மலையக பெருந்தோட்ட மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக காலம் காலமாக பேசப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவர்களின் தொழில் சுமையானது அதிகரித்துவிட்டது என்பதைவிடவும் அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு குறைந்து விட்டது என்பதையே கவனத்தில் கொள்ள முடிகின்றது. காடு, மலையேறி பல்வேறு தமது உழைப்பை கொடுப்பதுடன் மழை, பனி என பல்வேறு இயற்கை சூழலில் தொழில் புரிந்து வருகின்றனர். ஆனால் ஒருபோதும் இவர்கள் தமது தொழில் பாதுகாப்பு தொடர்பில் கவனத்தில் கொண்டு செயற்படவில்லை. அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு தொடர்பிலும் யாரும் விளக்கமளிக்கவும் இல்லை. கடந்த 2 ஆம் திகதி ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் மதியம் சிறுத்தையொன்று தொழிலாளர்களை தாக்கியிருந்தது. இதில் ஏழுபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கின்றனர். ஆனால் சிறுத்தையினை பிடித்திருக்கவில்லை. இதேபோலவே குளவிக்கொட்டுக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அடிக்கடி இலக்காகி வருகின்றனர். ஆனால் மலையகத்தில் இவ்வாறான தாக்குதல்களை தோட்ட நிர்வாகங்களோ வன ஜீவராசிகள் திணைக்களமோ கண்டுகொள்வதில்லை . மக்களை இடம்பெயர வைக்கவும் தேயிலை மலைகளை காடுகளாக்கவும் இவ்வாறான உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் தொழிலாளர்களே அதிகம் ஆபத்தினை எதிர்கொள்கின்றனர்.
பன்மூர் தோட்டத்தின் சிறுத்தை தாக்குதலில் 7 பேர் பலத்த காயங்களை சந்தித்திருந்தனர். பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முன்னாலே சிறுத்தை ஒருவரை தாக்கியிருக்கிறது. தாக்குதலுக்குள்ளான நபர் தீபந்தம் ஒன்றை ஏந்திச் செல்லுகையில் சிறுத்தையால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். மரங்களுக்கிடையில் தாவித்தாவி தாக்குதலை மேற்கொள்ளும் சிறுத்தையை பிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடியாத நிலையே காணப்பட்டது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகின்றன. தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடங்கள் பெரும்பாலானவை அவர்களுக்கு ஆபத்தானவையாகவே இருக்கின்றன. இதேவேளை 2015 - 2018 (ஜனவரி) வரையான காலப்பகுதியில் ஹட்டன், பொகவந்தலாவ, கொட்டகலை, நுவரெலியா, நோர்வூட், சாமிமலை பகுதிகளில் இடம்பெற்ற சிறுத்தை தாக்குதல்களில் 15 பேர் காயமடைந்திருக்கின்றனர். அத்தோடு கொல்லப்பட்ட அல்லது இறந்த நிலையில் 7 சிறுத்தைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிருடன் சில சிறுத்தைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. எனவே இவை தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகளாக இருக்கின்ற நிலையில் இவற்றுக்கான தீர்வுகளை முன்னெடுப்பதில் யாரும் இதுவரையும் கவனம் செலுத்தவில்லை. தொழிலாளர்கள் சிறுத்தைகளால் தாக்கப்படுவதும் காயமடைவதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதும் வீடுதிரும்புவதும் மீண்டும் அதேதொழிலுக்கு செல்வதும் வாடிக்கையான விடயமாக இருக்கின்றது.
இலங்கையின் 65,000 சதுர கிலோமீற்றர் பரப்பில் 700- 1000 சிறுத்தைகள் இருப்பதாக வன ஜீவராசிகள் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை மத்திய மலைநாட்டு பகுதிகளில் இருப்பதையும் அறியமுடிகின்றது. ஆனால் அவற்றிலிருந்து தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதில் தொழிலாளர்களுக்கு போதிய விளக்கமில்லை. அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு அறிவுறுத்தல்களும் கிடைக்கப்பெற்றதாக தெரியவில்லை. ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் தாக்கங்களை எவ்வாறு நிரூபிக்க வேண்டும் என்பது தொடர்பில் விளக்கமில்லாதவர்களாகவே இருக்கின்றனர். தலையில் கொழுந்தை சுமக்கும் போது பிற்காலத்தில் அவர்களது தலையில் ஏற்படப்போகும் ஆபத்து மற்றும் எலும்பு நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவற்றை உறுதிப்படுத்துவதற்கேற்ற சுகாதார நிபுணர்கள் இல்லை என்பதும் கவலைக்குரியதாகும். குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல், அங்கவீனம் போன்ற உடல், உள, சுகாதார பாதிப்புகளிலிருந்து விடுபடவும் தொழிலாளர்களுக்கு உரிமை இருக்கின்றது. மட்டம் வெட்டும் போதும் கொழுந்து எடுக்கும் போதும் தொழிலாளர் கைகளில் வெடிப்பு ஏற்படுகின்றன. இது சும்மா இருந்தால் வராது. வேலை செய்தால்தான் வரும். ஆனால் அவை தொடர்பாக தொழிலாளர்கள் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை.
உரம் போடுவதால் கை, கால்களில் ஏற்படுகின்ற இரசாயன தாக்கம் என்பவையும் தொழில் பாதுகாப்பை மீறும் செயலாகவே உள்ளன. ஆனால் அதனால்தான் ஏற்பட்டதா என்பதை நிரூபிக்க எம்மிடம் வளங்கள் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இத்தொழில் பாதுகாப்பு சலுகைகள் இல்லை. அதனாலேயே பல பெருந்தோட்ட நிர்வாகங்கள் ஓய்வுபெற்ற தொழிலாளர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக சேர்த்து கொள்கின்றன. இதனால் இவர்கள் தொழில் பாதுகாப்பு மறுக்கப்பட்டவர்களாகவே தொழில் செய்து வருகின்றனர். இவை தொடர்பாக அறிவதற்கு தொழிலாளர்களுக்கு எவ்விதமான வாய்ப்புகளும் வளங்களும் வழங்கப்படுவதில்லை. ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் இடம்பெற்ற சிறுத்தை தாக்குதலுக்கு முன்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பற்ற நிலையிலேயே வாழ்ந்து வந்திருந்தனர். தற்போதும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இவற்றை எவ்வாறு தடுப்பது? தற்போது பன்மூர் தோட்டத்தில் நடமாடுகின்ற சிறுத்தையை பிடிப்பதில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொது மக்களும் கடும் பிரயத்தனங்களை எதிர்கொண்டிருக்கின்றனர். சிறுத்தை வழமையாக நடமாடும் பிரதேச சூழலை மக்கள் குழப்பியிருப்பதாலும் தொடர்ச்சியாக தேடுதல் வேட்டை நடைபெறுவதாலும் தற்போது சிறுத்தையின் நடமாட்டம் குறைந்துள்ளது.
இதனால் அப்பிரதேசத்தில் அச்சிறுத்தை இருக்கிறதா? அல்லது வேறொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டதா? என்பது தொடர்பில் தெரியாத நிலையிலேயே சிறுத்தை தேடுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிறுத்தையின் தேடுதல் வெற்றியடையும் வரையில் மக்கள் அச்சமற்ற சூழலில் வசிப்பதற்கான வாய்ப்புகளும் தொழில் செய்வதற்கான வாய்ப்புகளும் மிக குறைந்த மட்டத்திலேயே இருக்கின்றன. இந்த அச்சம் காடுகளாகிப் போய்கிடக்கின்ற தேயிலைத் தோட்டங்களில் வசிக்கின்ற, தொழில் செய்கின்ற சகல தொழிலாளர்களுக்கும் இருக்கிறது. பன்மூர் தோட்டத்தில் நடமாடுகின்ற சிறுத்தையினை பிடித்தால் மாத்திரம் இனிமேல் பெருந்தோட்டங்களில் சிறுத்தை தாக்குதல் நடைபெறாது என்ற அர்த்தமில்லை. எனவே தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை தோட்ட நிர்வாகத்துக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் இருக்கிறது. இதை கட்டாயம் பெற்றுக்கொள்ளும் உரிமை தொழிலாளர்களுக்கும் இருக்கிறது.
அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை 23 இல்
ஒவ்வொருவரும் வேலைசெய்யும் உரிமை, சுதந்திரமாக வேலை தேர்ந்தெடுக்கும் உரிமை, வேலையின்மையிலிருந்தான பாதுகாப்பு, நியாயமான சாதகமான தன்மையிலிருந்தான வேலை உரிமையை கொண்டுள்ளனர்.
உறுப்புரை 25 (2) இல், தாய், குழந்தை , விசேடமான பாதுகாப்பு உதவியையும், தொழில் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ள உரிமையுடையோர்.
சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் உறுப்புரை 07 ‘நியாயமான சம்பளத்துடனான ஆகக்குறைந்த சம்பளம், கௌரவமான வாழ்க்கைத் தராதரம், பாதுகாப்பான, சுகாதாரமான வேலைச் சூழல், தொழில் மேம்பாட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல் மட்டுப்படுத்தப்படும் வேலை நேரம், ஓய்வு கொடுப்பனவுடனான விடுமுறை என்பவற்றை ஒவ்வொருவரும் அனுபவிக்க உறுதிசெய்தல் வேண்டும்’ என கூறுகிறது. உறுப்புரை 8 தொழிற்சங்க உரிமைபற்றியும், உறுப்புரை 9 சமூகப் பாதுகாப்பு, சமூக காப்புறுதி என்பவற்றை அரசு ஏற்று அங்கீகரிப்பதாக கூறுகின்றது. உறுப்புரை 10 - குடும்பப் பாதுகாப்பு தாய், சேய், பாதுகாப்பு பற்றியும், உறுப்புரை 13 கல்வி உரிமை பற்றியும் கூறுகின்றது இவ்வுரிமைகளை அங்கீகரித்து நடைமுறைப்படுத்த அரசு கடப்பாடு கொண்டுள்ளது.
தொழில் திணைக்களம்
தொழில் திணைக்களம் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து குடியெர்ந்து வந்த தொழிலாளர்களின் நலனோம்பலை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது. ஆகவே இது இன்று இந்தியாவிலிருந்து குடிவந்த தொழிலாளர் திணைக்களம் என்று குறிப்பிடப்பட்டது. 1923 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இந்திய குடிவரவு தொழிலாளர் கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம் இந்தியக் குடிவரவு தொழில் திணைக்களத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவ்வாறிருப்பினும் உழைப்பார் செயலணியில் உள்நாட்டு உழைப்பாளிகள் படிப்படியாக விரிவடைந்ததையடுத்து உழைப்பாளிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய சக்தியாக மாறினர். இதன் காரணமாக இந்திய குடிவரவு தொழிலாளர்களின் நலனோம்பலைக் கண்டறியும் தமது வரையறுக்கப்பட்ட விடயப் பரப்பெல்லைக்கு அப்பால் செல்லவேண்டிய நிலை காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இதன் பிரகாரம் அனைத்து ஊழியர்களின் நலனோம்பலுக்கும் சேமலாபத்துக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அதன் பிரகாரம் 1931 இல் இந்திய குடிவரவு தொழில் திணைக்களம் பொது தொழில் திணைக்களமாக மாறியது.
அதன்பின்னர் அது இந்திய குடிவரவு தொழிலாளர்களுடன் சேர்ந்து இந்நாட்டுத் தொழிலாளர்களின் நலனோம்பலுக்கு பொறுப்புக்கூறுகின்ற அரச நிறுவனமாக மாறியது. ஆரம்பத்தில் திணைக்கள தலைவரின் பதவிப் பெயர் தொழில் கட்டுப்பாட்டாளர் என்பதாகும். ஆயினும் 1944 இல் அப்பதவிப் பெயர் தொழில் ஆணையாளர் என மாறியதோடு 2000 இல் அது தொழில் ஆணையாளர் நாயகம் என மாறியது. எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களின் பாதுகாப்புக்காகவும் நலனோம்பலுக்காகவும் நாற்பதுக்கும் மேற்பட்ட சட்டங்களை விரிவான விடயப் பரப்பெல்லையை உள்ளடக்கக்கூடிய வகையில் கொண்டுவந்துள்ளது. இச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது இத்திணைக்களத்தின் அடிப்படைப் பணியாக இருக்கின்றது. இதற்கு மேலதிகமாக, சமூக அபிவிருத்தி மற்றும் வேலை செய்கின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற ஊழியர் கல்வி, மனித வளங்களை நிலைப்படுத்தல், உழைப்பு சந்தை பற்றிய தகவல்கள், சமூக இடையூறுகள் மற்றும் அவற்றை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளிலும் இத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது. பல காலமாகத் தலைதூக்கிக் கொண்டிருக்கின்ற பல்வேறு சேவைகளுக்கான தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு திணைக்களத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை விஞ்சியுள்ளது. பல்வேறு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிர்வாக அமைப்பு தலைமை அலுவலக அடிப்படையில் 17 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பிரதேச அடிப்படையில் குறித்த பணிகளை நிறைவேற்றும் பொருட்டு 11 பிராந்திய பிரதி ஆணையாளர் அலுவலகங்களும் 36 மாவட்ட தொழில் அலுவலகங்களும் 12 தொழில் உப அலுவலகங்களும் 9 மாவட்ட தொழிற்சாலை பரிசோதனை பொறியிலாளர் அலுவலகங்களும் கொண்ட பிரதேச அலுவலக வலையமைப்பு ஒன்றும் இயங்குகின்றது.
திணைக்களம் நிறைவேற்றுகின்ற பிரதான பணிகள் வருமாறு,
·
- தொழில் சட்டங்களை வலுவுள்ளதாக்குதல் மற்றும் தொழில் பிணக்குகளைத்தீர்த்தல்
- சமூகப் பாதுகாப்பு முறைகளை நடைமுறைப்படுத்துதல்
- தொழில் ரீதியான நலன்கள் மற்றும் தொழிலில் ஏற்படும் திடீர் விபத்துக்களைத் தடுத்தல் போன்ற பணிகளை ஆராய்தல்
- தொழில் தருநர் - ஊழியர் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் ஆட்களை சேவையில் ஈடுபடுத்துவதை ஊக்குவித்தல், கைத்தொழில் துறையில் ஆய்வுகளுக்கும் திட்டமிடல் பணிகளுக்கும் பொறுப்பாக செயலாற்றுதல்.
- உழைப்பு சந்தை பற்றிய தகவல் சேவை.
- தொழில் புள்ளிவிபரங்களை சேகரித்தல், பேணல், விநியோகித்தல்
- தொழிற் சங்கங்களைப் பதிவு செய்தல்.
- .தொ.அ. (சர்வதேச தொழில் அமைப்பு) இன் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையின் கடப்பாட்டை நிறைவேற்றுகின்றபோது, தொழில் உறவுகள் மற்றும் மனிதவலு அமைச்சுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு செயலாற்றுதல்
2015- 2018 (ஜனவரி) வரையான சிறுத்தை தாக்குதல்கள்
- 29 ஜனவரி 2015 ; நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியாவத்தை தோட்டம், பெகனி பிரிவு, இன்ஞஸ்ட்ரி பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.
- 21 ஆகஸ்ட் 2015 ; பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கியூ தோட்டத்தில் சிறுத்தை தாக்கி பெண்ணொருவர் காயம்.
- 21 செப்டெம்பர் 2015 ; நுவரெலியா டொப்பேக்ஸ் காட்டுப் பகுதியில் 3.5 அடி உயரமும் 6 அடி நீளமும் கொண்ட சிறுத்தை இறந்த நிலையில் மீட்பு.
- 11 டிசம்பர் 2015 ; நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டம் மிட்போர்ட் பிரிவு பகுதியில் நபரைத் தாக்கிய சிறுத்தையை அடித்து கொலை செய்திருந்தனர்.
- 28 ஏப்ரல் 2016 ; நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் - வெஞ்சர் தோட்டத்தில் சிறுத்தையொன்று உயிருடன் மீட்கப்பட்டது.
- 08 மே 2016 ; அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரஸ்டன் தோட்ட 4 ஆம் இலக்க தேயிலை மலையில் 4 அடி நீளமான சிறுத்தை இறந்த நிலையில் மீட்பு.
- 09 மே 2016 ; அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பியன் தோட்ட பிரஸ்டன் பிரிவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.
- 10 மே 2016 ; பொகவந்தலாவ கியூ கீழ் பிரிவு தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் ஆண் ஒருவர் படுகாயம்.
- 22 மே 2016 ; கொட்டக்கலை ஸ்டோனி கிளிப் தோட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயம்.
- 20 அக்டோபர் 2016 ; சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் சிறுத்தை தாக்குதலில் அருள்சோதி மற்றும் தேவி என்ற இரு பெண்கள் காயம்.
- 14 டிசம்பர் 2016 ; அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்கடன் கல்மதுரை தோட்ட வனப்பகுதியில் வைத்து சிறுத்தை தாக்கியதில் 43 வயதுடைய குடும்பஸ்தர் காயம்.
- 13 பெப்ரவரி 2017 ; நோர்வூட் தியசிறிகமயில் சிறுத்தை கொலை.
- 22 ஏப்ரல் 2017 ; பொகவந்தலாவை லெச்சுமி தோட்டத்தில் சிறுத்தை ஒன்று கொலை.
- 13 டிசம்பர் 2017 ; கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் சிறுத்தை தாக்குதலில் தோட்ட தொழிலாளி ஒருவர் காயம்.
- 02 ஜனவரி 2018 ; ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் சிறுத்தை தாக்குதலில் ஏழுபேர் படுகாயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக