கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

வீதிக்கு வந்த அரசியல் கூத்து

வடியில் ஊறிப்போனவர்களையெல்லாம் வாக்களித்து அரசியலுக்கு கொண்டு வந்துவிட்டோமென மக்கள் புலம்பும் நிலை வந்துவிட்டது. அரசியல் சுகங்களுக்காக மக்களும் கட்சிகளுக்குப் பின்னால் சென்றுவிட்டார்களோ தெரியவில்லை. சுயமாக இவர்கள் சிந்தித்து வாக்களிக்காத வரையிலும் சுயநல அரசியலையும் அடாவடி அரசியலையும் மாற்ற முடியாது. ’முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பார்கள் அதுபோலவே நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் தலைவர், உபதலைவர் தெரிவும் முதல்கூட்டத் தொடரும் அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவும் ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கான தலைவர் தெரிவும் பெரும் களேபரத்திலேயே முடிந்திருந்தது.


சபைகள் அமைக்கப்படுவதற்கு முன்பாகவே நாங்கள் தான் அந்த சபையில் வெற்றிபெறுவோம் என்று வாய்விட்டு இறுதியில் அது நிறைவேறாத சந்தர்ப்பத்தில் இப்படி களேபரங்களை ஏற்படுத்தி, இறுதியில் மக்களின் வாக்குரிமையை கேவலப்படுத்திவிடுகிறார்கள். அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகளின் படி தற்போது சபைகளின் ஆட்சியுரிமை தீர்மானிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஆறு உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருந்தன.
நுவரெலியா, மஸ்கெலியா, அக்கரைப்பத்தனை, கொட்டகலை, நோர்வூட், அம்பகமுவ பிரதேச சபைகளுக்கு புதிய தொகுதி பங்கீடுகளின் மூலம் தேர்தல் நடைபெற்றிருந்தது. தேர்தலின் போதே யார் சபைகளை வெற்றி கொள்வது என்பதில் போட்டி நிலைமை காணப்பட்ட நிலையில் இன்று தேர்தல் முடிவுகளைப் புரட்டிப் போடும் வகையில் சபைகளின் தலைவர் தெரிவு காணப்படுகின்றது. ஆனாலும் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேளையிலும் கட்சிகளுக்கிடையிலான போட்டி மனப்பான்மையினால் விடயம் வீதி வரைக்கும் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.


அவ்வாறு வீதிக்கு வரும் போதே மக்கள் நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்தவர்களின் உண்மை முகமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது. சபை அமர்வுகளின் போது மேசைமேல் ஏறி எதிர்ப்பதும், வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வதும், கல்லெறிந்து கொள்வதும் அதையும் தாண்டி செருப்பு வீச்சுக்களை மேற்கொள்வதும் என தேசிய அரசியலைத் தாண்டி உள்ளூர் அரசியல் நாறிப்போய் கிடக்கின்றது. இதனை அரசியல் வாதிகள் கௌரவமாகவும் தைரியமாகவும் எடுத்துக் கொள்கின்றார்கள். ஆனால் இதனை கைகட்டிப் பார்த்து கொண்டிருக்கும் மக்களுக்குத் தான் தெரியும் இது அரசியல் நாடகமென்று. இதிலிருந்து விடுபட்டு என்று மக்களுக்கான அரசியலில் அரசியல் வாதிகள் இணையப் போகின்றார்களோ தெரியவில்லை.


உள்ளூராட்சித் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளவில்லை. நோர்வூட் பிரதேச சபையில் மாத்திரம் இ. தொ. கா 50.67 வீத வாக்குகளைப் பெற்று மொத்த முள்ள 21 ஆசனங்களில் 11 ஆசனங்களை வென்றிருந்தது. மற்றைய சபைகளில் கூட்டணி அமைத்தே ஆட்சியமைக்க வேண்டிய நிலை காணப்பட்டது. அதன்படியே தற்போது எதிர்பாராத வகையில் அதிகமான சபைகள் இ. தொ. காவின் வசம் செல்லும் நிலை காணப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே சச்சரவுகளும் வெடித்திருந்தன. உள்ளூராட்சித் தேர்தல் நிறைவுபெற்றவுடனேயே பொதுஜனபெரமுனவுடன் சேர்ந்து நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளில் 11 சபைகளில் ஆட்சியமைக்கப்போவதாக இ. தொ. கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.
நுவரெலியா நகர சபை ஐ.தே.க வசமானதால் அங்கு இவர்களுக்கு ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்பட்டது. இங்கு ஐ.தே.க 12 ஆசனங்களையும் பொதுஜன பெரமுன 6 ஆசனங்களையும், இ. தொ. கா - 2, ஐ.ம.சு.கூ - 2 ஆசனங்களையுமே கைப்பற்றியிருந்தன. இதில் மஸ்கெலியா பிரதேச சபையில் இ. தொ. கா 7 ஆசனங்களையும் ஐ.தே.க 7 ஆசனங்களையும் சமமான முறையில் கைப்பற்றியிருந்தன. மேலதிகமாக பொதுஜன பெரமுனவுக்கும் ஐ.தே.சு.முன்னணிக்கும் தலா 1 ஆசனங்கள் கிடைத்தன. இதில் பொதுஜன பெரமுன இ. தொ. காவுடனும், ஐ.தே.சு.மு ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இணைந்தமையால் மீண்டும் இரு கட்சிகளும் 8 ஆசனங்களுடன் சமபலம் பெற்றன.


இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச சபைக்கு இடம்பெற்ற முதலாவது கூட்டத் தொடரில் தலைவர் தெரிவின் போது ஐ.தே.க.உறுப்பினர் ஒருவரை கடத்தி வாக்களிப்புக்கு வரவிடாமல் தடுத்ததாக இ.தொ.கா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்களிப்பில் இ.தொ.கா ஆட்சியமைக்கும் உரிமையைப் பெற்றுக் கொண்டது. இதனாலேயே அன்று இரு கட்சிகளிடையே வாக்குவாதம் முற்றி களேபரம் ஏற்பட்டதுடன் ஒருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டது. அதேவேளை ஹட்டன் நகர சபைக்கான வாக்களிப்பின் போது பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் ஐ .தே.கட்சியுடன் இணைந்ததால் இ.தொ.காவும் ஐ.தே.கட்சியும் சமபலத்தைப் பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் தலைவர் தெரிவு இடம்பெற்று இ.தொ.கா ஆட்சியைக் கைப்பற்றியது.
ஒருவேளை மஸ்கெலியா பிரதேச சபையில் ஐ.தே.கட்சி உறுப்பினர் வருகை தந்திருந்தால் திருவுளச்சீட்டின் மூலமே தலைவர் தெரிவு இடம்பெற்றிருக்கும். இறுதியில் கன்னி அமர்வே கலவரமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூலமே அரசியல் செய்வதற்கு யார் தகுதியுள்ளவர்கள் என்பதை மக்கள் இனங்கண்டு கொள்வதற்கு ஒரு வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தேர்தல் நடைபெறுமென்றால் அதற்கு 5 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் மக்கள் இந்த களேபரங்களை மறந்துவிட்டு மீண்டும் அவர்களுக்கே வாக்களிக்கக் கூடிய நிலைமை உருவாகும். இதுவே மலையகத்தில் வழமையாக இருந்து வருகிறது.
இந்த வழமை மாற்றப்பட வேண்டும். மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கும் உரிமையை வென்றெடுக்க வேண்டும். கட்சிகளும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய நபர்களை தேர்தலில் வேட்பாளராக களமிறக்க வேண்டும். அல்லது மக்களே ஒரு வேட்பாளரை சுயேட்சையாக தெரிவு செய்து கொள்ள வேண்டும். அந்தவொரு சூழல் உருவாக இனியாவது அனைவரும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு களேபரங்கள் இடம்பெற்று வரும் வேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆட்சியுரிமையைப் பெறும் நிகழ்வும் நடைபெற்று வருகின்றன. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட அக்கரைப்பத்தானை பிரதேச சபையில் எட்டு வாக்குகளைப் பெற்று சபையின் தலைவராக இ. தொ. கா உறுப்பினரான கதிர்செல்வனும் உப தலைவராக பொதுஜன பெரமுனவின் ஜயலத் விஜயதுங்கவும் தெரிவு செய்யப்பட்டனர்.
தலவாக்கலை - லிந்துலை நகரசபையில் தலைவர் பதவியினை சுயேச்சைக்குழு உறுப்பினர் அசோக சேபாலவும் உபதலைவராக இ. தொ. காவின் பாரதிதாசனும் தெரிவாகினார். ஹட்டன் - டிக்கோயா நகரசபைத் தலைவராக இ. தொ. காவின் பாலச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டார். கொட்டகலை பிரதேச சபைக்கு தலைவராக இ. தொ. கா சார்பில் இராஜமணி பிரசாத் தெரிவானார். நோர்வூட் பிரதேச சபையில் இ. தொ. காவின் கிசோகுமார் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதேவேளை 29 ஆம் திகதி இடம்பெற்ற நுவரெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவின் போது இ. தொ. காவின் வேலு யோகராஜா தெரிவுசெய்யப்பட்டார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது நுவரெலியா பிரதேச சபையில் ஐ.தே.க 9 ஆசனங்களையும் இ. தொ. கா 7 ஆசனங்களையும் பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும் ஏனைய இருகட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக் கொண்டிருந்தன. இதன்படி 12 வாக்குகளைப் பெற்ற இ.தோ.காவின் வேலு யோகராஜ் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அம்பகமுவ பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட ஜயசங்க பெரேரா தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இ. தொ. காவின் ஆதரவுடன் இந்த வெற்றி பெறப்பட்டிருந்தது. கடந்த தேர்தலில் அம்பகமுவ பிரதேச சபையில் ஐ.தே.க 7 ஆசனங்களையும் பொதுஜன பெரமுன 6 ஆசனங்களையும் இ. தொ. கா-4 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 4 ஆசனங்களையும் பெற்றிருந்தன. அதேவேளை கொத்மலை பிரதேச சபைக்கான தலைவர் தெரிவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட சுசந்த ஜயசுந்தர 30 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். கொத்மலை பிரதேச சபைக்கு உள்ளூராட்சி தேர்தலில் ஐ.தே.க 20 ஆசனங்களும், ஐ.ம.சு.கூ 13 ஆசனங்களும், பொதுஜன பெரமுனவுக்கு 16 ஆசனங்களும், ஏனைய இரு கட்சிகளுக்கும் தலா இரு ஆசனங்களும் கிடைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறான நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் அதிக உள்ளூராட்சி சபைகளை இ. தொ. கா கைப்பற்றியுள்ளதுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி எவ்விதமான வெற்றிகளையும் பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை 9 பிரதேச சபைகள் 2 நகரசபைகள், 1 மாநகர சபைக்கான தேர்தல் நடைபெற்றன. இவற்றின் மூலம் மொத்தமாக 151 தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் 33 தமிழ் பெண்களும் உள்ளடங்குவர். புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு பிரதேசசபைகளிலும் தமிழர் பிரதிநிதித்துவமானது 80 வீதமாகக் காணப்பட்டது. பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் 340 தொகுதிகளில் தனிக்கட்சியொன்று 50 வீதமான வாக்கினைப் பெற்றுக் கொள்ளவில்லை. தேர்தலில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாத தேர்தல் தொகுதிகளில் ஆட்சியை உருவாக்குவதென்றால் இரண்டு கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் இல்லாவிடில் இரகசிய மற்றும் பகிரங்க தேர்தலொன்றை நடத்தி தலைவர், உபதலைவர் அல்லது நகரபிதா, உபநகரபிதா ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இவ்வாறான நிலையிலேயே உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை நிலைநிறுத்துவது யார்? என்ற போட்டி கடந்த மாதம் இறுதியில் அரங்கேறிய நிலையில் இறுதியில் மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர், உபதலைவர் தெரிவின் போதே அடிதடிகள் இடம்பெற்றன. இச்சபையின் தலைவராக பெண்ணொருவர் பதவியேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அடாவடிகள் இச்சபையை ஆரோக்கியமான முறையில் கொண்டு நடத்த வழியேற்படுமா என்பதில் அதிக சந்தேகமே நிலவுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக