கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

கூட்டு ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகிறார்களா?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரமானது பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற் சங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. இரண்டு வருடங்களுக்கொருமுறை மேற்கொள்ளப்படும் இக்கூட்டு ஒப்பந்தமானது, ஒவ்வொரு வருடமும் சர்ச்சையிலேயே முடிவடைந்திருக்கின்றது. இறுதியாக 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது 18 மாதங்கள் தாமதத்தின் பின்பே மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலாவதியான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தமானது மீண்டும் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதியே கைச்சாத்திடப்பட்டது.
இந்த 18 மாதகால தாமதத்தின் காரணமாக 2017 மார்ச் மாதம் மீண்டும் இடம்பெறவேண்டிய கூட்டு ஒப்பந்தம் 2018 அக்டோபர் மாதத்திற்கு பின்தள்ளப்பட்டதால் தொழிலாளர்களே அதிக நஷ்டத்தை சந்தித்திருந்தார்கள். மேலும் இதுவரை காலமும் தாமதமான 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. அவை தொடர்பாக கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற எந்தவொரு தொழிற்சங்கமும் வாய்திறக்கவில்லை. இதன்மூலம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் 35,000 ரூபாவுக்கும் அதிகமான தொகை இழப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக போராடிய தொழிலாளர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
இந்நிலையிலேயே கூட்டு ஒப்பந்தம் ஒரு வருடம் காலதாமதமாகியதினால் தோட்டத் தொழிலாளர்கள் 840 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். இறுதியாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தொழிலாளி ஒருவர் ஒரு மாதத்திற்கு 3500 ரூபாவை இழந்துள்ளனர். அதற்கமைய 12 மாதங்களுக்கும் 42,000 ரூபாவை இழந்திருந்தனர். இதன்படி ஒரு வருடத்தில் 2 இலட்சம் தொழிலாளர்களும் 840 கோடி ரூபாவை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டு ஒப்பந்தமானது தொடர்ச்சியாக இழுபறி நிலைக்குச் சென்றதால் தொழிலாளர்களும் வாரக்கணக்கில் வேலைநிறுத்தப் போராட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தவாறான தீர்வுகளோ சம்பள அதிகரிப்புகளோ வழங்கப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளும் போதும் தாமதமாகும் நாட்களுக்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்படுவதே வழமையானதாக இருந்து வந்தது. ஆனால், இறுதியாக நடைபெற்ற ஒப்பந்தத்தின் பின்னரான நிலுவைத் தொகை 2 வருடங்களை கடக்கப்போகும் நிலையிலும் வழங்கப்படுவதாக தெரியவில்லை.
இது தொழிலாளர்கள் வெளிப்படையாக ஏமாற்றப்பட்டமைக்கு ஆதாரமாகும். கடந்த பொதுத் தேர்தலின் போது மலையகத் தலைவர்கள் அனைவரும் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுப்போம் என்று வாக்குறுதி வழங்கியமையின் வெளிப்பாடாக கூட்டு ஒப்பந்தத்திலும் அதே 1000 ரூபா எதிரொலிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவும் கிடைக்கவில்லை. நியாயமான சம்பள அதிகரிப்பும் கிடைக்கவில்லை. இந்தத் தோல்விக்கு ஒவ்வொருவரும் மற்றவர்களை குறைகூறிக் கொண்டு அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இளையதம்பி தம்பையாவால் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் சம்பளத்துக்கான ஒப்பந்தத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி தொழிற்சங்கங்களுக்கான சந்தாப் பணம் மாத்திரம் எவ்வித இடையூறுகளுமின்றி சென்றுகொண்டிருக்கின்றது. அதற்காகவாவது தொழிலாளர்களுக்கு இவர்கள் நன்மை செய்தாக வேண்டும். ஆனால், எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் நிறைவுபெறவுள்ள தற்போதைய கூட்டு ஒப்பந்தமானது மீண்டும் கைச்சாத்திடும்போது தொழிலாளர்களுக்கான சலுகைகள் கட்டாயம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
2016ஆம் ஆண்டின் சந்தாப் பணத்தின் கணக்காய்வுத் தரவுகளின்படி பின்வருமாறு தொழிற்சங்கங்களுக்கு சந்தாப்பணம் மூலம் வருமானம் கிடைத்துள்ளன.
தோட்டத் தொழிலாளர்கள் எண்ணிக்கை = 386,052
மாதாந்த சந்தா கட்டணம் = 150 ரூபா (இவை கட்சிகளுக்கிடையே வேறுபடும்)
மொத்த சந்தா = 386,052 தx 150
= 5,79,078,800 (அண்ணளவாக 6 கோடி)
வருடத்துக்கு = 5,79,078,800 x 12
= 69,48,93,600 (அண்ணளவாக 69.5 கோடி)
இவ்வாறு கோடிகளில் சந்தாப்பணத்தை பெற்றுக்கொள்கின்ற தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் நலன்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கவேண்டியது அவசியமாகும். வெறுமனே மேதினத்துக்கும் மகளிர் தினத்துக்கும் தொழிலாளர்களை மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி, புகைப்படமெடுத்துக்கொண்டால் மாத்திரம் அவர்களின் குறைகளை போக்கிவிட முடியாது. அவர்களுகடைய தேவை தொழிலுக்கேற்ற நியாயமான ஊதியம். இலங்கையில் கடுமையான உழைப்பை விற்று குறைந்த ஊதியம் பெறும் மக்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களே இருக்கின்றனர்.
இறுதியாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி, நாட்சம்பளமாக 500 ரூபாவும் வருகை ஊக்குவிப்புக்காக 60 ரூபா வழங்கப்படும். இது வேலை நாட்களில் 75 வீதமான வருகை ஊக்குவிப்புக்காக வழங்கப்படுகிறது. இவற்றில் ஞாயிறு, போயா, ஏனைய சட்டமுறைப்படியான விடுமுறை தினங்கள் கணக்கில் கொள்ளப்படாது. இதற்கு முன்னைய 3 மாதங்களில் ஒருவர் 75 வீத வருகையை பதிந்திருந்தும் நடப்பு மாதத்தில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் காரணமாக 75 வீதத்தை அடையவில்லையெனில் அவர் வைத்தியசாலையில் தங்கியிருந்த நாட்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு கணிக்கப்படும்.
மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவும் விலைக்கேற்ற கொடுப்பனவாக 30 ரூபாவும் மேலதிக ஒரு கிலோ தேயிலைக்கு 25 ரூபாவும் வழங்கப்படும். அத்தோடு ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரியும் சந்தர்ப்பத்தில் அடிப்படைச் சம்பளத்தின் ஒன்றரை மடங்கான 750 ரூபா வழங்கப்படுவதோடு விலைக்கேற்ற கொடுப்பனவான 30 ரூபாவும் வழங்கப்படும். ஆனால், அடிப்படையில் பெரும்பாலான தொழிலாளர்கள் 590 ரூபாவையே சம்பளமாக பெற்றுவருகின்றனர். 18 கிலோ கொழுந்து பறித்தாலே ஒருநாளைக்கு 730 ரூபா என்ற முழுமையான சம்பளத்தை பெறமுடியும். வேலை செய்யும் எல்லா நாட்களிலும் 18 கிலோ கொழுந்து பறிப்பதென்பது சங்கடமான காரியமாகவே இருக்கிறது.
இந்த ஏமாற்று வேலையை மூடிமறைக்க இடைக்கால கொடுப்பனவாக தொழிலாளர்களுக்கு 2500 ரூபா வீதம் வழங்கப்பட்டது. அதுவும் பின்னர் நிறுத்தப்பட்டு, வழங்கிய இடைக்கால கொடுப்பனவுகளும் தொழிலாளர்களின் சம்பளத்தில் மீளவும் அறவிடப்பட்டது. ஒரு நாளைக்குப் பறிக்கும் கொழுந்தில் தராசு, கொழுந்து நிறுவை செய்யும் தட்டு என்பவற்றுக்கு 4-6 கிலோ கொழுந்து கழிக்கப்பட்டே தொழிலாளர்களுக்கு வரவு வைக்கப்படுகிறது. இது கொழுந்து விளைச்சல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இச்செயன்முறை வழமையானதாகவே இருக்கும் நிலையில் தினமும் 18 கிலோ கொழுந்து பறித்தாலே முழுநாள் சம்பளம் வழங்கப்படும் எனும் எழுதப்படாத சட்டத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்.
தற்போதைய கூட்டுவொப்பந்தம் காலாவதியாகும் நிலையை அண்மித்துள்ள வேளையில் மீண்டும் புதுப்பிக்கப்படும் கூட்டுவொப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது தொழிலாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விடயங்களை முன்னிலைப்படுத்தி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கான முறையான சம்பளவுயர்வு, சேமநலன்கள், ஏனைய சலுகைகள் என்பவற்றுக்கு முதன்மையிடம் வழங்க வேண்டும். கூட்டு ஒப்பந்தம் மாத்திரமே தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் சந்தர்ப்பமாகவும் அமைகின்றது.
அதேவேளை, இலங்கைத் தேயிலைக்கு சர்வதேசளவில் கிராக்கி இருக்கின்ற நிலையிலும், அவற்றை முறையாக ஏற்றுமதி செய்வதில் பல்வேறு சவால்களை இலங்கை எதிர்நோக்கியுள்ளது. அண்மையில் இலங்கைத் தேயிலையில் சீனி கலக்கப்படுவதாக பல தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனால் இலங்கைத் தேயிலை ஏற்றுமதிக்கு சர்வதேச ரீதியில் பாதிப்பு ஏற்படும் நிலையில் அது தேயிலையையே நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும்பாதிப்பாக அமையும். ஆனால், இவைதொடர்பில் தொழிலாளர்களுக்கு போதிய விளக்கம் இல்லை. பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் இவற்றுக்கெதிராக இதுவரையும் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை.
எனவே, சம்பள அதிகரிப்புக்காக மாத்திரம் குரல் கொடுக்க தொழிற்சங்கங்கள் இருக்கக்கூடாது. மாறாக இலங்கைத் தேயிலைக்கும் அதனால் தொழிலாளர்களுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகள் போன்ற தூரநோக்கு செயற்பாடுகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதை விடவும் தொழிலாளர்களுக்கு தோட்டக்காணிகளை பகிர்ந்தளித்தல், தேயிலை மலைகளை தோட்ட நிர்வாகங்கள் முறையாக பராமரிக்காமை, தொழிலாளர்கள் மீது தோட்ட உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளும் தொடர்ச்சியான தாக்குதல்கள், தொழிலாளர்களின் மதஉரிமைகளை மீறும் வகையிலான செயற்பாடுகள் போன்ற பல்வேறு நெருக்கடிகளை இவர்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் நிலையில் இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப்போவது யார்? மலையகத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் முதலாளிமார் சம்மேளனத்துக்கு தலைவணங்குபவர்களாகவே இருக்கின்றனர்.
மேற்கூறிய சகலவிடயங்களும் தொழிலாளர்களுடைய நலன்களிலேயே அடங்கியிருக்கின்றன. எனவே, அந்த நலன்களை பாதுகாக்க வேண்டிய நிலைப்பாட்டிலும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சுவார்த்தைகளிலும் ஒப்பந்தங்களிலும் கலந்துகொள்ளும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன் தொடர்பில் குரலெழுப்ப வேண்டுமே தவிர, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும் தொழிற்சங்க பலத்தை எடுத்துக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தக்கூடாது. கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தத்தை நீக்கவேண்டுமென்ற கோஷங்கள் மேலெழுந்திருந்தன. ஆனால், அவை பிற்காலங்களில் தணிந்துபோய்விட்டன. மீண்டும் அடுத்த ஒப்பந்தகாலத்தின் போது மேலெழலாம்.
அதேவேளை, கூட்டுவொப்பந்த பேச்சுவார்த்தைகளில் அரசதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளீர்க்க வேண்டுமென்று கோரி கடந்த காலத்தில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அரசதரப்பு பிரதிநிதிகளாக பெருந்தோட்ட கைத்தொழில் அøம்ச்சரையும், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரையும் தொழில் ஆணையாளரையும் உள்ளடக்கியிருந்தும்கூட காத்திரமான தீர்வுகளை பெற்றுக்கெள்ள முடியவில்லை. எனின், கூட்டுவொப்பந்த மேடையானது ஒரு பலவீனமான அசம்சமாகவே இருக்கின்றது. இந்த பலவீனமே முதலாளிமார் சம்மேளனத்துக்கு பலமாக அமைந்திருக்கின்றது. தொழிலாளரின் பலம் தொடர்பில் உலகே அறிந்திரக்கின்ற நிலையில் இங்கு தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைமைகள் கோமாளிகளாக செயற்படுவது வேதனையானது.
எனவே, இவ்வாறான தவறுகளை திருத்திக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பமாக அடுத்த கூட்டுவொப்பந்த மேடையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்டுவொப்பந்தத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் ஏமாற்றப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக ஒப்பந்தம் அமைய வேண்டும். இதுவரை இழைக்கப்பட்ட துரோகங்கள் களையப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக