கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

மக்களை பிளவுபடுத்தும் அரசியல் தலைமைகள்

மக்களின் தலைவன் என்பது பணத்தாலும் அதிகாரத்தாலும் பெற்றுக் கொள்ளக் கூடிய பதவியல்ல. அது மக்களால் தாமாகவே வழங்கப்படுவது. ஆனால் அந்தக் கலாசாரம் மலையக அரசியலில் தற்போது மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது. மலையக அரசியலில் இன்றும் போற்றக்கூடிய மக்கள் தலைவர்கள் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் இன்று கட்சியை வளர்ப்பதற்காகவும் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு சுயநல அரசியலை முன்னெடுப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்களையும் இதனுள் இழுத்துவிடுவது தான் வேதனையான விடயம். இது மக்களிடையே சலிப்பையே ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் புதிய தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
எதிர்வரும் தேர்தல்கள் அதற்கான வழிகாட்டிகளாக அமையும் என நாம் எதிர்பார்க்கலாம். நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் பெரும்பான்மையின கட்சிகளைத் தவிர்த்து ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி (பிரதானமாக அமைச்சர் திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கம்) என்பனவற்றுக்கிடையிலான விரிசல்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றன. இவை தீர்க்கப்படப்போகின்ற பிரச்சினையாகவும் இல்லை. மாறாக மக்களை தவறாக வழிநடத்தி அவர்களுக்கிடையியே பிளவுகளை ஏற்படுத்தும் உபாயமாகவே தென்படுகின்றது.
மலையக மக்களுக்கான அரசியல் உரிமைகள் வாழ்வாதார உரிமைகள் தொழில் உரிமைகள் என பலவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. குறைந்தது சொந்த வீடுகளில் வசிக்கும் நிலைகூட இன்னும் பூரணமாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வார்த்தைகளால் வர்ணிக்கப்படும் இவர்களுக்கு வலுவான வாழ்க்கை மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக கட்சி அரசியலுக்காக பணயம் வைக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வாரத்தில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் திகாம்பரத்தின் ஆதரவாளரினால் தாக்கப்பட்ட இ.தொ.கா உறுப்பினருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற அடிப்படையில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான மோதல் சம்பவங்களும் ஆர்ப்பாட்டங்களும் இருகட்சி காரர்களுக்கும் புதியதல்ல. 2013 ஆம் ஆண்டு மத்திய மாகாணசபை தேர்தலின் போது கொட்டகலை மற்றும் கினிகத்தேன பகுதிகளில் இவ்விரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் தொடர்பான வழக்கு விசாரணைகள் கூட ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஒருவரை யொருவர் மாறி மாறி வசைபாடி வந்துள்ளனர்.
இதனால் மக்கள் எந்த நன்மையையும் பெற்றுவிடவில்லை. தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தைக்கூட இரு கட்சிகளும் போட்டிபோட்டு வாக்குறுதிகள் வழங்கினார்கள். ஆனால் இறுதியில் தொழிலாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 1000 ரூபாவும் கிடைக்கவில்லை. அதன்பின்னர் கிடைக்கின்ற ஒவ்வொரு மேடைகளிலும் இருவரும் மாறி மாறி கரியைப் பூசிக் கொண்டார்கள். மோடி வந்தாலும் சரி, மேதினம் வந்தாலும் சரி கூட்டம் சேர்ப்பதிலேயே இவர்கள் ஆவலாக இருந்தார்கள். மக்களும் அபிவிருத்தி திட்டங்களில் புறக்கணிக்கப்படுவோம் என்ற பயத்தில் இவர்கள் கூட்டுகின்ற கூட்டங்களுக்கு சென்று வருகிறார்களே தவிர மாறாக கட்சிப்பற்று என்பது அவ்வளவாக எடுபடுவதாக தெரியவில்லை.
இதேவேளை இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற வெசாக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிளங்கன் வைத்தியசாலையில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் நோர்வூட்டில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது அதன் ஆயத்தங்களை பார்வையிட அனுமதி மறுத்ததாக அமைச்சர் திகாம்பரத்தின் மீது பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும் மோடியின் வருகை தொடர்பான ஹட்டன் ஏற்பாடுகளை செந்தில் தொண்டமான் தரப்பினர் குழப்புவதாக திகாம்பரம் தெரிவித்திருந்தார்.
இறுதியாக மோடியால் சௌமியமூர்த்தி தொண்டமான் நினைவு கூரப்பட்டது என பல சர்ச்சைகள் இரு கட்சிகளுக்கிடையிலும் தோன்றி மறைந்துள்ளன. அதேபோல் கடந்த உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களின் போதும் ஹட்டன் நகரம் போதைப் பொருள் நகரமாக மாறுகிறது என்பது தொடர்பாகவே இரு கட்சிகளும் விவாதங்களை நடத்தி மக்களிடம் வாக்கு கேட்டுச் சென்றார்கள். இவ்வாறு பல்வேறு சம்பவங்களை இருகட்சி மோதல்களுக்கான உதாரணங்களாக கூறலாம். ஆனால் இவ்வாறு செயற்படுவதால் மக்களுடைய தேவைகள் தங்குதடையின்றி நிறைவேற்றப்பட்டு வருகின்தென்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமலிருக்கிறது.
மலையக மக்களிடையே இதுவரைக்கும் பல்வேறு பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 20 வருடகால லயன் முறை வாழ்க்கை இல்லாமலாக்கப்பட்டு தனிவீட்டுத்திட்டம் அமைத்தல், காணி பிரச்சினை, மலையகத்திற்கான அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கத்தின் தேவை, மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழக உருவாக்கம், மலையக இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, தொழில் பேட்டைகளின் உருவாக்கம், தேயிலை தோட்டங்களைப் பாதுகாத்தல், பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசுடைமையாக்கல் போன்ற பிரச்சினைகளுடன் இன்னும் பல பிரச்சினைகளை மலையக மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் இவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் இதுவரையும் யாரும் பெரிதாக அக்கறை கொண்டு செயற்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கின்றதோ அவர்கள் மற்றைய கட்சியினரை வசைபாடுவதும் சண்டை பிடிப்பதுமே இவர்களுடைய கடமையாக இருந்த வருகின்றதே தவிர மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இறுதியாக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்பு மலையக மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் மந்தநிலையை அடைந்துவிட்டன. எதிர்பார்த்த வகையில் மக்கள் வாக்குகளை வழங்காமையினால் இந்நிலை காணப்படுகின்றது. அதேவேளை கடந்தகால வீட்டுத்திட்டங்களும் கட்சி ரீதியாக முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும் மேலெழுந்திருந்தன.
மக்களுடைய வாக்குகள் இம்முறை பரம்பரை கட்சிகளை மறந்தமைக்கு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையும் வாக்குறுதிகள் மறக்கப்பட்டமையும் பிரதான காரணமாக அமைந்திருக்கின்றன. எனவே இவ்வாறான விடயங்களுக்கு மத்தியில் கட்சிகளுக்கிடையிலான விரிசல் நிலைமைகள் எதிர்கால மலையக மக்களின் உரிமைகளை பெற்றெடுக்க வழிசெய்யுமா? என்றால் இலகுவாக இல்லையென்று சொல்லலாம். கடந்த வருடம் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் திடீரென பெயர் மாற்றப்பட்டமைக்கு தேசிய ரீதியான எதிர்ப்புகள் வலுத்திருந்தன.
இவற்றை எதிர்த்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இறுதியில் இவ்விடயம் இருகட்சிகளின் தனிப்பட்ட குரோதங்களினால் உருவான பழிவாங்கல் என்ற ரீதியில் பேசப்பட்டது. அதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் கடும் எதிர்ப்புக்களின் காரணமாகவே ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லையென்ற கதையும் உண்டு. அத்தோடு இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது திகாம்பரத்தின் அமைச்சானது ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட இருப்பதாகக் கோரி பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டும் இறுதியில் அது பொய்யானது. இவ்வாறு இரு கட்சிக் காரர்களும் தங்களுக்கு பெருமை தேடிக் கொள்வதிலேயே ஆர்வமாக செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.
ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருக்கும் போது ஹட்டன் தொழில் பயிற்சி நிலையத்துக்கு வந்தால் சகல ஹட்டன் பொலிஸாரும் தொழிற்பயிற்சி நிலையத்தைச் சுற்றி காலையிலிருந்து காவல்காக்க வேண்டிய தேவை காணப்பட்டது. அந்தளவுக்கு பொலிஸை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக சொல்லப்பட்டது. தற்போது அமைச்சராக திகாம்பரம் பொறுப்பேற்றதன் பின்னர் மஸ்கெலியா பொலிஸ் நிலையம் அவர்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக தெரிகிறது. இங்கு கட்சி ரீதியிலேயே மக்களுக்கு நியாயம் கிடைக்கின்றது. இதனாலேயே அண்மைட்யில் ஆறுமுகன் தொண்டமான் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தார்.
இவ்வாறு மக்களை கவனத்தில் கொள்ளாத அரசியலே மலையகத்தில் நிலவியிருக்கின்றது. இன்று பல பெருந்தோட்டங்கள் முறையான பராமரிப்பின்றி காடுகளாகி வருகின்றன. இதனால் மக்களுடைய வருமானமும் குறைவடைந்து வருகின்றன. பலர் சொந்த தோட்டங்களை விட்டு வெளியேறுகின்றனர். 1992 இல் அரசாங்கத்தின் நேரடி முகாமைத்துவத்தின் கீழ் இருந்த பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனியிடம் கையளிக்கப்பட்டன. இவ்வாறு 400 பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனியிடம் கையளிக்கப்பட்டதுடன் எஞ்சிய 36 தோட்டங்கள் தொர்ந்தும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திசபை, உசவசம, எல்கடுவ பிளாண்டேஷன் என்பவற்றின் பொறுப்பிலேயே இயங்கி வந்தன.
இன்று தனியார் தோட்டங்களை விடவும் அரசின் கீழுள்ள தோட்டங்கள் தற்போது பாரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. ஆரம்பத்தில் இவை அதிகம் இலாபமீட்டும் தோட்டங்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இங்குள்ள மக்கள் இன்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் கூட இவர்களுக்காக போராட முன்வரவில்லை. இவ்வாறு மக்கள் பிரச்சினைகளால் சூழ்ந்திருக்கும் நிலையில் சட்சிகளை வளர்ப்பதில் மாத்திரம் தலைமைகள் செயற்படுவது என்ன நியாயம்? வாக்களித்து தேர்வு செய்த மக்களுக்கு காட்டும் விசுவாசம் இதுதானா?
இவ்வாறு கட்சி நலன் சார்ந்து தலைமைகள் செயற்படுவதால் மக்களும் கட்சி ரீதியில் பிளவுற்று காணப்படுகின்றனர். இதனால் பிரச்சினைகளுக்கு ஒருமித்து குரல் கொடுக்கும் நிலை காணப்படவில்லை. மக்களுடைய தேவைகளை அறிந்து செயற்படும் தலைவர்களை காண்பது அரிதாகவே தென்படுகிறது. வாரிசு அரசியலை கொண்டு செல்ல தலைமைகள் முயற்சித்து வருகிறார்கள் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலிலும் கடசியின் அடிமட்ட தொண்டர்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவாகும். பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டிருந்ததால் அது ஓரளவுக்கு சாத்தியமாகவிருந்தது.
சாதாரண தோட்டத் தொழிலாளி மக்களை ஆள்வதை விரும்பாத தலைமைகளே தற்போது களத்தில் இருக்கின்றனர். மக்களும் அதுபோலவே புதிய தலைமைகளை தேட ஆரம்பித்துவிட்டார்கள். எனவே கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படும் நிலை காணப்படின் தற்போதைய தலைமைகளின் அது எதிர்கால அரசியலை பாழ்படுத்தும் என்பதுடன் மக்களையும் பிளவடையச் செய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே கட்சி ரீதியில் அல்லாது ஒருமித்த நிலையில் குரல் கொடுப்பதன் மூலம் தேசிய அரசிலிருந்து எமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதுவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு செய்யும் பெரிய உபகாரமாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக