கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜனவரி, 2018

பாடசாலை மாணவர்கள் காலை உணவை கவனிக்கிறார்களா?
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிக் கால வாழ்வு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதுபோலவே துன்பங்களும் ஏற்பட்டிருக்கும். இன்று பாடசாலைக் கல்வியானது தொழிலை மையப்படுத்தி பல்வேறு மாற்றங்களை பெற்றுவிட்டது. அதுபோல மாணவர்களும் இயந்திரம் போல செயற்பட வேண்டிய தேவையை கல்வி முறை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடைப்பட்ட நேரத்தில் தொலைபேசி, சமூக வலைத்தளம் என நகர்ந்து கொண்டிருக்கையில் சில ஆய்வுகள் மாணவர்களினதும் பெற்றோர்களினதும் கவனயீனத்தை எடுத்துக் காட்டுகின்றன. அதாவது இலங்கையில் பாடசாலை செல்லும் மாணவர்களில் 30 சதவீதமானவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை என்பதே அதுவாகும். மனிதனின் உடல் இயக்கத்துக்கு காலை உணவு மிக முக்கியமாகும். இவை தொடர்ந்து தவிர்க்கப்பட்டு வருமானால் பல உடல் பிணிகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். பாடசாலைக்குச் செல்லும் முன்னர் மாணவர்கள் காலை உணவை எடுத்தார்களா என்ற விடயத்தில் பொருளாதாரம், சமூகம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மத கலாசார சிந்தனைகளும் காரணங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. பரீட்சைக் காலங்களில் ஏற்படும் மன பயம் சில மாணவர்களுக்கு உணவின் மீதான நாட்டத்தையே குறைத்து விடும். அதுபோல பாடசாலை செல்ல தாமதமாகிவிட்டால் காலை உணவை தவிர்த்துவிட்டு ஓடிவிடுதல், வீட்டில் காலை உணவை நேரத்தோடு தயாரிப்பதில் சிக்கல் போன்றன முக்கியமாகும்.
இவ்வாறு அலட்சியமான காரணங்கள் பாடசாலை மாணவர்களை காலை உணவை தவிர்க்க வழி செய்து விடுகின்றன. இன்னும் சில பெற்றோர்கள் தினந்தோறும் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பணிஸ், ரோல்ஸ் போன்ற துரித உணவுகளையும் ஹோட்டல் உணவுகளையும் வாங்கி கொடுத்துவிட்டு இருப்பதுடன் சிலர் காசை கொடுத்து சிற்றுண்டிச் சாலையில் ஏதாவது வாங்கிக் கொள்ளுமாறு கூறி விடுகின்றனர். இதன்போது மாணவர்களுக்கு காலை உணவு பிடித்திருக்கிறதா? அவர்கள் அதை உண்கிறார்களா? என்பது பெரும்பாலும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. 2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்களின் படி இலங்கையில் 10162 படசாலைகளில் 4143330 மாணவர்கள் கல்வி பயிலுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் அதாவது 14 இலட்சம் பேர் காலை உணவு எடுப்பது இல்லை என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு மையத்தின் போஷாக்கு பிரிவு கூறியுள்ளது. எனவே இவற்றை எவ்வாறு சீர் செய்வது தரம் ஒன்றில் கல்வி பயில்பவர்களுக்கு தினந்தோறும் உணவு பட்டியல் அடிப்படையில் உணவினை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் அவற்றை வகுப்பு ஆசிரியர்கள் மேற்பார்வை செய்வதாலும் காலை உணவைத் தவிர்க்க முடியாத சூழல் இருக்கிறது. ஆனால் ஏனைய மாணவர்களுக்கு அவ்வாறில்லை. இதற்காக தினந்தோறும் பாடசாலை மாணவர்கள் காலை உணவு உண்பார்களா என ஆய்வு செய்யவும் முடியாது.
இவை தொடர்பில் பெற்றோரே அதிக கவனமுடன் இருக்க வேண்டும். விரத காலங்கள், மத கலாசார நிகழ்வுகளின் போது விரதமிருப்பதை மாணவர்களில் பெரும்பாலானோர் வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள். அதே நேரத்தில் காலை உணவு உண்ணாமலும் பாடசாலை முடிந்து மாலை நேர வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி இரவு வேளையில் மட்டும் உணவு உணணும் மாணவர்களும் அதிகம் இருக்கின்றனர். பாடசாலைகளின் கல்வித் தரம் உயர வேண்டுமென்பதில் அக்கறை காட்டுகின்ற பாடசாலை நிர்வாகமும் பிள்ளைகளின் கல்வித் தரம் உயர வேண்டுமென்று விரும்புகின்ற பெற்றோரும் அவர்களுடைய உடல் நிலை, ஆரோக்கியம் தொடர்பில் கவலை கொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர். இந்த இடத்தில் வறுமையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பின் தங்கிய கிராம மற்றும் தோட்ட புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் காலை உணவை பெற்றுக் கொள்வதில் அதிகம் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அண்மையில் கெக்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட பள்ளி மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாகவும் காலை உணவு உண்ணாததாலும் அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரியவந்தது. தற்போது இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணரான டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ
இவ்வாறு மாணவர்களின் சுயத்தை சோதிப்பதாகவும் காலை உணவு உண்ணாமை பிரச்சினை காணப்படுகின்றது. காலை உணவு உட்கொள்ளாமல் இருப்பது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியிலும் உடல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்துமென சுகாதார பிரிவுக்குப் பொறுப்பான மருத்துவ நிபுணரான டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். காலை உணவு எடுக்காத பிள்ளைகளிடம் கணித ஆற்றல் போட்டிப் பரீட்சைகளில் குறைந்த புள்ளிகளைப் பெறுதல், நினைவாற்றல் குறைதல், பலவீனமாக காணப்படுதல், பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் குறைதல் மற்றும் உயரம் குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு எடுக்காமல் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மேல் மற்றும் தென் மாகாணங்களிலேயே அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் உலக உணவுத் திட்டம் மேற்கொண்ட ஆய்வில் மூன்றில் ஒரு பிள்ளை அவர்களின் உயரத்திற்கேற்ப பருமனோடு இல்லையென்று தெரியவந்துள்ளது. 5-10 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களிடமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 30 சதவீத பாடசாலை பிள்ளைகள் அவர்களின் உயரத்துக்கேற்ற நிறையுடன் இல்லை. வட கிழக்கு பிள்ளைகளில் 40 சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய அளவில் 16 சதவீத மாணவர்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் சிபாரிசின் படி பாடசாலை செல்லும் ஆண்களுக்கு 1850 கிலோ கலோரிகளும் பெண்களுக்கு 1750 கிலோ கலோரிகளும் தேவை. ஆனால் வட கிழக்கிலுள்ள பாடசாலை ஆண் பிள்ளைகளுக்கு இதில் 71 வீதமும் பெண் பிள்ளைகளுக்கு 65 சதவீதமும் தான் கிடைக்கப் பெறுகின்றது. அதேவேளை சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள விட்டமின் யூ தேவையில் வட கிழக்கிலுள்ள பாடசாலை பிள்ளைகளுக்கு 16 வீதமே கிடைக்கப் பெறுகின்றது. ஒரு பிள்ளை பிறந்தது முதல் 1000 நாட்களில் தேவையான போஷாக்கு கிடைக்கவில்லையென்றால் அந்தப் பிள்ளைகளின் மூளை போதியளவில் வளர்ச்சியடையாது குன்றிப் போகுமென உலக உணவுத் திட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் மூன்று நேரமும் சாப்பிட முடியாமல் 10 இலட்சம் பேர் வரை இருக்கின்றனர். இதில் 35 சதவீதமானவர்கள் வயதானவர்களையும் சேர்த்தால் 40 இலட்சம் பேர் அல்லது 20 சதவீத மக்கள் போஷாக்கின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவின் போஷாக்கின்மை நாடுகளின் பட்டியலில் இலங்கை 84 ஆவது இடமும் பட்டினிப் பிரச்சினையுள்ள உலக நாடுகளின் பட்டியலில் 39 ஆவது இடத்தில் இருக்கின்றன. ஆனால் தெற்காசியாவிலுள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளை விட இலங்கை முன்னணியில் இருப்பதை நினைத்து கொஞ்சம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். எனவே முறையான காலை உணவு போஷாக்கான உணவு இன்மையால் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சூழலில் இலங்கையின் பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள். பிள்ளைகளுக்கு காலையில் ஒரு கிளாஸ் பால் கொடுப்பதை பெற்றோர் பழக்கமாக வைத்துள்ளனர். அது போதுமானதாக இல்லை. ஒரு கிளாஸ் பாலை விட பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுப்பது முக்கியமாகும். பாடசாலை செல்லும் வயதில் தான் பிள்ளைகளிடம் துரித வளர்ச்சி காணப்படும். காலை உணவு என்பது தானியம், பழவகை, மரக்கறி, மாமிசம் என மூன்று உணவு பிரிவுகளைக் கொண்ட பிரதான உணவு வேளையாக இருத்தல் வேண்டும். பால் என்பது இதில் ஒரு பிரிவு மட்டுமே. இதனை இடை உணவாக கொடுக்கலாமென்றே டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ காலை உணவின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியுள்ளார். இது பற்றி பெற்றோர் அறியாமல் இருப்பதே தற்போதைய இந்த நிலைமைக்கு முக்கிய காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பாடசாலை செல்லும் பிள்ளைகளின் உணவு, ஆரோக்கியம், போஷாக்கு என்பன தொடர்பில் பெற்றோர் அதிக அவதானமுடன் இருக்க வேண்டும். அதேபோல அதற்கு தேவையான வைத்திய ஆலோசனைகளையும் அடிக்கடி பெற்றுக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் காலை உணவை தவறாது எடுத்துக் கொள்கிறார்களா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் பிள்ளைகள் கல்வியில் நாட்டம் குறைந்து மந்த நிலையை அடைந்துவிடலாம். இது பிள்ளைகளின் கல்வியையும் அவர்களின் எதிர்காலத்தையும் அதிகம் பாதிப்பதாக அமையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக