கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

25 ஜூன், 2018

கேதார கௌரீஸ்வரர் ஆலயம்

இயற்கை எழில் என்றவுடன் மலையகத்துக்கு தனியிடம் கிடைத்துவிடும். அந்தவகையில் மலையகமானது பல புராதன விடயங்களுக்கும் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தளவில் இன்று வரை 20 சிவாலயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டாலும் நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பழைமையான ஒரேயொரு சிவாலயம் இவற்றுக்குள் உள்ளடக்கப்படவில்லையென்பது கவலைக்குரிய விடயமாகும். மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் அமைந்திருக்கின்ற ஸ்ரீ கேதாரகௌரி  அம்பிகா சமேத கேதார கௌரீஸ்வர தேவஸ்தானமானது, இயற்கை வளமான நீருற்று, பசுமையான காடுகள், தேயிலை என்பன சூழ அமையப்பெற்றுள்ள புனித சிவதலமாகும்.


1921 ஆம் ஆண்டு ஏப்ரல், 16ஆம் திகதி கருப்பண்ணன் முத்துசாமியினால் தோற்றம் பெற்ற ஈஸ்வர பீடத்துடன் இன்று 97 வருடங்களை கடந்த மிகவும் பழைமையான மற்றும் அதிசயங்களை கொண்ட அற்புத சிவாலயமாக இருக்கின்றது. 18.04.1924 இல் மந்தகினி தீர்த்த அருவி நீர் கரையில் கலியுகாதி வருடம் சித்திரை மாதம் ஆறாம் நாள் சக்திபீடம் தோற்றம் பெற்றது. 25.5.1937 வைகாசி மாதம் மேட்டுநிலப் பகுதியில் ஸ்ரீ வீரபத்திர சுவாமி தேவஸ்தானம் நிறுவப்பட்டது. அதேவேளை திரிசூலம் பிரதிஷ்டைபீடம் மற்றும் கற்பறைக்கருகில் பாஞ்சாலியம்மன் தேவஸ்தான பீடமும் உருவானது.

இச்சிவ தலத்தில் சிறு தொண்ட பக்த நாயனார் சரித்திர பக்தி காவிய நாடகம் 24.4.1940 தொடக்கம் 15.4.1961 சித்திரை அமாவாசையில் அரிசி மாவு பாவையாக சீராளன் உரு சமைத்து இச்சிவாலயத்திலிருந்து மேலவாத்தியம் சகிதம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சன்னிதிக்குப் போய் மாவு உருவத்தை வெட்டி அன்னதான பூஜை செய்துவந்தனர். இந்த பிரசாதத்தினால் பலர் புத்திர பாக்கியம் பெற்றுள்ளதாக வரலாற்று குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது. 1959இல் பொன்னுசாமி என்பவரால் திரிசூலம் திருத்தியமைக்கப்பட்டு 1959.04.23 அன்று சித்திர பூரணையன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.


1967.04.15 அன்று இத்திரிசூலமானது பெரிய தெய்வகந்தையைச் சேர்ந்த இருவரால் களவாடப்பட்டு கம்பளித் துணியில் சுற்றப்பட்டு வீட்டு கூரையில் மறைத்து வைக்கப்பட்டது. இவர்களின் தாய் மாலை விறகு எடுப்பதற்காக
போய் மயங்கி வீழ்ந்து கடும் நோயினால் பாதிக்கப்பட்டார். இதற்கு காரணம் திரிசூலம் களவாடப்பட்டதே என்று கூறப்பட்டதால் மறுநாள் இருவரும் திரிசூலத்தை எடுத்து தோட்டத்திலுள்ள வாழைமரத்தில் சொருகி வைத்துவிட்டார்கள். பின்னர் இவர்களின் தாயின் நோய் நீங்கிவிட்டதாகவும் பின் வாழையிலிருந்து திரிசூலத்தை பிடுங்கிவந்ததும் இருவருக்கும் வாத நோய் ஏற்பட்டதாகவும பின்னர் திரிசூலத்தை ஒப்படைத்து திருநீறு பெற்று சென்றதால் நோய் குணமாகியதாக  தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் திரிசூலமானது 1967.05.09 இல் பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன், 1980இல் புனருத்தாரனத்துக்காக பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 17.06.1982 இல் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிவ ஸ்ரீ எச்.கே. காசிநாத சிவாச்சாரியாரினால் இச்சிவாலயமானது சிறப்பாக வழிநடத்தப்பட்டு வந்த நிலையில் அண்மையில் இவர் இறைபாதம் எய்தியதைத் நிலையில் அண்மையில் இவர் இறைபாதம் எய்தியதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களான லக்ஷ்மன் தேவநாயகம் மற்றும் மகள்மார்களான ஜெயரஞ்சனி, கேதிஸ்வரி நாயகி, தோட்ட பொதுமக்கள் என அனைவரும் இணைந்து இவ்வாலயத்தை பராமரித்து வருகின்றார்கள்.

இச்சிவாலயத்தினை 2004 ஆம் ஆண்டில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும் அவை முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட நூற்றாண்டுகள் பழைமையான இவ்வாலயமானது பல அதிசயங்களாலும் நிரம்பப் பெற்றதாக காணப்படுகின்றது. இங்கு பூஜைக்காக உடைக்கப்பட்ட தேங்காயில் கண் இருந்ததோடு, கோயிலுக்கு அருகில் தோண்டப்பட்ட குழியிலிருந்து வெண்கல அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. தற்போது இச்சிவாலயத்தில் ஞாயிற்றுகிழமைகளில் அறநெறிக் கல்வியினை போதிக்கும் வகையில் ஞாயிறு அண்ணா அறநெறி இரவுப் பாடசாலையும் அடிப்படை வசதிகளின்றிய நிலையில் இயங்கி வருகின்றது.ஆலயத்தின் கூரையானது சேதமடைந்து காணப்படுவதுடன் சுற்றுமதில்கள் காணப்படாமையினாலும் மழைக்காலங்களில் அறநெறிபாடசாலை மாணவர்கள் கல்விகற்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் ஒரேயொரு பழைமையான சிவாலயமாக கேதார கௌரீஸ்வரர் ஆலயம் காணப்படும் நிலையில் இந்து கலாசார திணைக்களமோ,  இந்து மத விவகாரங்கள் அமைச்சோ எவ்விதமான உதவிகளையும் வழங்காத நிலையில் அசமந்த போக்குடனேயே செயல்பட்டு வருகின்றன. பெருந்தோட்டங்களில் காணப்படும் இவ்வாறு சிறப்பு மிக்க ஆலயங்களை கண்டு கொள்ளாத நிலைமை பலகாலமாக காணப்பட்டு வருகின்றது.

தலவிருச்சம், தீர்த்தம், கொடி மரம் என்பன அமையப்பெற்ற சிவாகம முறையிலான கட்டமைப்பினை இச்சிவாலயமானது கொண்டிருக்கின்றது. எனவே நாடுமுழுவதுமுள்ள பக்தர்கள் இச்சிவாலயத்தின் எழுச்சிக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முடியும். உதவிகளை வழங்கவிரும்புவோர், 0770876687 (ரஞ்சனி) என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வழங்க முடியும். மலையகத்தில் இவ்வாறு தலங்களை அடையாளங்கண்டு அவற்றை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமை எமக்கிருக்கின்றது.

நாடு முழுவதிலும் புதிதாக புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டு வரும் சூழலில் இவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டிய சமய சின்னங்களை மறந்துவிடுவது கவலைக்குரிய விடயமாகும். இச்சிவாலயத்தின் வருடாந்த திருவிழா கௌரிவிரதம் ஆரம்பமாகும் தினத்தோடு இணைந்ததாக தொடர்ந்து 10 நாட்களுக்கு இடம்பெறுவது வழமையாகும். சமகாலத்தில் ஓர் ஆலயத்தை நிர்வகிப்பதென்பது இலகுவான காரியமல்ல. என்றாலும் சிவாலயத்தின் தொன்மையை பாதுகாக்கும் முயற்சியில் இவர்களுக்கு உதவுவது அனைவரின் இறைபணியாகும்.

1 கருத்து: