கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

18 ஜூன், 2018

2020 ஆம் ஆண்டுக்குள் 50000 தனி வீடுகள் அமைக்கப்படுமா?

மலையக மக்களுக்கான தனிவீட்டுத் திட்டமானது மிக நீண்டகால இலக்காகவே காணப்படுகின்றது. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் வரவு - செலவு திட்டத்திலும் எண்ணிக்கை அடிப்படையில் வீடடைமப்புத் திட்டத்தை பிரஸ்தாபித்திருக்கின்றனவே தவிர அதற்கான நிதியொதுக்கீடுகள் தொடர்பில் தெளிவில்லாத தன்மையே காணப்பட்டது. 2013ஆம் ஆண்டு நவம்பர் மறம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 9ஆவது வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான 50,000வீடமைப்புத் திட்டம் தொடர்பான முன் மொழிவுகள் இடம் பெற்றிருந்தாலும் அவை சாத்தியப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.


தற்போது மலையகத்தில் ஐ.தே.க அரசின் 25,000 வீடமைப்புத்திட்டம் மற்றும் இந்திய அரசின் 14,000 வீடமைப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதுடன் குறிப்பிடத்தக்களவில் காணியுறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டளவில் 50,000வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்களை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

160,000 வீடுகளை பெருந்தோட்ட மக்களுக்கு கட்டவேண்டிய தேவை இருக்கின்றது அந்த இலக்கை நோக்கியே தனிவீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 2020 ஆம் ஆண்டுக்குள் 50,000 வீடுகளை கட்டிமுடிப்பதை இலக்காக கொண்டு செயற்பட்டு வந்தாலும் கூட இன்னும் நல்லாட்சி அரசின் 25,000 வீடுகளே மூன்று வருடங்கள்  கடந்துள்ள நிலையிலும் கட்டி முடிக்கப்படாமல் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக இரத்தினபுரி மாவட்டத்தில் 30 வீடுகளும் பதுளை மாவட்டத்தில் 47 வீடுகளும் கேகாலையில் 12 வீடுகளும் கண்டி மாவட்டத்தில் 40 வீடுகளும் ஹட்டன் பிரதேசத்தில் 62 வீடுகளும் நுவரெலியா பிரதேசங்களில் 147 வீடுகளுமாக மொத்தம் 338 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. (தகவல்: RTI)

அட்டவணைகளின் அடிப்படையில் இதுவரையும் அமைச்சினூடாக 6,654 வீடுகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. கடந்த மூன்று வருட காலப் பகுதியினுள் இத்தனை வீடுகளே கட்டி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டுக்குள் 50,000 தனி வீடுகளை அமைக்க முடியுமா என்பதுடன் லயன் அறைகளில் 200 வருட காலத்தை கழித்து வருகின்ற மக்களுக்கு எப்போது சொந்தக்காணியில் வீடுகள் கிடைக்கு மென்பது பலரின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மூலமான 25,000 வீடுகளைத் தவிர்த்து இந்திய அரசாங்கத்தினால் முதல் கட்டமாக 5000 வீடுமைப்பு திட்டமும் வழங்கப்பட்டிருக்கின்றது. (அவை தொடர்பான விபரங்களை அடுத்தவாரம் பார்க்கலாம்) இவ்வாறான சூழலில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் இத்தனிவீட்டுத் திட்டமானது பாதுகாப்பானதாக இருக்கின்றதா? அல்லது மக்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் வீட்டுத் திட்டங்கள் அமைந்திருக்கின்றனவா? என்பதில் மக்கள் பலரும் குழம்பிப் போயுள்ளனர்.

’வீடுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது, அதற்காக அவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கின்றோம் என்ற அசமந்த போக்கில் செயற்படாமல் தரமானதும், உறுதியானதும், நீடித்து நிலைக்கக்கூடியதுமான வீட்டுத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். வீட்டுத்திட்டத்துக்கான நிதியொதுக்கீடானது குடிநீர், மின்சாரம், பாதை என சகல வசதிகளையும் உள்ளடக்கியதாகவே இருக்கின்ற நிலையில் வீடுகளை மாத்திரம் கொடுத்துவிட்டு ஏனைய தேவைகளை பயனாளிகளையே பூர்த்தி செய்து கொள்ள பணிப்பது ஏற்புடையதல்ல.

மேலும் வீடுகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் அரைகுறை நிர்மாணங்களுடன் வெளித்தோற்றத்தை மாத்திரம் அழகுபடுத்திவிட்டு திறப்புவிழா நடத்தி பயனாளிகளிடம் கையளிப்பது ஏமாற்று வேலையாகவே எமக்குத் தென்படுகின்றது. அதேவேளை கட்சி ஆதரவாளர்களுக்கு வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை கொடுப்பது இன்னொரு குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது. மக்களுக்கான அரச திட்டங்களில் இவ்வாறான தனிப்பட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வளங்களை துஷ்பிரயோகப்படுத்துவதற்கு ஒப்பானதாகும். இவை தவிர்க்கப்பட வேண்டும்.

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவது முக்கியம்  எனினும், ஏனைய அடிப்படை வசதிகளற்று வாழ்ந்து வருகின்ற மக்களும் இக்காலப்பகுதியிலேயே வீடுகளை பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். வீட்டுத்தேவையை எதிர்நோக்கியிருக்கின்ற சகல மலையக பெருந்தோட்ட மக்களும் தனிவீடுகளை பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்ற பெரும்பாலான மக்கள் சகல வசதிகளுடனான தனிவீடுகளை எப்போதோ பெற்றுக்கொண்டு விட்டார்கள். ஆனால் மலையக மக்களுக்கு மாத்திரமே இது விதிவிலக்காக இருந்து வருகின்றது.

வீடமைப்புத்திட்டங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து செயற்படுவதினால் ஏனைய அத்தியாவசியத் தேவைகளாகவிருக்கின்ற குடிநீர், சுயதொழில் வாய்ப்புகள், பாதை அபிவிருத்தி போன்ற விடயங்கள் பின்தங்கிய  நிலையில் இருக்கின்றன. தனிவீடமைப்புத் திட்டமானது மலையக மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்ற நிலையில் லயன் அறைகளில் வாழ்கின்ற சகல மக்களும் இச்சலுகையை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுமா ? என்பதுவும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த காலங்களில் இவ்வாறு வீடமைப்புத் திட்டம் என்ற பெயரில் பல்வேறு வாக்குறுதிகளே வழங்கப்பட்டிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்த ராஜபக்ஷ, மலையகத்தில் தோட்ட பகுதிகளில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 7 பேர்ச்சஸ் காணியும் வீடும் அமைத்து கொடுக்கப்படுமெனவும் 2015 - 2016 காலப்பகுதியில்  ஐம்பதாயிரம் வீடுகள் அமைக்கப்படுமெனவும்  தெரிவித்திருந்தார். அதேவேளை மலையக மக்களின் வீட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி செயலணி ஏற்படுத்தப்படுமென 2014 “இன் இறுதியில் தெரிவித்திருந்தார் .ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றிபெறவில்லை. இவர்கள் ஆட்சிசெய்த 10 வருட காலப்பகுதியில் இதனை செய்திருந்தால் ஒருவேளை வெற்றி பெற்றிருக்கலாம்.

தற்போதைய நிலையில் மூன்று இலட்சத்துக்கும் குறைவானவர்களே தோட்டத் தொழில் துறையில் இயங்கி வருகின்றார்கள். கிராமபுறங்களில் 95.06 வீதமானோர் தனிவீடுகளில் வசிப்பதுடன் தோட்டபுற மக்களில் 33.04 சதவீதமானோர் மட்டுமே தனிவீடுகளில் வசிக்கின்றனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெருந்தோட்ட கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற 432 தோட்டங்களில் 249061 தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது லயக் காம்பிராக்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற 60 வீதமானோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களுடைய தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கின்றது. எனவே வீட்டுத்திட்டம் உடனடியாக விரைவுபடுத்தப்பட வேண்டும். இடைத் தரகர்களுக்கு இடம்கொடுக்காமல், கிடைத்திருக்கின்ற வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக