தலபூட்டுவா மரணம் சொல்வது என்ன?
உலகளவில் சட்டவிரோத யானைத் தந்தங்களின் விற்பனை செல்வம் கொழிக்கும் தொழிலாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இத்தொழில் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. அந்தவகையில் ’வயம்ப மரபுரிமை’ என்று அழைக்கப்படும் கல்கமுவ வனப்பிரதேசத்தைச் சேர்ந்த ’தலபூட்டுவா’ அல்லது ’லொக்கு எதா’ என சிங்களத்தில் அழைக்கப்படும் கொம்பன் யானை மர்மமான முறையில் கொல்லப்பட்ட நிலையில் அதன் உடல் எச்சங்கள் கடந்தமாதம் 29 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தின் பின்னர் சட்டவிரோதமாக கொல்லப்படுகின்ற கொம்பன் யானைகள் தொடர்பில் இலங்கையின் பார்வை திரும்பியிக்கிறது. இலங்கையில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மிக நீண்டகாலமாகவே இழுபறியில் இருக்கின்றன. யானைகளை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எவையும் பெரிதாக வெற்றியைத் தேடித்தரவில்லை. இலங்கையில் யானைகள் மதவிவகாரங்களுக்கு பயன்படுத்தப்படுவதுடன் செல்வந்த குடும்பங்களின் அடையாளமாகவும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மரபுரிமைச்சின்னமாக பார்க்கப்பட்டு வந்த தலபூட்டுவா கொல்லப்பட்டமையானது இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையில் 2012-2016 வரையான காலப்பகுதியில் 1171 யானைகள் மரணமடைந்துள்ளதுடன் 361 மனிதர்களும் வனப்பிராந்தியங்களில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொல்லப்பட்ட 12 அடிக்கும் அதிகமான உயரத்தைக் கொண்ட ’தலபூட்டுவா’ 56 வயது மதிக்கத்தக்கதென கூறப்படுகின்றது. இந்த யானையின் தந்தமானது வழமைக்கு மாறாக ஒன்றோடு ஒன்று பிணைந்து தும்பிக்கையை நீட்ட முடியாத நிலை காணப்பட்டதால் இதுவொரு அரியவகை யானை இனமாக கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு தடவையும் தந்தங்களுக்காக இலக்குவைக்கப்பட்டு வந்த இந்த யானை அதிஷ்டவசமாக தப்பிவந்தது. இந்நிலையில் 1970 ஆம் ஆண்டளவில் தந்த வேட்டைக் காரர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இந்த யானை தனது ஒரு பக்க கண்பார்வையை இழந்தது. கல்கமுவ பிரதேசம் தொடக்கம் கலாவெவ வரையான 100 கிலோமீற்றர் பரப்பளவில் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கூடாக சுற்றித்திரியும் இந்த யானையால் இப்பிரதேச மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இதுவரையில் ஏற்பட்டதில்லை. இதற்கிடையில் கடந்த இருமாத காலமாக இந்த யானையின் நடமாட்டத்தினைக் காணாத பிரதேச மக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்ததையடுத்தே வனஜீவராசிகள் அதிகாரிகளினால் யானை தொடர்பான தேடுதல் ஆரம்பமானது. இதனிடையே கடந்த 22 ஆம் திகதி யானைத்தந்தங்கள் இரண்டுடன் 6 ஜகமுத்துக்களையும் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கஜமுத்துக்கள் என்பது வயதான யானையின் தந்தத்திலிருந்து விளையும் முத்துக்களாகும். (வயதான எல்லாக் கொம்பன் யானைகளின் தந்தங்களிலும் இம்முத்துக்கள் இருப்பதில்லை. இதனால் இதன் பெறுமதி மிகவும் அதிகமாகும்). இதேவேளையில் தலபூட்டுவாவைக் கொன்ற பிரதான சந்தேக நபர்களே ஏனைய கொம்பன் யானைகளின் இறப்பிற்கும் காரணமென புலனாய்வு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்த தலபூட்டுவா யானையின் தந்தத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பென்டன்கள் மூன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொல்பித்தகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 338 ஆம் இலக்கத்தையுடைய தொரவெல்ல மற்றும் 394 ஆம் இலக்கத்தையுடைய மக்குல பொத்த ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளில் கடமையாற்றும் இரு கிராமசேவகர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். யானையின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் யானை துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்திருக்கலாமெனவும் அதனுடைய தந்தங்கள் இயந்திர வாளால் வெட்டியெடுக்கப்பட்டிருக்கலாமெனவும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் பல்வேறு அபிவிருத்திகளுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வந்துள்ளன. இதன் விளைவாக மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்திருந்ததுடன் தந்த வேட்டை காரர்களினால் யானைகள் கொல்லப்படுவதும் அதிகரித்து வந்திருந்தது.
இது வரைக்கும் 14 யானைகள் அம்பாந்தோட்டை பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்பு மனிதன்-யானைகளின் முரண்பாடுகளின் போது கொல்லப்படும் நபர்கள் அல்லது காயமடைவோர் அல்லது அங்கவீனமாவோருக்கு 200000 ரூபா வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை 500000 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பாதிப்படையும் பயிர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் ஏன் இடம்பெறுகின்றதென்பதை அறியமுடியாதுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் 2017 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் 2 யானைகளும் வடமத்தியில் 32 யானைகளும் வவுனியாவில் 5 யானைகளும் திருகோணமலையில் 12 யானைகளும் பொலநறுவையில் 25 யானைகளும் புத்தளத்தில் 8 யானைகளும் அநுராதபுரத்தில் 20 யானைகளும் ஊவாவில் 9 யானைகளும் மேல் மாகாணத்தில் 3 யானைகளும் தென்மாகாணத்தில் 7 யானைகளுமாக மொத்தமாக 123 யானைகள் உயிரிழந்துள்ளன. இவ்வாறு தொடர்ச்சியாக யானைகள் மரணமடைந்து வருகின்றதே தவிர அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. நாட்டில் யானைகளின் தொகையானது தொடர்ச்சியாக வீழ்ச்சியினையே சந்தித்து வருகின்றது.
இவ்வாறான சூழலில் வெறும் 55 தந்தங்களுடைய யானைகளே காடுகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் ஆண் மற்றும் பெண் யானைகளுக்கு தந்தங்கள் காணப்படுகின்றன. ஆனால் ஆசிய யானைகளில் ஆண் யானைகளுக்கு மாத்திரமே தந்தங்கள் காணப்படுகின்றன. இலங்கை யானைகள்தொகையில் 5 வீதமான ஆண் யானைகளுக்கே தந்தங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் 95 வீதமான ஆண்யானைகளுக்கு தந்தங்கள் காணப்படுகின்றன. யானைகளுக்கு பின்வருமாறு பெயரிடும் முறை காணப்படுகின்றது. எத(தந்தமுடைய ஆண் யானைகள்), அல்யா(தந்தமில்லாத ஆண் யானைகள்), புஸ்ஸ(தந்தமில்லாத ஆண் யானைகள்), எதின்னா (தந்தமுடைய பெண் யானைகள்), (அல்தெனா (தந்தமில்லாத பெண் யானைகள்) 2011 ஆம் ஆண்டு இலங்கையின் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேசிய ரீதியிலான யானைகள் தொகை கணக்கெடுப்பில் 5879 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 122 தந்தங்களுடைய யானைகளும் 1107 யானைகள் குட்டிகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இலங்கையில் யானை-மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாக வருடமொன்றுக்கு 50 மனிதர்களும் 250 யானைகளும் கொல்லப்பட்டுவருகின்றன. ஆனால் பில்லியனுக்கும் அதிகமான சனத்தொகை கொண்ட இந்தியாவில் வருடமொன்றுக்கு 150-200 பேரே யானைகளின் தாக்குதலினால் கொல்லப்படுகின்றனர்.
இலங்கை யானைகள் பெரும்பாலும் வெவ்வேறு வகையான சைவ உணவுகளையே உண்ணுகின்றன. புற்கள், இலைகள், தளிர்கள், மரப்பட்டைகள், பழங்கள் மற்றும் விதைகள் என்பனவே அவையாகும். இந்நிலையில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் அதிகளவில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு யானைகளின் நிலங்களை மனிதர்கள் ஊடுறுவதே பிரதான காரணமாகும். அதேவேளை நூற்றாண்டு காலமாக ஒரே இடத்தில் விவசாயம் செய்கின்ற வறுமையான விவசாயிகளின் பயிர்களும் கிராமங்களும் யானைகளால் நாசம் செய்யப்படுகின்றன. நகர மயமாக்கலே யானைகள் உணவு தேடி கிராமங்களுக்கு வருவதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. இதனாலேயே யானைகள் சட்டவிரோதமான முறையில் கொல்லப்படுகின்றன. சுட்டுக் கொல்லுதல், ஹக்க பட்டாசு, பொறிகள், கண்ணிகள், கைவிடப்பட்ட கிணறுகள், இரத்தினக்கல் சுரங்கங்கள் என்பவற்றினால் அதிகமாக யானைகள் சட்டவிரோதமாக கொல்லப்படுகின்றன. தற்போது சட்டவிரோத தந்தவிற்பனை இலாபகரமான வியாபாரமாக இருப்பதால் தலபூட்டுவா போன்ற பல யானைகள் கொல்லப்படுகின்றன. அதேவேளை மனிதனும் விவசாயம், மேய்ச்சல் நிலம், இரத்தினக்கல் அகழ்வு, பலகைக்காக மரங்களை அழித்தல், விலங்குகளை கடத்தல், சேனைப்பயிர்ச்செய்கை என்பவற்றால் யானைகளின் நிலத்தை ஊடுறுவி வருவதால் முரண்பாடுகள் மேலும் அதிகரிக்கின்றன.
இலங்கையில் யானைகளுக்கு மதரீதியில் பாரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேவேளை மறுபடியும் சட்டவிரோதமாக தந்தங்களுக்காக கொல்லவும் படுகின்றது. எனவே இனியும் இவற்றுக்கு இடம்கொடுக்காமல் யானைகளையும் ஏனைய வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சட்ட விரோத தந்தங்களின் விற்பனை இலங்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். தலபூட்டுவாவின் மரணம் அல்லது கொலை ஏனைய யானைகளின் பாதுகாப்புக்கு ஆரம்பமாக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக