கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

அதிகரிக்கும் அங்கவீனர்கள்

இலங்கையில் வலுவிழந்தோருக்கான முக்கியத்துவம் மனிதாபிமான ரீதியில் வளர்ச்சியடைந்து வருகின்றது. ஆனாலும் கூட இவர்கள் சாதாரண மனிதர்களை விடவும் பல மடங்கு பின்தங்கிய நிலையிலேயே இன்றும் இருக்கின்றார்கள். அவர்களில் கை, கால்களை இழந்த அங்கவீனமானவர்கள் வாழ்க்கையில் சகல சந்தோஷங்களையும் இழந்தவர்களாகவே இருக்கின்றனர். இலங்கையில் 30 வருட யுத்தத்தினால் அங்கவீனமானோரை விடவும் வாகன விபத்துகளினால் அங்கவீனமானோரின் தொகையானது அதிகரித்து வருகின்றது. ஒரு நாளில் பல்வேறு வயது மட்டத்தினருள் ஒன்பது பேர் வரை மரணிக்கின்றனர்.
இலங்கையில் வருடாந்தம் வாகன விபத்துகளில் 2,500 பேர் வரை மரணிக்கின்றனர். 10,000 பேர் வரையில் அங்கவீனமாகின்றனர். யுத்த காலத்தின் போது வருடாந்தம் 4,000 பேரே அங்கவீனமாகியிருந்தனர். இவ்வாறு இலங்கையில் அங்கவீனமானோரின் தொகையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இதில் இயற்கையாக பிறப்பிலேயே வலது குறைந்தோரும் உருவாவதற்கான சாத்தியங்கள் உலகளவில் இருக்கின்றன.
2014 ஆம் ஆண்டின் சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, நாட்டின் சனத்தொகையில் 10 வீதமானோர் வலது குறைந்தவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மைய காலங்களில் வலது குறைந்தோர் தொடர்பான மதிப்பீடுகள் போதியளவாக மேற்கொள்ளப்பட்டிருக்காமையினால் சரியான புள்ளிவிபரங்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. நிலைமை இவ்வாறிருக்கையில், இலங்கையில் இன்று வலது குறைந்தோர் முறையாக கவனிக்கப்படுகின்றார்களா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சாதாரணமாக பொதுப் போக்குவரத்துகளில் வலது குறைந்தோருக்கென தனியாக ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அங்கவீனமானோர் பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்வதென்பது இயலாத காரியமாகவே இருக்கின்றது. பொதுவாக சக்கர நாற்காலிகளில் பயணிப்பவர்கள் எவ்வாறு பஸ்களிலும் புகையிரதங்களிலும் பயணிக்க முடியும்? அவர்களுக்கென்று பஸ்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அந்த ஆசனங்கள் அவர்கள் அமர்வதற்கு ஏற்றவகையில் அமைக்கப்படவில்லையென்பதோடு, பஸ் கதவுகளினூடாக அவர்களுக்கு உட்செல்லவும் முடியாது.
சனநெரிசல் கொண்ட இலங்கையின் பொதுப் போக்குவரத்தில் இவர்கள் பயணம் செய்வதென்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாது. இலங்கையில் 2030 ஆம் ஆண்டு மொத்த சனத்தொகையில் 22 வீதமானோர் அல்லது ஐந்தில் ஒருவர், 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதால், வலது குறைந்தோரின் தொகையானது அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றிலும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுவரும் மோசமான வாகன விபத்துகளினால் உயிரிழப்புகளையும் தாண்டி அங்கவீனமாவோரின் தொகையானது வேகமாக அதிகரித்து வருகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, 12.5 இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் வீதி விபத்துகளினால் பலியாவதாகவும் இதன்படி நாளொன்றுக்கு 3,472 பேர் பலியாகின்றனர். இவர்களில் அதிகமானோர் 19-29 வயதுக்கிடைப்பட்டவர்கள். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே இவ்வாறான விபத்துகள் அதிகம் பதிவாகின்றன. போக்குவரத்துக்குரிய அவசியமான உட்கட்டுமானங்கள், அபிவிருத்தி, கொள்கை மாற்றங்கள் மற்றும் வேகக் கட்டுப்பாட்டு முறைகள் என்பன சிறப்பாக இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும்.
இந்நிலையில் இலங்கையில் வருடாந்தம் 60 ஆயிரம் விபத்துகள் பதிவாகின்றன. இதில் பலியாவோரின் தொகையை விடவும் படுகாயங்களுக்குள்ளாவோரின் தொகை அதிகமாகக் காணப்படுகிறது. இதில் அங்கவீனமானோர் உருவாகும் நிலையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இலங்கையில் தற்போது யுத்த சூழல் காணப்படாமையினால், இயற்கையான பிறப்பின் மூலம், விபத்துகளின் மூலமுமே அங்கவீனமானோர் உருவாகும் சூழல் காணப்படுகின்றது. இந்த நிலைமை அவர்களுக்கான தேவையை கடுமையாக அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக விபத்துகளின் மூலம் அங்கவீனமாவோர் இள வயதினராக அதிகம் இருப்பதால் அவர்களுக்கான செலவுகளும் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றது. இதுவே அவர்களுக்கான சவால்களாகவும் மாற்றம் பெற்றுள்ளன.
இலங்கையில் கடந்த 10 வருடங்களில் ஏற்பட்ட விபத்துகளின் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர். இவற்றில் பலர் நிரந்தர அங்கவீனர்களாகவும் மாறியிருக்கின்றனர். இவ்வாறு வலுவிழந்தோர் அல்லது வலது குறைந்தோர் தொகை அதிகரிப்பானது , தங்கியிருப்போரின் தொகையை அதிகரிப்பதுடன் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பாரபட்சமின்றி பெற்றுக் கொடுப்பதிலும் சமூகம் பின்னிற்கின்றது.
இவ்வாறான நிலையிலேயே சாதாரணமாக பொதுப் போக்குவரத்துகளிலேயே இவர்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை. வளர்முக நாடுகள் பெரும்பாலானவற்றில் பஸ், புகையிரதம் என்பனவற்றில் சக்கர நாற்காலிகளில் பயணிப்போர் ஏறுவதற்கான பிரத்தியேக கட்டமைப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. அதற்கான முயற்சிகளும் இதுநாள் வரையில் மேற்கொள்ளப்படவில்லை. அங்கவீனமானோர் இன்னொருவரின் துணையில்லாமல் இலங்கையில் பயணிக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இதனால் இவர்கள் தமது போக்குவரத்திற்காக பெருந்தொகையினை செலவழிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஆனால் அவர்களுக்கான வருமானத்தைவிடவும் அது அதிகமாகும்.
எனவே அவர்களுக்கான சேவைகள் எப்போது இலகுவான முறையில் துரிதப்படுத்தப்படுமென்பது தெரியவில்லை. இது அவர்களுடைய போக்குவரத்தில் மட்டுமல்ல, வங்கிச் சேவைகள், பொருட்கள் கொள்வனவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என சகல வழிகளிலும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இதனால் அங்கவீனமானோர் தமது குறைகளைப் பயன்படுத்தி யாசகம் பெறும் நிலையும் இலங்கையில் அதிகரித்திருக்கின்றது.
எனவே சமூகத்தில் ஏனையோர் பெறுகின்ற உரிமைகளை இவர்களும் பெற்றுக் கொள்கின்ற சமமான வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இலங்கை அரச தொழில் வாய்ப்புகளில் 3 சதவீதமான வாய்ப்புகள் வலது குறைந்தோருக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கட்டாய நிபந்தனை காணப்படுகின்றது. இருந்தாலும் முறையாக அவை அமுல்படுத்தப்படுவதில்லை. இந்த ஒதுக்கீடுகளை நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. ஆனால் அரச நிறுவனங்கள் அதனை அமுல்படுத்துவதில்லை. இவ்வாறான நிலையில் பொதுமக்கள் எப்படி இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலை தோன்றியுள்ளது.
நாட்டில் தற்போது 922,000 பெண்கள் வலது குறைந்தோராக காணப்படுவதாக வலுவிழந்தோர் புனர்வாழ்வுக்கான இலங்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இலங்கை சனத்தொகையில் 5 வீதமாகும். பெண்கள் ஆண்களை விடவும் அதிகமான சவால்களை எதிர்கொள்கின்றனர். சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழாக இயங்குகின்ற வலது குறைந்தோருக்கான செயலகமானது, வலது குறைந்தோரின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதாகும். ஆனால் கடந்த 20 வருடங்களில் இந்நிறுவனத்தின் மூலம் வலுவிழந்த பெண்களுக்கு எவ்விதமான நலத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
அதேவேளை வலுவிழந்த பெண்களில் 71 வீதமானோர் தொழிலற்றவர்களாகவே இருக்கின்றனர். இவ்வாறான நிலையில், இப் பெண்கள் எப்படி அவர்களது குடும்பங்களில் செல்வாக்குள்ளவர்களாக வாழ முடியும்? அதேபோல் இலங்கையில் 700,000 பேர் பார்வை குறைபாடுள்ளவர்களாகவும் 150,000 பேர் நிரந்தரமாக பார்வையற்றவர்களாகவும் இருப்பதாக இலங்கையின் விழிப்புலனற்றோர் சம்மேளன செயலாளர் சமீர புபுதுகுமார தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் வலது குறைந்தவர்களுக்கான கல்வி அடைவு மட்டமும் மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே இருக்கின்றது. இருப்பினும் வலது குறைந்த சகலரும் பிரத்தியேகமான பாடசாலைக்கே செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. 2012 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, 40 வீதமான வலது குறைந்த சிறுவர்கள் இதுவரையும் எந்தப் பாடசாலைக்கும் உள்வாங்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையின் அரசாங்க கொள்கைகளில் 1988 பொது நிர்வாக சுற்றறிக்கையில் அரச வேலைவாய்ப்புகளில் 3 வீதமான ஒதுக்கீடு, 1992 நம்பிக்கை நிதியச் சட்டத்தின்படி விழிப்புலனற்றோருக்கான புனர்வாழ்வு மற்றும் கல்வியை உறுதிப்படுத்தல், 1996 வலுவிழந்த நபருக்கான உரிமைகள் சட்ட இலக்கம் 28 இன்படி வலுவிழந்தோருக்கான தேசிய சபை மற்றும் தேசிய செயலகம் உருவாக்கப்பட்டது. 1996 சமூக பாதுகாப்பு சபையின் சட்ட இல. 17 படி, வலது குறைந்தோரின் விபத்து அல்லது வயது மூப்புக்கான காப்புறுதி தொடர்பில் குறிப்பிடப்படுகிறது. 1996 தேசிய சுகாதார கொள்கையின் மூலம் தரமான வாழ்க்கை, மருத்துவம் தொடர்பில் விளக்கப்பட்டுள்ளதுடன், 1997 பொதுக் கல்வி அறிமுகமும் 1999 ரணவிருசேவா சட்டத்தின்படி இராணுவத்தினருக்கான புனர்வாழ்வும் 2003 ஆம் ஆண்டு தேசிய வலது குறைந்தோர் கொள்கையில் சகலருக்கும் சமமான வாய்ப்பு தொடர்பில் பேசப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இவற்றின் செயற்பாடுகளில் மந்த நிலைமை காணப்படுவதால் வலது குறைந்தோர் பெறுமதியான சேவைகளை பெற்றுக் கொள்வதில் இடர்பாடுகள் ஏற்படுகின்றன.
இலங்கையில் 2012 ஆம் ஆண்டின் புள்ளிவிபர கணிப்பீடுகளின்படி 1.6 மில்லியன் வலது குறைந்தோர் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த சனத்தொகையில் 8 வீதமாகும். அத்தோடு 2007 ஆம் ஆண்டு இலங்கையானது ஐ.நா. சபையின் ஊனமுற்றோர் உரிமைகள் சாசனத்திலும் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையில் 8.7 வீதமான ஐந்து வயதுக்கும் மேற்பட்டோர் ஏதோவொரு குறைபாடுகளுடன் வாழ்ந்து வருவதுடன் இவர்களில் 300,000 பேர் 18 -60 வயதுக்கிடைப்பட்டவர்களாவர். அத்தோடு 2012 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி 57 வீதமான ஆண்களும் 43 வீதமான பெண்களும் வலது குறைந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.
2040 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வலது குறைந்தோரின் தொகையானது 24.2 வீதமாக அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வீதிவிபத்துகளே இவற்றுக்கு பிரதான காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், 2017 இல் வலுவிழந்தோரின் தொகை 10 வீதமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வலது குறைந்தோருக்கான சலுகைகள் அதிகரிக்கப்படும் அதேவேளை, வலது குறைந்தோரின் தொகையானது உயர்வடையும் வழிகளை இனங்கண்டு சீர்செய்ய வேண்டும். இலங்கையில் வலது குறைந்தோரை சாதாரண மனிதர்களைப் போலவே பராமரிக்க வேண்டுமென்ற மனிதாபிமானம் காணப்படுகின்றது.
அதனை ஒரு சிலர் யாசகம் பெறுவதாலும் ஏனைய வழிகளின் மூலமும் களங்கப்படுத்துகின்றனர். அதுபோலவே முறையற்ற வகையிலும் போதையுடனும் வாகனத்தை செலுத்தி விபத்துகளை ஏற்படுத்தி சுயமாகவே தம்மை அங்கவீனப்படுத்திக் கொள்பவர்களும் இருக்கின்றனர். இவை எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும். வலது குறைந்தோருக்கான கௌரவம் இத்தகைய செயல்களால் களங்கப்படக்கூடாது. இலங்கை அரசாங்கம் வலது குறைந்தோருக்கான தேவைகளை இனங்கண்டு உடன் நிவர்த்திக்க வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்.
க.பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக