கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

விதியை முடித்த வியாபாரம்

அத்தனகல்ல வியாபாரிகள் மற்றும் அத்தனகல்ல இளைஞர்கள் இணைந்து வருடந்தோறும் நடந்தும் ‘அத்தனகல்ல வசந்த விழா’ நிகழ்வானது இம்முறையும் கடந்த 21 ஆம் திகதி அத்தனகல்ல ரஜமஹா விகாரை முன்றலில் இசை, களியாட்ட நிகழ்வுகளுடன் வெகு விமர்சையாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இரவு 9மணிக்குப் பிறகு இசை நிகழ்ச்சியை ஆரம்பிக்க மேற்படி ஏற்பாட்டுக் குழு தீர்மானித்திருந்தது. அதற்கேற்ப முதல் நிகழ்வாக மங்கல விளக்கேற்றல் நிகழ்வு பிரதான அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வாண வேடிக்கைகள் பல வர்ணங்களில் விண்ணில் செலுத்தப்பட்டன. சுற்றியுள்ள மக்கள் மட்டுமன்றி பாதையில் செல்வோரும் இந்த வாண வேடிக்கைகளை கண்டுகளிப்பதற்காகவே இசைநிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்திருந்தனர். நேரம் இரவு 10.50 மணியிருக்கும் வாண வேடிக்கைகள் பல வானத்தின் இரு பக்கங்களிலும் செலுத்தப்பட்டன. பார்வையாளர்களின் கவனம் இசை நிகழ்ச்சியிலும் வாண வேடிக்கைகளை பார்ப்பதில் மட்டுமே இருந்ததேயன்றி சுற்றி நடப்பதைப் பற்றி எந்தக் கவனமும் இருக்கவில்லை. இசை நிகழ்ச்சி சத்தத்திற்கு மத்தியில் பட்டாசு சத்தத்தைப் போன்று பாரிய சத்தமொன்று திடீரெனக் கேட்டது. அப்போது ‘சுட்டு விட்டார்கள், சுட்டு விட்டார்கள்’ என்ற அலறல் சத்தமும் கேட்டது. இச்சத்தத்தால் ஒன்று கூடியிருந்த மக்கள் சிதறியோடினர். அத்தனகல்ல விகாரைக்கு முன்பாக காணப்பட்ட பிரதான பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிபென்டர் ரக வாகனத்துக்கே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரே என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்திருந்தனர். 
டிபென்டர் வாகனத்துக்கு துப்பாக்கிப் பிரேயோகம். மேற்கொண்டதில் குறித்த வாகனத்திலிருந்த நபர் அதிலிருந்து குதித்து இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் சன நடமாட்டத்திற்கு இடையிலும் தப்பிச் செல்ல முயன்ற போதிலும் அது முடியாமல் போனது. அந்நபரால் 10 மீற்றர் தூரம் அளவே ஓட முடிந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்பு அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீகம ஆரச்சிலாகே ரத்ன தேவப்பிரிய என்ற மண் மற்றும் மணல் வியாபாரியொருவராவார். இவர் ‘தேவப்பிரிய சப்லயர்ஸ்’ என்ற வியாபார நிறுவனத்தின் உரிமையாளராவார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அருகிலிருந்த கர்ப்பிணி யுவதியொருவர் உட்பட மேலும் நால்வர் காயமடைந்தனர். அயலில் இருந்தவர்கள் இவர்களை உடனடியாக வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அதுவரை துப்பாக்கிதாரிகளின் இலக்காக காணப்பட்ட ரத்ன தேவப்பிரிய இவ்வுலகை விட்டுச் சென்றிருந்தார்.
கடந்த 21 ஆம் திகதி முழு நாளுமே நடத்தப்பட்ட ‘அத்தனகல்ல வசந்த விழா’ சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அதற்கான ஏற்பாடுகளை, கட்டிடப் பொருள் வியாபாரியொருவரே மேற்கொண்டிருந்தார். இவர் இசை நிகழ்ச்சிக்காக ‘தேவப்பிரிய சப்லயர்ஸ்’ உரிமையாளரான மீகம ஆராச்சிலாகே ரத்ன தேவப்பிரியவுக்கு அழைப்பிதழொன்றை அனுப்பியிருந்தார். இவர் பிரதான அதிதியாக அழைக்கப்பட்டதற்குக் காரணம், இசை நிகழ்ச்சிக்கு அவர் உதவி, ஒத்தாசை வழங்கியமையாலேயோகும். பியமக, ஹெய்யன்துடுவ, தேவமித்த பகுதியில் வசித்து வருபவரான ரத்ன தேவப்பிரிய தனது சகல வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொண்டது அத்தனகல்ல பிரதேசத்திலாகும் அவர் ஹுணுபொல பிரதேசத்தில் மணல் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டே அப்பிரதேச மண் வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார்.
இவர் மதுகம பிரதேசத்திலிருந்து ஹெய்யன்துடுவ பிரதேசத்துக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பே வசிப்பதற்காகச் சென்றிருந்தார். ஹெய்யன்துடுவ பிரதேசத்தில் விகாரையொன்றை அமைப்பதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். அந்த விகாரையின் பூஜகராக இவரே செயற்பட்டார். ஒருநாள் தனது ஏதோ கிரியையொன்றை நிவர்த்திக்கவென இளம் யுவதியொருவர் அந்த தேவாலயத்துக்கு வருகை தந்திருந்தார். என்ன மாய மந்திரம் செய்தாரோ, இறுதியில் தேவப்பிரியவின் மனைவியானாள். அதன்பிறகு தனியாக வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, திருமணமாகி மூன்று வருடங்களின் பின்னர் விகாரையை மூடிவிட்டார் அவர். அதன் பின் மண் வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். மண் வியாபாரத்தில் ஈடுபட்ட தேவப்பிரியவுக்கு புதிய புதிய நண்பர்கள் அறிமுகமாகத் தொடங்கிவிட்டனர். அதுமட்டுமன்றி எல்லோருடனும் சகஜமாகப் பழகக் கூடியவராகவும் அவர் காணப்பட்டார். அதற்கேற்ப அவருடைய நண்பர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் அண்மையில் பாதாளக் குழுவினரால் கொல்லப்பட்ட வேயன்கொட உதம்மிட்ட பிரதேசத்தில் வசித்து வந்தவரான ஜானக சமந்த குமார சமர திவாகர அல்லது ‘உதம்மிட்ட சமர’ என்பவராவார். சமர தேவப்பிரியவின் நல்ல நண்பர் மட்டுமல்லாது தேவப்பிரியவின் மணல் வியாபாரத்திலும் அவருக்கு நல்ல உறுதுணையாகக் காணப்பட்டார்.
உதம்மிட்ட சமர என்பவர் நாலாபுறத்திலும் பாதாளக் குழுவினரின் உதவி, ஒத்தாசைகளை, அரசியல்வாதிகளுக்கு பெற்றுக் கொடுத்த ஒருவராவார். சமரவின் ஒத்துழைப்புக்காக ஜீப் வண்டியொன்றை அவனது பாவனைக்காக தேவப்பிரிய பெற்றுக் கொடுத்திருந்தார். இது இவர்களின் உறவு மேலும் பலப்படுத்தக் கூடிய ஒரு செயற்பாடாகவே கருதப்பட்டது. வியாபாரிகள் உள்ளடங்கலாக ஏனைய தொழில் செய்வோரிடமும் கப்பம் பெற்றுக் கொண்டிருந்த உதம்மிட்ட சமரவின் செயல்களுக்கு யாரும் அதிருப்தி தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிட்டு கூறக் கூடிய விடயமாகும். அது சமரவுக்கு அரசியல்வாதிகளிடமும் பாதாளக் குழுவினரிடமும் இருந்த தொடர்பாடலாகும். சமர தனக்கெதிராக செயற்பட்டவர்களின் இறுதித் தீர்மானத்தை முடிவு செய்பவன். அப்படியிருந்தும் அவனது இறப்பு அவன் அருகே வரும் வரையில் அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. உதம்மிட்ட சமர, 2016-12-23 ஆம் திகதி இரவு 11 மணியளவில் தனது நண்பரொருவருடன் 3 மாத நினைவஞ்சலி சமயக் கிரியைக்காக மரக்கறிகளை கொண்டு வருவதற்காக வேயன்கொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திம்பிக் கொண்டிருந்த வழியில் வேயன்கொட பாலத்துக்கருகில் வைத்து காரொன்றில் வந்த குழவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொலை செய்யப்பட்டார். அத்தோடு அவனின் 20 வருட பாதாளக்குழ நடவடிக்கை முற்றுப்பெற்றது. சமரவை நோக்கி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டது அவனோடு சேர்ந்து பாதாள வேலைகளில் ஈடுபட்ட வேயன்கொட, மாளிகாதென்னவில் வசித்து வரும் சாமர இந்திரஜித் ஜயசுந்தர, அவனுடைய சகோதரரொருவர், குளு அஜித் மற்றும் இன்னொருவர் ஆகிய நால்வரேயென தெரிவிக்கப்படுகிறது. இந்த கொலைச் சம்பவத்துக்கு துப்பாக்கியை கொடுத்து உதவியவர் பாதாளக் குழுத் தலைவராக முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் மாகிலங்கமுவே சஞ்ஜீவ என்பவராவார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரும் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையிலடைக்க நீதிவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதம்மிட்ட சமரவின் மரணமானது ரத்ன தேவப்பிரியவின் வேலைகளுக்கு பாரிய இழப்பாகக் காணப்பட்டது. இதேவேளை 2017-07-05 ஆம் திகதி சாமர இந்ரஜித் ஜயசந்தர கம்பஹா நீதிமன்றத்தினால் சரீரப் பிணையிலும் காசுப் பிணையிலும் நிபந்தனையுடன் பிணையில் வெளியில் வந்தார். அதில் பிரதி ஞாயிறு தோறும் வேயன்கொட பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு நிபந்தனை விதிக்கப்பட்டது. பிணையில் நிபந்தனையுடன் வெளியேவந்த சாமர, மண் வியாபாரத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தான். இதேவேளை தேவப்பிரிய, சமரவின் குறையை தீர்த்துக் கொள்வதற்காக சாமரவை அரவணைத்துக் கொண்டார். ஆகவே ஏற்கனவே சமரவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜீப் வண்டியானது மீண்டும் சாமரவுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சாமரவும் தனது நண்பர்களை மண் மற்றும் மணல் வியாபாரத்தில் இணைத்துக் கொண்டான் . சில காலம் செல்லுச் செல்ல தேவப்பிரியவின் வாகனங்களில் காணப்பட்ட டீசலானது குறையத் தொடங்கி பற்றாக்குறை ஏற்பட்டது. அவ்வாறே மண் டிபென்டர் மூலம் கிடைக்கப்பெறும் பணமும் குறையத் தொடங்கியது. பல ஆண்டுகளாக வியாபாரத்தில் ஈடுபடும் ரத்ன தேவப்பிரிய, இதற்கான பொறுப்பாளர்களை மிக இலகுவாக கண்டுபிடித்தார்.
எனவே தேவப்பிரியவின் வாகனங்களில் காணப்பட்ட டீசலை சாமரவின் சகா ஒருவனே திருடியுள்ளதாகவும் மேலும் மண் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தில் 50,000 ரூபாவை சாமரவின் இன்னுமொரு சகாவும் திருடியுள்ளதாக தெரியவந்தது. தேவப்பிரிய இது தொடர்பில் சாமரவுக்கு தெரிவித்திருந்தார். அதற்கேற்ப ஒருவரை சாமர வியாபாரத்திலிருந்து நீக்கியிருந்தாலும் ஏனையவன் அவனோடேயே இருந்தான். இதனால் தேவப்பிரிய ஒவ்வொரு முறை சாமரவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் போது அவனை வியாபாரத்திலிருந்து நீக்கிவிடுமாறு தெரிவித்திருந்தார்.
சிறைவாசம் அனுபவிக்கும் மாகிலங்கமுமேவ சஞ்ஜீவவிடமிருந்து தேவப்பிரியவுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்த இந்த காலகட்டத்திலேயாகும். அவ்வுரையாடலில் 50 இலட்சம் ரூபா கப்பம் தேவப்பிரியவிடம் கேட்கப்பட்டது. இது தொடர்பில் தேவப்பிரிய என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான். இறுதியில் இது தொடர்பாக டுபாயில் வசிக்கும் மாகந்துரே மதுஷிடம் தேவப்பிரிய தெரிவித்திருந்தார். அதன் மூலம் மாகிதலங்கமுவே சஞ்ஜீவ எதிர்பார்த்த கப்பத் தொகை இடைநிறுத்தப்பட்டதே தேவப்பிரியவுக்கு இலாபமாக இருந்தது. கப்பம் பெறுவது நிறுத்தப்பட்டாலும் தினந்தோறும் சாமரவின் செயற்பாடுகளால் தேவப்பிரிய பெரும் சிரமத்திற்குள்ளானார். அனுதினமும் சாமர, தேவப்பிரியவிடம் கடனாக பணத்தை பெற்றுக் கொண்டான். கடனாக பணத்தை பெற்றுக் கொண்டாலும் அப்பணமானது மீள செலுத்தப்படவில்லை. அதனாலேயே சாமரவை தேவப்பிரிய தனது வியாபாரத்திலிருந்து நீக்கிவிட்டான். அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ஜீப் வண்டியானது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியொருவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றே சாமரவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்திலேயே அத்தனிகல்ல வசந்த விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்து கொள்ளுமாறு தேவப்பிரியவுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. இவ்விழாவுக்கு தாங்கள் கட்டாயமாக வருகை தர வேண்டுமென்று ஏற்பாட்டுக் குழு உறுப்பினரொருவரால் தேவப்பிரியவுக்கு தெரிவிக்கப்பட்டது. நண்பரின் கட்டாய வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்த 21 ஆம் திகதி இரவு தனது டிபென்ட்ர் வண்டியில் அத்தனகல்ல வசந்த விழாவுக்கு தேவப்பிரிய சென்றார். சிறிது நேரம் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்திலிருந்து இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் வீட்டுக்குச் செல்ல எழுந்த தேவப்பிரிய, மங்கல விளக்கேற்ற வருமாறு தனது பெயர் ஒலிபெருக்கி மூலம் அழைக்கப்பட்டதையடுத்து மீண்டும் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டார். அதற்கிணங்க ஏனைய அதிதிகளுடன் சென்று மங்கல விளக்கேற்றிவிட்டு மீண்டும் தனது இருக்கையை நோக்கி வந்து கொண்டிருந்த வேளை, தேவப்பிரியவின் சகா ஒருவர் ஓடிவந்து அவரின் காதில் ‘சாமர இருக்கின்றான்’ எனச் சொன்னான். தேவப்பிரிய உடன் தனது மனைவிக்கும் தனது நல்ல நண்பரான பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார். உடனடியாக அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரியால் பணிப்புரை விடுக்கப்பட்ட போதிலும் ஏற்பாட்டுக் குழுவில் இருந்த நண்பரால் அனுமதி கிடைக்கப்பெறவில்லை. நண்பரின் கட்டாய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தேவப்பிரிய, நான் எனது வாகனத்தில் இருக்கிறேன் என்று கூறிவிட்டு வாகனத்தில் சென்று அமர்ந்து கொண்டார். ஏற்பாட்டுக் குழு நண்பரால் மதுபானப் போத்தலொன்று தேவப்பிரியவுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அவர் மதுபானம் அருந்திக் கொண்டிருக்கும் வேளையில் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் முச்சக்கரவண்டியொன்று வந்து நிறுத்தப்பட்ட அதிலிருந்தது ஊராபொல, போபெத்தவில் வசிக்கும் சாரிகா சமோதி (24 வயது) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவரே. அவர் தனது பெற்றோருடன் வந்திருந்தார். பின் முச்சக்கரவண்டியிலிருந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தது மட்டுமே, அவளை கீழே தள்ளி வீழ்த்திவிட்டு சனக் கூட்டம் சிதறி ஓடியது. இதேவேளை தனது கோபத்தையும் வைரத்தையும் அந்த சந்தர்ப்பத்தில் சாமர தீர்த்துக் கொண்டிருந்தான். சாமரவும் அவனது சகாக்களும் இணைந்து மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் மூலம் தேவப்பிரியவின் பின்பக்கம், முதுகுப்புறம் என 6 துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டிருந்தன. இந்த பலி தீர்க்கும் துப்பாக்கிச் சம்பவமானது 66 ஆக பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின் சந்தேக நபர்களை கைது செய்யவென மேல் மாகாண வட பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் கட்டளையின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவு உதவி அத்தியட்சகரும் பொலிஸ் அதிகாரியுமான மஹேஷ் பண்டாரவின் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றும் கம்பஹா பொலிஸ் அதிகாரி இந்திக்க த சில்வாவின் மேற்பார்வையின் கீழ் நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பரிசோதகர் நலிந்த தில்ருக்கவின் பணிப்பின் பேரில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கேற்ப முதலில் கைது செய்யப்பட்டது ஏற்பாட்டுக்குழு நண்பராவார். அதன்பிறகு சாமரவைத் தேடி நிட்டம்புவ பொலிஸார் அவனது வீட்டுக்கு சென்றிருந்த போதிலும் அங்கிருந்து சாமர மற்றும் அவனது ஏனைய நண்பர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தனர். அவர்களை கைது செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. என்னதான் பொலிஸார் தங்களது கடமைகளை சரிவரச் செய்தாலும் ஏதோ ஒருவகையில் குற்றமிழைத்தோர் தப்பித்துக் கொண்டேதான் இருக்கின்றனர். கடுமையான தண்டனை விதிக்கப்படுமிடத்தே இவ்வாறானவர்களை கட்டுப்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக