷ்டமும் தெரியாது. எங்களுக்கு எப்படியெல்லாம் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் நடந்து கொள்வோம். எங்களைப் பார்ப்பவர்களுக்கு அது அருவருப்பாகத்தான் தோன்றும் ஆனால் அது எங்களுக்கு விளங்காது. அந்தளவுக்கு போதையில் மிதந்து காணப்படுவோம்.
அன்று எனது 18 ஆவது பிறந்த தின நிகழ்வை எங்களது வீட்டில் கொண்டாடினோம். அவ்விழாவில் எனது நெருங்கிய 7 நண்பர்கள் மாத்திரமே பங்கு கொண்டார்கள். அன்றும் முழு போதையில் தான் இருந்தோம். ஆடிப், பாடி,நடனமாடி பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்தோம். அவ்வேளை திடீரென பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்தனர். வயது குறைந்த சிலர் குடித்து கும்மாளம் அடிப்பதாக அயல் வீட்டுக்காரர் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளார். அவ்வேளையிலும் எங்களிடம் கஞ்சா, ஹெரோயின், பாணி ஆகிய மூன்றும் இருந்தன. எங்களுடன் இருந்த நண்பியொருவருக்கு 16 வயது ஏனைய இருவருக்கும் 17 வயது. என்னோடு சேர்த்து ஏனைய 4 பேருக்கும் வயது 18. எங்கள் எல்லோரையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர். அன்றுதான் நான் போதை வஸ்து பாவிப்பதை வீட்டார் தெரிந்து கொண்டனர். அம்மா அன்றே அப்பாவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இது தொடர்பாக தெரிவித்திருந்தார். நான் போதைக்கு அடிமையாகி இருப்பேன் என தந்தை ஒருபோதும் நினைக்கவில்லை.
நான் பாடசாலை செல்லும் வேளையில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். பாடசாலையில் சிறந்த மாணவத் தலைவனும் நானே. அறநெறிப் பாடசாலையில் கூட மாணவத் தலைவனாக செயற்பட்டேன். இப்படி ஆகுவேனென்று அவர் நினைக்கவில்லையாம். அன்றிலிருந்து என்னுடன் கதைக்க மாட்டார். இலங்கைக்கும் வர முடியாது என்று சொல்லிவிட்டாராம். இருப்பினும் அம்மா என்னைக் கைவிடவில்லை. வைத்தியர்களிடம் அழைத்துச் சென்றது மட்டுமன்றி தனியார் வைத்தியசாலையில் நிறுத்தி எனக்கு சிகிச்சை வழங்கினார். சீர்திருத்த நிலையத்தில் கூட நிறுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டேன். பின் வீடு வந்து 2,3 கிழமைகள் பின்பு மீண்டும் அப்பழக்கத்துக்கு அடிமையானேன். இப்போது எல்லாவற்றையும் நிறுத்திவிட்டதாக அம்மாவை ஏமாற்றிவிட்டு போதை மாத்திரைகளை உட் கொண்டேன். இறுதியில் ஏமாந்தது நானே. உழைத்து சம்பாதித்த எல்லாப் பணத்தையும் இவற்றுக்கு செலவழித்தே அழித்துவிட்டேன். குறையும் வேளையில் அம்மாவிடமும் பெற்றுக் கொண்டேன். அதுவும் போதாத வேளையில் நண்பர்களிடம் பெற்றுக் கொண்டேன். அம்மாவின் பணத்தை திருடத் தொடங்கினேன். இறுதியில் நண்பர்களும் என்னைக் கைவிட்டு விட்டனர். கட்டழகாக இருந்த என்னை கண்ணாடியில் பார்க்கும் போது எனக்கே அருவருப்பாக இருந்தது.
பார்ப்பவர்கள் எல்லாம் ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்கத் தொடங்கினர். பின்னரே எனக்கு தெரியவந்தது எனது சந்தோஷம், நிம்மதி, திறமை என்பவற்றை நானே தொலைத்துவிட்டேன் என்று நான் நினைப்பதை அந்த நொடியே மறந்து போனேன். எந்தவொரு புதிய தகவலும் மூளைக்கு வரவில்லை. சுவாச நாளத்தில் ஏதோ அடைத்தது மாதிரி தோன்றியது. அதன் பின்னரே இவை எல்லாவற்றுக்கும் காரணம் அதிக போதை பழக்கமே என்பது தெரிய வந்தது. தொடர்ந்து எடுத்தால் பைத்தியகாரனாகி விடுவேன் என்றும் தெரியவந்தது. பின்னர் என்னை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்றுமாறு அம்மாவிடம் கெஞ்சினேன். அதன்பிறகு தான் அம்மா என்னை விகாரையொன்றுக்கு அழைத்துச் சென்றார். இப்போது நான் இந்த விகாரைக்கு வந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. இங்கு எந்தவொரு மருந்தும் கிடையாது. குடிக்காத ஒரு சில நாட்களுக்கு உடம்பில் ஏதோவித வலி தெரிந்தது. அது வித்தியாசமான வேதனையாகும். அந்த வலி, அனைத்தையும் முழுமையாக இல்லாது செய்தது தண்ணீர் மூலமே. ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவைக்கு மேல் குளிப்பேன். 1 1/2 மாதமாக சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டேன். நடக்க முடியாது சிரமப்பட்டேன். தவழ்ந்து தவழ்ந்தே நடந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வேதனை குறையத் தொடங்கியது. மனதுக்கு ஒருவித தெம்பு, ஆறுதல் தோன்றியது. தொலைந்து போன எனது திறமைகள் மேலெழத் தொடங்கின இந்த மாற்றத்தை நான் விரும்பினேன். போதையிலிருந்து விடுபட்டு நாட்டுக்கு நல்ல மனிதனாக வாழவே எனக்கு தேவைப்பட்டது.
போதை பாதையில் வாழ்க்கையை கொண்டுசெல்வது என்பது மனதும் உடலும் ஒரேயடியாக பாதிக்கும் செயலாகும். அவ்வாறே அனைத்துவிதமான செல்வங்களையும் இல்லாமல் செய்யக்கூடியது. மற்றும் அதிலிருந்து விடுபடுதென்பது இயலாத காரியமாகிவிடும். எனவே பெற்றோரும் தனது பிள்ளைகளுக்கு பணத்தைக் கொடுக்கும் போது அவர்கள் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும். பிள்ளைகள் வீணாவதற்கு பெற்றோரே காரணமாக இருக்கக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக