கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

மலையகத்தில் மே தினம்: தலைவருக்கா தொழிலாளருக்கா?

மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இலங்கையில் உணர்வு என்றில்லாமல் சுயநல அரசியலுக்காக தங்களுக்கேற்ற வகையில் தினங்களை மாற்றிக்கொண்டு ஆட்சி செய்கிறார்கள். அந்த வகையில் இலங்கையில் தொழிலாளர் தினமானது நாளை திங்கட்கிழமை கொண்டாடுவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 29, 30 ஆம் திகதிகளில் வெசாக் தினம் கொண்டாடப்பட்டதுடன், வெசாக் வாரமும் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சர்வதேச தொழிலாளர் தினத்தை மே 7 ஆம் திகதிக்கு அரசாங்கம் ஒத்திவைத்திருந்தது.
இதேபோலவே 1980 மற்றும் 1990 களில் இலங்கை அரசாங்கம் இவ்வாறு மேதின நிகழ்வுகளை பிற்போடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும் மே முதலாம் திகதி மேதின கூட்டங்களை நடத்துவதற்கு கொழும்பில் அனுமதி மறுக்கப்பட்டதுடன் பேரணிகள் மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2 கட்சிகள் உட்பட 22 தொழிற்சங்கங்கள் தொழிலாளர் தினத்திலேயே கூட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்திருந்தன. ஆனாலும், மேதின ஒத்திவைப்பு தொழிலாளர் தினத்தின் தாற்பரியத்தையே மீறும் செயற்பாடாகவே விமர்சிக்கப்படுகின்றது.
ஆனாலும், மே 7ஆம் திகதிக்கு மேதினம் ஒத்திவைக்கப்பட்டாலும் மலையத்தில் இடம்பெறுகின்ற மேதின நிகழ்வுகள் மலையக தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான ஏற்பாடாக இதுவரையும் அமைந்திருக்கின்றதா என்பதை பல ஆண்டுகளாக மலையகத் தலைமைகளிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் மலையகத்தில் இம்முறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம் நுவரெலியாவிலும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் தலவாக்கலையிலும் இடம்பெறவுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் தற்போது இவ்விருகட்சிகளின் மத்தியிலேயே பிளவடைந்திருக்கிறார்கள்.
இம்முறையாவது மேதினக் கூட்டங்கள் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்குமா என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவே இருக்கின்றது. கடந்த 200 வருடகாலமாக கடும் உழைப்பினால் நாட்டின் முன்னேற்றத்துக்கு பல்வேறு வகையில் பங்களிப்பை வழகியவர்கள் இதுவரை காலமும் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்குக்கூட கடுமையாக போராடி வருகின்றனர். தனிவீட்டுத்திட்டம் , இலவச சுகாதாரசேவை, சம்பளவுயர்வு போன்ற அத்தியாவசியத் தேவைகள்கூட இதுவரையும் நியாயமான தீர்வை நோக்கி பயணிக்கவில்லை. வெறுமனே மேதினக்கூட்டங்கள் மலையகத் தலைவர்களுக்கு கட்சியின் பலத்தை வெளிக்காட்டவும் மேடைகளில் தொன் கணக்கிலான மாலையை அணிந்துகொண்டு கையசைக்கவும், மாற்றுக் கட்சிகளை வசைப்பாடவுமே பயன்படுத்தப்படுகின்றது. இதனையே ஒவ்வொரு மேதினக் கூட்டங்களிலும் இவர்கள் மேற்கொண்டுவருகின்றார்கள். இந்த மேதினத்திலும் தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கு முறையான மரியாதை வழங்கப்படுவதில்லை. இதை அறியாமலேயே வெயிலிலும், மழையிலும் காய்ந்து கோஷங்களை எழுப்பி தலைவர்களுக்கு மரியாதை செய்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு கிடைக்கப்பெறுவதுதான் என்ன?
மேதினக் கூட்டங்களின்போது இலவச போக்குரவத்து, இலவச உணவு என்பவற்றுடன் பல சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆனால், உண்மையில் தங்களின் மக்கள் தொகையை அதிகரித்துக்கொள்வதற்கே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதே தவிர, தொழிலாளர்களை அழைத்து உண்மையான மரியாதை செலுத்தப்படுவதில்லை. இதுவே மலையகத்தின் கடந்தகால மேதினக் கூட்டங்களில் அரங்கேறியவை. இம்முறையும் இந்நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் ஏதும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே தோன்றுகின்றது. அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் 1886இல் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சி பல்வேறு பரிணாம வளர்ச்சிகளைச் சந்தித்து இன்று 132 ஆவது ஆண்டில் காலடியெடுத்து வைத்துள்ளது. உலகளாவிய ரீதியில் பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுத்துள்ள போதிலும், இலங்கையில் இன்னமும் தொழிலாளர்களின் உரிமைகள் முற்றுமுழுதாக வழங்கப்படவில்லை என்பது வேதனையானது. குறிப்பாக, பெருந்தோட்டத்துறையில் தொழில்புரியும் மக்கள் அடிமை கூலிகளாகவே நடத்தப்படுகின்றனர்.
இலங்கையில் முதன்முதலாக 1955ஆம் ஆண்டு மேதினம் ஒரு பொதுவிடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. மலையக மக்களைப் பொறுத்தவரை 1965ஆம் ஆண்டுதான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மலையகத்தின் பல பகுதிகளிலும் மேதின ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தப்படுவது வழமையானது. தற்போது தொழிற்சங்க ரீதியாகவே மேதின கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மலையக மக்கள் தொழிற்சங்க ரீதியாக பிளவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு கொள்கைகளுடனும் நோக்கத்துடனும் செயற்படுவதால் உறுதியான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. ஒவருவருடைய கொள்கைகளை மற்றொருவர் விமர்சிப்பதும், மற்றவர்களுடைய கொள்கைகளை இன்னொருவர் எதிர்ப்பதுமே வழமையான மலையகத் தலைவர்களின் நிகழ்வுகளாக இருக்கின்றது. இலங்கையின் பெருந்தோட்ட மக்களுக்கான தொழிற்சங்க நடவடிக்கைகள் 1931 ஆம் ஆண்டு நடேச அய்யரால் “ தொழிலாளர் சம்மேளம்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. ஹட்டனை தலைமையாகமாக் கொண்ட இச்சங்கம் 1940ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி பதிவுசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் பதியப்பட்டுள்ளது.
அதேபோல ஜூன் மாதம் 25ஆம் திகதி இலங்கை-இந்திய தொழிலாளர் காங்கிரஸ் பதிவாகியுள்ளதுடன் பின்னர் 1953இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றமடைந்தது. பின்னர் இதிலிருந்து பிரிந்துசென்ற ஏ.அஸீஸ் 1955இல் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை ஆரம்பித்தார். இன்றைய நிலையில் மலையக தொழிலாளர்களின் பெயரால் 50 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன. தொழிற்சங்கங்களின் அதிகரிப்பு மாத்திரம் தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்துவிடாது மாறாக ஒருமித்த வகையிலான அழுத்தங்களை மத்திய அரசுக்கு இவர்கள் முன்வைக்க வேண்டும்.
தொழிலாளர்களுடைய தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை தொழிற்சங்க ரீதியில் கட்டிப்போட்டுவிட்டு அடிமைகளாகவே நடத்தப்பார்க்கின்றார்கள். இதிலிருந்து சகலரும் விடுபட்டு தலைவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் மேதினக் கொண்டாட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுக்க வேண்டும். இவற்றில் முக்கியமாக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்ந்தம், தோட்டங்கள் தனியார் உரிமையாக்கப்பட்ட 1992ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1992ஆம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டுவந்த கூட்டு ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் 18 மாதங்கள் கழிந்த நிலையில் மீண்டும் கைச்சாத்திடப்பட்டாலும் நிலுவைத் தொகைகள் இதுவரையும் வழங்கப்படவில்லை.
1000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுப்போம் என்று கோஷமிட்டு வந்தவர்களும் தற்போது வாய்மூடி மௌனிகளாக இருந்துவருவதுடன் கூட்டு ஒப்பந்தத்தை மீறி தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களிடம் கெடுபிடிகளை கடைப்பிடித்து வருகின்றன. மேலும் தேயிலை மலைகளில் மலசலகூட வசதிகளின்மை, குடிநீர் வசதியின்மை போன்றவற்றாலும் குளவிகொட்டு, சிறுத்தை தாக்குதல், அட்டைக்கடி என்பவற்றால் தொடர்ச்சியாக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான சூழலில் மலையகத்தில் சட்டவிரோதமான கருக்கலைப்பு சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. 15 இலட்சமாகக் காணப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் சனத்தொகை இன்று 8 இலட்சம் வரையில் குறைவடைந்துள்ளது. இவைதொடர்பில் எந்தவொரு தலைவர்களும் கவனம் செலுத்தியிருக்கவில்லை. பெருந்தோட்டத்துறையில் 50 மருத்துவமனைகள் உள்ளன. வடிவேல் சுரேஷ், பிரதி சுகாதார அமைச்சராக இருந்தபோது இவற்றுள் 23 மருத்துவமனைகள் அரசுடமையாக்கப்பட்டன. 27 மருந்துவமனைகள் இன்னும் அதேநிலையிலேயே இருக்கின்றன. இத்துடன் 179 குழந்தைப்பேறு விடுதிகளும் 266 மருந்தகங்களும் இருக்கின்றன.
ஆனால், இவற்றுக்கூடாக சிறந்த மருத்துவ சேவைகளை முன்னெடுக்கக்கூடிய வகையிலான வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ உபகரணங்கள், அம்புலன்ஸ் வசதிகள், தங்குமிடவசதிகள், விடுதி வசதிகள் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்படாமையால் பெருந்தோட்ட மக்கள் சிறந்த சுதாதார சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. லயக்குடியிருப்புகளானது மிகவும் மோசமான கட்டமைப்பாக விளங்குவதாக ஐ.நா.சுதாதாரப்பிரிவு கூறியிருக்கும் நிலையில் நாம் இன்னும் அங்கேயே வாழ்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றோம்.
இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு இது நாள்வரையும் சிறந்த தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் பாராளுமன்றில் மக்களுடைய பிரச்சினைகளை வெளிக்கொணரவே அவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், பாராளுமன்றமே செல்லாமல், சென்றாலும் வாய்திறக்காதவர்கள் மேதின மேடைகளில் மாத்திரம் வீரவசனங்களை பேசுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், அதைக்கேட்பதற்காகவே மக்கள் அலையலையாக படையெடுத்துச் செல்கின்றனர். அதுமட்டுமல்லாது அந்த ஒருநாள் வீரவசனங்களைக் கேட்டுவிட்டு கொந்தளித்து சண்டைபோட்டுக்கொள்ளும் நடைமுறையும் மேதினக்கூட்டங்களில் காணப்படுகின்றது.
இவ்வாறு மக்கள் மீது வலிந்து திணிக்கப்படும் மேதினக் கூட்டங்களை எப்போதும் மக்களின் உரிமைகளுக்காகப் பயன்படுத்தப் போகின்றார்கள். இதற்கு தொழிலாளர்களே சிறந்த தீர்வை முன்வைக்க வேண்டும். கட்சிகளின் தேவைகளுக்காக நடத்தப்படுகின்ற மேதினக் கூட்டங்களை தொழிலாளர்கள் புறக்கணிக்கவேண்டும். மாறாக உரிமைகளுக்காக மக்கள் ஒன்றிணையவேண்டும். இவர்களை உரிமைகளுக்காக ஒன்றிணைப்பதற்கான வேலைத் திட்டங்களை இளம் தொழிலாளர்கள் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறானதொரு மேதினக் கூட்டத்தையே மலையகத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக