கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜனவரி, 2018

புதிய பாலம் நிர்மாணிக்கப்படுமா?
போக்குவரத்துப் பாதைகளும் பாலங்களும் சீர்செய்யப்பட வேண்டுமென்பது இலங்கை முழுவதுமுள்ள மக்களின் கோரிக்கையாகவிருக்கிறது. அவற்றிலும் மலையக மக்கள் வசிக்கின்ற பெருந்தோட்டப் பகுதிகளில் வீதிகளின் தரம் மோசமான நிலையிலேயே இருக்கின்றது. அதேபோல் பாலங்களும் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தவையாகவும் அபாயகரமான நிலையிலும் காணப்படுகின்றன. அந்த வகையில் மஸ்கெலியா, புளும்பீல்ட் தோட்டத்தில் அமைந்துள்ள புளும்பீல்ட் தமிழ் வித்தியாலயத்துக்கு அருகாமையிலுள்ள (படத்தில் காட்டப்பட்டுள்ள) பாலமானது கடந்த சில மாதங்களுக்கு முன் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது முற்றாக சேதமடைந்தது. இதனால் இப்பாலத்தினை பயன்படுத்திய சகலரும் சிரமங்களை எதிர் நோக்கியிருந்தனர். இலகுவில் அடையக்கூடிய இடத்துக்கும் நீண்ட சுற்றுக்களை மேற்கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலையேற்பட்டது. இதன் பின்னர் தற்காலிகமாக பலகைகளால் ஆன பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அபாயகரமானதாகும். கொங்கிறீட்டுக்களால் போடப்பட்ட பாலமே வெள்ளத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்த நிலையில் இப்பலகையாலான பாலம் எவ்வகையில் பொருத்தமானதாக இருக்கும்.
அத்தோடு இப்பாலமானது ஓரிருவர் நடந்து செல்லும் பாதையில் அமைந்திருக்கவில்லை. தினந்தோறும் பலர் இப்பாலத்தை பயன்படுத்துகிறார்கள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் வேலைக்குச் செல்வோர் தோட்ட மக்கள் எனப் பலரும் இப்பாலத்தின் வழியே பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு முக்கியமான நடைபாதையில் அமைந்துள்ள பாலம் பாதுகாப்பின்றியும் முறையற்ற கவனிப்பின்றியும் இருப்பது தோட்ட நிர்வாகத்துக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தெரியவில்லையா? இதன் பின்னர் தற்போதைய மலையக அமைச்சரின் இணைப்புச் செயலாளரால் இப்பாலத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது.
அடிக்கல் நாட்டிய இடத்தின் தற்போதைய நிலை
இந்நிகழ்வு நடந்து பல மாதங்கள் கடக்கின்ற நிலையிலும் அடிக்கல் நாட்டப்பட்ட பகுதியானது கண்ணுக்கே தெரியாத வகையிலும் காடுமண்டி கிடக்கின்ற நிலையில் இதன் நிர்மாண பணிகளானது தடைப்பட்டுக்கிடக்கிறது. இப்பாலமானது இத்தோட்டத்தில் அமைந்திருக்கின்ற மிகச்சிறியதொரு பாலமாகும் ஆனால் மிக அதிகமானோரின் பாவனைக்கு தினந்தோறும் உட்படுகின்ற பாலமாகும். அபிவிருத்தி என்ற பெயரில் இப்படி அடிக்கல் நாட்டி ஏமாற்றுவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களின் தேவைகளுக்கே முதலில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதாகவே அபிவிருத்திகள் காணப்பட வேண்டும்.
இதனை பகுதியில் வசிக்கின்ற மக்களும் இவற்றை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் ஆசிரியர்களும் குறிப்பாக தோட்ட நிர்வாகமும் கவனத்தில் கொள்ளாமலிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். நீண்டகால இலக்கை நோக்கிய அபிவிருத்தியென்பது முக்கியமானதே என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதைவிடவும் அத்தியாவசிய தேவையென்பது முக்கியமாகும். எனவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இப்பாலத்தை பொதுமக்களின் நன்மை கருதி நிர்மாணித்துக் கொடுப்பது அவசியமாகும்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக