இலங்கையில் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவானது கடுமையாக அதிகரித்திருக்கிறது. உலகில் அதிக செலவு கூடிய நகரங்களின் பட்டியலில் கொழும்பு முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் போதிய வருமானமின்றிய நிலையில் பலரும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பாக நேசப்பட்டாலும் இறுதியாக அவற்றில் விலை அதிகரிப்பு எவையும் மேற்கொள்ளப்படாதென வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் எதிர்வரும் புதுவருடத்தினை முன்னிட்டு இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா அல்லது நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்களை சமாளிக்க இவ்வறிவிப்பு வெளியாகியிருக்கின்றதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் சமையல் எரிவாயுவின் அதிகரிப்பு நுகர்வோரை அதிகம் பாதிக்கும் என்பதே உண்மை.
ஒவ்வொரு வருடமும் எரிவாயு சிலிண்டரின் விலையானது அதிகரித்தும் குறைந்தும் செல்வதை காணக்கூடியதாகவிருக்கிறது. எரிவாயு சிலிண்டரின் விலையானது அதிகரிக்கும் பட்சத்தில் நுகர்வோர் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர். இதனால் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். தேநீர் முதல் உணவுப் பொதிவரை எல்லாவற்றிலும் இது தாக்கத்தை செலுத்தும். இந்தக் காரணங்களினாலேயே எரிவாயு சங்கம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை என்பன விலைச் சுட்டெண்ணுக்கு இணங்க எரிவாயுவின் விலை மட்டத்தை கூட்டி குறைக்கின்றன.
நுகர்வோர் அதிகார சபையின் 14 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படும் பட்சத்தில் உற்பத்தி நாடுகள், விலை நிர்ணயம், சந்தை நிலைவரம் மற்றும் தேசிய விலை நிர்ணயம் பற்றி கவனத்தில் கொள்ளப்படும். அங்கு விலை நிர்ணயமானது 2003 இல. 09 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் சட்ட மூலத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
14 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பொருளொன்று சம்பந்தமான சரியான விலையொன்றை நிர்ணயிப்பதில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வேளையில், 18 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பொருளொன்றின் சரியான விலையை தீர்மானிப்பதில் அதிகார சபையே அக்கறை கொள்ள வேண்டும். 19 மற்றும் 20 ஆம் இலக்க சட்டங்களுக்கு ஏற்ப வர்த்தமானி மூலம் நியம விலையை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறான சட்டங்களின் கீழேயே எரிவாயுவின் விலையானது கூட்டி குறைக்கப்பட வேண்டும்.
இலங்கையில் எரிவாயுவினை நுகர்வோருக்கு விநியோகிப்பது லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு ஆகிய இரண்டு பிரதான நிறுவனங்களே. இந்த இரு எரிவாயு நிறுவனங்களினதும் சந்தைக்குள் அதிகமான விற்பனை விநியோகத்தை மேற்கொள்வது லிட்ரோ எரிவாயு நிறுவனமாகும். அது 72 வீதமாக காணப்படுகிறது.
2010 ஆம் ஆண்டுவரை இரு நிறுவனங்களினதும் 12.5 கிலோ எரிவாயு சிலண்டரின விலையில் வித்தியாசம் காணப்பட்டது. அதாவது லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையானது 1,652 ரூபாவாகவும் லாப் எரிவாயு சிலிண்டரின் விலையானது 1,520 ரூபாவாகவும் காணப்பட்டது. இருப்பினும் 2011 டிசம்பர் மாதத்திலிருந்து இந்த விலைகளில் மாற்றம் இல்லாது போனது. அதிலிருந்து இரண்டு எரிவாயு நிறுவனங்களும் 12.5 கிலோகிராம் சிலிண்டரை 2,064 ரூபாவுக்கு விற்பனை செய்தன. 2012 ஆம் ஆண்டு முதல் அரையாண்டு காலப்பகுதியில் எரிவாயுவின் விலையானது 2,246 ரூபாவாக காணப்பட்டது. மேலும் 2013 ஆம் ஆண்டு 2,796 ரூபாவாகவும் 2014 ஆம் ஆண்டு 2,146 ரூபாவாகவும் காணப்பட்ட எரிவாயு விலையானது, அரசாங்கம் மாறிய வேளையில், 1346 ரூபாவாக குறைக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு எரிவாயு விலையானது 1,321 ரூபாவாகக் காணப்பட்டது. படிப்படியாக குறைந்து சென்ற எரிவாயு சிலிண்டரின் விலையானது 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து 1431 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இதுவரையிலும் சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆதலால் மாற்றத்தை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பிலும் விலையில் மாற்றம் ஏற்படுமா என்பது தொடர்பிலும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முகாமைத்துவ நிர்வாகப் பிரிவு அதிகாரி சமிந்த எதிரிவிக்கிரம மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரட்ன ஆகியோர் பின்வருமாறு தெரிவித்திருந்தனர்.
எச்.பி. எரிவாயு என்ற பொருளானது அத்தியாவசியமான பொருளாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே அது விலை நிர்ணயிக்கப்பட்ட ஒரு பொருளாகவும் காணப்படுகிறது. அதனால் நிறுவனங்கள் தங்களுக்கேற்றவாறு விலைகளை தீர்மானிக்க முடியாது. எரிவாயுவின் விலையை தீர்மானிப்பது நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரியே. அச்சபையால் நுகர்வோர் மற்றும் நிலையங்கள் என இருபக்கம் சார்பாகவும் தேடிப்பார்த்தே விலையானது தீர்மானிக்கப்படுகிறது. இந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவென விதிமுறையொன்று உண்டு. எரிவாயு தொடர்பாக இரு நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவைகளுக்கு விலை நிர்ணயமொன்று காணப்படுகிறது. (இருப்பினும் அது தற்போது செயற்பாட்டு மட்டத்தில் இல்லை)
இந்த விலை நிர்ணயத்துக்கு ஏற்பவே எரிவாயுவின் விலை கூட்டி குறைக்கப்படுவது நடைபெறுகிறது. இதில் நிறைய காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. உலக சந்தைகளில் எரிவாயுவின் விலை, கப்பலுக்கு செலுத்த வேண்டிய பணம் என்பவற்றை குறிப்பிடலாம். இலங்கையில் எரிவாயு தயாரிப்பானது 100 க்கு 2 வீதமே நடைபெறுகிறது. ஏனையவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன. எரிவாயு கப்பல்களின் மூலமே கொண்டுவரப்படுகின்றது. அதனால் கப்பலுக்கு ஒரு தொகையை செலுத்த வேண்டும். கப்பலுக்கு செலுத்த வேண்டிய தொகையும் காலத்துக்குக் காலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபை அதிகாரியுடன் நிறுவனமொன்று பெற்றுக் கொள்ளக்கூடிய இலாப மட்டம் சம்பந்தமாக ஒப்பந்தமொன்றுக்கு வந்துள்ளன. இதைவிடவும் எரிவாயு போக்குவரத்து, எரிவாயு களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், விற்பனைக்கு பொறுப்பான அதிகாரியின் சம்பளம் ஆகிய காரணங்களும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். அவ்வாறே கம்பனியின் இலாபம் மற்றும் விநியோகம், விநியோகத்தர்களின் இலாபப்பங்கு என்பன வேறுபடாத தன்மையும் காணப்படுகின்றன. மாறுபடும் செலவுகளாக கப்பல் செலவு மற்றும் உலக சந்தை பெறுமதி என்பன காணப்படுகின்றன.
மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலேயே கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் விலை நிர்ணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விலைச்சுட்டெண்ணுக்கு ஏற்ப நுகர்வோர் அதிகார சபைக்கு எரிவாயு விற்பனை செய்யும் நிறுவனங்கள் மேற்படி காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இரு மாதங்களுக்கு ஒரு தடவை எரிவாயு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான தகவல்களை வழங்கக்கூடிய உரிமை உண்டு. அந்த உரிமையை அடிப்படையாகக் கொண்டு இரு மாதங்களுக்கு ஒரு முறை விலை மாற்றம் செய்வது தொடர்பாக வேண்டுகோள் விடுக்கப்படும். இது நிலையத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு சிறு செயற்பாடே. அதில் விலை அதிகரிக்கவும் கூடும் குறையவும் கூடும்.
உலக பொருளாதார சந்தையில் பல மாதங்களில் விலை கூடிக் குறையும். அதனால் கப்பல் செலவும் கூடிக் குறையும். அதற்கேற்பவே விலை மாற்றத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. இதற்கான இறுதி முடிவை நுகர்வோர் அதிகார சபையே மேற்கொள்ளும். இச்சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறே அதிகார சபை செயற்பட வேண்டும். எமது நாட்டில் எரிவாயு தயாரிப்பதென்றால் பிரச்சினையில்லை. இறக்குமதி செய்வதால் உலக சந்தை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முகாமைத்துவ நிர்வாகப் பிரிவு அதிகாரி சமிந்த எதிரி விக்கிரம தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் எரிவாயுவின் பாவனையானது வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த அதிகரிப்பு ஏற்படும் வேளையில் விநியோகம் அதிகரிக்காத பட்சத்தில் எரிவாயுவின் விலையானது அதிகரிக்கும். ஐரோப்பாவில் குளிரான காலநிலையின் போது எரிவாயுவின் விற்பனை அதிகமாக காணப்படும். அக்காலம் இல்லாவிடில் விற்பனை குறைந்துவிடும்.
இந்நிலைமை தொடர்பாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரட்ன பின்வருமாறு தெரிவித்திருக்கிறார். தற்காலத்தில் எரிவாயுவானது அத்தியாவசிய பொருளாகவே நோக்கப்படுகிறது. நிரந்தர பொருளொன்றின் விலையை மாற்ற வேண்டுமென்றால் அதற்கு நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். வியாபார நிலையங்கள் சிலவேளைகளில் விலையை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. அதை நாங்கள் தேடிப்பார்த்து வேண்டுகோள் சாதாரணமானதா? இல்லையா? என்பதை தீர்மானிப்போம். எரிவாயு என்பது நாம் எப்போதும் அவதானிப்புகளுடன் இருக்கக்கூடிய ஒரு பொருளாகும். தேநீர் , அப்பம் என்பவற்றிலிருந்து விலை அதிகரிக்கக்கூடிய அனைத்திலும் எரிவாயுவின் விலையானது தாக்கம் செலுத்துகிறது. அது நுகர்வோருக்கு அதிக சுமையை ஏற்படுத்துமென அவர் தெரிவித்திருக்கிறார்.
எவ்வாறெனினும் ஒவ்வொரு தடவையும் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் தங்களுடைய வசதிக்கேற்ப விலைகளை நிர்ணயம் செய்து வந்திருக்கின்றன. அரசியல் சூழ்நிலைகளும் அதில் பாதிப்பு செலுத்தியுள்ளன. இன்று 4 ஆம் திகதி இலங்கை அரசியலில் ஏற்படப்போகும் மாற்றம் மீண்டும் புதிய விலை நிர்ணயங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம். எவ்வாறெனினும் வருமானம் குறைந்த மக்களுக்கு இவ்வாறான விலையேற்றங்கள் அதிகம் தாக்கத்தை கொடுக்கின்றன. எனவே மக்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
க.பிரசன்னா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக