கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜனவரி, 2018

உள்ளூராட்சி தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்துமா?

நாடு முழுவதிலும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகரிப்பு, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பெண்களுக்கான 25 வீத இட ஒதுக்கீடு, கலப்பு தேர்தல் முறையென பலபுதிய மாற்றங்களுடன் 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமை முக்கிய விடயமாகும். எனவே இத்தேர்தலில் பல புதிய வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பதையும் வாக்காளர்கள் யாரை தெரிவு செய்வது என்பதில் குழப்பமடைந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அதேவேளை கலப்புமுறை தேர்தல் மக்களுக்கு புதிய அம்சமாகையால் அவற்றிலும் சிறிய குழப்பத்தை, தெளிவின்மையை அவர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
புதிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறைப்படி தேர்தல் தொகுதிகள் வட்டாரங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவை நிலப்பரப்பு, சனத்தொகை மற்றும் வாக்காளர் அடிப்படையில் மிகவும் சிறியவையாகும். அதன்படி 4750 தனி அங்கத்துவ வட்டாரங்களும் 165 இரட்டை அங்கத்தவர் வட்டாரங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5092 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வட்டாரங்களிலிருந்தும் 3395 உறுப்பினர்கள் பட்டியலிலிருந்தும் தெரிவு செய்யப்படுவர். 2017 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டத்திற்கிணங்க 60 வீதம் தொகுதிவாரி முறையிலும் 40 சதவீதம் விகிதாசார முறையிலும் தேர்தல் இடம்பெறவுள்ளது. இதன்படி 24 மாநகரசபைகளுக்கும் 41 நகர சபைகளுக்கும் 276 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் 341 உள்ளூராட்சி சபைகளுக்கு சுமார் 35,000 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 25 வீதம் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே நாளில் நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் இடம்பெறவுள்ளது. இலங்கையின் அரசியலை தீர்மானிப்பதில் கடந்த காலத்தில் நுவரெலியா மாவட்டம் முக்கிய சக்தியாக திகழ்ந்திருக்கிறது. அந்தவகையில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்ற நுவரெலியா மாவட்டம் முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகரசபை, தலவாக்கலை - லிந்துலை நகரசபை, ஹட்டன் - டிக்கோயா நகரசபை என்பவற்றோடு நுவரெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை பிரதேச சபைகளோடு புதிதாக உருவாக்கப்பட்ட கொட்டகலை, அக்கரப்பத்தனை, நோர்வூட், மஸ்கெலியா, அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்களும் இடம்பெறவுள்ளன.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 342 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இங்கு பிரதானமாக தமிழ் முற்போக்கு கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சில இடங்களில் சேவல் சின்னத்தில் தனித்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவருவதுடன் பல புதிய கட்சிகளிலும் சுயேச்சை குழுக்களிலும் பலர் போட்டியிடும் நிலைமை உருவாகியிருக்கிறது. இதனால் வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்வதில் குழப்பங்களை எதிர்நோக்க நேரிடலாம்.

தற்போது இவ்விரண்டு பிரதான கட்சிகளிடையே வலுவான போட்டி நிலைமை காணப்படுகின்றது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை கொண்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியும் கடந்த 3 வருட காலமாக அரசியலில் பிரகாசிப்பதற்காக முயன்றுவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இம்முறை களத்தில் செல்வாக்கு பெற்ற நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இருப்பினும் வாக்குகளின் சிதைவு, வேட்பாளர்களின் தொகை அதிகரிப்பு என்பன போன்ற விடயங்கள் தேர்தலில் தாக்கத்தைச் செலுத்தலாம். தமிழ் முற்போக்கு கூட்டணியானது பிரதமரின் ஆதரவிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதியின் ஆதரவிலும் தேர்தலில் களமிறங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
எனவே புதிய பிரதேச சபைகளின் உருவாக்கம் பல பெருந்தோட்ட மக்களுக்கான அரசியல் வாய்ப்பினை அதிகப்படுத்தியிருக்கின்றது. இதன் மூலம் புதியவர்கள் அரசியல் களம்காணும் சூழல் தோன்றியிருக்கிறது. ஆனால் போட்டி அரசியல் காரணமாக மக்களின் தெரிவு எவ்வாறு அமையும் என்பதை கணிப்பிட முடியாது. மக்கள் இவ்விடயத்தில் தெளிவான முடிவை எடுப்பதற்கு கடமைப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள யாரை தெரிவு செய்தால் இலகுவாகவிருக்கும் என்பதையும் மக்களுக்காக சேவையாற்றக்கூடியவர்கள் யார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தோடு அரசியல் இலாபங்களை அனுபவிப்பதற்கு அரசியல் களம் புகுந்துள்ளவர்களை தவிர்க்க வேண்டியதும் மக்களது கடமையாகும்.

பொதுமக்கள் சிலர் வழமையாக ஆட்சிக்கு வருகின்ற கட்சிகளை விடவும் புதிய கட்சியினை அல்லது வேட்பாளர்களை தெரிவு செய்யும் மனப்பான்மை இருக்கின்றது. காலங்காலமாக தெரிவு செய்தவர்களின் சேவைகள் மக்களை சென்றடையாமையும் புளித்துப்போன அரசியலை விரும்பாமையும் புதியதொரு களத்தை உருவாக்க மக்கள் யோசிக்கலாம். எனவே மூன்றாந்தெரிவில் மக்களின் கவனம் அதிகமிருக்கக்கூடும். கடந்த இரண்டு வருடங்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இவ்விடயங்கள் அதிகமுக்கியத்துவம் பெறக்கூடும்.

நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டு புள்ளிவிபர கணிப்பீடுகளின் படி மொத்த சனத்தொகை 7,06,588 ஆக காணப்படுகின்றது. இனரீதியான கணக்கெடுப்பின் படி மலையகத்தமிழர் 53.18 வீதமாக காணப்படுகின்றனர். ஒட்டுமொத்த தமிழ்பேசுவோர் 60 வீதமாக காணப்படுகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபை, ஹட்டன் - டிக்கோயா நகரசபை, தலவாக்கலை - லிந்துலை நகரசபை நுவரெலியா மாநகரசபை என்பன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வசமும் நுவரெலியா பிரதேச சபையானது மலையக மக்கள் முன்னணியின் வசமும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறை இவற்றில் வெளிப்படையான மாற்றங்கள் ஏற்படும். அத்தோடு புதிய பிரதேச சபைகள் உருவாக்கம் என்பன இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும். நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கு 342 வேட்பாளர்களும் கண்டி மாவட்டத்தில் 13 சபைகளுக்காக 293 வேட்பாளர்களும் பதுளை மாவட்டத்தில் 18 சபைகளுக்காக 445 வேட்பாளர்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் 17 சபைகளுக்காக 474 வேட்பாளர்களும் கேகாலை மாவட்டத்தில் 12 சபைகளுக்காக 393 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். பதுளை மாவட்டத்தில் 9 தேர்தல் தொகுதிகளிலும் 6,43,580 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 137,703 தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 825,423 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இம்மாவட்டத்தில் 249 வட்டாரங்களில் 680 வாக்களிப்பு நிலையங்களும் 464 வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. இவ்வாறு உள்ளூராட்சித் தேர்தல்கள் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. அதேபோலவே தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாடுகளும் அதிகரித்திருக்கின்றன. இதனால் தேர்தல் அதிக எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் மக்களிடம் தமக்குள்ள பலத்தை வெளிக்காட்டுவதற்காக போராடி வருகின்றன. மக்கள் கடந்த அரசாங்கங்களின் மீது வெறுப்புடனேயே இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்க முடிகின்றது.

இவ்வாறு பல தடைகளை தாண்டியே வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. கட்சி ரீதியாக மட்டுமே இதுவரைகாலமும் சிந்தித்து வந்த மக்கள் பொதுநலன் தொடர்பில் அதிகம் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். அதுபோலவே வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கும் இளைஞர்களும் ஏமாற்று அரசியலிலிருந்து விடுபட்டு புதிய பாதையினை உருவாக்கும் முயற்சியில் இருக்கின்றனர். இவ்வாறான சூழலில் மலையக அரசியல் புதிய மாற்றமொன்றை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதற்கு இத்தேர்தல் அடித்தளமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக