கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜனவரி, 2018

பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
இலங்கையில் 1.5 மில்லியன் இந்திய வம்சாவளி மக்கள் வசித்து வருகின்றனர். அல்லது மொத்த சனத்தொகையில் 7 வீதமானோராக இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தோட்டப்புறங்களில் வசித்து வருகின்றனர். அரசியலில் 25 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பிரதேச சபைகள் அதிகரிப்பு, ஏழு பேர்ச் காணியில் வீடு என்று பழைய பஞ்சாங்கத்தையே பாடிக் கொண்டிருப்பவர்களுக்கு தேயிலை மலைகளிலும் மழையிலும் வெயிலிலும் காய்ந்து நனைந்து கருகும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைபற்றி தெரியுமா? தோட்ட நிர்வாகங்களிடம் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் இதுவரை தீர்க்கப்பட்டுள்ளனவா? அல்லது வாழ்வாதாரங்கள் தான் விருத்தி செய்யப்பட்டுள்ளனவா? இதைவிடவும் இரண்டு வருடங்களுக்கொரு முறை மேற்கொள்ளப்படும் கூட்டுவொப்பந்தத்தின்படி அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகளும் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டன. அரசியல் தேவைக்களுக்காக இவர்கள் பகடைக்காய்களாக்கப்பட்டுவிட்டார்கள். இவர்களை ஆலோசிக்காமலே தனிப்பட்டவர்களின் விருப்பத்தின்படி கூட்டுவொப்பந்தம் என்ற நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. அவை இனிமேலாவது தொழிலாளளர்களின் வாழ்க்கையில் நன்மைபயக்க வேண்டும். இவ்வாறு தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அவர்களின் வருமானம் தொடர்பிலும் அறிந்து கொள்வதற்காக மேற்கொண்ட களப்பயணத்தின் போது மஸ்கெலியா புளும்பீல்ட் தோட்டத்தில் தொழிலாளர்களாக கடமைபுரிபவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அளவளாவிய போது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.
’ஒரு நாளைக்கு 16 கிலோ கொழுந்து பறித்தாலே எங்களுக்கு முழு சம்பளமும் கிடைக்கும். அத்தோடு மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 18 நாட்கள் வேலை செய்ய வேண்டும். ஆனால் தினமும் 16 கிலோ கொழுந்து பறிக்குமளவுக்கு தேயிலை மலைகளில் கொழுந்து இல்லை. அதற்கு மேலும் வற்புறுத்தினால் நாங்கள் எங்குதான் செல்வோம்’ என்று மழையில் நனைந்து கொண்டே தேயிலை பறிக்கும் சாந்த குமாரி தன் கவலைகளை கொட்டித்தீர்த்தார்.மஸ்கெலியா, புளும்பீல்ட் தோட்டத்தில் இவ்வாறு தொழில் புரியும் ஏராளமான பெண் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அதேபோல அங்குள்ள ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சோகக் கதைகள் ஒளிந்திருக்கின்றன. சாந்த குமாரி மேலும் தனது சோகத்தை இவ்வாறு விபரிக்கிறார்.
ஒவ்வொரு நாளும் நாங்கள் 16 கிலோ கொழுந்தை எடுக்க வேண்டும். கொழுந்தே இல்லாத நாளிலும் நாங்கள் எப்படி 16 கிலோ கொழுந்து பறிப்பது. அது முடியாத காரியம்தானே. 15 கிலோ மாத்திரம் எடுத்தால் ஒரு நாள் சம்பளத்தில் 140 ரூபாவினை வெட்டிவிடுகிறார்கள். இதைப்பற்றி தோட்டத் தலைவர்களிடம் தெரிவித்தாலும் கூட அவர்கள் அவை தொடர்பில் யாரிடமும் பேசுவதில்லை. எந்தவொரு பிரச்சினையையும் கேட்டுக் கொள்வதில்லை. சந்தாப்பணம் அறவிடுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை.
இந்த விடயம் தொடர்பில் வெளிக்கள உத்தியோகத்தரும் தோட்ட துரையும் எவ்வித தீர்வுகளையும் இதுவரை வழங்கவில்லை. எப்படியாவது 16 கிலோ கொழுந்து பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கிறார்கள். கொழுந்தைக் கொட்டி நிறுவை செய்யும் தட்டுக்கு ஒருவருக்கு 5 கிலோ வீதம் வெட்டிவிட்டே மீதத்தை கணக்கில் பதிகிறார்கள். ஒருவருக்கு 5 கிலோ வீதம் 30 பேருக்கு வெட்டினால் 150 கிலோ கொழுந்து கம்பனிக்கே இலாபமாக கிடைக்கிறது. ஆனால் ஒரு கிலோ குறைந்தாலும் எங்களுக்கு அரை நாள் சம்பளமே கிடைக்கப்பெறுகிறது.
நான் 15 வருடமாக தோட்டத் தொழிலாளியாக இருக்கிறேன். எனக்கு 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவர் பாடசாலைக்கும் இருவர் குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கும் செல்கிறார்கள். மாதமொன்றுக்கு எனக்கு 7000-8000 ரூபாவே சம்பளமாக கிடைக்கின்றது. இதிலேயே பிள்ளைகளின் படிப்பு செலவையும் எங்களின் வாழ்க்கை செலவையும் கவனிக்க வேண்டும். எங்களைப்பற்றி யாருமே யோசிப்பதில்லை. வெயிலிலும் மழையிலும் காய்ந்து நனைகின்றோம்.
காலையிலிருந்து 16 கிலோ கொழுந்து எடுத்துவிட்டு மாலை ஒரு மணித்தியாலம் களை பிடுங்க வேண்டும். அந்த ஒரு மணித்தியாலத்துக்கும் எங்களுக்கு 75 ரூபாவே கொடுக்கிறார்கள். நூறு ரூபா கொடுத்தால் கூட அது எங்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும். வருடம் முழுவதும் தவறாது வேலை செய்தாலே எங்களுக்கு பொங்கல் போனஸ் தருவார்கள். எனக்குப் பிள்ளைகள் இருப்பதால் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற சிலவேளைகளில் விடுமுறை பெறவேண்டி ஏற்படும். இதனால் நான் வேலைசெய்த 15 வருடத்தில் ஒரு நாள் கூட பொங்கல் போனஸ் பெற்றதில்லை. சித்திரை மாதம் மட்டும் ஏதோ ஒரு சில தொகை போனஸாக கிடைக்கும்.
எனது பெயர் வள்ளியம்மா. நான் 35 வருடங்களாக தோட்ட தொழிலாளியாக கடமை புரிகிறேன். தற்போது கொழுந்து விளைச்சல் குறைவாக இருப்பதால் ஒரு நாளைக்கு 16,17 அல்லது 18 கிலோ கொழுந்தையே எடுக்கமுடிகிறது. குறைந்தது 12 கிலோ கூட நாங்கள் எடுக்கிறோம். ஒரு நாள் முழு சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 16 கிலோ கொழுந்தைப் பறிக்க வேண்டும். மேலதிக கிலோ ஒவ்வொன்றுக்கும் 25 ரூபா வீதம் வழங்கப்படும். இதன் மூலமாக மாத வருமானம் 17000 ரூபாவாக இருந்தாலும் எல்லாம் கழித்து 9000-10000 ரூபாவே கைகளுக்கு கிடைக்கும். நான் திருமணம் முடித்து 29 வருடங்களாகிறது. எனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒருவர் தொழில் செய்கிறார். ஏனையோர் நிரந்தர தொழிலின்றியே இருக்கின்றனர்.
சித்திரை மாதத்தில் மாத்திரம் எங்களுக்கான போனஸ் தொகை வழங்கப்படுகிறது. அது 7000-8000 ரூபாவரையில் இருக்கும். எங்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின்படி இது நாள்வரையும் 750 ரூபா முழுச் சம்பளமும் கிடைத்ததில்லை. 18 நாட்கள் வேலை செய்திருந்தாலே எங்களுக்கு 750 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் அரை நாள் குறைந்தாலும் 590 ரூபாவே சம்பளமாக கிடைக்கிறது. எங்களுக்கு 18 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டாலும் விடுமுறை எடுக்கவேண்டிய தேவையும் ஏற்படும். எங்களுக்கு நோய் ஏதும் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது.எங்களுக்கு சுகவீன விடுமுறைகள் வழங்கப்படுவதில்லை. வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றால் மாத்திரமே அந்த விடுமுறை வழங்கப்படும்.
எனது பெயர் ரீட்டா. நான் 8 வருடங்களாக தோட்ட தொழிலாளியாக கடமை புரிகிறேன். ஒரு நாளைக்கு நாங்கள் கட்டாயமாக 16 கிலோ கொழுந்து எடுக்க வேண்டும். கொழுந்து இருந்தால் மாத்திரமே 16 கிலோ எடுப்போம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. 16 கிலோ எடுக்கவில்லை என்றால் எங்களுக்கு அரை நாள் சம்பளமே வழங்கப்படும். மாதமொன்றுக்கு வருமானமாக 10000-12000 ரூபா வரையில் பெற்றுக் கொள்கிறோம். எனது வீட்டில் மாமி, கணவர் உட்பட 2 பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இதில் ஒருவர் படிக்கிறார். இத்தொழிலின் வருமானத்தை வைத்தே சகல தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் அதற்கு இந்த வருமானம் போதாமலேயே இருக்கின்றது. இதைத் தவிர பிள்ளைகளுக்கான எந்தவொரு சலுகைகளும் தோட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படுவதில்லை. எனது கணவர் முச்சக்கரவண்டி செலுத்துகிறார். எங்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட்ட 750 ரூபா முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. 16 கிலோ கொழுந்து பறித்தால் மாத்திரமே அத்தொகை வழங்கப்படும்.
எனது பெயர் சரஸ்வதி. நான் 35 வருடங்களாக தோட்ட தொழிலாளியாக கடமை புரிகிறேன். எனது குடும்பத்தில் மொத்தம் 10 பேர் இருக்கின்றோம். அதில் இருவர் மாத்திரமே வேலை செய்கின்றோம். மாதம் சுமாராக 15000 ரூபா வருமானமாகக் கிடைக்கும். அந்த வருமானம் எங்களுக்குப் போதுமானதென்று கூறமுடியாது. சம்பளம் அதிகரிக்கப்பட்டுவிட்டது என்று கூறினாலும் 16 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் 150 ரூபா சம்பளத்தில் குறைத்துவிடுவார்கள். கொழுந்து இல்லாத மலைகளில் குறைந்தது 16 கிலோ கொழுந்தை பெற்றுக் கொள்ள முடியும். கொழுந்து இருந்தால் 20-30 கிலோவினை பெற்றுக்கொள்ள முடியும். கண்டிப்பாக ஒரு நாளைக்கு 16 கிலோ கொழுந்து எடுத்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் 150 ரூபா சம்பளத்தில் வெட்டப்படும். 71 தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் 71 பேரும் சரியாக 16 கிலோ கொழுந்தினை பறித்திருக்க வேண்டும். இல்லையென்றால் அரைநாள் சம்பளமே வழங்கப்படும். போனஸ் வழங்கப்பட்டாலும் அவை பழைய சம்பளப் படியே கிடைக்கின்றது. தீபாவளி முற்பணம் கடந்த வருடம் கம்பனியினால் 7500 ரூபாவும் அரசாங்கத்தினால் 3000 ரூபாவுமாக 10500 ரூபா வழங்கப்பட்டது. இந்த வருடம் அரசாங்கம் அதையும் நிறுத்திவிட்டது. இவை மாத சம்பளத்தில் மீள அறவிடப்படும்.
அதைவிடவும் அப்பலோக்காசும் வட்டியுடன் மீள அறவிடப்படும். 3000 ரூபா வழங்கியிருந்தால் 150 ரூபா வட்டியுடன் மாதமொன்றுக்கு அறவிடப்படும். இங்கு 100 க்கு 7 வீதம் வட்டியாக அறவிடப்படும். எங்களால் குறைந்தது 55 வயது வரையிலேயே தொழில் செய்யமுடியும். அதற்கு பிறகு வேலை செய்வதென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். இப்போது 60 வயதிலேயே பென்ஷனும் தருகிறார்கள். சிலர் மிகுந்த கஷ்டத்தினால் 35 வயதிலேயே ஓய்வுபெற்றுவிடுகிறார்கள்.
எனது பெயர் மணிவண்ணன். நான் 10 வருடங்களாக தொழில் புரிகிறேன். எங்களுக்கு தேயிலை தொழிற்சாலையிலேயே கொழுந்தை அரைக்கும் வேலை வழங்கப்படுகிறது. இன்று தொழிற்சாலையில் இயந்திரங்கள் பழுதடைந்தமையினால் தேயிலை மலைகளில் களையெடுக்கின்றோம். எங்களுக்கு மாதவருமானமாக 10000 ரூபா கிடைக்கும். இந்த வருமானம் எங்கள் குடும்பத்தை வழி நடத்துவதற்கு போதுமானதாகவில்லை. நான் பகுதி நேரமாக வாடகைக்கு முச்சக்கரவண்டிச் செலுத்துவதினால் இந்த வருமானம் போதுமானதாகவிருக்கிறது. இதையே நம்பி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் போதாது. வாக்கு வாங்க வரும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் சம்பள உயர்வு தொடர்பில் அரசியல் வாதிகள் பேசுகிறார்கள். ஆனால் பின்பு அவற்றை மறந்து விடுகிறார்கள். இதைக் கேட்டால் கம்பனி நஷ்டத்தில் இருக்கிறது. சம்பள உயர்வு வழங்க முடியாதென்று கூறுகிறார்கள். வீட்டில் நான், எனது மனைவி, அம்மாவுடன் வசித்து வருகின்றேன். இந்த வருமானத்திலே எங்களது குடும்பத்தைக் கொண்டு நடாத்துகின்றோம். நான் தரம் 10 வரை கல்வி கற்றிருக்கிறேன். அதன் பிறகு வீட்டில் கஷ்டமான சூழல் காணப்பட்டமையால் கொழும்புக்கு தொழிலுக்குச் சென்றுவிட்டேன். முச்சக்கரவண்டி செலுத்த வேண்டுமென்பதே எனது கனவாக இருந்தது. இன்று அதை பகுதி நேரமாக செயல்படுத்தி வருகின்றேன்.
எனது பெயர் பெரியசாமி அழகர். நான் 30 வருடங்களாக தோட்ட தொழிலாளியாகவிருக்கிறேன். இத்தொழில் மூலம் வருகின்ற வருமானத்தில் குடும்பத்தைக் கொண்டு நடத்துவது மிகவும் கஷ்டம். அந்தக் கொடுமையிலேயே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். மாதம் ஆண் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவும் பெண் தொழிலாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபாவும் வருமானமாக கிடைக்கிறது. மொத்தம் 22 ஆயிரம் ரூபாவே கிடைக்கிறது. இதில் மாதம் உணவு பொருட்களை கொள்வனவு செய்ய 15 ஆயிரம் ரூபா வரையில் செலவாகிறது. இதில் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். பகுதி நேரமாக தொழில் செய்வதற்கு எந்த வாய்ப்புக்களும் இல்லை. இதை நம்பியே எங்களது வாழ்க்கை நகருகிறது.
தோட்டத்தில் வேறெந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு வழங்கினாலும் அவற்றை எமது சம்பளத்தில் அறவிட்டுக் கொள்வார்கள். தீபாவளி முற்பணம், அப்பலோ காசு இவையனைத்தும் மீளவும் எமது சம்பளத்தில் அறவிடப்படும். அதுவும் வட்டியுடனே. எனக்கு மூன்று பிள்ளைகள். ஒருவர் திருமணம் முடித்துவிட்டார். ஏனைய இருவர் நிரந்தர தொழில் இன்றி புடவை கடையிலேயே தொழில்புரிகின்றனர்.
இவ்வாறு தேயிலைத் தோட்டங்களில் கடமை புரிகின்ற ஒவ்வொரு தொழிலாளரும் தமது எதிர்காலத்தை கொண்டு நடத்துவதற்கும் வாழ்க்கைச் செலவை சமாளிக்கவும் போதிய வருமானமில்லாது தவித்து வருகின்றனர். இந்நாட்டின் முதுகெலும்பாய் தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
காயம்பட்ட விரல்கள்
நாட்டின் அந்நிய செலாவணியில் பெரும்பகுதியினை இவர்களே ஈட்டிக் கொடுக்கின்றனர். ஆனால் இவர்களின் 200 வருட வாழ்க்கையில் எவ்விதமான மாற்றங்களும் அவ்வளவு எளிதாக ஏற்பட்டுவிடவில்லை. இன்றும் கூட அடிப்படை வசதிகளான வீடு, தொழில், சுகாதாரம் என்பவற்றில் பின்தங்கியவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர். இந்நாட்டின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக இவர்கள் இருந்தும் கூட இவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் வறுமைநிலை போக்கவும் எவ்விதமான அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
அரசியல் வாதிகள் இவர்களை வாக்கு வங்கிகளாக மாத்திரமே பார்க்கின்றார்களே தவிர வேறொரு முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. நியாயமாக இவர்களுக்கு கூட்டொப்பந்தத்தின் மூலம் நியாயமாக உறுதிசெய்யப்பட்ட சலுகைகள் கூட பாரபட்சமாகவே வழங்கப்படுகின்றன. இல்லையென்றால். அவர்களுக்கு முழுமையாக கிடைக்கப்பெறுவதேயில்லை. இவ்வாறே ஒவ்வொரு தலைமுறையும் தோட்டப்புறங்களில் நிம்மதியற்ற வாழ்க்கையை நடத்திச் செல்கிறது. இது முடிவில்லாத பயணமாகவே இருக்கிறது. முடித்து வைக்கப் போவது யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக