கவிதைகள், சமூகம், சர்வதேச அரசியல், பத்திரிகை பக்கம், பொழுதுபோக்கு, மலையகம், காணொளி

30 ஜனவரி, 2018

நீர் இன்று அமையாது உலகெனின்.....
இயற்கையின் கொடைகளுக்கு அதிகம் பெயர்பெற்ற இடமாக மலையகம் அல்லது மலைநாடு காணப்படுகிறது. இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பங்குவகிப்பவர்களில் முக்கியமானவர்களும் முதன்மையானவர்களுமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் இங்கு வசிக்கின்றனர். காலனித்துவ ஆட்சிக்கால லயன் காம்பிராக்களே அவர்களுக்கு நிரந்தர வாழ்விடமாக பல நூற்றாண்டுகள் இருக்கின்றன. ஆனால், அங்கு வசிப்பதற்கேற்ற எந்த சூழலும் இல்லை. ஆனால், அவற்றையே தமது இறுதி சொத்தாக எண்ணி வாழ அவர்கள் பழகிவிட்டார்கள். ஆனால், அங்கு இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லை. இவ்வாறான அவலமான வாழ்க்கையினை மஸ்கெலியா, புளும்பீல்ட் தோட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முறையான சுகாதார கட்டமைப்புக்கள் இல்லாமலும் குடிநீர் விநியோகம் இல்லாமலும் கழிவகற்றல் முறைமை செய்து கொடுக்கப்படாமலும் கவனிப்பாரற்ற நிலையிலேயே பலகாலமாக வாழ்ந்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களாக கடமை புரியும் இவர்களுக்கு இதுவரை தோட்ட நிர்வாகங்களால் எந்தச் சலுகைகளும் வழங்கப்பட்டதில்லை. இவர்களின் உழைப்பை மாத்திரம் உறிஞ்சிக் கொண்டு அவர்களின் தேவைகள் நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றன. இவற்றில் முக்கியமான விடயமே குடிநீராகும். இங்கு நீருக்கான தட்டுப்பாடு இருக்கின்றதென கூற முடியாது. ஆனால், அவற்றை முறையாக விநியோகம் செய்வதில் அலட்சியம் காட்டப்படுகிறது.



புளும்பீல்ட தோட்ட மக்களுக்கு மிக நீண்ட காலமாகவே நீர் ஆதாரம் ஒரு ஊற்றிலிருந்து பெறப்பட்டு வருகின்றது. ஆனால், அந்த ஊற்று பல வருடங்களாகவே பராமரிப்பின்றியே கிடக்கின்றது. அதுபோலவே அங்கிருந்து மோட்டார் மூலம் பெறப்படும் நீர் மக்களுக்கு விநியோகிப்பதற்காக சேர்த்து வைக்கப்படும் தாங்கிகளும் பாழடைந்த நிலையிலும் உடைந்து வாழும் நிலையிலும் எந்தவித பாதுகாப்பு அரண்களும் இல்லாமல் இருந்து வருகின்றன. இங்கிருந்து விநியோகிக்கப்படும் நீரும் முறையாக மக்களுக்குச் சென்றடைவதில்லை. அவை அவர்களுக்கு போதியதாகவும் இருப்பதில்லை. தோட்ட நிர்வாகத்தால் மக்களுக்கு நீரை விநியோகிக்கவென ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதை விட எந்தவொரு பாரமரிப்பையும் திருத்த வேலைகளையும் தோட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இன்றும் கூட முறையான குடிநீர் குழாய்கள் கூட அமைக்கப்படவில்லை. தோட்டங்களில் தனித்தனி குடியிருப்புக்கள் அதிகமாகியுள்ளதால் ஒவ்வொருவரும் தங்களது வீட்டுக்கு தனித்தனி குழாய் இணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனால் லயத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் இடம்பெறுவதில்லை. இதைத் தோட்ட நிர்வாகம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கண்டுகொள்வதில்லை. நேரடியாக இவற்றை கண்காணித்ததும் இல்லை. ஆனால், வெட்டி நியாயம் பேசுவதற்கும் தோட்ட நிர்வாகத்துக்கு வாக்காளத்து வாங்குவதற்கும் மாத்திரமே உத்தியோகத்தர்கள் இருக்கின்றனர்.

தற்போது குடிநீர் பெறப்படும் ஊற்று நீர் நிலை அமைந்திருக்கும் பகுதி மிகவும் தாழ்வான பிரதேசமாகும். இதனால் இதற்கு 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையின் கழிவுகள் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள லயன் அறைகளின் கழிவுகள் எல்லாமே இவ் ஊற்று நீர் நிலையின் அருகிலுள்ள ஓடை வழியாகவே செல்கின்றன. இத்தோடு மிருக கழிவுகளும் இவ் வழியே வெளியேறுகின்றன. இதன் அருகில் அமைந்திருக்கின்ற ஆற்றிலும் வெள்ளம் ஏற்படுமாயின் மொத்த நீர் நிலையும் வெள்ளக்காடாகி விடும். அத்தோடு இந்த நீர் நிலையானது முறையாக மூடிய நிலையில் இல்லை திறந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் விலங்குகள் விழுந்து இறந்தாலோ அல்லது இரசாயனங்கள் ஏதும் கலக்கப்பட்டாலோ அவை கவனத்தில் கொள்ளப்படாத நிலையே காணப்படுகிறது. இவ்வாறு இத்தனை பாதிப்புக்களையும் எதிர்கொள்கின்ற இந்நீரானது எந்தவிதமான சுத்திகரிப்பும் இன்றி மக்களுக்கு நேரடியாகவே விநியோகம் செய்யப்படுகின்றது. இதனால் எந்தவொரு அனர்த்தத்திலும் இலகுவாக பாதிக்கப்படக் கூடிய நிலையிலேயே இங்குள்ள மக்கள் இருக்கின்றனர். சில வேளைகளில் மழை காலங்களில் குள நீரில் வெள்ள நீர் கலந்துவிட்டால் நீர் விநியோகம் நடைபெறாது. இதன் போது இத் தோட்ட மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டிவரும்.

இவ்வாறு இயற்கையாக கிடைக்கப்பெறும் நீர் வளத்தினை கூட முறையாக விநியோகிப்பதற்கு தோட்ட நிர்வாகம் தயாரில்லாமல் இருக்கின்றது. இதற்கு ஒரு படிமேல் அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் இருக்கின்றன. கடந்த நவம்பர் மாதத்தில் அமைச்சர் திகாம்பரத்தினால் மஸ்கெலியா பிரதேச மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக இந்தப் பிரதேசத்தில் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதாக அறிவித்திருந்தனர். இதன்போது குடிநீர், பாதைகள், மைதானங்கள், வீடமைப்புப் போன்ற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில் ஈடுபட்டனர். காட்மோர் தோட்டத்தில் லார்ச்பீல். மொக்கா கீழ்ப் பிரிவு , லங்கா டிவிசன், கெஸ்கீபன் டிவிசன், எமலினா டிவிசன், புளும்பீல்ட் டிவிசன், குயின்ஸ்லேண்ட் டிவிசன், மஸ்கெலியா சண்முகநாதர் தேவஸ்தான கலாசார மண்டபம், கங்கேவத்தை , லக்ஸபான சென்அன்றூஸ் கீழ்ப்பிரிவு, லக்ஸபான டிவிசன், நயின்சா தோட்டம் ஆகியன உட்பட 13 தோட்டங்களில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இப் பயணத்தின் போது மஸ்கெலியா, புளும்பீல்ட் தோட்ட குடிநீர் திட்டத்துக்கான அடிக்கலும் நாட்டப்பட்டது. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு மாதகாலம் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் திட்டம் ஆரம்பமாகவில்லை. அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தின் தடயம் கூட அழிந்து போய்விட்டது.

இவ்வாறு தடயங்களே இல்லாத அபிவிருத்தி பணிகளே பெரும்பாலும் மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. அடிக்கல் நாட்டிய இடமே தெரியவில்லையென்றால் அந்த அபிவிருத்தி திட்டத்தின் நிலை. என்னவாகுமோ? தெரியவில்லை. ஒரு திட்டத்துக்கு இரு கட்சிகள் அடிக்கல் நாட்டுதல், திறந்து வைத்தல் போன்ற செயற்பாடுகள் ஏற்கனவே, மலையகத்தில் அதிகம் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகளை நாம் வெளிகாட்டிவிட்டால் எங்களுடைய குடும்பங்களை இலக்கு வைத்து பழிவாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்து விடுவார்கள். அவ்வாறெனில் இவ்வாறான குறைகளை யார் தான் சுட்டிக்காட்டுவது. மஸ்கெலியா புளும்பீல்ட் தோட்டத்தில் பல வருடங்களாகவே நீருக்கான பாதுகாப்பு குறைந்தளவிலே இருப்பது நாம் நேரடியாக வாழ்ந்து பார்த்த அனுபவம். தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதும், அவர்களின் உழைப்பை உறிஞ்சுவது மாத்திரமா தோட்ட நிர்வாகத்தினதும் அவர்களின் நிழலில் செயற்படும் உத்தியோகத்தர்களினதும் கடமை. இவ்வாறான அடிப்படை தேவைகளை யார் செய்து கொடுப்பார்கள். அவர்களே அவர்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டுமாயின் நிர்வாகமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிகளும் எதற்கு இருக்கிறார்கள் ? இதனை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வள்ளுவரும் வாய்கிழிய கூறிவிட்டுச் சென்றார். ‘ நீர் இன்று அமையாது உலகெனின் ... ’ ( வான் சிறப்பு) என்ற திருக்குறளில் எவ்வகையால் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. ஆனால், நவீன காலத்திலும் நீரின் அருமை தெரியாமல் வாழ்கிறார்களே. இவர்களை நினைத்து வேதனைப்படுவதா ? கோபப்படுவதா ?














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக