கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜனவரி, 2018

இலங்கையில் குவியும் போதை பொருட்கள்
க.பிரசன்னா
போதைப்பொருள் இலங்கையின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிடுமோ என்ற நிலைப்பாட்டில் இலங்கை மக்கள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிகரித்த வாழ்க்கைச் செலவு காரணமாக ஏற்பட்டுள்ள வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் குடும்பப் பிரச்சினைகளே மக்களை போதைப்பொருள் பழக்கத்துக்கு திசை திருப்புவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் 257 இலங்கையர்களில் ஒருவர் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாதாரணமாக இலங்கையில் ஒருநாளைக்கு 4 கிலோ கிராம் ஹெரோயின் 45,000 பாவனையாளர்களால் பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கடந்த வருடம் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களில் 79,378 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டின் அதிக சனத்தொகை கொண்ட வலயமான மேல் மாகாணத்தில் 47 வீதமானோர் இதில் உள்ளடங்குகின்றனர். இவற்றில் 60 வீதமானோர் கஞ்சாவுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகவும் 35 வீதமானோர் ஹெரோயினுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் இலங்கையில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்கள் பெருகி வருவதுடன் அதனால் சமூக சீரழிவுகளும் அதிகம் ஏற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
விநியோகம் மற்றும் கேள்வி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இலங்கையில் 200,000 கஞ்சா பாவனையாளர்களும் 45,000 ஹெரோயின் பாவனையாளர்களும் இருப்பதாகவும் வருடாந்தம் 1,478 கிலோ கிராம் ஹெரோயின் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருளை கொண்டுவருவதோ அல்லது விற்பனை செய்வதோ அல்லது பாவிப்பதோ அல்லது வைத்திருப்பதோ சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டாலும் கூட அவற்றுக்கான கேள்வியும் விற்பனையும் சாதாரணமாக அரங்கேறி வருவதை அவதானிக்க முடிகின்றது. 2016 ஆம் ஆண்டு இலங்கையில் போதைப்பொருட்கள் சம்பந்தமான குற்றச் செயல்களுடன் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,378 ஆவதோடு, இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 வீதம் குறைவாகும். இவற்றில் பெரும்பான்மை குற்றச் செயல்கள் மேல் மாகாணத்திலும் (60 வீதம்) தென் மாகாணத்தில் 9 வீதமும் மத்திய மாகாணத்தில் 10 வீதம் என்ற அடிப்படையில் காணப்பட்டன. மாவட்ட அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 43 வீதமும் கம்பஹா மாவட்டத்தில் 13 வீதமும் குருநாகல் மாவட்டத்தில் 4 வீதம் என்றடிப்படையில் காணப்பட்டதுடன், 2016 இல் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச் செயல்களுக்கு கைதானவர்களின் வீதம் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் ஒரு இலட்சம் பேருக்கு 390 என்றளவில் காணப்பட்டது. (தகவல் : தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை)
கஞ்சா
2016 ஆம் ஆண்டு போதைவஸ்துகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கைதுகளில் பெரும்பான்மையானவை (47,787) கஞ்சா தொடர்பானவையாகும். அதிகூடிய சுற்றிவளைப்புகள் (35 வீதம்) கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. இதைவிடவும் கம்பஹாவில் 12 வீதம் மற்றும் மாத்தறையில் 3 வீதம் என்றளவில் பதிவாகியுள்ளது. அதிகூடிய தொகை கஞ்சாவினை பொலிஸ் திணைக்களம் கைப்பற்றியதுடன், அதைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் மதுவரி திணைக்களம் ஆகியனவும் கைப்பற்றியுள்ளன. கஞ்சா என்பது சட்ட ரீதியாகாத ஒரு அபாயகரமான ஔடதமாகும். கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இவை பயிரிடப்படுகின்றன. கிராமப்புறங்களில் பயிரிடப்பட்டு அங்கிருந்து கொழும்பு போன்ற நகர் பகுதிகளுக்கு கஞ்சாவை கடத்துவதன் மூலம் அதிகளவு இலாபம் ஈட்டப்படுகிறது. இவை கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பொதுப் போக்குவரத்து மட்டுமன்றி துவிச்சக்கரவண்டிகள் உட்பட தனிப்பட்ட வாகனங்கள் மூலமாகவும் கஞ்சா கடத்தப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில் சுற்றிவளைப்புகள் மூலம் மொத்தம் 4,174 கிலோ கிராம் கஞ்சா பிடிக்கப்பட்டது. இவை மேல் மாகாணத்தில் 51 வீதமாகவும் தென் மாகாணத்தில் 10 வீதமாகவும் மத்திய மாகாணத்தில் 9 வீதமாகவும் வடமேல் மாகாணத்தில் 8 வீதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதைவிடவும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கேரளக் கஞ்சாவும் இலங்கையில் அதிகம் பிரபலமடைந்து வருகிறது. இவ்வாறு 2017 இல் ஜனவரி - மே மாதம் வரையிலான காலப்பகுதியில் கேரளக் கஞ்சாவை கடத்தியமைக்காக 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஹெரோயின்
இலங்கையில் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையே ஹெரோயின் பாவனையை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் தற்போது 45,000 ஹெரோயின் பாவனையாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வருடாந்தம் வீதி மட்டத்தில் 1,478 கிலோ கிராமும் நாளொன்றுக்கு 4 கிலோவும் விற்பனையாகிறது. இவை அதிகமாக மீன்பிடிபடகுகள் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்தே கடத்தப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு ஹெரோயின் கடத்திய குற்றத்திற்காக 27,462 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு 9 பாகிஸ்தானியர்களும் 6 இந்தியர்களும் இவ்வாறு ஹெரோயின் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஹெரோயின் ஒரு கிலோ வீதி விலை இலங்கை ரூபா 9 மில்லியனாக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 வீதம் அதிகரிப்பாகும். (தகவல்: தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு)
போதைப்பொருள் கடத்தல் இலங்கை ஒரு முக்கிய கேந்திர ஸ்தானமாக இருப்பதுடன், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்து கடத்தல் மூலம் கொண்டுவரப்படும் போதைவஸ்துகள் கொழும்பு மற்றும் மாலே ஊடாக ஐரோப்பாவுக்கு கடத்தப்படுகின்றன. கடந்த 5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி தென் மேற்காசியாவின் பிரபல ஹெரோயின் வகையான ‘பிரவுன் ஷûகர்’ பிரதானமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு கடத்தப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 186 வெளிநாட்டு நபர்கள் போதைவஸ்துக்கான கடத்தல் முயற்சியின் போது இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களில் 58 இந்தியர்களும் உள்ளடங்குவர். போதை வஸ்துக்களை ஊசி மூலம் ஏற்றிக்கொள்ளும் போது எயிட்ஸ் நோய் தொற்றும் அபாயம் உள்ளது. இதன்போது ஊசிகள் மற்றும் போதைவஸ்து உட்கொள்ளும் அதே கருவிகளை பலரும் பயன்படுத்துவதும் இதற்கான காரணமாகும். இருப்பினும் இதன் காரணமாக நோய்த்தொற்றுக்குள்ளாகிய ஒருவர் மாத்திரமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு போதைவஸ்து பாவனை சுகாதார பிரச்சினைகளை தோற்றுவிப்பதுடன், குற்றச் செயல்களையும் அதிகரிக்கின்றது. 2016 ஆம் ஆண்டில் போதைவஸ்களுடன் தொடர்பான சிறிய மற்றும் பெரிய குற்றச்செயல்கள் 1,762 பதிவாகின. இவற்றில் 1140 (65 வீதம்) மேல் மாகாணத்திலும் 168 (10 வீதம்) மத்திய மாகாணத்திலும் 81 (5 வீதம்) தென் மாகாணத்திலும் பதிவாகின .
இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அரச அமைப்புகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. கஞ்சா, அபின், ஹெரோயின் என்பனவற்றையும் தாண்டி பாபூல், பீடா, மாவா மற்றும் ஹான் என்பவற்றையும் இளைஞர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை கொழும்பு (தலங்கம), கண்டி, காலி மற்றும் ஊராபொலி (நிட்டம்புவ) ஆகிய இடங்களில் புனர்வாழ்வு நிலையங்களை அமைத்துள்ளது. அத்தோடு சுமித்ரயோ என்பனவும் உளவள சிகிச்சை, குடும்ப ஆலோசனை, உடற்பயிற்சி, மனத்தளர்ச்சிக்கான செயற்பாடுகள், உளநோய் சிகிச்சை, சுகாதாரமான வாழ்வு முறைக்கான கல்வி, ஆற்றல் அபிவிருத்தி போன்றவற்றை வழங்க வருகின்றன. அதிகமான மக்கள் சமூக உந்துதல்கள் காரணமாக இத்துறையை தேர்ந்தெடுக்கிறார்கள். வறுமை, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் என்பன இதற்கு காரணமாகின்றன. சுமித்ரயோவில் கடந்த வருடம் 99 வீதமான ஆண்களும் 1 வீதமான பெண்களும் புனர்வாழ்வுக்குச் சென்றிருந்தனர். இவர்களில் 55 வீதமான இளைஞர்கள் 21 - 40 வயதுக்குட்பட்டவர்களாகவும் பெரும்பாலானோர் திருமணமான ஆண்களாகவும் இருக்கின்றனர். எனவே இவ்வாறு போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் சிகிச்சையினை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
2016 ஆம் ஆண்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான 2,355 நபர்களுக்கு அரசாங்கத்தால் புனர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 826 (35 வீதம்) பேர் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மூலமும் 684 (29 வீதம்) பேர் சிறைச்சாலைத் திணைக்கள புனர்வாழ்வுத் திட்டங்கள் ஊடாகவும் 474 பேர் (20 வீதம்) அரச சார்பற்ற அமைப்புகளில் முன்னெடுப்புகள் மூலமாகவும் 371 பேர் (16 வீதம்) கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலும் (புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம்) புனர்வாழ்வளிக்கப்பட்டனர். பயனாளிகளில் அதிகூடியவர்கள் (51 வீதம்) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் இவர்களில் 62 வீதம் நபர்களின் வயதெல்லை 30 மற்றும் அதை விட அதிகமாகக் காணப்பட்டது. இளைஞர்கள் அதிகமாக மதுபானத்துக்கு அடிமையாவது இலகுவாக காணப்படுவதால் அதிகமானோர் இவ்வழியை நாடுகின்றனர். ஒரு நாளைக்கு 500 ரூபா முதல் 5,000 ரூபா வரையும் போதைக்காக செலவுசெய்கின்றனர். எனவே இவற்றுக்கு உடனடி தீர்வு காணப்படவில்லையாயின் இலங்கையில் பல சமூகங்கள் போதையில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் போதைப்பொருட்களின் விற்பனையை தடுப்பதன் மூலமே சிறந்த தீர்வினை காணமுடியும். ஆனால் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதென்பது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்கப்போவதில்லை. இலங்கையில் நகர்ப்புறம் தொடக்கம் கிராமப்புறம் வரை போதைப்பொருள் விற்பனையானது சாதாரணமாகிவிட்டது.
போதைப் பாவனையாளர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல், இல்லையென்றால் போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் இவையே கைவசம் இருக்கின்ற தீர்வுகள். இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு பின் அரசியல்வாதிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் அவற்றுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை. இலங்கைக்குள் அதிகமாக கடல் மார்க்கமாகவே போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள் தலைநகர் கொழும்பிலிருந்தே பிரதான விநியோகத்தை ஆரம்பிக்கின்றன. இதுவே பலகாலமாக நடைபெற்று வருகிறது. இன்று போதைப்பொருள் பாவனையாளர்களின் பெருக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இளைஞர்கள் இதற்கு அதிகமாகவே அடிமைப்பட்டுவிட்டார்கள். இதனைத் தடுக்க வேண்டும். எதிர்கால முன்னேற்றகரமான சமூகத்தை கருத்தில் கொண்டு போதைப் பொருட்கள் பாவனையை குறைக்க வேண்டும். இல்லையேல் அதுவே சமூக அழிவுக்கு வித்திடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக