எமது நாட்டுக்கு அதிகமான அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் சுற்றுலாத் துறைக்கு பிரதான இடமொன்றுள்ளது. அதனால் சுற்றுலாத்துறையை முறையற்று செயற்படுத்துபவர்கள் இலட்சக்கணக்கில் எமது நாட்டில் காணப்படுகின்றனர். இவ்வாறானவர்களின் செயற்பாடுகளினால் தெற்கிலுள்ள சுற்றுலாத்துறையானது பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தென் மாகாணத்தில் அமைந்துள்ள மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியை ரசிக்க வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மிகவும் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் சுற்றுலாத் திருவிழாவின் போது மிரிஸ்ஸ உட்பட அண்டிய பிரதேசங்களில் ஹோட்டல் அறைகளை பதிவு செய்வதில் கூட சிரமங்கள் காணப்படுகின்றன. அந்தளவுக்கு சுற்றுலாப் பயணிகள் நிரம்பிக் காணப்படுவர். அதனால் சுற்றியுள்ள வீடுகள் கூட வாடகைக்கு விடப்படுகின்றன.
இவை சுற்றுலாப் பயணிகளின் விருப்பின் பேரிலேயே இடம்பெறுவதால் சரியான பாதையை இவர்களால் தெரிவு செய்ய முடியாமல் போகின்றது. இதனாலேயே நிறைய சுற்றுலாப் பயணிகள் அசௌகரியங்களுக் குள்ளாக்கப்படுகின்றனர். கொஞ்ச காலம் செல்லச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு உரித்துடைய பணம் மற்றும் சொத்துகள் திருடப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டிருந்தன. இந்த திருட்டுச் சம்பவங்கள் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்குள்ளேயே இடம்பெற்றிருந்தன. மேலும் இரவு நேரங்களில் வீதிகளில் பயணம் செய்யும் பெண் சுற்றுலாப் பயணிகளின் கைப்பையையும் மோட்டார் சைக்கிள்களில் வரும் திருட்டுக் கும்பல் கொள்ளையிட்டுச் செல்கின்ற சம்பவங்களும் கடந்த காலங்களில் நிறையவே இடம்பெற்றிருந்தன.
மாத்தறை வலயத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி கயங்க ஹசந்த மாரப்பன தனது வேலையை பொறுப்பேற்றுக் கொண்டவுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையினால் அதிகமான கொள்ளையர்கள் அகப்பட்டுக் கொண்டதுடன் சட்ட விரோத நடவடிக்கைள் பலவும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. பொலிஸ் காவல் ரோந்து, மோட்டார் சைக்கிள் ரோந்து மற்றும் தொலைபேசி ரோந்து சேவைகளின் எண்ணிக்கையானது அவரின் கீழ் அதிகம் செயற்படுத்தப்பட்டன.
இருப்பினும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிந்த போதிலும் மிரிஸ்ஸ மற்றும் அண்டிய பிரதேசங்களில் இருக்கும் சுற்றுலா ஹோட்டல்களில் இடம்பெறும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதென்பது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. அதற்குக் காரணம் நிறைய ஹோட்டல்களுக்கு பிரபல அரசியல்வாதிகள் மற்றும் ஒருசில உயர் பொலிஸ் அதிகாரிகள் வந்து போவதேயாகும். இங்குள்ள அநேகமான ஹோட்டல்களில் இரவு உணவானது அதிகளவில் தயாரிக்கப்படுவதுடன், அதற்குத் தேவையான விதவிதமான போதைப்பொருட்கள் மற்றும் போதைத்தூள் என்பன குறைவின்றி சேர்க்கப்படுகின்றன. அவற்றை உண்டு, குடித்து, சந்தோஷமாகவிருந்து கடைசியில் நிர்வாண ஆட்டம் போட்டு, பாடி முழு கடற்கரைப் பிரதேசத்திலுமே பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொள்வது மிரிஸ்ஸ பகுதியில் புதிதாக முளைத்த சம்பிரதாயமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறான கடற்கரை விழாக்கள் தினந்தோறும் அதிகரித்தே செல்கின்றன. பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனமோ இவைகளை கட்டுப்படுத்துவதற்கோ மற்றும் இவற்றுக்கெதிரான சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ முன்வருவதில்லை. காரணம் வெளிநாட்டவர்கள் சங்கடப்படுவார்கள் என்பதாலோ தெரியவில்லை. அவ்வாறில்லையென்றால் திருட்டுத் தனமாக பெற்றுக் கொள்ளப்படும் பணம் வெளியே அம்பலப்பட்டுவிடும் என்பதாலோ தெரியவில்லை.
எது எவ்வாறிருப்பினும் இந்த செயற்பாடுகளுக்கு உதவி, ஒத்தாசை மற்றும் பாதுகாப்பு வழங்கும் உயர் அதிகாரிகள் முதல் தொழிலாளர்கள் வரை மதுபானம், பிரசித்தி பெற்ற உணவு வகைகள் மற்றும் பணம் என்பன பெற்றுக்கொள்வதாகவும் தகவல் தந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் கடந்த 8 ஆம் திகதி இரவு வேளையில் அவ்வாறான களியாட்டமொன்று மிரிஸ்ஸ சுற்றுலா ஹோட்டலொன்றில் நடைபெற்றுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி நம்நாட்டு வியாபாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தனவந்தர்களும் அந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர். சாதாரணமாக இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளுக்கு உட்புகுவதற்கான நுழைவுச் சீட்டு 3 ஆயிரம் ரூபாவாகும். உட்சென்ற பின்பு மதுபான வகை, உணவு வகை மற்றும் போதைப் பொருள், ஏனைய தேவைகளுக்காக பல ஆயிரம் ரூபாக்களை செலவு செய்கின்றனர். இவ்வாறான களியாட்டங்களின் போது ஹோட்டலொன்று சுமார் 50 இலட்சம் ரூபாவை இலாபமாக பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனால் எவருக்கும் கையை நீட்டிக் கொண்டு கைவிசேடம் கொடுக்க இவர்களால் முடியுமாகின்றது.
களியாட்டம் முடிந்து ஹோட்டலிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறிச் சென்றவுடன், இறுதியில் நெதர்லாந்து நாட்டு யுவதிகள் இருவரும் பிரித்தானிய நாட்டவரொருவரும் வரும் வேளையில் வேறொரு ஹோட்டலின் முன்னால் குடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவொன்று அவர்களை சேட்டை செய்திருக்கிறது. மேலும் கடற்கரை களியாட்ட நிகழ்வின் போதும் குறித்த வெளிநாட்டுப் பெண்களிடம் இந்த இளைஞர் குழுவானது தங்களது பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த இழிசெயலுக்கு மேற்படி நெதர்லாந்து பெண்கள் மறுப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிபெரும் சங்கடத்துக்குள்ளானது. எப்படியிருப்பினும் வெளிநாட்டு பெண்கள் இருவரும் இளைஞரொருவரும் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு அன்றயை தினமே மிரிஸ்ஸ பகுதியிலிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர். அதன் பிறகு அவர்கள் தங்களுக்கு நேர்ந்த அசம்பாவிதத்தை ஈ மெயில் மூலம் சுற்றுலாப் பொலிஸாருக்கு முறையிட்டிருந்தனர். அதன் பிறகு சில நாட்கள் கழித்து, வெலிகம தலைமையக பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவ ம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரிவிக்கப்படாததை அடுத்து இந்தச் சம்பவம் ஊடகங்களில் கசியத் தொடங்கிய பின்னரே இது தொடர்பான தகவல்களை திரட்ட ஆரம்பித்தனர். பிறகு வெளிநாட்டுப் பெண்களால் ஈ மெயில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரதியொன்றும் சுற்றுலா பொலிஸாரால் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. மேலும் அன்றைய களியாட்ட நிகழ்வில் அரசாங்கத்திலுள்ள பிரபல அரசியல்வாதிகளும் பங்கு கொண்டிருந்ததால் அவர்கள் அந்த ஹோட்டலிலிருந்து சென்று 1 மணி நேரத்துக்குப் பின்பே இச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் சி.சி.ரி.வி. கமரா ஆதாரங்களை பொலிஸாரால் திரட்ட முடியாமல் போனதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதற்கும் மேலாக கொழும்பின் பிரபல பாதாளக்குழுத் தலைவர்கள் மற்றும் பிரசித்தி பெற்ற குற்றம் புரிவோரும் மிரிஸ்ஸவில் இடம்பெறும் களியாட்ட நிகழ்விற்கு வருகை தருவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 சந்தேக நபர்களை வெலிகம பிரதான பொலிஸாரும் மேலும் இருவரை மாத்தறை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிவானின் உத்தரவுக்கமைய சிறையிலடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தின் சூடு தணிவதற்குள் வெலிகம, மிதிகம பிரதேசத்தில் இவ்வாறான துரதிர்ஷ்டமான சம்பவமொன்று பதிவாகியது. மிதிகம கடற்கரையில் வெளிநாட்டு யுவதியொருவர் அலைமிதவைப் பலகை விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது யுவதியின் குறித்த அலை மிதவைப் பலகையானது தவறுதலாக அப்பிரதேச இளைஞரொருவரின் கையில் பட்டு காயமேற்பட்டிருந்தது. இச்சம்பவம் மூலம் ஒருதொகை பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனக் கருதிய இளைஞன், வெளிநாட்டு யுவதியிடம் காயத்துக்கு மருந்து போடவென பணம் கேட்டுள்ளான். இதேநேரம் அவ்விடத்துக்கு வருகை தந்த 5 இஸ்ரேலியர்கள் மேற்படி சம்பவத்தில் தலையிட்டிருந்தனர். இங்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டுக்காரரொருவர் மிதிகம பிரதேச இளைஞனின் முடியைப் பிடித்து 1, 2, 3, 4 என அதிக தடவை கடலில் மூழ்கடித்ததாக நேரில் கண்ட சிலர் தெரிவித்திருந்தனர். அவ்வேளை அயலில் இருந்தவர்கள் ஒன்று கூடி 5 இஸ்ரேலியர்களையும் நன்றாக கைகளால் தாக்கிவிட்டு பின்னர் பொல்லுகளால் தாக்கி விரட்டியடித்தனர். இதில் மிதிகவை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞரொருவர் காயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இஸ்ரேலியர்கள் பொலிஸ் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தனர். மேற்கூறப்பட்ட இரு சம்பவங்களும் சர்வதேச ரீதியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் அதிகளவான வெளிநாட்டவர்கள் நம் நாட்டின் தெற்கு பிரதேசத்திற்கு செல்வதை பாதுகாப்பில்லாத பயணம் என தெரிவித்து சஞ்சரிப்பதை நிறுத்திக் கொண்டனர். சர்வதேச அளவில் இச்சம்பவங்கள் பேசப்பட்டதால் நம் நாட்டு அரசாங்கமும் இது தொடர்பில் கவனம் செலுத்தத் தொடங்கின.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன சுற்றுலா அமைச்சில் ஊடகவியலாளரிடம் தெரிவித்ததாவது;
மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற இந்த இரு சம்பவங்களிலும் தொடர்புபட்ட அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்வதாகவும் அதன் பொறுப்பை பொலிஸார் ஏற்றுக் கொள்வர் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் நம்நாட்டுக்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், நடைபெற்றிருக்கும் இந்தச் சம்பவங்கள் சர்வதேசத்தின் பார்வைக்குச் சென்றிருப்பதால் நம்நாட்டு சுற்றுலாத்துறைக்கு இது பாரிய விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். எப்படியாயினும் பொலிஸாரின் மீது முழு பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு அமைச்சரால் இதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. மிரிஸ்ஸ மற்றும் அதனை அண்டிய சுற்றுலாப் பிரதேசங்களை இவ்வாறான இழிவான செயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேறு சில நிறுவனங்களுக்கும் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் போதிய பாதுகாப்பை வழங்குவதிலிருந்தும் அந்நிறுவனங்கள் தவறியிருந்தன.
கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி மிரிஸ்ஸ பகுதியில் நடைபெற்றிருந்த கடற்கரை களியாட்ட நிகழ்வொன்றுக்கு இசை நிகழ்ச்சிக்கான அனுமதிப் பத்திரத்தை வழங்காதிருக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்த போதிலும் அரசியல்வாதிகள் சிலர் இதில் தலையிட்டு, “சுற்றுலாத் துறையை இல்லாமலாக்கப் பார்க்கிறீர்களா?’ என பொலிஸாரை எச்சரிக்கை செய்துவிட்டு அதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்திருந்தனர். அதற்கேற்ப மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெலிகம தலைமையக பொலிஸ் நிலையத்தோடு சேர்ந்து கனங்கே, அக்குரஸ்ஸ மற்றும் பிடபெந்தர ஆகிய பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளை வெலிகமவுக்கு அழைத்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.
சாதாரணமாக வெலிகம தலைமையக பொலிஸ் நிலையம் பற்றி மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையில்லை. காரணம் அவர்களின் அசமந்தமாக செயற்பாடுகளே. தினந்தோறும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவம் அடங்கிய ஏனைய குற்றங்கள் வெலிகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படாமல் இருந்தால் அது அபூர்வமே இன்னும் ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் இந்த ஹோட்டல்களில் நடைபெறும் சட்டவிரோத செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் அனைவருக்கும் தெரிந்த இரகசியமாகும். இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் இனங்காணப்பட்டு மாத்தறை வலையத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி காயங் ஹசந்த மாரடைப்பினால் இதற்கு முன்னரும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். இன்னும் சிலர் வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிகாரிகள் எவ்வாறாயினும் மீண்டும் வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு வரவே முயற்சி செய்கின்றனர். இது வெலிகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் சாதாரண விடயமாக பார்க்கப்படுகின்றது.
தலைமை பொலிஸ் பரிசோதகர் எவ்வளவுதான் தனது கடமையை நன்றாக செய்தாலும் ஒரு சில அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த முடியாமல் போகிறது. அந்தளவுக்கு அவ்வதிகாரிகள் மிகவும் சூட்சுமமான முறையில் அவர்களின் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
அதனால் பொலிஸ் அதிகாரி மாரப்பன இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவென மாத்தறை வலய அதிரடிப்படை பிரிவுக்கும் பொறுப்புக்களை ஒப்படைத்தார். வெலிகம தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களில் ஒரு சிலர் புகாரின் அடிப்படையில் ரொட்டும பொலிஸ்நிலையத்துக்கு புலனாய்வு பிரிவினரால் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் பொலிஸ் கொஸ்தம்பால் நிஷாந்த (27830), மாத்தளை வலய பொறுப்பதிகாரி மாரப்பன மூலம் மீண்டும் மாத்தறை வலய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் தொடர்பில் போதியளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் இஸ்ரேலியர்களை தாக்கிய சந்தேக நபர்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடிப்பது கஸ்டமான காரியமாக இருக்கவில்லை. இது தொடர்பில் வலய புலனாய்வுப் பிரிவின் தலைவர் எச்.கெ.கமலின் உத்தரவின் பெயரில் பொலிஸ் அதிகாரி மாரப்பனவின் அனுமதியுடன் பொலிஸ் அதிகாரிகள் சிலர் வெலிகம பிரதேசத்துக்குச் சென்று 4 சந்தேக நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர். இது சம்பந்தமாக இன்னுமொருவரும் வெலிகம பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் முதலாவது சம்பவத்துடன் தொடர்புடைய மிரிஸ்ஸ சுற்றுலா ஹோட்டல்கள் தொடர்ந்தும் நடத்திச் செல்வதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலானது இன்னும் தனது அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்றே அத்தியட்சகர் உபாலி ரத்னாயக்க தெரிவிக்கின்றார். அதனால் விசாரணை முடியும் வரை இந்த ஹோட்டலை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சாதாரணமாக சுற்றுலா சட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆயினும் மிரிஸ்ஸ பகுதியில் காணப்படும் பல ஹோட்டல்கள் அனுமதி பெறாமலேயே இயங்கி வருகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சம்பவமொன்று இடம்பெற்ற பிறகு அதுபற்றி தேடிப் பார்ப்பதைவிட அச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பு அவற்றைத் தடுப்பது குறித்த நிறுவனங்களின் பொறுப்பும் கடமையுமாகும். தெற்கில் சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் இவ்வாறான தொந்தரவுகள் இடம்பெறக் கூடுமானால் நம் நாட்டின் சுற்றுலாத் துறையானது பல விதங்களில் பாதிப்படையும் என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை தடுத்துக் கொள்வது தொடர்பில் இளைஞர் விவகார மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் தலைமையில் கலந்துரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது. அதில் சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இறந்த காலத்தில் இலங்கையானது வெளியாட்களை உபசரிப்பதில் பிரசித்தி பெற்றுக் காணப்பட்டிருந்தது. வெளியாட்களுக்கு முதலிடம் தரும் நாடாக காணப்பட்டது. இருப்பினும் நிகழ்காலத்தில் அது மாற்றமடைந்து வெளியாட்களுக்கு தொந்தரவு செய்யும் நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந் நிலையை தடுத்து சற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து கொள்ளும் பொருட்டு சகலரும் உதவி, ஒத்துழைப்புகளை வழங்குவது பொறுப்பும் கடமையுமாகும்.
தென் மாகாணத்துக்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் எவ். பெர்னாண்டோவின் கட்டளையின் பேரில் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் மாத்தறை வலய பொலிஸ் பொறுப்பதிகாரி கயங்க ஹசந்த மாரப்பன ஆகிய அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வெலிகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் மிலான் லசந்த புத்திக்க, மாத்தறை வலய குற்றத்தடுப்புப் பிரிவு தலைவர் ஜே.ஏ. சமன், வலய புலனாய்வுப் பிரிவு தலைவர் பொலிஸ் பரிசோதகர் எச்.கே.கமல், கான்ஸ்டபிள்களான வசந்த (55810), இந்துனில் (55988) மற்றும் நிஷாந்த (27830) ஆகிய அதிகாரிகள் உள்ளடக்கிய குழு இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக