உயிருக்கு எமனாகும் விபத்துகள்
பெற்றோரின் பெறுமதியான சொத்து பிள்ளைச் செல்வங்களே. 10 மாதம் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்கு ஒரு தாய் இரவு பகல் பாராது தூக்கமின்றி தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறாள் என்றால் அது பிள்ளையின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்றநோக்கத்திற்காகவேயாகும். இருப்பினும் ஒரு சில நிமிடங்களில் அக்கனவுகள் யாவும் வீணாகிப் போகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. பாடசாலைக்காலம் சுதந்திரமானது. ஊர்களில் என்றால், ஆற்றில் இறங்கிக் குளிப்பது, முழு ஊரும் ஓடிப்பிடித்து விளையாடுவது, மரத்திலேறி ஒரு பழத்தைப் பறித்து அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டு காலத்தைக் கழிப்பதே ஊர்களிலுள்ள விசேடமாகும். ஆனால் நகர்ப்புறத்தில் அவ்வாறில்லை. ஒருசில கட்டுக்கோப்புகளுடனேயே குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் கிராமம் - நகரம் இரண்டுமே வேறுபட்டவை. பாடசாலை பிள்ளைகளின் பொழுது போக்காக தொலைபேசி மாறியிருக்கிறது. நகர்ப்புறத்தை பார்த்தோமானால் இந்த நிலை மாறியே காணப்படுகிறது. அதாவது பாடசாலை வயதுப் பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களாக வாகனங்கள் மாறியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் 12 திகதி அதிகாலை 1.50 மணியளவில் ராஜகிரிய - மாதின்னாகொட வீதியில் அதிவேகத்தில் சென்ற கெப் வாகனமும் பின்னால் வந்த காரொன்றும் பாதையின் மறுபுறத்தில் இருந்த மதிலொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விரண்டு விபத்துக்களும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமலேயே இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இரு வாகனங்களிலும் 11 மாணவர்கள் சென்றிருந்ததாகவும் விபத்தில் ஒரு மாணவர் இறந்ததாகவும் ஏனைய 10 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கொழும்பு ராஜகீய வித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபத்தின் விபரம் இவ்வாறே தெரியவந்தது. இச்சம்பவம் பற்றி வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் அஸ்மடலவின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்துப் பொலிஸார் தங்களது விசாரணைகளை இதன் பின்னரே ஆரம்பித்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய வெலிக்கடை பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்றிருந்தனர். பொலிஸார் அவ்விடத்திற்கு செல்லும் போதே காயங்களுக்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விபத்து இடம்பெற்று சில நிமிடங்களுக்குள்ளேயே மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் ஒரு மாணவர் அதிகாலை 3.15 மணியளவிலேயே இறந்து போனார். அவ்வாறு இறந்து போன மாணவர் 18 வயதுடைய கல்கிஸ்ஸ இதுரு உயனவில் வசிக்கும் அமான் கிமீல் மொஹமட் என்பவராவார். அதிக வேகத்துடன் மேற்படி இரு வாகனங்களும் ஏன் அவ்வழியே சென்றன என்பதே பொலிஸாரின் அடுத்த கேள்வியாகும். கெப்ரக வாகனத்தில் 10 மாணவர்களும் பின்னால் வந்த காரில் இன்னும் இரு மாணவர்களும் வந்துள்ளனர்.
இந்த வாகனங்களில் பயணித்த 4 மாணவர்கள் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாமல் சிறு கீறல்களுடன் தப்பியுள்ளனர். காரின் வலது பக்கம் அமர்ந்து சென்ற ஒரு மாணவனும், கெப் வாகனத்தின் பின் பக்கத்தில் அமர்ந்திருந்த மூவருமே மேற்படி கீறல்களுக்கு உட்பட்டுள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் 3 பேர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதின்னா கொட பிரதேசத்துக்கு இரவு உணவை வாங்குவதற்காகவே மேற்படி ராஜகீய மாணவர்கள் சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்கள் வோட்டர்ஸ் எஜ் பக்கமாக கலபலுவாவ பக்கத்தில் இருக்கும் சுதந்திர பிரதேசத்துக்கு சென்றுள்ளனர். இரு வாகனங்களிலும் சென்ற மாணவர்கள் வாகனங்களை தங்களது இஷ்டப்படி அங்கும் இங்குமாக செலுத்த ஆரம்பித்தனர். அவ்வேளையில் அவர்கள் மது அருந்தியிருந்ததாக தங்களுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லையென்றே வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிறிய காயங்களுக்குள்ளான மாணவரொருவரால் பெறப்பட்ட வாக்குமூலத்துக்கமைய சம்பவத்தை பற்றிய விபரங்களை தேடிப்பாக்க பொலிஸாருக்கும் இயலுமாகப் போனது. வாகனங்களில் தங்களது கைவண்ணத்தை காட்டியவாறு மேற்படி பாடசாலை மாணவர்கள் ராஜகிரிய பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர்.
மாதின்னா கொடயிலிருந்து ராஜகிரிய பிரதேசத்திற்கு வரும் வழியில் வளைவொன்றுள்ளது. அவ்விடத்தில் அமைந்துள்ள இல.172 என்ற இடத்திலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற இடம் சின்ன ஒரு சந்தியாகும். சந்தியின் இடதுபுறம் (தர்மபால பிரதேசத்துக்குச் செல்லும் பாதை) இருக்கும் பாதைக்கு சற்று முன்பக்கமாகவே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ராஜகீய வித்தியாலயத்தில் இடம்பெறவிருந்த விழாவிற்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ராஜகிரியவுக்குச் சென்ற வேளையிலேயே இவ்வனர்த்தத்துக்கு மாணவர்கள் முகம் கொடுக்க நேர்ந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது. முதலில் இரவு உணவை எடுத்துவரும் வழியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை என்பதால் பாதையில் வாகனங்களும் குறைவாகவே இருந்துள்ளது. இதனால் இவர்கள் வாகனங்களை அதிவேகமாகச் செலுத்தியுள்ளனர். ஆனாலும் இது சம்பந்தமான மேலதிக தகவல்களை பாதிக்கப்பட்ட எவரும் உறுதியாகத் தெரிவிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் அச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் எமக்கு தகவல் வழங்குகையில் தெரிவித்ததாவது, இரு வாகனங்களும் அதிவேகமாக வந்து கொண்டிருந்தன. அந்த வாகனங்கள் வந்த வேகத்தில் நான் துவிச்சக்கர வண்டியை இந்தப் பக்கமே நிறுத்தி வைத்துவிட்டு அவைகளுக்குச் செல்ல இடமளித்தேன். ஏனென்றால் அவைகள் வந்த வேகத்தில் எனது சைக்கிளும் விபத்துக்குள்ளாகிவிடும் என்ற பயத்திலேயே.
அவைகள் என்னைக் கடந்து சென்ற பின்னே நான் பாதையைக் கடந்தேன் என்றும் தெரிவித்தார். நான் பாதையை கடந்த அடுத்த நொடியே கெப் வாகனம் ஒரு பக்க மதிலிலும் கார் மறுபக்க மதிலிலும் மோதியதைக் கண்டேன். ஆனால் அன்று அவ்வாறு சாட்சி சொன்னவர் இன்றில்லை. பொலிஸாருக்கு மேற்படி சம்பவம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சி.சி.ரி.வி.கமரா மூலம் பெற்றுக்கொள்ளவே முடிந்தது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள வளைவுப்பகுதியில் இருவாகனங்களுக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதையை விட்டு விலகி மதில்களில் மோதுண்டுள்ளமை கமரா மூலம் பதிவாகியுள்ளது. இது வரையிலும் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் பயணித்துள்ளன என்பதை கணக்கிட முடியாமலுள்ளது. இரகசிய பொலிஸாருக்கு மேற்படி இரு வாகனங்களையும் ஒப்படைத்தே மேற்படி வாகனங்கள் சென்ற வேகத்தை சோதித்துப் பார்க்க வேண்டும் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு வாகனங்களையும் செலுத்திச் சென்ற மாணவர்கள் வாகனங்களை மாற்றி ஓட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கெப் வாகனத்தை ஓட்டிச் சென்ற மாணவன் காரை செலுத்திச் சென்றதாகவும், காரை ஓட்டிச் சென்ற மாணவன் கெப் வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும் தகவல்களில் புலனாகியுள்ளன. கெப் வாகனத்தை செலுத்திய மாணவனுடன் வாகனத்தில் 10 பேர் இருந்துள்ளனர். கெப் வாகனத்தின் பின்னால் நடுவில் அமர்ந்து வந்த மாணவனே இறந்து போனான். கெப் வாகன ஓட்டுனரான மாணவனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இருந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இருந்தும் பொலிஸாருக்கு அது சமர்ப்பிக்கப்படவில்லையென்றே தெரிவிக்கப்படுகிறது. சாரதி அனுமதிப்பத்திரம் மேற்படி விபத்தின் போது காணாமல் போய்விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனால் மாணவனது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வைத்து மோட்டார் வாகன திணைக்களத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி மேற்படி இலக்கத்தினுடைய நபரின் பெயரில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ளதா என்ற தகவல்களைப் பெற்றுக்கொள்ள வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். மோட்டார் வாகனத்திணைக்களம் மேற்கொண்ட விசாரணையின் படி கெப்ரக வாகனத்தை செலுத்திச் சென்ற மாணவனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாக உறுதியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரை செலுத்திய மாணவனிடம் சாரதி பயிற்சி நிலையத்தால் வழங்கப்பட்ட (பரீட்சை எழுதிய பின் கிடைப்பது) தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரமே இருந்தது. விபத்துக்குள்ளான அனைத்து மாணவர்களும் 18 வயதைக் கடந்தவர்களே எல்லோரும் 13 ஆம் தரத்தில் கற்பவர்கள் இந்த அனைத்து மாணவர்களும் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே. அதாவது கிரிபத்கொட, ராஜகிரிய, கல்கிஸ்ஸ மற்றும் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர்கள்.
விபத்துக்குள்ளானவர்களிடம் மேற்கொண்ட வாக்குமூலங்களுக்கமைய, வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதே மேற்படி அனர்த்தம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் ஏதாவது கோளாறு இருந்தது என்று பார்த்தால் அதுவும் இல்லை. விபத்து தொடர்பான உண்மையான தகவல்களை மாணவர்களிடமிருந்து முழுமையாக பெற்றுக் கொள்ள பொலிஸாரால் முடியாமற் போனது இதுவரை வெலிக்கடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய விபத்துக்கு காரணம் கவனயீனமும், அதிகவேகமுமே என தெரியவந்துள்ளது. விபத்துக்குப் பின்னர் மாணவர்களின் பெற்றோரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து அவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு; பாடசாலையில் இடம்பெறவிருந்த விழா ஒன்றிற்கான ஆரம்ப வேலைகளைச் செய்வதற்காகவே இவர்கள் அந்த நேரத்தில் சென்றிருந்ததாக தெரிவிக்கின்றனர். அதனாலேயே தங்களது பிள்ளைகளுக்கு வாகனங்களை வழங்கியதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயத்தில் மாணவனொருவன் உயிரிழந்துள்ளான். கார் சொந்தக்காரரான மாணவனுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை. மற்ற மாணவனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாக தெரிக்கப்பட்டாலும், அது சமர்ப்பிக்கப்படவில்லை. நேரில் கண்ட சாட்சியும் தற்போது இல்லை. பொலிஸார் சகல தரவுகளையும் சி.சி.ரி.வி.கமரா மூலமே பெற்றுக் கொண்டனர்.
வாகனங்களை செலுத்திய இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அதன் பின் பிணைமனு கோரி பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் அஸ்மடலவின் கோரிக்கைக்கிணங்க பொலிஸ் பரிசோதகர் ரணசிங்க, உபபொலிஸ் பரிசோதகர் மஹவத்த, பொலிஸ் கொஸ்தபால் லக்மால் (89954), பொலிஸ் கொஸ்தபால் மதுஷான் (86534) ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணைகளை மேற் கொண்டனர். பாடசாலையில் விழா வேலைகள் அனைத்தும் இரவு 11 மணியோடு நிறைவு பெற்றதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்படியிருந்தும் இவர்களின் அனுமதியின்றி பாடசாலையில் அவ்வளவு நேரம் இருந்ததுமில்லாமல் அவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை ஆசிரியர்களினதும் பெற்றோரினதும் பேச்சைக் கேட்காமல் தங்களது விருப்பப்படி செயற்பட்ட மேற்படி மாணவர்களின் அசமந்தப் போக்கினால் ஒரு உயிர் பறிபோனதே மிச்சம். பாடசாலை மாணவர்கள் மாணவர்களாக மட்டுமே நடந்து கொள்ள வேண்டும். மீறி செயற்பட்டால் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளுக்கே முகம் கொடுக்க நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக