கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

16 ஜூன், 2018

இலங்கை தேயிலைக்கு சாவுமணி?


அரிசியில் கல், பிளாஸ்டிக் அரிசி என கலப்படம் செய்கிறார்கள். அதேபோல் மிளகாய்த்தூளில் செங்கல்தூள் சிவப்பு வர்ணம் கலக்கிறார்கள். இப்படி எங்கும் எதிலும் கலப்படம் செய்து மக்களின் பணத்தை சூறையாடுவதற்கு ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. அவர்கள் தற்போது தேயிலையையும் விட்டுவைக்கவில்லை. மலையக மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக தேயிலையே வருமானத்தை கொடுக்கின்றது. அவ்வாறான நிலையில் தேயிலையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான கலப்படங்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதித்து விடாதா? தேயிலைத் தூளுடன் சீனியை கலந்து விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடளாவிய ரீதியில் 53 தொழிற்சாலைகள் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமையினால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கைத் தேயிலையின் மீது மீண்டும் தடைகள் ஏற்படுத்தப்படுமா? என்ற அச்ச சூழ்நிலை உருவாகியுள்ளது. இலங்கைத் தேயிலை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன் மூலம் இலங்கையானது அதிக அன்னியசெலாவணியையும் பெற்றுக் கொள்கின்றது. இவ்வாறான நிலையில் தரமான ஏற்றுமதியினை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். சர்வதேச சந்தையில் போட்டித் தன்மை காணப்படுவதால் இவை அவசியம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
இலங்கைத் தேயிலையானது 150 வருடங்கள் பழைமையான வரலாற்றைக் கொண்ட முன்னணி தேயிலையாகும். ஆனால் கடந்த டிசம்பர்மாதம் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையில் ’கப்ரா பீட்டில்’ எனப்படும் வண்டு இருந்தமையால் டிசம்பர் 18 ஆம் திகதி முதல் இலங்கை தேயிலைக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஜனவரி 30 ஆம் திகதி தடை அகற்றப்பட்டது. இருப்பினும் கடுமையான கண்காணிப்புகளுக்கு இலங்கைத் தேயிலை உட்படுத்தப்படுமென ரஷ்யா எச்சரித்துள்ளது. இவ்வாறான நிலையில் தேயிலைத் தூளில் சீனியைக் கலப்படம் செய்வது இலங்கைத் தேயிலையின் ஆயுளைக் குறைக்கும் செயலாகும்.
இப்பிரச்சினை தொடர்பாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி கடிதமொன்றையும் எழுதி வைத்துள்ளார். இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களிலுள்ள 80 தொழிற்சாலைகளில் இவ்விடயம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் 53 தொழிற்சாலைகளில் தேயிலை அரைக்கும் போது குளுக்கோஸ் மற்றும் சீனி கலவைகள் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட தெரிவித்தார். தேயிலை சபையானது பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ்வருவதால் தொழிற்சாலைகளின் பெயர் விடயங்களை அமைச்சர் வெளியிட வேண்டும்.
இவ்விடயத்தினால் தேயிலை செயற்பாடுகளை சரியாக முன்னெடுக்கும் ஏனைய 27 தொழிற்சாலைகளுக்கும் கலங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 53 தொழிற்சாலைகளின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு அக்கடிதத்தில் வலியுத்தப்பட்டிருந்தது. இவ்விடயமானது இலங்கை தேயிலை நாமத்திற்கு சர்வதேச ரீதியில் கலங்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாகவே காணப்படுகின்றது. இதனால் இலங்கைத் தேயிலையினை இறக்குமதி செய்யும் நாடுகள் இறக்குமதியைத் தடைசெய்யும் நிலையை ஏற்படுத்தலாம். தேயிலை பொதிகளின் எடையை அதிகரிக்கவும், சுவையினை மாற்றியமைக்கவும் இவ்வாறான கலப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கைத் தேயிலையினை முன்னாள் சோவியத் நாடுகள், ஐக்கிய அரபு இராச்சியம், ரஷ்யா, சிரியா, துருக்கி, ஈரான், ஐக்கிய இராச்சியம், எகிப்து, லிபியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. 2017 ஆம் ஆண்டில் மாதமொன்றுக்கு 30 மில்லியன் கிலோகிராம் அளவில் 10 மாதங்களில் 2915 மில்லியன் (23 மில்லியன் டொலர் பெறுமதியான) கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது. இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் ஈரானும் முதலிரு இடங்களில் இருக்கின்றன. ஈரான் 33 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும் ஈராக் 32 மில்லியன் கிலோகிராம் தேயிலையையும் துருக்கி 27 மில்லியன் கிலோகிராம் தேயிலையையும் துபாய் 18 மில்லியன் கிலோகிராம், லிபியா, சிரியா போன்ற நாடுகள் 12 மில்லியன் கிலோகிராம் தேயிலையையும் இறக்குமதி செய்கின்றன. இலங்கைத் தேயிலையில் காணப்பட்ட தரம் குணம் காரணமாக 150 வருடங்களாக இலங்கைத் தேயிலைக்கான சர்வதேச கிராக்கி உச்ச நிலையில் காணப்படுகின்றது.
தேயிலையினை நீராவியில் வாட்டும் முறை பல தொழிற்சாலைகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது. பின்னர் காயவிட்டு தேயிலைதூள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாறு அரைக்கப்பட்ட தேயிலையுடன் சீனி மற்றும் குளுகொஸ் போன்றவற்றை கலப்பதாகவே தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதேபோலவே கழிவுத் தேயிலையினை கலப்படம் செய்து விற்பனை செய்வதும் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இதேபோலவே தேயிலை பைகளுக்கு சுண்ணாம்பு கலக்கும் மோசடியும் இடம்பெற்று வருகின்றது. தேயிலை பைகளை வெந்நீரில் அழுத்தியவுடன் அதிக சாயம் கிடைக்கும் என்பதால் சிறுதேயிலை உற்பத்தியாளர்களால் இம்மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளினால் உலகச் சந்தையில் இலங்கையின் தேயிலைக்கு அபகீர்த்தியே ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இவை உடனடியாக தடுக்கப்படவேண்டும்.
இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யும் பிரதேசங்களின் அடிப்படையில் இரண்டு வகை தேயிலைகள் காணப்படுகின்றன. இதன்படி உயர் நிலை தேயிலை மற்றும் தாழ்நிலத் தேயிலை என இரண்டு வகை இருக்கின்றன. இதில் மிகவும் குணமும் சுவையும் கொண்ட தேயிலையாக உயர்நிலைத் தேயிலை (மலையகப்பகுதி) கருதப்படுகிறது. அதன் நிறம் கடும் கறுப்பு இருந்தும் தாழ்நிலத் தேயிலை கடும் கறுப்பு நிறமாக காணப்படுவதால் பெறுமதி அதிகரிக்கிறது. இதனால் தென்பகுதி தேயிலையில் கறுப்பு நிறம் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. எனவே, கறுப்பு நிறத்துக்காக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் பல்வேறு யுத்திகளை கையாளுகின்றனர். இதற்கு அவர்கள் கண்டுபிடித்துள்ள ஒரு முறைதான் உலரவிட்டு காய்ந்த கொழுந்தை அரைக்கும் போது சீனியை கலப்பதாகும். இவ்வாறு நிறத்தை அதிகரிப்பதற்காக சீனியை கலப்பது தொடர்பாக தேயிலை ஆராய்ச்சி நிலையம் ஆய்வொன்றை மேற்கொண்டதுடன் இது சாதகமான முறையாக காணப்பட்டாலும் தேயிலையின் குணம் மற்றும் தரம் பாதிக்கபடுவதால் அதை தடைசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் தரமற்ற தேயிலையை தரமான தேயிலை என ஏற்றுமதி செய்வதால் ஏற்றுமதிச் சந்தைக்கு பாரிய அச்சுறுத்தலாகவிருக்கும்.
இருந்தும் தரமான தேயிலையை உற்பத்தி செய்யக் கஷ்டமென்பதால் பெரும்பாலான தேயிலை உற்பத்தியாளர்கள் தேயிலை உற்பத்தி செய்யும் போது சீனி அல்லது குளுகோஸ் கலந்து தரமானது எனக் காண்பித்து அதிக இலாபத்தைப் பெற முயற்சிக்கின்றனர். தாழ்நிலப்பகுதி தேயிலை உற்பத்தியாளர்கள் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம் அப்பகுதி தேயிலை கறுப்பு நிறமாக இருப்பதால் அதன் பெறுமதி அதிகரிப்பதேயாகும். (தகவல் - ராவய)
தேயிலையானது கொள்வனவு செய்தவுடன் உடனடியாக ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. சாதாரணமாக தேயிலையை மூன்று வருட காலம் வைத்திருக்க முடியுமென்பதால், ஏற்றுமதியாளர்கள் கொள்வனவு செய்த தேயிலையை சிலமாதங்கள் தமது களஞ்சியசாலைகளில் வைத்திருப்பர். ஆனாலும் சீனி கலந்த தேயிலையை ஆறுமாத காலத்துக்கு மாத்திரமே பழுதுபடாமல் வைத்திருக்க முடியும். எனவே, ஏற்றுமதிக்கு முன்பாகவே இத்தேயிலை பழுதடைந்துவிடும். அதேபோல் தேயிலை பூஞ்சணம் பிடிப்பதால் சிறிதுகாலம் சென்றவுடன் அஞூடூச்tணிதுடிண என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனத்தை உற்பத்தி செய்யுமென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (தகவல் - ராவய)
இவ்வாறான நிலைமையில் மேற்கூறிய விடயங்கள் இலங்கைத் தேயிலையின் தரத்தினையும் மதிப்பினையும் தரமிழக்கச் செய்வதாகவே அமைந்திருக்கிறது. இது தேயிலையையே நம்பி வாழ்கின்றவர்களுக்கு அடிக்கப்பட்டுள்ள சாவு மணியாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதனை இலங்கை தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகள் அவதானிக்குமாயின் மிகப்பெரும் ஆபத்தாகவும் அமையலாம். இன்று இலங்கையில் தேயிலை 187,309 ஹெக்டேயரில் பயிரிடப்பட்டுள்ளது. இதற்கமைய நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, காலி, மாத்தறை, மொனராகலை, பதுளை, கேகாலை, குருநாகல், அம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய பகுதிகளில் தேயிலை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 1867 ஆம் ஆண்டு பிரித்தானிய நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர் கண்டி பிரதேசத்தில் தேயிலை துறையை ஆரம்பித்து வைத்தார். தேநீரானது இலங்கையில் பிரதான 3 உணவுகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதியில் 6.2% பங்களிப்பை வழங்கி உலகில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கை சனத்தொகையில் 20 வீதமானோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ தேயிலை தொழிற்துறையில் இருக்கின்றனர். இந்நாட்டுக்கு அன்னிய செலாவணியில் 16% பங்களிப்பையும் விவசாய ஏற்றுமதி வருமானத்தில் 65 வீதத்தையும் தேயிலை வழங்கி வருகிறது. இவ்வாறு இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்ற தேயிலையின் தரத்தினை கலப்படம் செய்வதால் ஏற்படப்போகும் இழப்பு தேயிலையை நம்பி வாழும் சகலரையும் பாதிப்பதாகவே அமைந்திருக்கிறது.
தற்போது 82 தொழிற்சாலைகளின் தேயிலை மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர் தேயிலைத் தூளுடன் சீனி கலந்த சம்பவம் பதிவாகியிருப்பதால் குறித்த தொழிற்சாலைகளை தடைசெய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தேயிலைத் தூளுடன் சீனியைக் கலந்து விற்பனை செய்த இரண்டு தேயிலைத் தொழிற்சாலைகள் அண்மையில் இரத்தினபுரி நகரில் தடைசெய்யப்பட்டதாகவும் இலங்கைத் தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட தெரிவித்துள்ளார். தொழிற்சாலை உரிமையாளர்களின் மோசடிகளால் அத்துறையை நம்பியிருக்கின்ற மக்கள் பாதிப்பினையும் பொருளாதார தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
எனவே, நாட்டிலுள்ள சகல தேயிலை உற்பத்தி மற்றும் விநியோக தொழிற்சாலைகளை சோதனை செய்வதற்கு இலங்கை தேயிலை சபை தயாராக வேண்டும். அத்தோடு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மோசடிகளில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு, இலங்கைத் தேயிலையின் பாரம்பரியத்தையும் தேயிலையை நம்பியிருக்கின்ற மக்களின் வாழ்வியலையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக