பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மிளகாய்த்தூள் விசிறி மற்றும் கைக்குண்டொன்றைக் காண்பித்து கிரிபத்கொட, கந்தான, வத்தளை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் வங்கி மற்றும் அடகு நிலையங்களில் 60 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த கொள்ளைச் சந்தேக நபரொருவர் அண்மையில் கிரிபத்கொடை, ஈரியவெட்டிய பிரதேசத்தில் வைத்து கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கிரிபத்கொட பொலிஸ் அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த பெர்னாண்டோ தலைமையில் மேலும் இரு பொலிஸ் கொஸ்தாபல்களான திலகரத்ன (36122), மதுசங்க (83272) ஆகியோரால் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மூலம் பின் தொடர்ந்து செல்லப்பட்டு குறித்த கொள்ளைச் சந்தேக நகர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் தோலில் அணிந்திருந்த தோள்பையில் 500 கிராம் நிறையுடைய மிளகாய்த்தூள் போத்தலொன்று காணப்பட்டிருந்தது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் களனி ஈரியவெட்டி பிரதேசத்தில் வசித்து வரும் கொட்டிகலகே ஜகத் சிசிர குமார (42 வயது) என்பவராவார். இந்த சந்தேக நபர் இதுவரை கிரிபத்கொட அடகு வைக்கும் நிலையம், வத்தளை நகரிலுள்ள தனியார் வங்கி, வத்தளை நகரில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயம் என்பவற்றில் கொள்ளையடித்து மேலும் வங்கி மற்றும் தலைமைக் காரியாலயங்கள் பலவற்றிலும் கொள்ளையடித்துள்ளான். இன்னும் சில கொள்ளைச் சம்பவங்களில் அவன் ஈடுபட எத்தனித்திருக்கும் போதும் அவை கைகூடாமல் போய்விட்டன என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இச் சந்தேக நபர் சிலகாலமாக கட்டிடத் துறையில் ஒப்பந்தக்காரராக செயற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவன் ஒரு பிள்ளையின் தந்தையாவான். மிகவும் சுகபோக வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனவந்தர்கள் மற்றும் உயர்வர்க்க வியாபாரிகளுடன் இவன் வேலை செய்து வந்திருந்த போதும் அவன் கைது செய்யப்படும் வரை வங்கிக் கொள்ளையன் என அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த கொள்ளைச் சம்பவத்துக்காக வேண்டி ஒரே மாதிரியில் மோட்டார் சைக்கிளொன்று, முகத்தை மூடும் வெள்ளை நிற கைக்குட்டையொன்று, பணம் கொண்டுசெல்ல பையொன்று, குளிருக்கு அணியும் ஜேர்சி ஒன்று என்பவற்றை இவன் பயன்படுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவனது முதல் கொள்ளை கிரிபத்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள தங்காபரண நிலையமொன்றாகும். 2017.9.22 ஆம் திகதி மாலை 5.50 மணியளவில் இவன் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது அங்கிருந்த உத்தியோகத்தர்களிடம் கைக்குண்டொன்றைக் காண்பித்து பயத்தை ஏற்படுத்தியே. அங்கு 42 இலட்சம் ரூபா பெறுமதியான 40 தங்க மாலைகளை அவன் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளான். சந்தேக நபர் இக்கொள்ளைச் சம்பவத்தை மேற்கொள்வதற்கு முன்னர் 3 நாட்கள் அந்த நிலையத்துக்கு அடிக்கடி வருகை தந்து உத்தியோகத்தர்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தான். முதல் நாள் கிட்டத்தட்ட 3 மணித்தியாலம் அங்கு பொழுதைக் கழித்திருந்தான். இதன்போது ‘எனக்கில்லை... எனது மனைவிக்கே இவற்றை கொள்வனவு செய்ய வேண்டும். அவள் வந்து கொண்டிருக்கிறாள்.... அதுவரை நான் இங்கிருக்கிறேன்’ என தெரிவித்தே அங்கு இருந்துள்ளான். அன்றைய தினம் உத்தியோகத்தர் ஒருவரிடம், ‘இன்று மனைவிக்கு வர முடியாத சூழல்... அதனால் இன்னொரு நாளைக்கு வருகிறேன்’ என்று கூறிவிட்டு அவன் வெளியேறிச் சென்றுவிட்டான். இரண்டாவது நாள் மீண்டும் அங்கு வந்த அவன், நேராக முதல் நாள் தன்னுடன் கதைத்துக் கொண்டிருந்த உத்தியோகத்தரிடம் சென்றான். இருப்பினும் அந்த உத்தியோகத்தருக்கு சிறிதளவேனும் அவன் தொடர்பில் சந்தேகம் ஏற்படவில்லை. காரணம் அந்தளவுக்கு முதல்நாள் அவன் அந்த உத்தியோகத்தரிடம் சகஜமாகப் பழகியிருந்தான். அன்றைய தினம் வேண்டியளவு தங்காபரணங்களை பரிசீலனை செய்தது மாத்திரமல்லாது ‘தம்பி, எனக்கு பெரிய மாலையொன்றை கொள்வனவு செய்ய வேணடும். இங்கிருப்பவை போதாது எனத் தோன்றுகிறது. முடிந்தால் 10 பவுணுக்கு மாலையொன்றை கொண்டுவந்து வையுங்கள். நான் மீண்டும் வரும்போது அதை கொள்வனவு செய்கிறேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றான்.
மூன்றாவது நாள் மாலை வேளையில் வந்த அவன், தங்காபரணங்களை தெரிவு செய்யும் போர்வையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு , மூன்று விநாடிகளுக்கு முன்னர் ‘தம்பி எனக்கு தாகமாக இருக்கிறது. குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா?’ எனக் கேட்டுள்ளான். சந்தேக நபருடன் உரையாடிக் கொண்டிருந்த உத்தியோகத்தர் இன்னொரு உத்தியோகத்தரிடம், இந்தப் பக்கம் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள், நான் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்’ எனக் கூறி சென்றதையடுத்து தண்ணீர் கொண்டு வருவதற்கிடையில் பைக்குள் கொண்டுவந்திருந்த குண்டொன்றையும் துப்பாக்கியொன்றையும் காட்டி உத்தியோகத்தரை பயமுறுத்திவிட்டு லாச்சுகளில் இருந்த 42 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியைக் கொண்ட தங்கமாலைகளை கொள்ளையடித்துவிட்டு அதற்காக கொண்டு வந்திருந்த பைக்குள் இட்டு, வந்த மோட்டார் சைக்கிளிலேயே ஏறி சாதாரண நபரைப் போல் தப்பிச் சென்றிருந்தான்.
2018.3.20 ஆம் திகதி குறித்த நபர் இந்த முறையிலேயே நண்பகல் 1.40 மணியளவில் வாடிக்கையாளரைப் போல கிரிபத்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய பாதைக்கு திரும்பும் வழியிலுள்ள சந்தியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றுக்குச் சென்று சனநடமாட்டம் குறையும் வரை பற்றுச் சீட்டு நிரப்புவதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தான். அன்றைய தினம் 5-10 நிமிடங்கள் வரை அங்கு நின்றிருந்த அவன், சன நடமாட்டம் குறைந்த பின்னர் கத்தியைக் காட்டி வங்கியின் காசாளர் பிரிவுக்கு பாய்ந்து அங்கிருந்த உத்தியோகத்தரை மிரட்டி அந்த சந்தர்ப்பத்தில் லாச்சியிலிருந்த 9,50,000 ரூபாவை அவன் கொண்டு வந்திருந்த பையிலிட்டு தப்பிச் சென்றிருந்தான்.
இதேபோன்று 2018.4.25 ஆம் திகதி தனது பையை தோளில் மாட்டிக் கொண்டு காலை 9.30 மணியளவில் கந்தான தனியார் வங்கியொன்றுக்குச் சென்றான். இவனில் சந்தேகம் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் இவனிடம் பல கேள்விகளை கேட்டார். அதனால் கோபம் கொண்ட அவன் பாதுகாப்பு அதிகாரியுடன் தர்க்கத்திலீடுபட்டது மட்டுமல்லாமல் மிளகாய்த் தூளை அவர் மீது தூவிவிட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்தான். இந்த கொள்ளைச் சம்பவம் நழுவவிடப்பட்டாலும் அவனது முயற்சியை கைவிடாமல் இரண்டு நாட்கள் கழித்து அதாவது ஏப்ரல் 27 ஆம் திகதி தனது மோட்டார் சைக்கிளில் பகல் 2.30 மணியளவில் வத்தளையில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றுக்குள் புகுந்தான். அன்று வங்கிக்குள் உள்நுழைந்தவுடனேயே பாதுகாப்பு அதிகாரி மீது மிளகாய்த்தூளை தூவிவிட்டு வங்கிக்குள் பாய்ந்து சென்று லாச்சியில் இருந்த 7,50,000 ரூபா பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருந்தான். பின்னர் இன்னுமொரு நாளில் கடவத்த தனியார் வங்கியொன்றுக்குச் சென்றிருந்தாலும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியால் கேட்கப்பட்ட கேள்விகள் மூலம் கொள்ளையிடாது தப்பிச் சென்றிருந்தான்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் ஒரு நபராலேயே மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தமை ஆங்காங்கிருந்த சி.சி.ரி.வி. கமராக்கள் மூலம் பதிவாகியிருந்தன. பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலமே இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மோட்டார் சைக்கிளில் பையொன்றை தோளில் மாட்டியவாறு வரும் ஒருவராலேயே இவை மேற்கொள்ளப்படுகின்றன என பொலிஸார் உறுதி செய்து கொண்டனர். இந்தக் கொள்ளையன் மேற்கொண்ட சகல கொள்ளைச் சம்பவங்களின் போதும் வெள்ளை நிற கைக்குட்டையொன்றில் முகத்தை மூடி வந்தமை விசேட அம்சமாகக் காணப்பட்டது. நாளுக்கு நாள் களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குறித்த நபர் ஒருவர் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொள்ளைச் சம்பவங்களினால் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள வங்கிகள் மற்றும் தலைமை நிலையங்களுக்குள் பீதி ஏற்பட்டிருந்த நிலையில், பொலிஸாருக்கோ இது பாரிய தலைவலியாகக் காணப்பட்டது. இந்த வேளையிலேயே குறித்த சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்திருந்தனர்.
இந்த வங்கிக் கொள்ளையனை கைது செய்வதற்காக வேண்டி மேல் மாகாண வடக்குக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி உபாலி ஜயசிங்க, பெண் பொலிஸ் அதிகாரி மதாரா சூரியசேன ஆகிய அதிகாரிகள் தேவையான ஆவணங்களை திரட்டத் தொடங்கினர்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து களனி வலயத்துக்குப் பொறுப்பான சகல பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளை அழைத்து இது தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இன்று கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெறலாம். அவதானமாக இருங்கள் என்றே பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர்கள் கட்டளையிட்டனர். இது தொடர்பில் அப்பகுதியிலுள்ள வங்கி அதிகாரிகள், தலைமை நிலை யங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு தெளிவுபடுத்தப்பட் டுள்ளதுடன் தமது உயிரை காப்பாற்றிக் கொள்ளாமல் கொள்ளையனைப் பிடிக்க முயற்சி செய்ய வேண்டாமென ஊழியர்களுக்கு பொலிஸார் தெரிவித்திருந்தனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவனிடமிருந்து தமது உயிரை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் புகைப்படம் பொலிஸாரின் செலவில் பிரதிபண்ணப்பட்டு சகல வங்கிச் சேவர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டு அது தொடர்பில் தகவல்களும் வழங்கப்பட்டன. கிரிபத்கொட, களனி, வத்தளை ஆகிய பிரதேசங்களிலுள்ள வங்கிகள் மற்றும் நிலையங்களின் உயர் அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரின் புகைப்படம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகளுக்கும் பொலிஸ் மா அதிபரால் அனுப்பப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாட்டுக்கு மேலதிகமாக குறிப்பிட்ட சில வாரங்களுக்கு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை நியமிக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சந்தேக நபரை கைது செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டனர். சந்தேக நபர் தொடர்பிலும் அவதானமாக இருந்தனர். 2018.05.10 ஆம் திகதி சந்தேக நபர் தனது விளையாட்டைக்காட்ட வழமை போல தனது மோட்டார் சைக்கிளில் வத்தளை பிரதேசங்களுக்குச் சென்றான். அங்குள்ள தனியார் வங்கியில் கொள்ளையிடுவதே அவனது நோக்கமாகக் காணப்பட்டது. அன்றைய தினம் அவன் தனது பையையும் மாட்டிக் கொண்டு வங்கியினுள் நுழைய முற்பட்ட போதும் பாதுகாப்பு அதிகாரி அவன் மேல் சந்தேகம் கொண்டு அவனிடம் கேள்வி கேட்கத் தொடங்கினான். அதுமட்டுமன்றி அவனை உள்நுழையவும் விடவில்லை. அதனால் கோபமடைந்த சந்தேக நபர், பாதுகாப்பு அதிகாரி தன்னை அடையாளம் கண்டுவிட்டதாக எண்ணி தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டான். இவன் தப்பித்துச் சென்ற உடனேயே விரைந்து செயற்பட்ட பாதுகாப்பு அதிகாரி இவன் தொடர்பில் வத்தளை பொலிஸ் நிலையத்துக்கும் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் பொலிஸ் தகவல் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப இவன் தொடர்பில் களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டது. இவ்வாறே இவன் கிரிபத் கொட பொலிஸாரிடம் மாட்டிக் கொண்டான். அவன் மாட்டிக் கொண்ட விதம் இதோ;
அவன் தப்பித்துச் சென்ற சந்தர்ப்பத்தில் கிரிபத்கொட பொலிஸ் நிலைய கொஸ்தாபலான திலகரத்ன, ஏதோ ஒரு வேலையாக ஹூணுபிட்டிய பாதையூடாக சென்று கொண்டிருந்தவேளை அதிவேகமாக மோட்டார் சைக்கிளொன்று செல்வதை அவதானித்துள்ளார். மோட்டார் சைக்கிள் வேகமாக சென்றதால் அவர் சந்தேகம் கொண்டு அம்மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்று நிறுத்துமாறு சைகை காட்டிய போதிலும் நிறுத்தாது சென்றான்.
வங்கிக் கொள்ளையில் ஈடுபடவரும் சந்தேக நபர் இந்தமாதிரியான மோட்டார் சைக்கிளிலேயே வருவான் என்ற சந்தேகமும் எவ்வேளையிலும் குளிருக்காக அணியும் ஜேர்சியை அணிந்திருந்தமையும் பையை தோளில் மாட்டிக் கொண்டிருந்த விதமும் பொலிஸ் கொஸ்தாபலை மேலும் சந்தேகத்துக்கு இட்டுச் சென்றது. இவன் தான் அவன் என்பதை உறுதி செய்து கொண்டார். அதன் பின்னர் கொஸ்தாபல் அதிகாரி அவனை பின் தொடர்ந்து நிறுத்துமாறு சைகை காட்டிய வேளை அவன் தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தை மீண்டும் அதிகரித்து சீறிப் பாய்ந்து சென்றான். கொஸ்தாபல் திலகரத்ன உடனடியாக கிரிபத்கொட பொலிஸ் மா அதிபரை கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , ‘சார்.... வங்கிக் கொள்ளையன் மாதிரி ஒருவன் ஹுணுப்பிட்டிய புதிய பாதையில் சென்று கொண்டிருக்கிறான். அவனை பின்தொடர்ந்து கொண்டு செல்கிறேன். உடனடியாக ஈரிய வெட்டிய பாதையில் வரவும்’ என தகவல் வழங்கினார்.
அந்த அழைப்பிற்கேற்ப விரைந்து செயற்பட்ட பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஜீப் வண்டியில் சென்றால் அவனை பிடிக்க முடியாது என்ற காரணத்தினால் தனது மோட்டார் சைக்கிளில் கொஸ்தாபல் மதுசங்கவை ஏற்றிக் கொண்டு விரைந்து சென்றார். கொஸ்தாபல் திலகரத்ன வழங்கிய தகவலுக்கமைய வேறு பாதையூடாக ஈரியவெட்டியவுக்கு வந்த பொலிஸ் மா அதிபர் சந்தேக நபர் வரும் பாதைக்கு எதிராக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். சந்தேக நபர் வரும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை மூலம் காட்டிய போதும் அவன் நிறுத்தாது சென்றுவிட்டான். மிகவும் சிரமத்துக்கு மத்தியில் சந்தேக நபரை விரட்டிச் சென்று பிடித்தனர். அவனது பையை பரிசீலித்த பொலிஸ் மா அதிபர் அதிலிருந்து மிளகாய்த்தூள் போத்தலொன்றையும் சங்கிலியொன்றையும் மீட்டெடுத்தனர்.
பொலிஸ் மா அதிபர் அவன் அணிந்திருந்த ஜேர்சியை அந்த நேரத்திலேயே கழற்றிப்பார்த்தார். அதில் வெள்ளை நிற கைகுட்டையொன்று இருந்தது. இந்த கைக்குட்டையானது கொள்ளைச்சம்பவம் மேற்கொள்ளும் வேளையில் முகத்தை மறைக்க பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்து கொண்டார். இந்த காரணங்களை வைத்த இவன்தான் வங்கிக் கொள்ளையன் என்பதை உறுதி செய்து கொண்ட பொலிஸ் மா அதிபர் அங்கேயே அவனை கைது செய்தார். இக் கைது தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கங்கள் அனைத்திற்கும் தகவல் வழங்கப்பட்டது. கொஸ்தாபல் திலகரத்ன அதிகாரி அவரை சரியான நேரத்தில் அடையாளம் கண்டுகொண்டதால் அவனை கைது செய்ய முடியுமாக இருந்தது. கொஸ்தாபல் திலகரத்ன வழங்கிய தகவல் மூலம் உடனடியாக செயற்பட்டு 5- 10 விநாடிகளுக்குள் அவனை கைது செய்தமை பொலிஸ் மா அதிபரின் விசேட அம்சமாகும்.
சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை உறுதி செய்ய பொலிஸார் முன்வந்த போது அது போலி இலக்கத்தகடு எனத் தெரியவந்துள்ளது. இவன் கொள்ளையிடச் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு இலக்கத்தகட்டைப் பொருத்தியுள்ளான் அவனது வீட்டில் இவ்வாறான இலக்கத்தகடுகள் நிறைய இருப்பதாக பொலிஸ் விசாரணையின் போது அவன் தெரிவித்துள்ளான். முதல் நாள் விசாரணையின் போது சந்தேக நபர் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இரண்டாவது நாள் அனைத்து உண்மைகளையும் தெரிவித்திருந்தான். அவன் கொள்ளைச் சம்பவத்திற்காக பயன்படுத்திய கைக்குண்டு மற்றும் கத்தியை குறுக்கு வழியொன்றிலிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
தான் அதிக கடன் தொல்லையில் காணப்பட்டதாகவும் அதனை வட்டியுடன் மீளச் செலுத்துவதற்காகவே இவ்வாறு கொள்ளைகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட துரித வ>சாரணையின் போது சந்தேக நபர் கச்னோ விளையாட்டில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாகவும் ஒரு நாளைக்கு 10-15 இலட்சம் ரூபாவை குறித்த விளையாட்டுக்காக செலவு செய்துள்ளதாகவும் 30-40 இலட்சம் ரூபாவை தோல்வியின் மூலம் இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான இவர் , வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கான ரூபா பணம் இருந்துள்ளதாகவும் கசினோ விளையாட்டில் ஈடுபடத்தொடங்கிய பின்னர் சகல பயமும் கரைந்து போய்விட்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளான். அவனது இந்த வீர விளையாட்டினால் களனி வலயத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்ள நேரிட்டது.
இருப்பினும் பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் உயரதிகாரிகளின் உபதேசங்களுக்கமைய தேவையான செயற்றிட்டங்களை மேற்கொள்ளல் மற்றும் கண்காணிப்புடன் காணப்பட்டமையால் கிரிபத்கொட பொலிஸ்மா அதிபருக்கு குறித்த சந்தேக நபரை கைது செய்ய முடியுமாகவிருந்தது. அதற்கிணங்க இவ்வளவு காலமும் களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள பொலிஸாருக்கு பாரிய தலைவலியாகக் காணப்பட்ட இந்த மிளகாய்த்தூள் கொள்ளையன் மிகவும் சூட்சுமமான முறையில் கைது செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
கொழும்பு வடக்கு வலயத்துக்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மற்றும் வலய பொலிஸ் பொறுப்பதிகாரி உபாலி ஜயசிங்க ஆகிய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பெண் பொலிஸ் அதிகாரி மதாரா ஆரியசேனவின் பணிப்புரையின் கீழ் கிரிபத்கொட பொலிஸ் மா அதிபர், பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த பெர்னாண்டோவின் தலைமையில் குற்ற விசாரணைப் பிரிவு தலைவர், உப பொலிஸ் பரிசோதகர் சந்தநுவன் அடங்கிய பொலிஸ் குழுவொன்று குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக